உலகக்கிண்ணம் VIII - வென்றது இந்தியா !!!

இதுவரையான உலகக்கிண்ண வரலாற்றிலே பாகிஸ்தான் அணி உலககிண்ண போட்டி ஒன்றிலே இந்திய அணியை தோற்க்கடித்ததில்லை. இந்த உலகக்கிண்ண தொடரிலே பாகிஸ்தான் அதை நிவர்த்தி செய்து இறுதிப்போட்டிக்கு உள் நுழையும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. காரணம் இவ் உலகக்கிண்ண தொடரிலே பாகிஸ்தானின் எழுச்சி அபாரமாக இருந்தது. எனினும் இம்முறையும் இந்திய அணியிடம் தோற்று வரலாற்றை மாற்றி எழுதும் சந்தர்ப்பத்தை மட்டுமல்லாது உலகக்கிண்ண இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது.



இரண்டு நாடுகளின் யுத்தம் என்ற ரீதியில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டி தோல்வி என்பது கவுரவ பிரச்சனையாக இரு நாட்டு ரசிகர்களாலும் பார்க்கப்பட்டது.

இம்முறை தோனிக்கு நாணய சுழற்ச்சியிலும் அதிஷ்டம் கிடைத்தது.  நாணய சுழற்ச்சியில் வென்று எதிர்பார்த்தது போலவே துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

கடந்த இரு போட்டிகளிலே இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய அஸ்வினுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு நெக்ரா அணிக்கு மீண்டும் உள்வாங்கப்பட்டிருந்தார். கடந்த போட்டிகளிலே மோசமாக பந்து வீசிய நெகராவின் வருகை ரசிகர்கள் மத்தியிலே எரிச்சலை கிளப்பி இருந்தாலும் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டு தன்னை நிரூபித்துள்ளார். இது தவிர இந்திய அணியில் வேறு மாற்றங்கள் இல்லை. பாகிஸ்தான் அணியிலே அக்தர் இடம்பெறுவார் என எதிர்பார்த்த போதும் அவர் இடம்பெறவில்லை.  அத்தர் இடம்பெற்றால் போட்டி இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். அக்தருக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற ரியாஸ் சிறப்பாக பந்து வீசியதன் மூலம்  முக்கிய ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்த காரணமாகினார்.



ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சச்சின் நிதானமாக நிலைத்து நிற்க வழமையை விட அதிகமாகவே  சேவாக் பாகிஸ்தான் ஆரம்ப பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். உமர் குல்லின் மூன்றாவது ஓவரில் ஐந்து பவுண்டர்கள் அடங்கலாக இருபது ஓட்டங்களை பெற்றார். எனினும் எதிர்பார்ப்புக்கு மாறாக 38 ஓட்டங்களுடன் இவர் ஆட்டமிழக்க எதோ ஒரு வெறுமையும் தொற்றிக்கொண்டது. இவரின் இந்த அதிரடி ஆட்டமே மிடில் ஓடரில் விக்கெட்டுக்கள் சடுதியா விழுந்த போது ரன் ரேட்டில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்தது.

ஒரு கட்டத்தில் 14 ஓவர்களிலே இந்திய அணி 100 ஓட்டங்களை தொட்டது. அதன் பின்னர் முக்கிய விக்கெட்டுக்கள் 3 அடுத்தடுத்து சரிந்தது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த காம்பீர் ஆட்டமிழக்க அடுத்து வந்த கோலி 9 ஓட்டங்களுடனும் பெரிதும் எதிர்பார்த்த யுவராஜ் வந்த வேகத்திலே பெவிலியன் திரும்ப இந்திய அணி இக்கட்டில் மாட்டிக்கொண்டது. எனினும் மறுமுனையிலே  பொறுப்புடன் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் நம்பிக்கை தந்தார். இவர்  85 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சச்சினும் அவசரப்பட்டிருந்தால் இந்திய அணியின் நிலை அந்தோ பரிதாம் தான். தோனி சற்று நிலைத்து நின்று தட்டி தடவி 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இம்முறை பந்து வீச்சாளர்கள் சற்று கைகொடுக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 260 ஓட்டங்களை எட்டி பிடித்தது. மீண்டும் இக்கட்டான நேரத்திலே ரைனா பொறுப்போடு ஆடி 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது  இருந்தார்.



260 என்பது சற்று சவாலானது தான் என்றாலும் பாகிஸ்தான் அணியிலே எட்டுபேர் துடுப்பாட்ட வீரர்களாக இருந்தார்கள். இதற்கு ஏற்றா போல ஆரம்பமே அதிரடியா தொடங்கினார்கள். மொத்த ஓட்டம் 44 ஆக  இருக்கும் போது முதல் விக்கெட்டாக கம்ரான் அக்மல் விழ பின்னர் ஒவ்வொரு  விக்கெட்டுக்களும் சீரான வேகத்தில் விழ ஆரம்பித்தது. முக்கியமாக துடுப்பாட்டத்திலே சொதப்பிய யுவராஜ் சிங் தன் முதல் நான்கு ஓவர்களையும் சிறப்பாக வீசி இரு முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். அத்தோடு இவரது களத்தடுப்பும் அற்புதம்.

உமர் அக்மல் இரண்டு இமாலய  சிக்ஸ்சர்களுடன் இந்திய அணியினரை மிரட்டினார். எனினும் துரதிஷ்ர வசமாக இவரும் ஆட்டமிழக்க போட்டி இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது. எனினும் அப்ரிடி ஆட்டமிழக்கும் வரை இந்தியாவின் வெற்றியை யாராலும் உறுதிசெய்திருக்க முடியாது.



இந்திய அணி சார்பாக பந்துவீச்சிலே வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுநாள் வரை சொதப்பிய முனாப் பட்டேல் நெக்ரா போன்றோர் வெற்றியில் பெரும் பங்கு ஆற்றியிருந்தார்கள். என்ன தான் சொன்னாலும் இப்போட்டியிலே ஒரு பக்கத்தில் விக்கெட்டுக்கள் சரிந்துகொண்டிருந்த போது நிலைமையை உணர்ந்து பொறுப்போடு ஆடிய சச்சினுக்கே  இவ்வெற்றியில் பெரும் பங்கு.


 மீண்டும் தாம் உலககிண்ண தொடர்களிலே அதிஷ்டம் அற்ற அணி என்பதை நிரூபித்து நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறியிருந்தது தென்னாபிரிக்கா. இறுதி போட்டிக்கு செல்ல தகுதி உடைய அணி என்று ஆரம்பத்தில் இருந்தே கிரிக்கெட் விமர்சகர்களால் கருதப்பட்ட அணி தென்னாபிரிக்க என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பலமான துடுப்பாட்டத்தை கொண்டதாக இருந்த தென்னாபிரிக்க நியூசிலாந்திடம் வீழ்ந்தது அவர்களின் துரதிஸ்டமே. காசிம் அமலாவின் அவுட்டை கவனித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும் தென்னாபிரிக்காவுக்கு அதிஷ்டம் எந்தளவுக்கு வேலை செய்தது என்று.



இலங்கை அணி அரையிறுதியிலே நியூசிலாந்தை வீழ்த்த சற்றே போராடியிருந்தது. இலங்கை அணியை பொறுத்தவரை துடுப்பாட்டத்திலே முதல் மூன்று விக்கெட்டுக்கள் விரைவாக சரிந்தால் அவ்வணியை எதிரணி தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். இந்த  உலககிண்ண தொடரிலே அதிக ஓட்டம் எடுத்த முதல் ஐந்து வீரர்களிலே இலங்கை அணியின்  முதல் மூன்று துடுப்பாட்ட வீரர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட பலத்துக்கு நிகராக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டமும் உள்ளது. அத்தோடு இந்திய அணியுடன் ஒப்பிடும் போது பந்து வீச்சிலும் பலமாகவே உள்ளார்கள். எனினும் இவர்களின் சுழல் பந்துவீச்சு இந்திய அணியிடம் எடுபடுமா என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இப்போட்டி இரண்டு வீரர்களுக்கு மிக முக்கியமானது, ஒன்று சச்சினின் இறுதி உலககிண்ண போட்டி இது. மற்றையது முரளியின் இறுதி உலககிண்ண போட்டி மடடுமல்லாது இதுவே அவரது இறுதி சர்வதேச ஒருநாள் போட்டியாகவும் அமைவது குறிப்பிடத்தக்கது. வரும் இரண்டாம் திகதி சனிக்கிழமை இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி இடம்பெற உள்ளது. பலமான துடுப்பாட்டம், பந்துவீச்சிலும் தற்சமயம் எழுச்சி , உள்ளூரில் இடம்பெறும் போட்டி என்பதால் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு கூடுதலாக உள்ளது என்பது என் கணிப்பு. முடிவை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

8 comments:

  1. வணக்கம் சகோ, நீங்கள் கிறிக்கற்றின் தீவிர விசுறியோ? எனக்கு கிறிக்கற் மீது இருந்த ஈடுபாடுகள் யாவும், போர்க்காலச் சூழ்நிலையால் இத்துப் போய் விட்டது.

    ஆட்டத்தை ரசித்துப் பார்த்து, எத்தனையாவது, ஓவரில் இந்தியா எப்படியிருந்தது, பிறகு எப்படி ஆடியது, விக்கட்டுக்களை இழந்தது முதலான விடயங்களைத் தொகுத்திருக்கிறீங்கள். நன்றிகள் சகோ.

    வரும் சனி மாலை பைனல் மும்பாயில். இந்தியாவா இல்லை இலங்கையா?

    ReplyDelete
  2. ///வணக்கம் சகோ, நீங்கள் கிறிக்கற்றின் தீவிர விசுறியோ? எனக்கு கிறிக்கற் மீது இருந்த ஈடுபாடுகள் யாவும், போர்க்காலச் சூழ்நிலையால் இத்துப் போய் விட்டது.
    ஆட்டத்தை ரசித்துப் பார்த்து, எத்தனையாவது, ஓவரில் இந்தியா எப்படியிருந்தது, பிறகு எப்படி ஆடியது, விக்கட்டுக்களை இழந்தது முதலான விடயங்களைத் தொகுத்திருக்கிறீங்கள். நன்றிகள் சகோ./// சிறு வயசிலிருந்தே எதோ ஒரு ஈர்ப்பு....

    ReplyDelete
  3. வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்!! கூடவே உங்கள் பதிவுக்கும்!!

    ReplyDelete
  4. உங்கள் தமிழ் மிகவும் பிடித்திருக்கிறது எனக்கு...

    ReplyDelete
  5. உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  6. ///நிரூபன் said...
    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
    * வேடந்தாங்கல் - கருன்// உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி மக்கா..)))

    ReplyDelete
  7. தினத்தந்தி அதிகம் படிப்பீர்களோ...

    ReplyDelete
  8. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete