உலகக்கிண்ணம் I - அடிவாங்கும் "குட்டி" அணிகள்.


அதோ இதோ என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உலகக்கிண்ண போட்டிகள் அமர்க்களமாக ஆரம்பித்து விட்டன. இதிலே எதிர்பார்ப்புக்கள் போலவே இது வரையான போட்டிகளின் முடிவுகள் அமைந்துள்ளன.குட்டி அணிகளை துவம்சம் செய்துவிட்டன பெரிய அணிகள்.ஆசிய மைதானங்கள் என்றபடியால் அநேகமானவை துடுப்பாட்ட வீரர்களுக்கே சொர்க்க புரியாக இருக்கிறது.



பத்தொன்பதாம் திகதி இந்திய பங்களாதேஷ் அணிகளின் ஆட்டத்தில் சேவாக் பவுண்டரியுடன் இந்த உலகக்கிண்ணத்தை ஆரம்பித்து வைத்தார்.ஆரம்பம் முதலே பங்களாதேசின் பந்துவீச்சை பின்னி எடுத்தவர்கள் இறுதிவரை இந்திய துடுப்பாட்டகாரர்களின் ஆதிக்கமே முழுவதுமாக இருந்தது. அப்துர் ரசாக் கப்டன் சாகிப் உல் ஹசன் போன்ற சுழல்கள் இந்தியாவுக்கு நெருக்கடியாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தாலும் அதையும் பொய்யாக்கினார்கள் சேவாக்கும் கோலியும் இணைந்து. சச்சினின் ரன் அவுட் வீண் தான் என்றாலும் அது அணிக்கு ஒரு பாதிப்பாக அமைந்துவிடவில்லை. இந்த உலகக்கிண்ண போட்டிகளிலே சேவாக் முதலாவது சதத்தை பெற்றார் அவரை தொடர்ந்து தற்சமயம் அசுர பார்மில் இருக்கும் விராத் கோலியும் 83 பந்துகளில் அதிரடியாக சதத்தை பெற்றார். இந்திய அணியை பொறுத்தவரை இனி வரும் போட்டிகளில் சச்சினை விட சேவாக்கே எதிரணிகளுக்கு தலையிடியாக இருப்பார் என்று தெரிகிறது.

370 என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கபட்ட போதே தெரிந்திருக்கும் பங்களாதேஷன்  தோல்வி.  இருந்தாலும் இந்திய பந்துவீச்சையும் பங்களாதேஷன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் துவைத்து எடுத்தது  குறிப்பிடத்தக்கது . அத்தோடு சிறீசாந் இந்தபோட்டியில் பங்களாதேஷுக்காக  விளையாடுவது போல தாராளமாக ஓட்டங்களை வாரி வழங்கினார். 
87 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணியின்  ஆட்ட நாயகனாக 170 ஓட்டங்களை  விளாசிய சேவாக் தெரிவு செய்யப்பட்டார்.

 

 அடுத்து இலங்கை கனடா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி. இதில் இலகுவாக இலங்கை வெற்றி பெற்றது. மகேலவின் அதிரடி சதம் சங்கக்காராவின் சிறப்பான ஆட்டம், பெரேரா, குலசேகர போன்றோரின் சிறந்த பந்துவீச்சு என்று போட்டி முழுவதும் இலங்கையின் ஆதிக்கமே. ஆட்ட நாயகனாக மகேல தெரிவானார்.



அடுத்து A பிரிவின் மற்றுமொரு போட்டியிலே கென்யாவை 87 ஓட்டங்களில் சுருட்டிய  நியூசிலாந்து இலகுவாக வெற்றி பெற்றது. இது நியூசிலாந்தின் எழுச்சியா இல்லை கென்யாவின் பலவீனமா என்பதற்கு   நியூசிலாந்தின் இனி வரும் போட்டிகள் விடையாக அமையும். அத்தோடு உலககிண்ண எதிர்வரும் போட்டிகளிலே பாகிஸ்தான் தவிர  நியூசிலாந்தும் கறுப்பு குதிரைகளாக வலம் வர வாய்ப்புள்ளது. ஆட்ட நாயகனாக பந்துவீச்சில் மிரட்டிய பென்னெட் தெரிவானார்.



 அவுஸ்ரேலியா சிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியிலே அவுஸ்ரேலிய 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. எனினும்  முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா ஒரு இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்த்தாலும்  ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின்  ஆமை வேக துடுப்பாட்டம் அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. பயிற்சி போட்டிகளிலும் அவுஸ்ரேலியாவின் துடுப்பாட்டம் பலவீனமாக இருந்ததும்  அறிந்ததே. இருந்தும் சிம்பாவேயின் பலவீனமான துடுப்பாட்ட வரிசை அவுஸ்ரேலியாவின் பந்துவீச்சாளர்களுக்கு எவ்வித நெருக்கடியையும் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

ஆக இதுவரை இடம்பெற்ற போட்டிகள் எந்தவித ஆச்சரியத்தையும் ஏற்ப்படுத்தவில்லை என்றாலும் போக போக ஆட்டங்கள் சூடு பிடிக்கும் என்பது நிச்சயம்.

4 comments:

  1. மிகவும் நன்றி பிரபா

    ReplyDelete
  2. Have you watched today's match England vs Netherlands? ;-)

    ReplyDelete
  3. ஆம்.. இன்றைய போட்டியிலே பந்து வீச்சில் சற்று தடுமாறியது இங்கிலாந்து..

    ReplyDelete