இவள்!


யார் இவள்..?
இலையுதிர் காலத்தால்
சபிக்கப்பட்டவளாய்
எல்லாவற்றையும்
இழந்து நிற்கிறாளே..!

புயல் கொண்ட பின் ஒரு
நகரமாய்
சாயல் அழிந்த பின் ஒரு
சோலையாய்...
காலத்தின் பாதையில்
இவள் விட்டுச்சென்ற படிமம் எங்கனம்?
....

நிலவும் மலரும்
கனவும் காதலும்
கடந்த காலங்களில்
இவளுக்கும்  வந்ததுண்டு!

இன்றோ
நிலவைப் பறித்து
உடையாக  தரிக்கப்பட்டாள்!

நேற்று பூத்த மலராய்
இயற்கையால்
சபிக்கப்பட்டாள்!

கனவுகளின் தீண்டலால்
கண் உறக்கத்தையும்
வெறுத்தாள்!

காதல் கொண்டவனை
காலனிடம் இழந்த பின்
நான்கே சுவர்களுக்கிடையில்
ஒதுக்கப்பட்டாள்!

கால நதியில்
அடித்துச்செல்லப்படும்
இச் சமூகத்தின் சிறு புள்ளியாய்....
'இவள்'