ஸ்டாலின் கிராட் (மகத்தான வெற்றி)


உலகையே ஒருகணம் திரும்பி பார்க்க வைத்த, சர்வதிகாரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து உலகை காப்பாறிய, உலக வரலாற்றில் என்றுமே இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு வீரம் பொருந்திய நகரின் பெயர்... அது தான் ஸ்டாலின் கிராட்!

ஐரோப்பாவிலும், அதை தாண்டியும் உள்ள பலம்பொருந்திய அத்தனை நாடுகளையும் அடித்து நொறுக்கிய சக்திவாய்ந்த பாசிச படைக்கு ஒரு நகரம் சமாதி கட்டியது... அது தான் ஸ்டாலின் கிராட்!

கிட்லரின் போக்குக்கு இறுதி அத்தியாயத்தை தொடக்கி வைத்ததும் இந்த ஸ்டாலின் கிராட் என்ற நகர் தான்.

இரண்டாம் உலக போரினால் இராணுவ, அரசியல் போக்குகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வைத்த தொடக்க புள்ளியும் இதே ஸ்டாலின் கிராட் தான்.. இவ்வாறு இந்த நகரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

அணு அணுவாக தமது சொந்த நிலம் பறிபோவதை கண்முன்னே கண்டு பொங்கி எழுந்து எதிர்த்து நின்ற சோவியத் யூனியன் மக்களுக்கு இறுதியில் வாழ்வா சாவா என்ற நிலையை ஸ்டாலின் கிராட் நகரம் ஏற்ப்படுத்திவிட்டது. இந்த நகரையும் கிட்லர் படைகளிடம் இழந்தால் தம் இருப்புக்கும் அதுவே இறுதி நாள் என்பதை அம்மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். அப்படியும் அவர்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் கிட்லர் படைகளிடம் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடைந்தாலும் உயிர் மிஞ்சுமா என்பதும் கேள்விக்குறியே?
இவ்வாறு மண்டியிட்டு சரணடைந்து வாழ்வதையோ இல்லை சாவதையோ விட தாம் நேசித்த மண்ணுக்காக, தம் எதிர்கால சந்ததியின் இருப்புக்காக இறுதிவரை சண்டையிட்டு மடிவதையே அம் மக்களும் விரும்பினார்கள்.

அது மட்டும் அல்ல! இந்த ஸ்டாலின் கிராட் நகர் கிட்லரிடம் வீழ்ந்தால், கிட்லரின் அடுத்த இலக்கு பிரித்தானியா தான். அதன் பின் அமெரிக்கா ஆசியா என்று கிட்லரின் கால்கள் ஆழ பதிய கூடிய அச்ச சூழல் இருந்தது. ஆக இந்த முதலாளித்து வல்லரசுகளுக்கு மட்டுமல்லாது, உலகின் தலை எழுத்தையே நிர்ணயிக்கும் ஒரு யுத்தமாக தான் ஸ்டாலின் கிராட் நகருக்கான யுத்தம் உலகத்தால் பார்க்கப்பட்டது.

மறுபுறம், ஏற்கனவே சோவியத் யூனியன் படைகளின் மூர்க்கத்தனமான எதிர் தாக்குதல்களால் ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும், படைகளின் உள பலத்திலும் சற்று குன்றி போய் இருந்த ஜெர்மன் படைகளுக்கும் இந்த ஸ்டாலின் கிராட் வெற்றியானது மிக பாரிய நெஞ்சுரத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தது. ஆகவே இந்த வெற்றிக்காக கிட்லர் என்ன விலை கொடுக்கவும் துணிந்தார்.

1942 ம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தொன்பதாம் திகதி அதிகாலையிலே ஸ்டாலின் கிராட் நகரம் போர்க்கோலம் தரித்து. இம்முறை வழமைக்கு மாறாக சோவியத் யூனியன் படைகளே யுத்தத்தை தொடக்கி வைத்தார்கள். களமுனைகள் திறக்கப்பட்டு பிரமாண்டமான யுத்தம் ஆரம்பித்தது. ஆனால் கிட்லர் படையின் எதிர்பார்ப்புக்கு மாறாக திறக்கப்பட்ட களமுனைகளிலே யுத்தத்தின் போக்கு ஆரம்பத்திலிருந்தே சோவியத் யூனியன் படைகளின் வசமே சாதகமாக சென்று கொண்டிருந்தது. தேசப்பற்று மிக்க சோவியத் மக்களின் முன்னால் ஆயுத பற்று கொண்ட கிட்லர் படைகள் தடுமாறியது. தம் ஒவ்வொரு அடி மண்ணையும் காத்து நிற்க சோவியத் படைகள் காட்டிய எதிர்ப்பால் ஜெர்மன் படை நடுங்கியது.

இதன் ஒரு பகுதியாக 330 000 ஆட்களைகொண்ட ஜெர்மன் படையின் இருபத்திரண்டு டிவிஷன்கள் சோவியத் யூனியன் படைகளால் ஊடறுத்து சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் சுற்றி வளைக்கப்பட்ட படைகளுக்கான ஆயுத வழங்கல்கள் தடைப்பட்டது. இந்த டிவிசன்களை மீட்க ஜெர்மன் மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளும் சோவியத் படைகளால் தவிடு பொடியாக்கப்பட்டது.

சுற்றிவளைக்கப்பட்ட படைகளை சரணடைய சொல்லி கேட்டுகொண்டபோது அப்படைகளின் தளபதி அதை மறுத்துவிட்டான். இதனால் இந்த படைகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் சோவியத் படைகள் களமிறங்கின. இதன் போது பல இலட்சம் படைகள் கொல்லப்பட்டதுடன், தொண்ணூறு ஆயிரத்துக்கும் மேலான ஜெர்மன் படைகள் கைது செய்யப்பட்டு, மிகப்பெரும் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றவும், எஞ்சிய படைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சிதறி ஓட்டம் பிடிக்கவும் ஸ்டாலின் கிராட் நகரம் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இவ் வெற்றியானது சோவியத் மக்களின் நெஞ்சுறுதியையும், இவர்கள் தம் தாய் தேசத்தின் மீது கொண்டிருந்த பற்றையும் உலகுக்கு பறைசாற்றி நின்றது. இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தம் நாடு ஆக்கிரமிக்கப்படுவதற்க்கு எதிராக காட்டிய வீரம் செறிந்த எதிர்ப்பும், தன்னலம் அற்ற உழைப்பின் மூலமே இந்த மகத்தான வெற்றியை பெற முடிந்தது.

ஸ்டாலின் கிராட் வெற்றி செய்தியை இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் தம் வெற்றியாக எடுத்து கொண்டாடின. சோவியத் யூனியன் அரசானது ஸ்டாலின் கிராட் நகரை பாதுகாத்து நின்ற தனது படைகளுக்கும், அந் நகரத்துக்கும் ,நகர மக்களுக்கும் மதிப்பளிக்கும் விதமாக ஸ்டாலின் கிராட் நகருக்கு "வீரத்திருநகர்" என்ற சிறப்பு பட்டத்தையும் வழங்கி கவுரவித்தது.

ஜெர்மனின் மிகப்பலம் வாய்ந்த டிவிசன்கள் எல்லாம் ஸ்டாலின் கிராட்டில் அடித்து துவம்சம் செய்யப்பட்டதால் ஒட்டு மொத்த ஜெர்மன் படைகளுக்கும் மிகப்பெரும் கிலியை இத்தோல்வியானது ஏற்ப்படுத்தியது. கிட்லரின் முதுகெலும்பையே உடைத்து போட்ட இத்தோல்வியானது அவரின் பாசிச கூட்டணிகளையும் அடங்க வைத்தது. இங்கே கிட்லர் வாங்கிய அடியானது அவரின் சாவு மணியானதுடன், அவருடமும் அவரின் பாசிச படைகளிடமும் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களும், ஜெர்மனும் மீட்க்கப்படும் வரை தொடர்ந்தது.
ஆறு மாதங்களாக நடைபெற்ற ஸ்டாலின் கிராட் நகருக்கான யுத்தமானது இன்று வரை உலகிலே நிகழ்த்த மிகப்பெரும் மரபு வழி யுத்தமாக உலகத்தால் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமிப்புக்கும், பாசிசத்துக்கும் எதிராக மனித குலம் பெற்றுக்கொண்ட இந்த வெற்றி என்றும் உலகத்தால் நினைவு கொள்ளப்படும்.

-முற்றும்.

ஸ்டாலின் கிராட். (stalingrad).. (தோல்வியின் ஆரம்பம்)

எதிரி தன்னை தயார்படுத்துவதற்க்கோ, யுத்தத்தின் இடைநடுவில் ஓய்வு எடுப்பதற்க்கோ சற்றே கால அவகாசம் வழங்காது, தான் வரையறுத்த இலக்கை நோக்கி உக்கிர தாக்குதல்களை நடத்தியவாறே மிக வேகமாக முன்னேறி சொல்லுவது தான் கிட்லரின் மின்னல் வேக தாக்குதல் தந்திரமாகும். இம்முறையிலான படையெடுப்பானது இரண்டாம் உலக யுத்தத்திலே கிட்லருக்கு மிக பெரிய வெற்றிகளை பெற்று கொடுத்தது; ஆனால் இந்த தாக்குதல் தந்திரம் சோவியத் யூனியனில் பலிக்கவில்லை. இது தான் சோவியத் யூனியனில், கிட்லரின் யூகத்துக்கு மாறாக கிடைத்த முதலாவது அதிர்ச்சி.

மின்னல் வேக தாக்குதல் மூலம் சோவியத் யூனியனை இரண்டு, மூன்று மாதங்களில் வெற்றி கொண்டுவிடலாம் என்று கிட்லர் போட்ட திட்டத்தில் (பார்பரோஸ்ஸா) மண்விழுந்தது.

இரண்டாம் உலக ஆக்கிரமிப்பு போரிலே முதன்முதலாக சோவியத் யூனியன் படைகளிடம் இருந்து கடும் எதிர்புக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு ஜேர்மனிய படைகள் தள்ளப்பட்டன. சோவியத் யூனியன் படைகளின் மனோபலத்துக்கு முன்னால் கிட்லரின் இராட்சத படைபலமும், ஆயுத பலமும் சமநிலையில் தான் நின்றது. ஆனாலும் கிட்லர் இதை அலட்சியம் செய்தார். சோவியத் யூனியனை அழிக்க எந்தப் பெரிய விலையும் கொடுக்கத் துணிந்தார்.

ஜூன் மாதம் இருபத்தியிரண்டாம் திகதி தொடங்கிய ஆக்கிரமிப்பு போர் வெறும் ஒன்றை மாதங்களை கடந்த நிலையில் ஜெர்மன் தனது 3 90 000 படைகளை சோவியத் யூனியன் மண்ணில் பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அந்தளவுக்கு சோவியத் யூனியன் படைகளின் மூர்க்கமான பதில் தாக்குதல் அமைந்தது. ஒவ்வொரு அடி மண்ணை கைப்பற்றவும் ஜெர்மன் படைகள் தம் உதிரத்தையும் உயிரையும் பெறுமதி பாராது பறி கொடுத்தார்கள்.

சோவியத் யூனியன் ஒரு கம்யூனிச நாடு, இங்கே படை வீரர்கள்- மக்கள் என்ற பாகுபாடு இல்லை. உழைக்கும் வர்க்கம் முழுவதுக்கும் எதிரியிடம் இருந்து தம் தாய் நாட்டை காக்க வேண்டிய பாரிய கடமை கண் முன்னே நின்றது. இதை உணர்ந்தவர்களாக அம்மக்களும் ஆயுதம் தரித்து களமுனைக்கு சென்றார்கள். ஒட்டுமொத்தத்தில் சோவியத் யூனியனின் ஒவ்வொரு குடிமகனும் யுத்தத்துக்கு நேரடியாகவோ இல்லை எதோ ஒரு விதத்தில் முகம் கொடுத்தான்/பங்களிப்பை வழங்கினான்.

"செத்தாலும் சாவோமே தவிர இங்கிருந்து நகரமாட்டோம். நான் இருக்கிறேன் சரணடையவில்லை. தாய் நாடே விடை கொடு"- இவை யுத்தத்தின் ஆரம்ப நாட்களிலே சோவியத் யூனியன் படை வீரர்களால் தமது கோட்டை சுவர்களில் எழுதப்பட்ட வசனங்கள்.
ஒரு போர்வீரனுக்கான மிக சிறந்த அங்கீகாரம் அவன் எதிரியிடம் இருந்து கிடைப்பது தான்; அந்தவகையில் ஒரு ஜெர்மன் இராணுவ ஜெனரல் சோவியத் படை வீரர்களின் மன உறுதியை பின்வருமாறு சொல்கிறார் "ஒரு சோவியத் படைவீரனை இரண்டு தடவைகள் துப்பாக்கியால் சுட்ட பின் ஓங்கி நெஞ்சிலே கால்களால் எட்டி உதைத்தால் தான் அவன் நிலத்திலே சாய்கிறான்."-

இவ்வாறு ஒவ்வொரு தெருவாய், ஒவ்வொரு பிரதேசங்களாய், ஒவ்வொரு நகரங்களாய் மிக பெரும் எதிர்ப்புக்களையும், கடும் இழப்புக்களையும் சந்தித்த வண்ணம் கிட்லர் படை இறுதியாக சோவியத் யூனியனின் எண்ணெய் வளம் மிக்க பிரதேசமான காக்கசஸின் என்னும் இடத்தை சென்றடைந்தார்கள். எனினும் அவர்களால் அப்பிரதேசத்தை முற்று முழுதாக கைப்பற்ற முடியவில்லை. சோவியத் படையின் மூர்க்கத்தனமான எதிர்ப்பினால் தற்காப்பு யுத்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இப்பிரதேசத்தில் தான் கிட்லர் படையால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் ஆயிரக்கணக்கில் விசவாயு மூலம் கொல்லப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாய் யுத்தம் தொடக்கி ஆமை வேகத்தில் ஆக்கிரமித்து, ஆழ கால்பதித்து நின்ற கிட்லர் படையை பொறுத்தவரை சோவியத் யூனியனில் எஞ்சி இருக்கும் பெரு நகரங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று ஸ்டாலின் கிராட் மற்றையது மாஸ்கோ. இந்த இரு நகரங்களும் அரசியல் ரீதியாகவும் சரி இராணுவ தந்திர ரீதியாகவும் சரி மிக முக்கியமானவை. இதில் ஒன்றை கிட்லர் படை கைப்பற்றினாலும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி உறுதியாகிவிடும்; என்பது மட்டுமல்லாது உலகின் பிடியே சர்வாதிகாரிகளின் காலடியில் மண்டியிடக்கூடியதொரு ஆபத்தான சூழலும் உருவாகியது.

இந்நிலையில் 1941ம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் மாஸ்கோவை அழிப்பதற்காக கிட்லரால் தொடங்கப்பட்ட யுத்தம் ஜெர்மன் படைகளுக்கு படு தோல்வியையும், பெரும் இழப்புக்களையும் தான் பெற்று கொடுத்தது. இந்த தோல்விக்கு யுத்த காலப்பகுதியில் சோவியத் யூனியனில் நிலவிய பனி காலநிலையும் முக்கிய பங்காற்றியது..

எனினும் கிட்லர் விடுவதாக இல்லை. எப்படியாவது சோவியத் யூனியனை மண்டியிட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த/இழுத்துவந்து விடப்பட்ட களமுனை தான் ஸ்டாலின் கிராட்...

அடுத்த பகுதியில்..

ஸ்டாலின் கிராட். (stalingrad).. (யுத்த முனைப்பு)

ஸ்ராலின் கிராட் -பகுதி 1
ஒரு மிகச் சிறந்த போர் வீரன் விடும் மிகப் பெரிய தவறு 'தன் எதிரியை குறைத்து மதிப்பிடுவது' தான். இந்த இடத்தில் எந்த ஒரு பலமான படையும் படு தோல்வியில் விழும் சந்தர்ப்பங்கள் அதிகம். அந்த தவறை கிட்லரும் செய்தார். இது, அவர் தன் மீதும், தன் படைகள் மீதும் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையிலானது. அத்துடன் சோவியத் யூனியன் மீது இருந்த கடும் சினம் அவர் கண்களை மறைத்து சோவியத் யூனியனை துச்சமாக மதிக்க தூண்டிவிட்டது.

சோவியத் யூனியனை கைப்பற்றி அந்நாட்டை முற்றாக நாசம் செய்வதுடன், அந்நாட்டு மக்களை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டும் என்று தன் ஜெனரல் தர அதிகாரிகளுக்கு கட்டளை இடும் அளவுக்கு சோவியத் யூனியன் மீதான கிட்லரின் கோபம் இருந்தது. அதற்காக வெறும் மூன்று மாத கால அவகாசத்தையும் கொடுத்திருந்தார். கிட்லரை போலவே அவரின் முதன்மை படை அதிகாரிகளும் சோவியத் யூனியனை இலகுவாக அழித்தொழிக்கலாம் என்று திடமாக நம்பினார்கள். ஆனால் ஒரு சில ஜெர்மனியின் இராணுவ நிபுணர்கள் மட்டுமே இதற்க்கு சந்தேகம் தெரிவித்திருந்தார்கள். குட் வான் காமர்ஷன் என்ற ஜெர்மனியின் முன்னாள் இராணுவத்தளபதி ஒருவர் மட்டுமே "சோவியத் யூனியனுக்குள் நுழையும் எந்த ஒரு ஜெர்மன் படை வீரரும் உயிரோடு மீளப்போவதில்லை" என்று எதிர்வு கூறியிருந்தார்.

இவ்வாறாய், இவையெல்லாம் நடப்பதற்க்கெல்லாம் முன்னர் சோவியத் யூனியன் மீது கழுகு பார்வை கொண்டிருந்த, சோவியத் யூனியனின் அழிவை காண துடித்துக்கொண்டிருந்த பிரான்ஸ், பிரித்தானியா போன்ற முதலாளி நாடுகள்.. அந்த அழிவானது கிட்லர் மூலம் வெகு சீக்கிரமே நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே கிட்லரின் சோவித் யூனியன் மீதான அழிவு யுத்தம் நடந்தது தான், ஆனால் அதற்க்கு முன்னர் கிட்லர் தம் நாடுகள் மீது கைவைப்பார் என்பதை இவர்கள் எண்ணியிருக்கவில்லை.

பிரான்ஸ் மீது மின்னல் வேக தாக்குதல் மூலம் கிட்லர் அதன் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியிருந்ததாலும், பிரித்தானியா மீது மோசமான வான்வழி தாக்குதலை நடாத்தி பேரழிவுகளை மேற்க்கொண்டதாலும் இவ்விரு நாடுகளும் ஜேர்மனுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கின. அத்துடன் கிட்லரிடம் இருந்து தம் நாடுகளை பாதுகாத்துக்கொள்ள சோவியத் யூனியனின் ஆதரவு கரங்களும் இவர்களுக்கு தேவைப்பட்டன.

இவ்வாறாக கிட்லர் ஐரோப்பா கண்டத்திலும், அதை தாண்டியும் ஆழ கால் பதித்தவாறே சோவியத் யூனியனுக்குள்ளும் நுழைகிறார்.

1941 ம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தியிரண்டாம் திகதி சோவியத் யூனியனை போர் மேகம் சூழ தொடங்கியது. அதிகாலை முதல் ஜெர்மனின் படைகள் சோவியத் யூனியனுக்குள் அத்து மீறி நுழைந்து தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தன. ஜெர்மன் போர் விமானங்கள் சோவியத் யூனியனின் முக்கிய பொருளாதார கட்டமைப்புக்கள் மீதும், இராணுவ இலக்குகள் மீதும் குண்டுமழை பொழிய தொடங்கியது. அவர்கள் நாடே வெடி ஓசைக்களால் நிரப்பப்பட்டது.

ஆனாலும், இவை அனைத்தும் ஏற்க்கனவே சோவியத் யூனியனால் எதிர்பார்க்கப்பட்டது தான். அத்துடன் இவற்றை எதிர்கொள்ளும் மிக சிறந்த திட்டமிடல் அவர்களிடம் இருந்தது. இதற்க்கு ஏற்ற போலவே அவர்கள் தமது யுத்த கட்டுமானங்களையும், தளபாடங்களையும், படை வீரர்களையும், தந்திரங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தார்கள். சர்வதிகாரி கிட்லரிடம் இருந்து வருவது அக்கிரமமான, மிக கொடூர யுத்தம் என்றாலும் அதை எதிர்கொள்ளும் படை பலமும், தைரியமும், இவற்றை எல்லாம் விட மேலாக தம் தாய் நாட்டின் மீதான அதீத காதலும் அவர்களிடம் இருந்தது.

இவை அனைத்துக்கும் சான்றாக இரண்டு வருடமாக மேற்கொண்டு வந்த ஆக்கிரமிப்பு போரில், வெற்றிகளை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த கிட்லர் படைக்கு சோவியத் யூனியனில் முதலாவது அதிர்ச்சி கிடைத்தது....

தொடரும்...

ஸ்டாலின் கிராட். (stalingrad).. (தோல்வியின் ஆரம்பம்)
ஸ்டாலின் கிராட் (மகத்தான வெற்றி)

ஸ்டாலின் கிராட். (stalingrad)

சர்வாதிகாரத்தின் போக்கிலே ஆக்கிரமிப்பு யுத்தமானது தமது பலத்தை வெளிக்காட்டுவதற்கும், மூலப்பொருள் சுறண்டலை மேற்க்கொள்வதுமே முதன்மை நோக்காக கொண்டு நிகழ்த்தப்படுகிறது. இராணுவ எந்திரங்கள் முன்னிறுத்தப்பட்டு, அப்பாவி குடிமக்களானவர்கள் மூன்றாம் தரப்பினராக, மந்தைகளாக பார்க்கப்படும் நிலையோடு இது பயணிக்கும். இழப்புக்கள் புறந்தள்ளப்பட்டு அவற்றில் இருந்து கிடைப்பவையே கணக்கில் எடுக்கப்படும். இவ்வாறானதொரு போக்கிலே தான் இரண்டாம் உலக மகா யுத்தம் தோற்றம்பெற்றது என்று சொன்னால் மிகையில்லை.
உலகத்தின் பிடியை தன் கீழ் கொண்டு வருவதுடன், உலகின் முதலாவது சோஷலிச நாடான சோவியத் யூனியனை துவம்சம் செய்வதுமே சர்வதிகாரி கிட்லரின் நோக்கமாக இருந்தது. அத்துடன் இதே நோக்கங்களை கொண்டிருந்த இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளும் கிட்லருடன் கைகோர்த்து நின்றது. மறுமுனையிலே பிரான்ஸ்,பிரிட்டன்,ஐக்கிய அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் சர்வதிகார பாசிஸ்டுகளுக்கு எதிராக நின்றாலும், அவர்களுக்கும் கண்ணுக்குள் உறுத்தும் ஒரு நாடாக சோவியத் யூனியன் இருந்து வந்தது. இதனால் சோவியத் யூனியனை வீழ்த்தக்கூடிய நபராக கிட்லரை கருதினார்கள். ஆனால் சோவியத் யூனியன் கிட்லரால் வீழ்த்தப்பட்டால் அதுவே தமக்கான சாவுமணியாக இருந்திருக்கும் என்பதை இந்த முதலாளித்துவ நாடுகள் உணர்ந்திருக்கவில்லை.

இரண்டாம் உலக யுத்தமானது மனித குலத்துக்கும், வளங்களுக்கும் மிகப்பாரிய அழிவை பெற்றுக்கொடுத்ததுடன் ஈற்றில் மிக பெரிய இராணுவ, அரசியல் மாற்றத்தையும் ஏற்ப்படுத்தி சென்றது. கிட்டத்தட்ட ஆறு கோடி மக்கள் இந்த யுத்தத்தால் இறந்து போனதுடன், எண்ணிக்கையில் அடக்க முடியாத வளங்களின் அழிவையும் நிரப்பிச்சென்றது.


1939 செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஜெர்மனி சர்வதிகார போக்குடன் போலந்தின் மீது மேற்கொண்ட தாக்குதலுடன் இரண்டாம் உலக மகா யுத்தத்தை தொடக்கி வைத்தது. ஐரோப்பாவை ஜெர்மனியும், ஆபிரிக்காவை முசோலினியின் இத்தாலியும், ஆசியாவை ஜப்பானும் என்று எழுதப்படாத ஒப்பந்தத்தின் படி ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கியது.

போலந்து வீழ்ச்சியுடன் கிட்லரின் 'மின்னல் வேக தாக்குதல்' என்ற போர் முறை தந்திரத்தின் அடிப்படையில் நோர்வே,பெல்ஜியம்,டென்மார்க், பிரான்ஸ் போன்ற நாடுகளும் கிட்லரிடம் வேகமாக வீழ்ந்தது. அத்துடன் 1941 டிசெம்பர் ஏழில் ஹவாயில் உள்ள அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்துக்கு கொடுத்த மரண அடி மூலம் ஜப்பான் ஐக்கிய அமெரிக்காவையும் யுத்தத்தில் இழுத்து விட்டது.


சர்வதிகாரி கிட்லரை பொருத்தவரை அவரின் கழுகு கண்கள் சோவியத் யூனியன் மீதே படர்ந்திருந்தது. சொல்லப்போனால் இரண்டாம் உலக யுத்தத்தை தொடக்கி, அதன் போக்கில் ஆக்கிரமிப்பானது சோவியத் யூனியனை குறியாக வைத்தே நிகழ்ந்தது. கிட்லரின் இலக்கும் அது தான். ஐரோப்பிய மற்றும் சோவியத் யூனியனுக்கு அருகில் உள்ள நாடுகளை கைப்பற்றுவதன் மூலம் அந்நாடுகளின் இராணுவ வளங்களை கைப்பற்றி,சோவியத் யூனியனை தனிமைப்படுத்தி பின்னர் அதன் மீது தாக்குதல் நடத்துவதாகும். கிட்லரின் சூழ்ச்சியின் அடிப்படையிலும், ஜெர்மன் நாட்டின் அசுர படை பலத்தின் அடிப்படையிலும் களநிலை அவர்களுக்கு சாதகமாகவே சென்றுகொண்டிருந்தது.

போலந்தை இருபது நாட்களிலும்,நோர்வேயை இரண்டு மாதங்களிலும், மிக பெரிய இராணுவ பலத்தை கொண்டிருந்த பிரான்ஸை ஒன்றரை மாதங்களிலும் வீழ்த்திக்காட்டிய தன் படைகள் மீதும், தன் போர் தந்திரங்கள் மீதும் அளவுகடந்த நம்பிக்கையை கொண்டிருந்தார் கிட்லர். இந்த நம்பிக்கை மூலம் சோவியத் யூனியனை மதிப்பிட்ட விதமே கிட்லரின் சாம்ராச்சியம் பிற்காலத்தில் படுகுழியில் விழ காரணமாகிற்று. இதன் மூலம், முதலாளித்துவ நாடுகளையே எட்ட நின்று பார்த்து நடுங்க செய்த கிட்லர் இந்த யுத்தத்தில் விட்ட தவறுகள் தான் என்ன.....?

அடுத்த பகுதியில்....