விளம்பரத்தில் பள பள விக்கெட்டில் மள மள இந்தியா -ஆபிரிக் தொடர் -உலகக்கிண்ணம்


இந்த தலைப்பு சில வருடங்களுக்கு முன்னர் கங்குலி தலைமயில் இந்திய அணி சொதப்பலாக விளையாடிய சமயம் பத்திரிகை ஒன்றால் கிண்டலாக எழுதப்பட்டது. அன்றைய  சமயம் இது உண்மையும் கூட. உலகில்  கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் விளம்பரங்கள் மூலம் அதிக வருவாயை எட்டும் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியினர் தான். இதில் கோடிகளை குவிப்பவர் சச்சின், எனினும் சமீபத்தில் இந்த சாதனையை டோனி முறியடித்துவிட்டதாக தகவல்.சரி விடயத்துக்கு வருவோம்.



நடந்து முடிந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் பரிதாபமாக தோல்வியை தழுவி கோப்பையை கோட்டை விட்டது தோனி தலைமையிலான இந்திய அணி.இதன் மூலம் ஆபிரிக்க மண்ணில் தொடரை வெல்லும் ஒரு அருமையான சந்தர்ப்பம் நழுவி போய்விட்டது.

இத்தனைக்கும் முக்கிய காரணம் முன்னணி  வீரர்களின்   பொறுப்பற்ற,நிதானமற்ற  விளையாட்டு.பவுசர்களுக்கு திணறுகிறார்கள்.இதை ஆபிரிக்க பந்துவீச்சாளர்கள் தமக்கு சாதகமாக மாற்றிவிட்டார்கள்.

உலகக்கிண்ணம் நெருங்கும் தருணத்தில் இந்திய அணிக்கு இது ஒரு பாதிப்பாக இருந்தாலும் முன்னணி  வீரர்கள்  விளையாடதால்  ஏற்பட்ட தோல்வி , அதி மோசமான தோல்வி இல்லை என்பதால் சற்றே ஆறுதல்.

இதில் பந்துவீச்சாளர்கள் அநேக தருணங்களில் சிறப்பாக செயற்ப்பட்டார்கள் சில சமயங்களில் சொதப்பினார்கள். அத்தோடு இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்டம் மிக மோசம். அதிலும்  முதல் மூன்று ஆட்டத்திலும் விளையாடிய முரளி விஜய் ஆட்டத்தை பார்க்கவே கடுப்பாக இருந்தது.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குபவர் ஒன்றில் அடிக்க வேண்டும்  முடியாவிட்டால் பேசாமல் அவுட் ஆகி போயிட வேண்டும்.(சேவாக் போல)  அதாவது மைதானத்துக்குள் நிலைத்து நிற்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் சீரான ஓட்ட எண்ணிக்கை (ஒருநாள் போட்டிகளுக்கு).   இதை விட்டு களத்திலே நின்று பவர்ப்ளே  ஓவர்களை  வீணடித்து விட்டு அவுட் ஆகி போனால் அது அடுத்து வரும் வீரர்களுக்கு மிகவும் நெருக்கடியாக அமைந்துவிடும். முரளி விஜய் T20 மட்டுமே பொருத்தமான ஆளு. இது வரை விளையாடிய ஒருநாள் தொடர்களில் எந்த ஒரு போட்டியிலுமே குறிப்பிடத்தகும் படியாக எதையும் சாதிக்கவில்லை.அப்படி இருக்க எதற்க்காக மீண்டும் அணியில் பூட்டி இழுக்கிறார்கள் என்று புரியவில்லை. இவரிலும் பார்க்க குட்டி பையன் பார்த்திவ் பட்டேல் பரவாயில்லை.

அடுத்து நான் பெரிதும் எதிர்பார்த்த வீரர் ரோகித் சர்மா.இந்த போட்டி இவருக்கு சிறப்பான சந்தர்ப்பமாக அமைந்திருந்தும் தன் திறமையை நிருபிக்க தவறிவிட்டார்.இதன் மூலம் தேர்வுக்குழுவினர் இவரை உலக கிண்ண அணியில் தேர்வு செய்யாததை நியாயப்படுத்தியுள்ளார்! பவுன்சர்களுக்கு திணறுகிறார். அதோடு ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு இவர் பொருத்தமானவர் இல்லை.


மீண்டும் மீண்டும் சொதப்பும் யுவராஜ் சிங், இரண்டாவது போட்டியில் ஒரு ஐம்பது தவிர குறிப்பிடும் படியாக  எதையும்   சாதிக்கவில்லை.இறுதிப்போட்டியில் விக்கெட்டுக்கள் தொடர்ந்து சரிந்த போது ஒரு மூத்த வீரராக களத்தில் நின்று போராடாமல் வேண்டா வெறுப்பில்  தோல்வி  என்றே முடிவு கட்டி விளையாடியது போல பந்தை தூக்கி கையில் கொடுத்துவிட்டு நடையை கட்டினார்.உலகக்கிண்ணத்திலாவது மீள்வாரா! இல்லை மாள்வாரா? எனினும் பகுதி நேர பந்துவிச்சாளராக   சிறப்பாக செயற்பட்டார்.

சமீப காலமாக விளம்பரங்களில் பளபளக்கும் டோனியிடம்  முன்னைய அதிரடியை காண கிடைக்குதில்லை.ஓட்ட குவிப்பிலும் சோர்ந்துவிட்டார்! இந்த தொடரிலும் இவரின் அதிக பட்ச ஓட்டம் 36 .  இப்பிடியே சொதப்பினால் அப்புறம் கங்குலியின் கதி தான். இந்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோனியின் செயற்பாடு  தேனியின் எதிர்கால கிரிக்கெட்டுக்கு பதிலாக இருக்கும் என்பது எனது கணிப்பு. (எனினும் விக்கெட் காப்பாளராக இருப்பதால் சொதப்பினாலும் சிறிதுகாலம் தப்பி பிழைப்பார்.)



 இந்திய அணியில் தற்போதுள்ள துடிப்பான வீரர், சிறந்த பீல்டர் என்றால் என்னை பொறுத்த வரை ரைனா தான் முதலிடம். சில சமயம் இவர் பாட்டிங்   கங்குலியின் "ஷாட்" களை நினைவுபடுத்தும்.   இவர் அடிக்கும் சில  சிக்ஸ்சர்கள் பிரமிக்க வைக்கும். எனினும் அநேக தருணங்களில் மோசமான ஷாட் களை அடித்து ஆட்டமிழந்து சென்றுவிடுகிறார். தென் ஆபிரிக்காவுடனான  இறுதி  போட்டியிலும் ஒரு தேவையில்லாத ஷாட் ஐ அடித்து அவுட் ஆகி  தோல்விக்கு வித்திட்டார். பவுன்சர்களை எதிர்கொள்வதில் இவரும் திணறுகிறார்.


எதிர்காலத்தில் டோனியின் கேப்டன் பதவிக்கு ஆப்பு அடிப்பவர்   விராட் ஹோக்லி ஆக  தான் இருக்கும். நிதானமாக நிலைத்து நின்று ஆடும் திறமை இயல்பாகவே இவரிடம் இருக்குறது. ஐ சி சி வெளியிட்டுள்ள ஒருநாள் வீரர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அடுத்துவரும் டெஸ்ட் தொடர்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன். தற்சமயம் நல்ல போர்ம் ல் இருக்கும்  இவரால் உலககிண்ண இந்திய அணிக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.  

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் IPL  ஆட்டம் காட்டி  சிறிது நேரம் ஆபிரிக்க வீரர்களின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டார் யூசுப் பதான். ஒரு கட்டத்தில் 119 /8 என்ற மோசமான நிலையில் இருந்த அணியை மீட்க பதான் தனி ஒருவராக நின்று போராடினார். அனைத்து வந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கினார். ஒவ்வொரு சிக்ஸ்சரும் பிரம்மாண்டம். இந்திய அணிக்கு இந்த தொடரில் சிம்ம சொப்பனமாக இருந்த  த்சொடோபே யின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் ஒரு நாலு ஓட்டம்- என விளாசி  அவர் கொட்டத்தை அடக்கினார். சகீரும் மறு புறத்தில் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க ஒரு கட்டத்தில் இந்தியா வென்றிடும் என்ற நிலைமையும் வந்தது. எனினும் அவசரப்பட்டு அடித்து  ஆட்டமிழக்க முடிவு தென்னாபிரிக்காவுக்கு சாதகமாக மாறியது. அதே போல மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி பெற்று கொடுத்த பெருமையும் பதானுக்கு. ஆக உலக கிண்ண பதினொருவர் அணியில் இடம் பிடிக்க அநேக வாய்ப்பு உள்ளது. கிடைத்தால் யுவ்வியின் இடம் தான் பறிபோகும் நிலை தற்போது..?

பந்து வீச்சை பொறுத்தவரை சகீர் கலக்கினார் அதுவும் இறுதி ஓவர்களில் ஓட்டங்களை வாரி வழங்கும் சகீர் தற்பொழுது இறுதி ஓவர்களை சிக்கனமாகவே  வீசுவது ஆறுதல். முனாப் பட்டேலும் குறிப்பிடத்தக்க அளவு சிறப்பாக செயற்பட்டு உலககிண்ண அணியில் இடம்பிடித்துவிட்டார். நெக்ரா தான் எதிர்பார்ப்புக்கு மாறாக சொதப்பினார். சிங்கும் பரவாயில்லை.



உலக கிண்ண பதினொருவர் அணியில் பந்துவீச்சாளர்கள் சார்பாக சகீர், கர்பஜன் சிங் நிச்சயம் இடம்பெறுவார்கள்.  ஆனால்  நெக்ரா, பட்டேல், பிராவீன் குமார்-இவர்களில் இருவருக்கு தான் வாய்ப்பு.எனினும் 2003 உலக கிண்ண போட்டியில் விளையாடிய அனுபவமும்  இதற்கு முன்னைய இந்திய மண்ணில் இடம்பெற்ற போட்டிகளில் சிறப்பாக செயற்ப்பட்ட நெக்ராவுக்கு அதிகம் வாய்ப்பு உண்டு . ஆக பட்டேல், பிராவீன் இருவரில் ஒருவர் தான் அடுத்தவர். (அனேகமாக பிரவீன் தான் உள்ளே செல்வார் என்று  நான் எதிர்பார்க்கிறேன்.)

ஆபிரிக்க அணியை பொறுத்தவரை இது கொண்டாடப்பட வேண்டிய வெற்றி அல்ல. சொந்த மண்ணிலே தட்டு தடுமாறி  இந்த வெற்றியை பெற்றுக் கொண்டது அவர்களின் "பலத்தை" காட்டுகிறது. எனினும்ஆபிரிக்காவின் முதுகெலும்பு கலீஸ் விளையாடாத பாதிப்பு தெரிந்தது. ஆபிரிக்காவின் பந்துவீச்சு  மிரட்டுகிறது. எனினும் ஆசிய கண்டத்தில் இவர்களின் வேகம், பவுன்சர் எந்த அளவுக்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  தற்சமயம் காசிம் அம்லா,கலீஸ்,சிமித்,டுமினி போன்ற வீரர்கள் சிறந்த போர்மில் இருப்பது  ஆபிரிக்காவுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.


3 comments:

  1. சார் நமக்கு கிரிக்கெட் ஆவாது! ஸோ சாரி! ஓட்டுப் போட்டுட்டேன். கெளம்புறேன்!!

    ReplyDelete
  2. ////மாத்தி யோசி said...

    சார் நமக்கு கிரிக்கெட் ஆவாது! ஸோ சாரி! ஓட்டுப் போட்டுட்டேன். கெளம்புறேன்!!///
    நன்றிண்ணா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete