ஒவ்வொருவருக்கும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவங்கள் என்று பல இருக்கும். இதிலே ஒரு சில சம்பவங்கள் மனசிலே பசுமரத்து ஆணி போல நீங்காத நினைவுகளாக மாறிவிடும்.அதே போல என் மனசில் நிறைந்து கிடக்கும் அந்த நினைவு தான் இவை. 95 இறுதி பகுதி அது, ஓரிரு நாட்களிலே நடுநிசியிலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது உயிர் மட்டும் மிஞ்சினால் போதும் என்று இலட்சக்கணக்கான மக்கள் தமது சொந்த இருப்பிடத்தை விட்டு கையில் கிடைக்கும் பொருட்களுடன் வேறு இடங்களுக்கு பெயர்ந்த நாட்கள். யாழ் இடப்பெயர்வில் அன்று 7 வயசு சிறுவனாக ஊரோடு ஒத்து பிறந்த மண்ணை விட்டு வெளியேறிய அந்த நினைவுகளை எழுதுகிறேன்.
95 இன் இறுதி பகுதி ,வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் போராளிகள் அறிவிக்கின்றார்கள் "தாம் யாழ் குடா நாட்டை விட்டு வெளியறப்போவதாகவும் இராணுவம் யாழுக்கும் உட் புக போவதாகவும் ஆகவே மக்களை பாதுகாப்பு தேடி தென்மராட்சி ,வன்னி போன்ற பிரதேசங்களுக்கு இடம்பெயருங்கள்"என்று,இந்த அறிவித்தல் விட்டு சில மணி நேரங்களிலே மக்கள் தங்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக யாழை விட்டு வெளியேறுகிறார்கள்.குண்டுச்சத்தங்களுக்கும், பேரிரச்சலுடன் எம் தலைகளை தேடும் மிகையொலி விமானங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ் குடாநாட்டையும் மற்றைய பிரதேசங்களையும் இணைத்து நிற்கும் இரண்டு பாதைகள் ஊடாக 5 இலட்சம் மக்கள் இரவோடு இரவாக வெளியேறிக்கொண்டு உள்ளார்கள்.
நாங்களும் எங்கள் சொந்தங்களை சேர்ந்த சுமார் எழு ,எட்டு குடும்பங்களும் ஒருவீட்டில் கூடி,ஒருசிலர் தாமும் இடப்பெயர வேண்டும் என்றும் இன்னும் சிலர் எது நடந்தாலும் நாம் ஒன்றாகவே இங்கேயா தங்கிவிடுவதாகவும் பெரியவர்கள் இடையே வாதங்கள் நடந்தது. இறுதியில் இடம்பெயருவதாக முடிவு எடுத்தார்கள்.காரணம் நம் குடும்பங்களிலே இளைஜர்களும் பெண்களினது பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.இதெல்லாம் 7 வயசு சிறுவனாக நானும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிக்கிறேன்.
இந்த முடிவுகளுக்கிடையே யாழ் குடாநாட்டில் இருந்த அநேகமான மக்கள் இடம் பெயர்ந்து விட்டார்கள் அதனால் வாகன ஒழுங்கு செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது.ஏதாவது வாகனங்கள் வருமா என்று நாம் மூட்டை முடிச்சுக்களை எடுத்துக்கொண்டு வீதியில் சென்று நிற்கிறோம் (யாழ்- காரைநகர் வீதி) ஆனால் வீதியோ எந்த சன நடமாட்டமும் இன்றி வெறிச்சோடி இருக்கிறது.அனேகமாக எமக்கு முன்னாடியே எமது கிராமத்தை சேர்ந்தவர்களும் அயல் கிராமத்தை சேர்ந்தவர்களும் வெளியேறிவிட்டார்கள்.நாம் தான் இறுதியாக வெளியேறுகிறோம் என்று நினைக்கிறேன்.
நீண்ட நேரம் காத்திருந்து எந்த வித வாகனங்களும் வரவில்லை, நேரமோ மாலை பொழுது மறைந்து இரவு வரவேற்கிறது. அந்த சமயம் சில போராளிகள் வருவதை கண்ட எம்மவர்கள், அவர்களிடம் எம் நிலைமையை எடுத்து கூறிகிறார்கள். அவர்களும் தாம் ஒழுங்கு செய்வதாக கூறி சென்றார்கள். சொன்னது போலவே சிறிது நேரத்தில் ஒரு வாகனம் வந்தது ,அதோடு 2 ,3 போராளிகளும் வந்தார்கள்.(ஒருவர் வாகனத்தை ஓட்டி வந்தவர்).
விரைவாக நாம் கொண்டு வந்த மூட்டை முடிச்சுக்களை ஏற்றினார்கள்.எனினும் நாம் அதிகமானோர் இருந்ததால் வாகனத்தில் இடப்பற்றாக்குறை இருந்தது ஒருவாறாக சிரமப்பட்டு எல்லோரும் ஏறினோம். முதியோர்களும் இருந்ததால் அவர்கள் வாகனத்தின் தட்டில் இருக்க(ரக்ரர் வாகனம்) மிகுதி எல்லோரும் கடுமையாக நெரிபட்டு நிற்கிறோம்.இவ்வாறாக புறப்பட ஆயத்தமாகும் போது அங்கெ எங்களில் ஒருவர் கொண்டு வந்த துவிச்சக்கர வண்டி அநாதரவாக நிக்கிறது. அதை விட்டு போக மனம் இல்லாது நம்மவர்கள் நிக்க அந்த போராளிகள் சிரமத்தின் மத்தியில் ஒருவாறாக சமாளித்து அந்த துவிச்சக்கர வண்டியையும் தம் வாகனத்தில் சுமத்திக்கொள்ள எம் பயணம் தொடங்குகிறது.
இருளும் எம் பயணத்தை சூழ்ந்து கொள்ள எங்கே செல்கிறோம் என்ற எந்தவித முன் திட்டங்களும் இல்லாமல் சென்றுகொண்டு இருக்கிறோம்.அப்பொழுது ஒரு போராளி எதோ ஒரு பாலம் உடைந்துவிட்டதாகவும் ( கோப்பாய் பாலம் என்று நினைவு)அதனால் மாற்று வழியாதான் செல்ல வேண்டும் என்று சொல்ல நம்மவர்களும் சஞ்சரித்து கொள்கிறார்கள்.குண்டு வெடிக்கும் சத்தங்களும் தொடர்ச்சியாக கேட்ட வண்ணம் இருக்கிறது . இப்படியாக பயணம் ஒரு வெளி பிரதேசத்தினூடாக தொடரும் பொழுது எம்மை நோக்கி யாராலோ வெளிச்சம் வீசப்படுகிறது.எங்களில் சிலர் சொல்லுகிறார்கள் "ஆமிக்காரன் பரா லைட் அடிச்சு பாக்கிறான்,ஷெல் அடிக்க போகிறான்" என்று. (அநேகமானோருக்கு தெரியும் பரா லைட் என்கிறது இரவு நேரங்களிலே எதிரிகளின் நடமாட்டத்தை அவதானிக்க இராணுவத்தால் பயன்படுத்தபடுவது என்று).இருந்தாலும் அந்த போராளிகள் எம்மை விட்டு ஓடி சென்று ஒளிக்காமல் தொடர்ந்து எம்மை கொண்டு செல்கிறார்கள்.நல்ல வேளை எம்மை நோக்கி ஷெல் அடிக்கவில்லை.அடித்திருந்தால் யாரும் அன்று உயிரோடு தப்பியிருக்க மாட்டோம்.ஏனெனில் அன்று மருத்துவ வசதியும் இல்லை. யாழ் போதனா வைத்தியசாலையும் கூட தம் செயற்பாடுகளை முடக்கி அன்று இடம்பெயர்ந்தது
இப்படியாக பயணம் நள்ளிரவை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. அப்பொழுது திடிரென மிக வேகமாக உளவு இயந்திரம் ஒன்றை செலுத்தி வந்த இருவர் அதை நாம் செல்லும் வாகனம் மீது கட்டுப்பாடு இழந்து மோதுவது போல கொண்டு வந்தார்கள்.எனினும் எம் வாகனத்தை ஓட்டி வந்த அந்த போராளியின் திறமையால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே போராளிகள் வாகனத்தை நிறுத்தி மிகுந்த ஆத்திரத்தோடு அந்த உளவு இயந்திரத்தை செலுத்தி வந்தவரை நேக்கி செல்ல ,போராளிகளை கண்டதும் அவர்கள் ஓடி ஒழித்துவிடுகிறார்கள்.
சிறிது நேரத்தில் மீண்டும் எம் பயணம் தொடர்ந்து வாகனம் பருத்தித்துறை எனும் பிரதேசத்தை வந்தடைய நடு நிசி ஆகிவிட்டது.அவர்களும் எம்மை ஒரு பாடசாலையில் இறக்கிவிட்டு "இன்று இரவு இங்கே தங்குமாறும் நாளை உங்களுக்கு தங்குவதற்கு இடம் ஒதுக்கி தருவதாகவும்" கூறி சென்றுவிட்டார்கள்.
அடுத்தநாள் காலை எழுந்து வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை அரைகுறையா சாப்பிட்டு இருக்க மீண்டும் அந்த போராளிகள் வந்து எமக்கு வேறு இடம் ஒதுக்கியுள்ளதாகவும் அங்கெ வருமாறும் எம்மை அழைத்து செல்கிறார்கள்.நாமும் கால் நடையாக வீட்டில் இருந்து எடுத்து வந்த பொருட்களோடு நடக்க தொடங்குகிறோம்.சிறிது தூரம் சென்றதும் எமக்கு ஒதுக்கியுள்ள இடத்தை காட்டுகிறார்கள்.அதுவும் ஒரு பாடசாலை, செயற்பாடுகள் இன்றி முடங்கி கிடந்தது. எம்மவர்களும் உள்ளே சென்று தமக்கான இடங்களை ஒதுக்கி கொள்கிறார்கள்.
இவ்வாறாக நாட்களும் நகருகிறது.எமக்கு அன்றாட தேவைகளுக்கும் உணவுக்கும் தொண்டு நிறுவனங்கள் மிகவும் உதவியாக இருந்தன.இவற்றுள் யுனிசெப் நிறுவனம் இன்றும் என் மனசில் நிக்கிறது.சமைத்து சாப்பிடுவதற்கான அத்தியாவசிய பொருட்களும் தரப்பட்டன.எம்மவர்களும் குடும்பங்களாக சேர்ந்து சமைத்து பரிமாறி உண்டனர்.
இப்படியே நாட்கள் மாதங்களாகி நகர்ந்துகொண்டு இருந்தன.நாம் தங்கி இருந்த அந்த முகாமுக்கு(பாடசாலைக்கு)முன் வீதிக்கு இரு மருங்கிலும் போராளிகளின் இராணுவ முகாம்.எனினும் எம்மிலும் பதின்ம வயசை கடந்த நபர்கள் இருந்த போதும் நான் அறிந்து ஒரு பொழுதும் அவர்கள் எம் முகாமுக்கு வந்து ஆட்சேர்ப்பில் ஈடுபட்டது இல்லை.ஆனால் எமது முகாமுக்கு அருகில் உள்ள பொது இடங்களில் போராட்டம் சம்மந்தமான கருத்தரங்கும் வீதிநாடகமும் வைத்து தம் போராட்டத்தின் நியாயங்களை எடுத்து கூறி மக்களை போராட்டத்தில் இணையுமாறு வேண்டிக்கொள்வார்கள்.அவர்களின் கருத்தரங்குகளின் முடிவிலும் வீதி நாடகங்களின் முடிவிலும் சிலர் இயக்கத்தில் சென்று இணைந்துகொண்டதாக எம்முகாமுக்குள் பேசிக்கொள்வார்கள்.என்னை பொறுத்தவரையில் கருத்தரங்கில் ஒன்றும் புரியாது.ஆனால் அவர்களின் வீதி நாடகங்களை சென்று வேடிக்கை பார்த்த நினைவுகள் உண்டு.அத்தோடு ரஞ்சன் பூங்கா, பருத்தித்துறை கடலுக்கு செல்வது என்று இம்மாலை நேர பொழுதுகளும் சென்றுகொண்டிருந்தது.
ஆறு மாதங்கள் ஓடியது மீண்டும் போராளிகள் தென்மராட்சியை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள் அநேகமான மக்களும் அவர்களுடனே வன்னிக்கு இடம் பெயருகிறார்கள்.ஆனால் நம்மவர்கள் "என்ன நடந்தாலும் மீண்டும் சொந்த ஊருக்கே போய்விடுவது" என முடிவெடுத்து வாடகைக்கு லொறி ஒன்றை பிடித்து அதன் மூலம் மீண்டும் யாழுக்கு செல்ல ஆயத்தமாகிறோம் .எனக்கு மிகுந்த சந்தோசம் நான் பிறந்த இடத்துக்கு மீண்டும் போகிறேன் என்பதை நினைத்து. பயணம் தொடங்கியது, எம்மை போலவே ஆயிரக்கணக்கானோர் வீதி நிறைந்து தமது சொந்த பிரதேசத்துக்கு மீள் குடியேற சென்று கொண்டிருந்தார்கள்.
சிலர் மாட்டு வண்டிகளில் அளவுக்கு அதிகமான தமது சுமைகளை ஏற்றியதால் மாடுகள் வாயால் நுரை தள்ள நடந்துவருவதை கண்டு பரிதாபப்பட்டது இப்பொழுதும் என் கண் முன்னே நிற்கிறது.வீதி எங்கும் மக்கள் அலையாக திரண்டு சென்றுகொண்டிருந்ததால் வாகனம் மிக மெதுவாகவே ஊர்ந்து சென்றது.யாழ் நகரத்தை அடைந்தபொழுது இருட்டிவிட்ட காரணத்தால் அங்கெ நின்ற இராணுவம் (அப்பொழுது தான் முதல் தடவையாக இராணுவத்தை காண்கிறேன்) "ஊரடங்கு வேளை பிறப்பித்து இருப்பதாகவும் தொடர்ந்து செல்ல முடியாது இரவு இங்கே தங்கிவிட்டு காலையில் பயணத்தை தொடருமாறு கூற செய்வதறியாது நாமும் அன்று இரவை அந்த யாழ் நகர் வீதியிலே கழித்தோம்.
மறு நாள் விடிந்ததும் குடிப்பதற்கும், முகத்தை கழுவி கொள்வதற்கும் தண்ணீர் பிரச்சனையா இருந்திச்சு .அதே நேரம் அருகில் ஒரு கோவில் இருந்தது .அது யாழ் நகர் வீதியில் உள்ள ஒரு கோவில்(பெயர் நினைவில் இல்லை) திருவிழாக்களின் பொழுது ஊஞ்சல் திருவிழா என்ற ஒன்று நடைபெறுவது உங்களுக்கு தெரிந்திருக்கும்.அந்த கோவிலிலும் ஊஞ்சல் திருவிழா நடந்திருக்கிறது அந்த நேரம் ஷல் அடிக்க சுவாமியை ஊஞ்சலிலே விட்டு விட்டு கோவிலில் நின்றவர்கள் தம் உயிரை காப்பாற்றும் நோக்கோடு ஓடியிருக்கிறார்கள்.ஏனெனில் நாம் அந்த கோவிலுக்குள் சென்ற நேரம் சாமி ஊஞ்சலிலே இருந்தது.ஆறு மாசமாக சாமியும் ஊஞ்சலில் இருந்திருக்காரு;) (சாமிக்க இன் நிலைமை என்றால் மனிதர்கள் நாம் எம்மாத்திரம்) நாமும் வேறு வழி இல்லாது அந்த கோவில் தீர்த்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்திவிட்டு,சிறிது நேரங்கழித்து எமது ஊர் நோக்கிய பயணம் தொடங்கி,ஊரை வந்தடைகிறோம்.
ஆனால் ஊரோ பார்ப்பதற்கே பாழடைந்ததாக குப்பையும் பற்றைகளுமாக மூடி கிடக்கிறது.அத்தோடு ஆள் நடமாட்டமும் மிகவும் குறைவாகவே இருந்தது.காரணம் ஊரை விட்டு இறுதியாக புறப்பட்டதும் நாங்கள் தான் ஊருக்கு முன்னதாக வந்து சேர்ந்ததும் நாங்கள் தான்.அநேகமானோரின் வீடுகள் உடைக்கப்பட்டு இருந்தது .சில வீடுகளில் களவுகளும் நடந்திருந்தன.அத்தோடு ஊருக்குள் புகுந்த ஆமி மதில்களிலும், வீட்டு சுவருகளிலும் சுட்டு சுட்டு பழகியுள்ளார்கள்;) ஆகவே நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சில மாதங்கள் எடுத்தது.
இப்படியாக நாட்டில் என்ன நடக்கிறது புலிகள் என்றால் யார், இராணுவம் யார் எதற்க்காக சண்டை நடக்கிறது என்று எதுவுமே பகுத்து அறிய தெரியாத வயசு என்பதால் என்னை பொறுத்த வரை அந்த நேரத்தில் இந்த நிகழ்வு ஒரு அவலமாக தெரியவில்லை.பாடசாலைகளுக்கு மூடுவிழா;) தொடர்ந்து மிரட்டும் பயங்கர குண்டுச்சத்தங்களையும், பேரிரச்சலை கிளப்பி வரும் விமானங்களை தவிர வேறு எந்த கஸ்ரங்களும் அந்த வயசில் தெரியவில்லை.அத்தோடு என் வயசை ஒத்த சிறுவர்களும் எம் குடும்பங்களில் இருந்ததால் எமக்கு அது ஒரு விளையாட்டாக தான் தெரிந்து.
ஆனால் இப்பொழுது நினைத்துப்பார்க்கும்பொழுது அந்த நாட்களில் கடுமைகள் புரிகிறது. கால் நடையாக தொடர் இடப்பெயர்வு, சொந்தங்களின் பிரிவுகள், பட்டினி, காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கொடுமைகள்,இறந்தவர்களுக்கு இறுதிசடங்கு செய்து அவர்களை அடக்கம் செய்ய கூட முடியாத பேரவலம்,தாகத்தால் அழுத குழந்தைக்கு குடிக்க நீர் இன்றி மழைநீரை குடையில் ஏந்தி கொடுத்த கொடுமை,எந்த நேரத்தில் தலையில் குண்டு விழும் என்று தெரியாத நிம்மதியற்ற வாழ்க்கை என எத்தனையோ அவலங்களை எம் மக்கள் அந்த நாட்களில் எதிர்கொண்டுள்ளனர் .
அன்று தங்களின் பளுக்களுக்கு மத்தியில் எமக்கு பேருதவி செய்த,வெறிச்சு கிடந்த ஊரில் எவ்வித உதவியும் இன்றி தன்னந்தனியாக நின்ற எமக்கு உதவிய அந்த போராளிகள் அனேகமாக இன்று உயிருடன் இருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்;( அவர்களையும் நன்றி கூறி வணங்கி என் இந்த நினைவுகளை முடித்துக்கொள்கிறேன்.
இந்த உலகிலே கொடுமையானது தமிழனாக பிறப்பது,
அதனிலும் கொடுமையானது ஈழ தமிழனாக பிறப்பது..
உங்கள் பதிவு நெஞ்சைக் கனக்கப்பண்ணியது. ஞாபகங்கள் தாலாட்டும் என்றும் கேட்டிருக்கிறேன் ஆனால்அவற்றிற்கு தீமூட்டவும் தெரியும் என்பது உங்கள் எழுத்தினூடே தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteநன்றி
சஞ்சயன்
http://visaran.blogspot.com/
கடந்த நினைவுகளை மீண்டும் கண் முன் நிறுத்துகிறது பதிவு சிறப்பு
ReplyDeletenalla anupavam
ReplyDeletemullaiamuthan.
katruveli-ithzh.blogspot.com
///உங்கள் பதிவு நெஞ்சைக் கனக்கப்பண்ணியது. ஞாபகங்கள் தாலாட்டும் என்றும் கேட்டிருக்கிறேன் ஆனால்அவற்றிற்கு தீமூட்டவும் தெரியும் என்பது உங்கள் எழுத்தினூடே தெரிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.//// என்றும் மறக்க முடியாத நிகழ்வுகள்...கருத்துக்களுக்கு நன்றி அண்ணா..
ReplyDelete///!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
ReplyDeleteகடந்த நினைவுகளை மீண்டும் கண் முன் நிறுத்துகிறது பதிவு சிறப்பு/// உங்கள் அங்கீகாரம் ஒரு உற்சாகத்தை கொடுத்துள்ளது..நன்றி அண்ணா
///nalla anupavam
ReplyDeletemullaiamuthan.
katruveli-ithzh.blogspot.கம //// இப்படி ஆயிரக்கணக்கான அனுபவங்கள்..நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு
anupavam kasramaayirukku
ReplyDeleteமிகவும் கஸ்ரமானது -நன்றி கருத்துக்களுக்கு
ReplyDeleteஎம் வாழ்வின் வடுக்களவை இனி ஒரு போர் எமக்கு வேண்டவே வேண்டாம் சகோதரா...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்
///எம் வாழ்வின் வடுக்களவை இனி ஒரு போர் எமக்கு வேண்டவே வேண்டாம் சகோதரா.../// நிச்சயமாக சகோதரரே, இனியும் இழப்பதற்கு இங்கே ஒன்றும் இல்லை.பட்டது போதும்
ReplyDelete