கருணாநிதியும் டெசோவும்..

"இவனை அடிச்சும் பார்த்தாச்சு அவிழ்த்தும் பார்த்தாச்சு..." என்ற வடிவேலுவின் காமெடி தான், இன்று கருணாநிதி ஈழத்தமிழர்கள் பால் அக்கறைகொண்டு முதலைக்கண்ணீர் வடித்து, ஈழத்துக்காக தான் இன்னென்ன செய்தேன் என்று பட்டியலிட்டு அறிக்கை வெளியிடும் ஒவ்வொரு தருணமும் உலகத்தமிழர்களின் நினைவுக்கு வரும்! இதில் இறுதியாக நடந்து முடிந்த கலாட்டா காமெடி தான் அண்ணாரின் 'டெசோ' மாநாடு!
பதவி இழப்பு, ஸ்பெக்ராம் ஊழல், கனிமொழி சிறை, அண்ணன் தம்பி மோதல் என்று குடும்பமும் கட்சியும் நலிவடைந்து, மக்கள் மத்தில் செல்வாக்கு இழந்து வருகிற இந்த சூழலில்; இவற்றை எல்லாம் புறம்தள்ளி, கலைஞர் தான் ஈழ தமிழர்கள் மீது கொண்ட அக்கறையை ஒட்டுமொத்த தமிழினமும் வியந்து பாராட்டும் என்று நினைத்தாரோ என்னமோ... ஆனால் தொடர்ந்து ஏமாற தாம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை தமிழர்கள் நிரூபித்துள்ளார்கள்! ஆனாலும் இவை எதையும் கருத்தில் கொள்ளாது அடுத்த நாள் படுக்கையில் இருந்து எழும்பி 'டெசோ மாநாடு வெற்றி' என்று அறிவித்த கருணாநிதியின் ராஜ தந்திரத்தை பொன்னாடை போர்த்தி கவுரவித்தாக வேண்டும்!

கருணாநிதிக்கு ஈழ தமிழர்கள் மீது அக்கறை வருவது ஒன்றும் இதுவே முதற்தடவை அல்ல! அதாவது இதற்க்கு முன்னர் கூட 'எப்பெப்போ தேர்தல் காலம் வருகிறதோ.., எப்பெப்போ தன் அரசியல் செல்வாக்கு நலிவடைகிறதோ.., எப்போப்போ மாற்று கட்சிகள் ஈழ தமிழர்கள் மீது அக்கறை கொண்டு செயற்ப்படுகிறதோ.., எப்பெப்போ கருணாநிதிக்கு பொழுது போகவில்லையோ..,அப்பப்போ எல்லாம் ஈழதமிழர்கள் மீது அக்கறையும் அனுதாபமும் வந்து தொலைந்துவிடும்!

இது தவிர ஈழ தமிழர்கள்பால் கருணாநிதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும் ஒவ்வொரு தடவைகளும் உடனே ஒரு பல்லவியை சந்தம் தப்பாமல் பாட தொடங்கிவிடுவார். "தண்டவாளத்தில் தலைவைத்தேன், பதவி இழந்தேன், ஈழம் சென்று திரும்பிய இந்திய இராணுவத்தை புறக்கணித்தேன், உண்ணாவிரதம் இருந்தேன், மனித சங்கிலி போராட்டம் நடத்தினேன்..." இவ்வாறு அது நீண்டு செல்லும். ஆனால் ரெயின் ஓடாத தண்டவாளத்தையும், காலை-மாலை இடைப்பட்ட நேர உண்ணாவிரதத்தையும், அடுத்த கட்ட அரசியலுக்காக இழந்த பதவியையும் பற்றி இந்த மக்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்கள் என்பது கருணாநிதியின் நீண்டகால அரசியல் ஊடாக தமிழ் மக்கள் மீதான நம்பிக்கை!

இதே போல ஒன்று தான் "தமிழர்களின் மறதி" வியாதியின் மீது நம்பிக்கை வைத்து நடாத்தப்பட்ட டெசோ மாநாடு!

இந்த பிசுபிசுத்துப்போன மாநாட்டில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று கச்சதீவை மீட்க வேண்டுமாம். இதிலே வேடிக்கை என்னவென்றால் கச்சதீவை இந்திராகாந்தி அவர்கள் இலங்கைக்கு தாரை வார்க்கும் போது தமிழ்நாட்டின் முதல்வர் பதவியில் இருந்து வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர் இதே கருணாநிதி தான். அதன் பின்னரும் மூன்று தடவைகள், மொத்தம் பதின்நான்கு வருடங்கள் தமிழகத்தின் முதல்வர் ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர். அப்பொழுதும் கூட தமிழக மீனவர்கள் தெருநாயை போல இலங்கை இராணுவத்தால் சுட்டு கொள்ளப்படும் ஒவ்வொரு தடவைகளிலும் வெறும் காகித கடதாசிகள் மூலம் மத்திய அரசுடன் குடும்பம் நடத்தினர். இப்பொழுது திடிரென கச்சதீவின் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் அக்கறை எழுந்ததன் நோக்கம் என்னமோ?

டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களுமே இதே போல தான்; ஆட்சியில் இருக்கும் போது கும்பகர்ண தூக்கத்தில் இருந்தவர். ஆட்சி பறிபோன இந்நிலையில் துள்ளி எழுந்து, நேற்று தான் ஈழ பிரச்சனை தொடங்கியது என்பது போல இதய சுத்தியுடன் நடந்து கொள்வதாக நாடகம் காட்டுகிறார்! கூடவே இறுதி யுத்தம் நடந்துகொண்டு இருக்க, அது பற்றி சிறிதும் சலனம் காட்டாது மான் மயில்களை ஆடவைத்தும் ,'முத்தமிழ் அறிஞர்' பாராட்டு விழாக்களை மாறி மாறி ஒளிபரப்பி கருணாநிதியை குளிர்மை படுத்தியும் வந்த கலைஞர் தொலைக்காட்சியில் இந்த டெசோ மாநாட்டுக்கு ஆயிரத்தெட்டு அறிவுப்புகள்! 'கலைஞர் சொல்லியாச்சு ஈழம் உறுதியாச்சு' என்று மிக கேவலமான சுவரொட்டிகள்! தன் பிழைப்புக்காக இன்னொன்றை அடகு வைப்பது விபச்சாரத்துக்கு ஒப்பானது!

மாநாட்டிலே இறுதி தீர்மானமாக, டெசோவை எதிர்த்த அதிமுக வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம்....இப்போ சாதாரணமாகவே புரியும் இந்த மாநாட்டின் நோக்கம்பற்றி!

அப்படியெனில் டெசோவை எதிர்த்த ஓட்டு மொத்த உலக தமிழர்களுக்கு எதிராகவும் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றவில்லையா..?

3 comments:

  1. இந்த தாத்தா கதையை விட்டுவிட்டு!வேற வேலையைப்பாருங்க கந்தசாமி!

    ReplyDelete
  2. இதே போல ஒன்று தான் "தமிழர்களின் மறதி" வியாதியின் மீது நம்பிக்கை (வைத்து நடாத்தப்பட்ட டெசோ மாநாடு!) இந்த வியாதி மாற அல்லது இல்லாமல் போக இது போன்ற பதிவுகள் அவசியமானவை. உண்மையில் தமிழக அரசியலில் கருணாநிதி ஒரு மறைக்கமுடியாத சக்தி.நாங்கள் கொஞ்சம் ஓய்ந்து விட்டால் காணும் அந்த இடத்தால வந்து எழுந்து மீண்டும் நிற்க கூடிய வல்லமையுள்ள __ __ __.காலத்துக்கு காலம் நினைவூட்டவேண்டிய கடமை எமக்குண்டு.தொடருங்கள்

    ReplyDelete
  3. அப்படியெனில் டெசோவை எதிர்த்த ஓட்டு மொத்த உலக தமிழர்களுக்கு எதிராகவும் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றவில்லையா..? ////அடுத்த எல க்ஷனில தோக்கிறப்போ நிறைவேற்றுவாரு,கவலைப்படாதீங்க!

    ReplyDelete