உலகக்கிண்ண கிரிக்கட் தொடரிலே ரசிகர்களுக்கு விருந்து படைக்கப்போகும் போட்டிகள் நாளையுடன் ஆரம்பமாகிறன. எதிர்பார்ப்புக்கள் போலவே காலிறுதிக்கான அணிகளும் தெரிவாகியுள்ளன. எனினும் B பிரிவிலே பங்களாதேஷுக்கு காலிறுதிக்கான வாய்ப்பு இருக்கலாம் என்று சிலரது எதிர்பார்ப்புக்கள் இருந்திருந்தாலும் இறுதி நேரத்தில் திரில்லாக இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பெற்ற வெற்றி பங்களாதேஷின் கனவுகளை தவுடு பொடியாக்கியது.
காலிறுதி போட்டிகளிலே பாகிஸ்தான் மேற்க்கிந்தியாவையும் ,இந்தியா அவுஸ்ரேலியாவையும், நியூசிலாந்து தென்னாபிரிக்காவையும், இலங்கை இங்கிலாந்தையும் சந்திக்கின்றன. இப்போட்டிகளில் தோற்கும் அணிகள் வீட்டுக்கு நடை கட்ட வெல்லும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிக்கொள்ளும்.
முதலாவது காலிறுதி போட்டி நாளை (23 ) பாகிஸ்தான் மேற்கிந்தியா அணிகளுக்கிடையே இடம்பெறுகிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை அவுஸ்ரேலியாவை தோற்கடித்த தெம்புடன் களமிறங்குகிறது. ஆனால் மேற்கிந்தியா தொடர்ச்சியாக இங்கிலாந்திடமும் இந்தியாவிடமும் பெற்ற தோல்விகளுக்கு பின் பாகிஸ்தானை சந்திக்கிறது. எனினும் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலே மேற்கிந்தியா வெற்றிபெறும் நோக்கத்தை பெரிதாக கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது. அதனால் தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெயில் மற்றும் முக்கிய பந்துவீச்சாளர் ரோச் க்கும் ஓய்வு வழங்கியிருந்தார்கள். காரணம் இந்தியாவுடன் வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதியிலே அவுஸ்ரேலியாவை சந்திக்க விரும்பாமையாக இருக்கலாம். பாகிஸ்தானை பொறுத்தவரை அவர்களின் பந்துவீச்சு பலமாகவே உள்ளது எனினும் அவர்கள் துடுப்பாட்ட வரிசை பலமாக இல்லை. இது வரை இடம்பெற்ற போட்டிகளிலே ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிலையான ஆட்டத்தை காட்டவில்லை. மொத்தமாக இடம்பெற்ற ஆறு போட்டிகளிலே உமர் அக்மலை (211 ) தவிர வேறு எவரும் 200 ஓட்டங்களை கடக்கவில்லை. ஆறு போட்டிகளிலே விளையாடிய அப்ரிடி வெறும் 65 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டுள்ளார். எனினும் பந்துவீச்சிலே இவர் கலக்குவது அவ்வணிக்கு சற்று ஆறுதலே. நாளை அக்தரின் மீள்வருகையை எதிர்பார்க்கலாம் ஆனால் இதுவரை பெரிதாக சிறப்பாக செயற்படாத இவர் நாளை கலக்குவாரா? அதே போல, மேற்கிந்திய தீவுகளின் நிலைமையும் பந்துவீச்சில் சற்று பலமாக இருந்தாலும் அவர்களின் துடுப்பாட்டம் ஆட்டம் காண்கிறது. கிறிஸ் கேயில், சர்வான் போன்ற வீரர்கள் இருந்த போதும் துடுப்பாட்டத்திலே இதுவரை எழுச்சி இல்லை. அத்தோடு பின்வரிசை துடுப்பாட்டம் தான் இவர்களின் பலவீனமும் கூட. கெமர் ரோச் நாளை களமிறங்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயற்ப்பட்ட ராம்பால் க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது. அதே போல சந்தர்போலும் அணிக்குள் உள்வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம். என்னை பொறுத்தவரை நாளைய போட்டியிலே தன் பந்துவீச்சு பலத்தால் மேற்கிந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கிறேன். மேற்கிந்தியா தீவுகள் சார்பாக நாளைய போட்டியை கெயிலோ அல்லது கிரேன் போலர்ட்டோ தம் கையில் எடுத்துக்கொள்வார்களாயின் பாகிஸ்தான் வெளியேறுவது நிச்சயம்.
அதே போல அவுஸ்ரேலியாவின் தொடர் வெற்றிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து அவர்களின் நம்பிக்கையில் ஆட்டம்காண வைத்துள்ளது பாகிஸ்தான். இனிவரும் போட்டிகளிலே அவுஸ்ரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் துடுப்பாட்டத்தில் எழுச்சி பெற்றாலே ஒழிய அவ்வணி நெருக்கடிகளை எதிர்கொள்ளும்.இவர் இதுவரை பங்குபற்றிய போட்டிகளிலே வெறும் 102 ஓட்டங்களையே பெற்றுள்ளார். எனினும் மைக்கல் கிளார்க்கின் எழுச்சியும் ஹசியின் மீள் வருகையும் அவுஸ்ரேலியாவுக்கு பலமே. அவுஸ்ரேலியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை லீயை தவிர வேறு எவரும் சிறப்பாக செயற்ப்படவில்லை. அத்தோடு சுழற்ப்பந்துவீசசு தான் அவுஸ்ரேலியாவுக்கு தற்போதைய மிகப்பெரிய பலவீனம். காலிறுதியிலே இவ்வணி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை அவர்களின் பலமே ஆரம்ப துடுப்பாட்ட தூண்கள் தான். அவர்களை விட பின்வரிசை துடுப்பாட்டமும் பலம் வாய்ந்ததாகவே உள்ளது. யுவராஜ் சிங் தற்சமயம் சிறந்த போர்முக்கு வந்திருப்பது கூடுதல் பலம். ஆனால் இதற்க்கு நேர் மாறாக உள்ளது இந்திய அணியின் பந்துவீச்சு. சகீர்கான் சிறப்பாக செயற்ப்பட்டாலும் முனாப் பட்டேல் பெயரளவிலே அணியில் இருக்கிறார். ஹர்பஜன் சிங்கிடம் இன்னமும் அதிகமாகவே இந்தியா எதிர்பார்க்கிறது.
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான போட்டியிலே அனேகமாக இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை இந்தியா களமிறக்கும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டாவது சுழல் அஸ்வின்னா இல்லை சாவ்லாவா என்று தெரியவில்லை. காரணம் பயிற்சி போட்டியிலே அவுஸ்ரேலியாவுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசியிருந்தார் சாவ்லா எனினும் அதன் பின் பங்குபற்றிய போட்டிகளிலே அவர் செயற்ப்பாடு மோசமாக இருந்துள்ளது. ஆனால் அஸ்வின் மேற்கிந்தியாவுக்கு எதிரான போட்டியிலே சிறப்பாக செயர்ப்பட்டிருந்தார்.
இந்தியாவின் பந்துவீச்சில் உள்ள பலவீனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் பட்சத்தில் அவுஸ்ரேலியா தப்பித்துக்கொள்ளலாம். என்னை பொறுத்தவரை இந்திய அணிக்கே வெற்றிவாய்ப்பு உள்ளது என்று எண்ணுகிறேன். எனினும் இந்திய துடுப்பாட்ட தூண்களை ஒரேயடியாக நம்புவதற்கில்லை. ஆக இனிவரும் போட்டிகள் விறு விறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
நல்ல அலசல்.
ReplyDelete