உலகக்கிண்ணம் IV - அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள்.

2003 றிலும் 2007 லிலும் இடம்பெற்ற உலகக்கிண்ண தொடர்களிலே அவுஸ்ரேலியா இறுதி போட்டிக்குள் நுழையும் என்பதை அநேகமானோர் ஊகிக்க கூடியதாக இருந்தது. ஆனால் இந்த உலகக்கிண்ண போட்டிகளிலே அவ்வாறான ஊகங்கள் எந்த அளவில் எடுபடும் என்பது கேள்விக்குறியே, காரணம் சமபலத்தில் உள்ள அநேக அணிகள். சமீபத்தில் பந்துவீச்சிலும் சரி துடுப்பாட்டத்திலும் சரி அசுர பலத்தோடு இருந்ததாக நம்பப்படும் தென்னாபிரிக்கா இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதே போல இந்தியா அயர்லாந்திடமும் நெதர்லாந்திடமும் பெற்ற வெற்றிகள் சுலபமாக கிடைத்துவிடவில்லை. பாகிஸ்தானை சுருட்டிக்கொண்டது நியூசிலாந்து. இவ்வாறு ஆருடம் கூற முடியாத படி போட்டிகள் சென்றுகொண்டுள்ளது. தற்சமயம் அடுத்த சுற்றுக்கு செல்லும் அணிகள் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளன. இனி இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் சிறு தொகுப்பு.

இம்மாதம் 5 ம் திகதி  மிகவும் எதிர்பார்த்திருந்த இலங்கை அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியை மழை வந்து குழப்பி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதே வேளை காயம் காரணமாக விலகிய போலிஞ்சருக்கு பதிலாக அவுஸ்ரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மைக் ஹசி அணியிலே இணைந்து கொண்டுள்ளமை அவ்வணியின்  துடுப்பாட்ட வரிசையை பலமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அடுத்த போட்டி இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடயிலானது, அயர்லாந்திடம் பெற்ற மோசமான தோல்விக்கு பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து இப்போட்டியிலே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதுவே அநேகரின் கணிப்பாக இருந்திருக்கும். எனினும் சிறப்பான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு  காரணமாக 6 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியிலே பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மீண்டும் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி இம்ரான் தகீர் தன் திறமையை நிரூபித்தார். சுலபமான இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்காவுக்கு ஆரம்பம் நன்றாகவே அமைந்திருந்தது. எனினும் 63 ஓட்டங்களை அணி பெற்றிருக்கையில்  முதல் விக்கெட்டுக்காக சிமித் ஆட்டமிழக்க அடுத்த 9 விக்கேட்டுக்களும் 102 ஓட்டங்களுக்குள் சரிந்துகொண்டன. Faf du Plessis இன் ரன் அவுட்டே  போட்டி இங்கிலாந்தின் பக்கம் சாய ஏதுவாகியது. பிரட் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை பெற்றிருந்தார். 



இங்கிலாந்துடனான  வெற்றிக்கு பின் மிகவும் உற்சாகமாக இந்தியாவை எதிர்கொண்டது அயர்லாந்து. இதிலே முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து யுவ்ராஜின் சிறப்பான பந்துவீச்சால் 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெவின் ஒ பிரெயின் 9 ஓட்டங்களையே பெற்றார். சிறப்பாக பந்துவீசிய யுவராஜ் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலுக்கு இலகுவான ஓட்டங்களை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி. 5 ஓட்டங்களுடன் சேவாக் ஆட்டமிழந்தார் அதன் பின் களமிறங்கிய காம்பீரும் 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இந்திய சற்று தடுமாறியது. எனினும் பந்து வீச்சில் சிறப்பாக செயற்ப்பட்ட யுவராஜ் சிங் தனது நிலையான துடுப்பாட்டத்தின் மூலம் இந்தியாவை வெற்றி பெற செய்தார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியிலே 5 விக்கெட்டுக்களையும் 50 ஓட்டங்களையும் பெற்ற வீரர் என்ற சாதனையையும் யுவராஜ்  பதிவு செய்துகொண்டார்.



கென்யா கனடா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியிலே கனடா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இந்த உலககிண்ண தொடரில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துகொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய கென்யாவை 198 ஓட்டங்களுக்குள் கனடா மடக்கியது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா 45 ஆவது ஓவரிலே இலக்கை அடைந்து வெற்றியை கொண்டாடியது.  இதற்க்கு முன்னைய போட்டியிலே பாகிஸ்தானுக்கு கனடா நெருக்கடி கொடுத்தது அறிந்ததே. சிறந்த பயிற்சி, அதிக போட்டிகளில் பங்குபற்றும் பட்சத்தில் கனடா எதிர்காலத்தில் சிறந்த அணியாக வலம் வரும் வாய்ப்பு உள்ளது. 



பாகிஸ்தான் சார்பாக எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலே மோசமான பந்துவீச்சால் பாகிஸ்தான் படு தோல்வி அடைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 40 ஓவர்கள் வரை 170 ஓட்டங்களையே பெற்றிருந்தது  அடுத்த பத்து ஓவர்களிலே  ரோஸ் ரெயலரின் அனல் பறக்கும் ஆட்டத்தால் 132 ஓட்டங்களை குவித்து மொத்த எண்ணிக்கையாக 302 ஓட்டங்களுக்கு தாவியது.  இதிலே ரோஸ் ரெயிலர் ஆரம்பத்தில் மெதுவாகவும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 131 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேவேளை ரெயலரின் இரண்டு பிடிகளை கோட்டை விட்டு பாகிஸ்தானின் தோல்விக்கு அடித்தளமிட்ட பெருமை கம்ரான் அக்மாலையே சாரும். பதிலுக்கு ஒரு மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அடுத்தடுத்து  விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆறுதலுக்கு அப்துல் ரசாக் மட்டும் 62 ஓட்டங்களை பெற பாகிஸ்தான் 192 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 110 ஓட்டங்களால் படு தோல்வி அடைந்து. இந்த உலககிண்ண தொடரிலே வேகப்பந்து வீச்சில் பாகிஸ்தான் பெரிதும் நம்பி இருக்கும்  அக்தர் இதுவரை சிறப்பாக ஆடவில்லை என்பது பாகிஸ்தானுக்கு கவலை தரும் விடயமே.



இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியிலே சிறிய போராட்டத்தின் பின் இந்தியா 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து  ஆரம்பம் முதலே விக்கட்டுக்களை பாதுகாப்பதில் குறியாக இருந்தது. இறுதியாக 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 36 வது ஓவரில்  5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய சச்சினும் சேவாக்கும் 69 ஓட்டங்களுக்கு பின் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த யூசுப் பதான், காம்பீர், கோலி குறுகிய  இடைவெளியிலே ஆட்டமிழந்தனர். எனினும் இந்த போட்டியிலும் யுவராஜ் சிங் அணியை வெற்றி இலக்கு நோக்கி  கூட்டி சென்றார். இவர் 51 ஓட்டங்களை பெற்றார். இந்த உலககிண்ண தொடரில்  இதுவரை யுவராஜ் சிங்  களமிறங்கிய மூன்று  போட்டிகளிலே வரிசையாக அடித்த மூன்றாவது அரைச்சதம் இதுவாகும். இந்திய அணியை பொறுத்தவரை யுவராஜ் சிங் பார்முக்கு திரும்பி துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்படுவது கூடுதல் பலமே. எனினும் வேக  பந்துவீச்சிலே சகீருக்கு இணையாக ஆரம்ப பவர்பிளே ஓவர்களை  சிறப்பாக  வீச யாரும் இல்லை என்பது ஒரு மிகப்பெரிய பலவீனமே.



அடுத்து இலங்கை சிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியிலே இலங்கை 139 ஓட்டங்களால் மிக பெரிய வெற்றி ஒன்றை பெற்று தனது அடுத்த சுற்றுக்கான உள்நுழைவை உறுதி செய்துகொண்டது. இதிலே முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக ஆரம்ப வீரர்கள் டில்சான் மற்றும் தரங்க சதம் அடித்தனர். அத்தோடு முதல் விக்கெட்டுக்காக  282 ஓட்டங்களை பெற்று உலககிண்ண போட்டிகளிலே முதல் விக்கெட்டுக்காக பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை பதிந்து கொண்டனர். ( உலக கிண்ண போட்டிகளிலே எந்த ஒரு விக்கட்டுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையாக கங்குலி மற்றும் ராவிட் இணைந்து இலங்கைக்கு எதிராக 1999 ம் ஆண்டு உலக கிண்ண தொடரில்  இரண்டாவது விக்கட்டுக்காக பெற்ற 318 ஓட்டங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.)   தரங்காவின் ஆட்டமிழப்புக்கு  பின் அடுத்த 5 விக்கேட்டுக்களும் 26 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இறுதி ஆறு ஓவர்களிலே 28 ஓட்டங்கள் மட்டுமே இலங்கை அணியால் பெற முடிந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாவே டில்சானின் சுழலில் சிக்கி 188 ஓட்டங்களுக்கு சுருண்டு கொண்டது. முதலாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரெய்லர் மற்றும் சிக்கம்புரா 20 ஓவர்களிலே 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதிலே அதிரடியாக ஆடிய ரெய்லர் 80 ஓட்டங்களை பெற்றார். அத்தோடு சிம்பாவேயின்  இறுதி 9 விக்கேட்டுக்களும் 72 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. சிறப்பாக பந்துவீசிய டில்சான் 3 ஓவர்களிலே 4 ஓட்டங்கள் கொடுத்து  நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இதுவரை நடந்த போட்டிகளிலே புள்ளிகள் அடிப்படையில் அடுத்த  சுற்றுக்கு தெரிவாகக்கூடிய அணிகள்
A                                                                   B
இலங்கை                                  இந்தியா
நியூசிலாந்து                             இங்கிலாந்து
பாகிஸ்தான்                              மேற்கிந்திய தீவுகள்
அவுஸ்ரேலியா                        தென்னாபிரிக்கா

ஆகிய அணிகளே அடுத்த சுற்றுக்கு உள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. B அணி சார்பாக பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளை பொறுத்தவரை, இதுவரை மூன்று போட்டிகளிலே விளையாடி தலா ஒரு வெற்றியுடன் உள்ள இவ்வணிகள், கைவசமுள்ள ஏனைய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றை எதிர்பார்க்கலாம்.

உலகக்கிண்ணம் III- அவமானப்பட்ட இங்கிலாந்து (முன்னையது)

2 comments:

  1. போட்டிகள் இப்போதுதான் பரபரப்பாக போகின்றன..

    ReplyDelete
  2. உண்மைதான்...இந்த அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு போகும்னு தெரியும்...ஆனா ஏதாச்சும் ஆச்சர்யம் நடக்காதா?
    இலியானா ஸ்பெசல் மொக்ஸ்!!
    http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_11.html

    ReplyDelete