எதிர்கால பயமும் இன்றி
வர்ணக் கனவுகளாய்
நிரம்பியிருக்கும் வயதுதனில்
மண்ணை காக்கவென
விண்ணேறிச் சென்றாயோ,
விழிகள் நனைகிறது!

மக்களை காப்பரென
நம்பியிருந்த கடவுள்
நல்லூரில் கல்லாயிருக்க;வெளி
வீதியில் ஓர் உருவம்,
வில் கொண்டோ
ஷெல் கொண்டோ அல்ல
அகிம்சை எனும் சொல் கொண்டு
அறப்போரில் பார்த்தீபன்!
ஐந்தம்ச கோரிக்கைகளை
அடக்குமுறையாளர் முன் வைத்து
தன் மெய்தனை உருக்கி
வீதியில் வீற்றிருக்க -இச்சிறு
வயசினிலே இளைஞனின் செயல் காண
அந்திபகல் பாராது
அலையலையாய் திரண்டமக்கள்
ஆற்றாமையும் துயரமும்
கண்கள் வழி பெருக்கெடுத்தது.

அடக்குமுறையின் கண்கள்
அகிம்சைக்கு அகலவிரியாது என்பதை
ஈழ வரலாறு ஊடே முன்னுணர்ந்தவனாய்
தான் கொண்ட கொள்கையில் உறுதியாகி,
பன்னிரு நாட்கள் பசித்திருந்து
அன்ன ஆகாரம் அற்று
அட்டையாய் சுருண்டு கிடந்தவன் உடலில்
இறுதியாய் ஒட்டியிருந்த உயிரும்
விட்டுப் பிரிந்தது!
அத்தனை நாட்களும்
அவனை சுற்றியிருந்து விம்மிய குரல்கள்
வெடி ஓசையாய் பீறிட்டு கியம்பியது;
கேட்பவர் நாடி நரம்புகளை உலுப்பும் நிகழ்வாய்
கண்ணீர் படிந்து நல்லூர் மண்ணும் கசிந்தது!
எதிரியையே கலங்க வைக்கும் இத்தியாகம்
இதிகாசங்களிலும் புராணங்களிலும்
தம்மையே கதாநாயகர்களாக
முன்னிறுத்தியவர்களுக்கு
ஏதும் செய்யவில்லை..!
குருதி வடியும்
கோரப் பற்களுடன்
நவீன புத்தர்கள் வெறித்திருக்க,
அவர்களுடன் கைகோர்த்து
ஈழத்தில் நர்த்தனமாடியவர்கள்
காற்றலையிலும் தம்
கயமைத்தனத்தை
காட்ட மறக்கவில்லை.
ஆயுதம் தூக்கும்
வன்முறையாளர்கள் ஈழத்தமிழர் என்று
பெரும் பிராயத்தனம் பண்ணி
உலகின் முன் ஏற்ப்படுத்தியவர்
பிம்பத்தை தவிடு பொடியாக்க
தன் உயிர் கொண்டு
உயிலெழுதி வைத்தான் திலீபன்!
ஆம்..!
ஈழ தாயும் ஒரு காந்தியை
கோட்ஸேகளிடம் ப(லி)றிகொடுத்தாள்!
(இக்கவிதையானது யாழ் பண்ணாகம் மெய்கண்டான் என்னும் பாடசாலையில் கல்வி கற்ற சிவநாதன் பவன் என்பவரால் 2004ம் ஆண்டு திலீபனின் நினைவு தினத்திற்காக எழுதப்பட்டு வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது.)