புலம்பெயர் தேசத்தில் நாம்.



என்பதுகளில் ஆரம்பித்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு  புலம்பெயரும் ஈழ தமிழரின் வாழ்க்கை, இன்று மூன்று தசாப்தம் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்திலே புலம்பெயருவதற்க்கு உள்நாட்டு யுத்தம், பொருளாதார நெருக்கடி என்ற இரு காரணிகள் முக்கியமானதாக இருந்தது. இன்று இதெல்லாம் கடந்து வெளிநாடு செல்லுவது இலட்சியமாக கொள்ளக்கூடிய அளவுக்கு வளர்ந்துவிட்டது.

இதை சாட்டாக வைத்து போலி முகவர்கள் மக்களை ஓட்டாண்டி ஆக்கி நடுத்தெருவில் விடும்  சம்பவங்களும் நடந்துகொண்டு தான் உள்ளது.
அநேகமானோர் புலம் பெயருவதற்கு விரும்பும் நாடுகள் வரிசையில் கனடா சுவிசர்லாந்து  இங்கிலாந்து பிரான்ஸ் முக்கியமாக இருக்கிறது. இதன் பிறகு ஏதாவது ஐரோப்பிய நாடு என்ற மனநிலை. ஒரு காலத்தில்அகதிகளாக வரும் மக்களுக்கு தயவு காட்டும் நிலையில் இருந்த இந்த தேசங்கள் இப்பொழுதும் எவரையுமே ஏற்க முடியாத நிலையில் உள்ளார்கள் என்பதுவே உண்மை. உதாரணமாக கனடாவிலே சன் சி  கப்பல் வருகைக்கு பின்னர் முற்றாக அகதிகளாக தம் தேசத்துக்கு வருவதை அந் நாடு எதிர்க்கிறது. அத்தோடு அங்கே வேலை வாய்ப்புக்களில் ஏற்பட்ட மிகையான வீழ்ச்சி அகதிகளை  உள் வாங்கி கொள்வதை தவிர்க்க மற்றுமொரு காரணம்.

சுவிற்சலாந்தின்  நிலை மேலும் மோசம் என்றே சொல்லலாம். சுற்றுலா பயணிகளின் சொர்க்க புரி என்று அழைக்கும் நாடு சுவிற்சலாந்து, ஆம் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் தான் சொர்க்க புரி. ஒரு தடவை சென்று சுற்றி பார்த்து வந்தால் சரி, மாறாக அங்கே சென்று வாழ விரும்புபவர்களுக்கு இன்றைய காலத்தில் மிகவும் கடினம் தான். வேலையில்லா பிரச்சனை, அப்படி வேலை கிடைத்தாலும் வழங்கப்படும் அடிப்படை சம்பளமே அவரின் அன்றாட வாழ்க்கைக்கு மட்டு மட்டாக இருக்கும். அத்தோடு அகதி அந்தஸ்துக்கான சரியான  காரணம் இன்றி தங்கி இருப்பவர்களை திருப்பி அனுப்பும் நிலையில் தான் இன்று உள்ளது.  தற்காலிகமாக கொடுக்கப்பட்ட விசாக்கள் நிறுத்தப்பட்டு அவர்களையும் பிடித்து சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் வண்ணம் சட்டங்கள் இறுக்கமடைந்துள்ளது . இலங்கை தமிழன் ஒருவனுக்கு இந்நிலைமை ஏற்படும் போது அவன் நாட்டுக்கு திருப்பி அனுப்பபடுவான். நாட்டுக்கு சென்றதும் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்து பலகாலம் நோண்டி எடுக்கப்படுவான்(சொல்லி தெரியவேண்டியது இல்லை).

இதே போல அநேகமானோர் தேர்ந்தெடுப்பது  இங்கிலாந்து, காரணம் மாணவர்கள் விசா மூலம் சுலபமாக சென்றுவிடலாம். அவ்வாறு சென்று வேலை செய்துகொண்டே படிப்பையும் தொடரலாம். மாணவர் விசா மூலம் செல்வபவர்களுக்கு இரண்டு வருட விசா கொடுக்கப்படும். அதற்கு மேல் தங்கி இருக்க அனுமதி இல்லை. ஆனால் இன்று அதிலும் இடி விழுந்துள்ளது, அதாவது மாணவர் விசா மூலம் செல்பவர்கள் இனி அங்கே பகுதிநேர வேலை செய்யமுடியாது. இந்த சட்டம் பிரித்தானியாவில் கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் அங்கே நிலவும் மிக அதிகரித்த வேலையில்லா பிரச்சனை. இவ்வாறு ஐரோப்பா முழுவதும் வேலையில்லா பிரச்சனையும் பொருளாதார நெருக்கடியும் தலைவிரித்தாடுகிறது.  நிலைமைகள் இவ்வாறு இருக்க வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று கொடுப்பதாக கூறி மோசடி செய்யும் பேர்வழிகள் இலங்கையில் உலவுகிறார்கள். நிலைமைகளை புரிந்துக்கொண்டு மக்கள் தான் அவதானமாக இருக்க வேண்டும்.

5 comments:

  1. என்பதுகளில் ஆரம்பித்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் ஈழ தமிழரின் வாழ்க்கை, இன்று மூன்று தசாப்தம் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறது//

    வணக்கம் சகோதரம், இந்த முதல் பந்தியில் வரும் எண்பதுகளில் எனும் கூற்றை என்னால் ஏற்க முடியாது. திரைகடலோடியும் திரவியம் தேடும் எனும் வாக்கிற்கமைவாக ஈழத்தமிழர்கள், கப்பலோட்டிய தமிழர்கள் எண்பதுகளிற்கு முன்னரே புலம் பெயர அல்லது வேற்று நாடுகளுக்குச் சென்று பணம் ஈட்டத் தொடங்கி விட்டார்கள். மொறிஸியஸ், மலேசியா முதலிய நாடுகளில் உள்ள தமிழர்களில் குறிப்பிட்ட அளவினரின் மூதாதையர்கள், அவர்களின் பாட்டன், பாட்டிகள் யாழ்ப்பாணத்திலிருந்தே அங்கு குடியேறியிருக்கிறார்கள்.

    இன்று மலேசியாவில் பிரபலமான பணக்காரரான ஆனந்தகிருஸ்ணனின் வம்சா வழியும் யாழிலில் இருந்து எண்பதுகளுக்கு முன்னரே குடியேறியவர்களாவார்.

    ReplyDelete
  2. இதை சாட்டாக வைத்து போலி முகவர்கள் மக்களை ஓட்டாண்டி ஆக்கி நடுத்தெருவில் விடும் சம்பவங்களும் நடந்துகொண்டு தான் உள்ளது.
    அநேகமானோர் புலம் பெயருவதற்கு விரும்பும் நாடுகள் வரிசையில் கனடா சுவிசர்லாந்து இங்கிலாந்து பிரான்ஸ் முக்கியமாக இருக்கிறது. இதன் பிறகு ஏதாவது ஐரோப்பிய நாடு என்ற மனநிலை.//

    தற்போது உயிரைப் பணயம் வைத்து கப்பலில் ஆஸ்திரேலியா போவகும் எம்மக்களின் விருப்பத்திற்குரிய ஒரு தெரிவாகி விட்டது.

    ReplyDelete
  3. சுருங்கக் கூறின் புலம் பெயர் நாடுகளிலுள்ள எம்மவர்களின் நிலமையினையும், புலம் பெயர்ந்து செல்ல விரும்பும் மக்களின் தெரிவினையும் அலசியிருக்கிறீர்கள். இன்னும் நிறைய விடயங்களைக் கட்டுரையில் சேர்த்திருந்தால் அழகாக இருக்கும், நீர்கொழும்பு துறைமுகத்தினூடாக இத்தாலி போதல், கடல் வழியாக உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியா போதல் எனப் பல விடயங்களைச் சேர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  4. வணக்கம் நிரூபன்,
    நீங்கள் சொன்னது போல என்பதுகளுக்கு முன்னரே இலங்கை தமிழர்கள் புலம்பெயர வெளிக்கிட்டுவிட்டார்கள் அது பொருள் ஈட்டுவதற்கு என்ற காரணமே முதன்மையாக இருந்து , ஆனால் நான் இங்கே மைய கருத்தாக யுத்தம் காரணமாகவும் அதனால் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடியாலும் என்பதுகளில் தான் அதிகமாக "அகதிகளாக" தமிழன் நாட்டை விட்டு பெரும் தொகையில் வெளியேற ஆரம்பித்தான். இன்று ஐரோப்பாவில் ஏற்ப்பட்ட பொருளாதார நெருக்கடியால் அகதிகளை ஏற்க்க மறுக்கிறார்கள். இதனால் இங்கே வந்து நடுத்தெருவில் நிற்கும் அதிகமான நம்மவர்கள். ஆழமாக எழுதியிருக்கலாம் தான்,முடிந்தால் நான் வாழும் புலம்பெயர் சூழலில் நம்மவர்கள் படும் பாடு தொடர்பாக எழுத முயற்ச்சிக்கிறேன்.
    நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  5. /இதை சாட்டாக வைத்து போலி முகவர்கள் மக்களை ஓட்டாண்டி ஆக்கி நடுத்தெருவில் விடும் சம்பவங்களும் நடந்துகொண்டு தான் உள்ளது. ///

    போங்க பாஸ்...இவங்கள பத்தி எவ்வளவு எழுதினாலும் நம்மட சனம் திருந்தப் போறதில்லை...
    அடிச்சு தான் திருத்தணும்

    ReplyDelete