என்ஜாய் ஃப்ரண்ட்..

காட்சி 1

வணக்கம் அண்ணே!

வணக்கம் தம்பி! வாங்க. கண்டு கனகாலம், இந்த பக்கமே வர்றதில்ல போல? வந்து இதில உக்காருங்க.

ஓம், நன்றி அண்ணே.... வேல தானே.. அது தான். இண்டைக்கு ஞாயிற்று கிழமை லீவு; அப்பிடியே உங்கள எல்லாம் பாக்கலாம் எண்டு வந்தனான்.

ஓம் தம்பி, வெளிநாட்டு வாழ்க்கையெண்டால் இப்படித்தானே.

என்ணண்னே இண்டைக்கு ரூமில நிறைய பொடியள் இருக்காங்கள். ஏதாவது விசேஷமா?

இல்ல தம்பி, இண்டைக்கு எங்களுக்கும் லீவு தானே; அது தான் வந்திருக்காங்கள். ஒவ்வொரு கிழமையும் லீவு எண்டா இப்படி தான், வந்து எல்லாருமா தண்ணி அடிச்சிட்டு கிடப்பம். அதுக்கு பிறகு அடுத்தநாள் விடிஞ்சா தான் உண்டு. 
சரி தம்பி... உங்களுக்கும் தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கா? வாங்களன் சும்மா பம்பலா ஒரு ரவுண்டு அடிப்பம்.

இல்ல அண்ணே எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்ல.

பியர் கூட அடிக்கமாட்டிங்களா தம்பி?

இல்ல அண்ணே நான் அல்கோல் பாவிக்கிறேல்ல.


தம்பி! தண்ணி அடிக்கிறவன் எண்ட ரீதியில சொல்லுறன். நீங்கள் குடுத்து வச்சனியள். உங்கட எதிர்காலம் நல்லா இருக்கும். இனி வாழ்க்கேல்ல அல்கோல் தொட்டுடாதேங்க. இதால உடம்பும் கெட்டுப்போம், காசும் கரியாய் போடும்...நானும் முந்தி உங்கள போல தான் இருந்தனான்.. ஆனா இந்த நாதாரிங்க எனக்கும் ஊத்தி தந்து கெடுத்துப் போட்டணுங்கள்.
( பின்னால இருந்து வந்த ஒரு தகர டப்பா அண்ணையின் முதுகை பதம் பார்க்க "டேய் *********  ஏண்டா எறியுறாய்")

தம்பி குறை நினைக்கதேங்க! எல்லாம் ரெடியாகிவிட்டுது; நாங்கள் தொடங்கப்போறம்.. இப்பவே தொடங்கினால் தான் நாளைக்கு காலமை வேலைக்கு போக முடியும்.

சரி அண்ணே! பறுவாயில்ல நீங்க நடத்துங்க...

காட்சி 2 ( சுமார் அரை மணிநேரத்தின் பின்)

தம்பி குறை நினைக்கிறியளோ?

இல்ல. நான் ஏன் அண்ணே குறை நினைக்கிறன்!

சரி, வந்து ஒரு பெக் அடியுங்களன்.

இல்லண்ணே. எனக்கு உதெல்லாம் சரிவராது.

அட என்ன தம்பி!  இதெல்லாம் இல்லாமல் வாழ்க்கேல்ல வேற என்னத்தை கண்டனியள். பிறந்தோம் இறந்தோம் எண்டு இருக்கக்கூடாது. நாளைக்கு செத்தாலும்...எதுவுமே இல்ல. என்ஜாய் பண்ணுற வயசில என்ஜாய் பண்ணனும். அப்புறம் இதெல்லாம் கிடைக்காது. தம்பி, தண்ணி அடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் கிடையாது, தண்ணி அடிக்காதவன் எல்லாம் நல்லவனும் கிடையாது.

அண்ணே இப்ப கொஞ்சத்துக்கு முதல் தானே நான் தண்ணி அடிக்கிறேல்ல எண்டு சொன்னதுக்கு என்னை பாராட்டினிங்கள். இப்ப அப்பிடியே மாத்தி பேசுறியள்!

தம்பி அது பழைய கதை..அத விடு. 
எனக்கு வெறி எண்டு நினைக்காதேங்க. நான் எப்பவும் உண்மையை தான் சொல்லுவவவ..(எழுந்து என்னை நோக்கி வந்தவர்)

தம்பி நான் ஒண்டு சொல்லட்டுமா..? நாம தண்ணி அடிக்கலாம் அது பிரச்சனையே இல்ல. ஆனால்.... தண்ணின்ர கண்றோல்ல நாம இருக்கக்கூடாது; எங்கட கண்றோல்ல தான் தண்ணி இருக்கணு..ணு....
( 'பொத்'தென்று ஒரு சத்தம்)
.." தம்பி.... ஒரு கைகொடுத்து இந்த அண்ணனை எழுப்பி விடு பாப்பம்"

சேவாக் சாதனை, சிறு வேதனை!

சிறு வயசில் இருந்தே சச்சினின் தீவிர ரசிகனாக, அவரையே தனது ரோல் மொடலாக கொண்டு கிரிக்கெட் விளையாடி வரும் ஒருவனுக்கு பிற்காலத்திலே அதே தனது ரோல் மொடலுடன் ஒன்றாக, அதுவும் ஆரம்ப துடுப்பாட்டத்தில் சச்சின் பங்காளியாக விளையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் எவ்வளவு பெரிய அதிஷ்டகாரன். அந்த விதத்தில் ஒருவர் தான் விரேந்தர் சேவாக்.

ஆனால் இன்று ஒருபடி மேல் சென்று சச்சின் சாதனைப்படிகளில் ஒன்றை, யாருமே அவ்வளவு எளிதில் எட்டிப்பிடிக்க முடியாது என்று கருதப்பட்டத்தை கடந்துள்ளார். 

இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொன்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலே 'ஒருநாள் போட்டியில்இரட்டை சதம்' என்ற இலக்கை தனது சாதனைகளில் இன்னொன்றாக பதிவு செய்திருந்தார் சச்சின். அப்பொழுது பெவிலியனில், இருக்கையில் இருந்து எழுந்து தனது சந்தோசத்தை கைதட்டல்கள் மூலம் வெளிப்படுத்திய சேவாக் நினைத்திருப்பாரா? இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த மைல்கல் தன்னால் முறியடிக்கப்படும் என்பதை!

மேற்க்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது. அத்துடன் இந்தப்போட்டி இந்திய ரசிகர்களை பொருத்தவரை பெரும் சந்தோசத்தையும், கூடவே சிறு வருத்தத்தையும் கொடுத்திருக்கும் என்பது உண்மையே.

ஒருநாள் போட்டியோன்றிலே இரட்டை சதம் என்ற சச்சினின் சாதனை உடைக்கப்பட்டது வருத்தத்தை கொடுத்தாலும், அதை உடைத்தது அதே இந்திய அணிவீரர் தான் என்பது பெரும் ஆறுதலையும் சந்தோசத்தையும் கொடுத்திருக்கும். அத்துடன் சேவாக்குக்கு இந்த சாதனை மூலம் பெறப்பட்ட பெறுமதி வாய்ந்த விருதாக சச்சினிடம் இருந்து கிடைத்த வாழ்த்து செய்தி தான் இருக்கும் என்பதையும் நம்புகிறேன்.

இந்த தொடரிலே டோனி இல்லாத நிலையில் சேவாக் ஒரு கேப்டனாக, முன்னணி துடுப்பாட்ட வீரராக பெரும் பணி இருந்த போதும், முதல் மூன்று போட்டிகளிலும் சோபிக்க தவறிவிட்டார். எனினும் நான்காவது போட்டியிலே  தனது வழமையான பாணியிலே ஆட்டத்தை தொடங்கிய சேவாக் மேற்கிந்திய தீவுகளின் ஒட்டுமொத்த பந்து வீச்சு வரிசையை நிலைகுலைய செய்து விட்டார். தனது அறுபத்து ஒன்பதாவது பந்திலே பவுண்டரி மூலம் சத்தத்தை கடந்தவர்; அதன் பின் தன் அவசர தனத்தால் காம்பீர், மற்றும் ரைனாவின் ஆட்டமிழப்புக்கு காரணமாக இருந்தாலும், தொடர்ந்து பதற்றப்படமால் நூற்று நாற்பதாவது பந்துகளிலே தனக்கே உரிய பாணியில் மீண்டும் ஒரு பவுண்டரி மூலம் தனது இரட்டைசதம் என்ற மைல்கல்லை எட்டி பிடித்தார்.

மேற்க்கிந்தியாவுக்கு எதிரான இந்தப்போட்டியிலே மேற்கிந்திய அணி வீரர்களின் மோசமான களத்தடுப்பும் சேவாக்குக்கு கடைசி வரை பக்க பலமாக அமைந்துவிட்டது. இருபது ஓட்டங்களை பெற்றிருக்கும் போது ஒரு ரன் அவுட் வாய்ப்பையும், பின்னர் நூற்று எழுபது ஓட்டங்களை பெற்றிருக்கும் போது கிடைத்த சுலபமான கேட்சையும் அவ்வணி வீரர்கள் தவறவிட்டார்கள். 

இனி வருங்காலத்திலே 219 என்ற சேவாக்கின் இந்த இலக்கு அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு துடுப்பாட்ட வீரராலும் உடைத்துவிட முடியாது. கிரிக்கெட் உலகிலே இந்த சாதனையை கடக்கக்கூடிய தகுதி ஒரு அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கே சாத்தியமாகும். ஆனால் தற்போதைய கிரிக்கெட் சூழலில் இதற்க்கு தகுதியான வீரர் யாரும் இல்லை என்பதுவே எனது பதில். இருந்தாலும் 'எதுவுமே நிரந்தரம் இல்லை'.

படங்கள்- cricinfo-

நிறம்மாறும் நடிகர்கள்..

இந்த சினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரிதாக வேறுபாட்டுகள் ஒன்றும் இல்லை. இவர்களுக்கு  இடத்துக்கிடம் பேச்சை மாற்றுவது இயல்பாகவே வருகிறது. இதற்க்கு உதாரணமாய் நம்ம பல அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டலாம். அதே போல நடிகர்களில் இவ்வாறு மாத்தி பேசுவதில் சமீபத்தில் புகழ் பெற்றவர் வடிவேலு தான். அது அரசியல் ரீதியாக..

சமீபத்தில் நடிகர் கார்த்தி; ஒரு தெலுங்கு நிகழ்ச்சிக்கு போனவர், அங்கே நிகழ்ச்சி தொகுப்பாளரான ஒரு பொண்ணு வந்து 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களா தெலுங்கு ரசிகர்களா பிடிக்கும்' என்று கேட்டதற்கு அடுத்த வினாடியே தெலுங்கு ரசிகர்கள் தான் என்று சொல்லி  பல்லிளித்தார். அது பரவாயில்லை, ஆனால் அதற்க்கு காரணமும் சொல்கிறார் பாருங்கள் "தெலுங்கு ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவும் கைத்தட்டல்களும் தமிழ் ரசிகர்களிடம் கிடைக்காதாம்" என்று... எவ்வளவு பெரிய நன்றி கெட்டத்தனம் இது. இவர் நடித்த முதலாவது படத்தையே வெற்றியாக்கியவர்கள் இந்த தமிழ் ரசிகர்கள் இல்லையா? இன்று தமிழ் சினிமாவில் இவ்வளவு தூரத்துக்கு உயர்த்திவிட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் இல்லையா? எந்த அறிமுக நடிகர்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காத அங்கீகாரத்தை இவருக்கு கொடுத்தது இந்த தமிழ் சினிமா ரசிகர்கள் தானே.

இது இவரின் சினிமா வியாபார தந்திரம் தான்! ஆனால் இதற்க்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பகடைக்காய்! ஏற்றி விட்டவர்களை அவமானப்படுத்துவது இவர்களுக்கு இலகு; ஏன்னா இவர்கள் தான் "நடிகர்களாசே!"   இதற்க்கு முன்னர் நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவை மலையாள சினிமாவுடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசியமை நினைவிருக்கலாம். இப்படியான பச்சோந்திகளுக்கு தானா இவ்வளவு ஆர்ப்பாட்டம். இவர்களுக்கு சினிமாவும், ஹீரோயிசமும் இல்லாவிட்டால் வெறும் சீரோக்கள் தான். 


ஒரு வேளை நாளை தமிழ் நிகழ்ச்சி ஒன்றுக்கு கார்த்தி வரும் போது இதே கேள்வியை இவரிடம் கேட்டால் பதில் எவ்வாறு வரும்? பச்சோந்தி தனமாக தானே? அந்த கணத்தில் யாராவது செருப்பு கழட்டி எறியமாட்டார்களா? இல்லை மீண்டும் கட்டவுட் வச்சு தமிழரின் மானத்தை பாலாக ஊற்றுவார்களா?1970 ம் ஆண்டு நடிகவேள் எம் ஆர் ராதா அவர்கள் மலேசியா சென்று ஒரு உரை ஆற்றியிருப்பார்.  சினிமா துறையில் இருந்து கொண்டே, அந்த துறையில் முத்திரை பதித்தவர் அதே துறை பற்றி எதிர்மாறான கருத்துக்களால் விமர்சிக்கிறார் என்றால் அதில் அர்த்தம் இல்லாமலா இருக்கும்?  கிண்டலும் கேலியுமாக அவர் ஆற்றிய உரையில் இந்த சினிமாவையும், நடிகர்களையும் பற்றி அவர் கூறிய வசனங்கள் அத்தனையும் இன்றும் நிதர்சனமாக தான் உள்ளது.

  MR Radha - Malaysia Speech

இதிலே எம் ஆர் ராதா சொன்ன சில வரிகள் "மக்களுடைய பணத்தை மோசம் செய்கிற கூட்டம் இந்த சினிமாக்காரங்க கூட்டம். நாங்களெல்லாம் இன்னைக்கு பணக்காரன் ஆனேம்னா இராவும் பகலும் நினைக்க வேண்டியது உங்கள. சினிமா டிக்கெட் வாங்கிக்கொன்னு பாக்கிறிங்களே அந்த பணத்தில் தான் நாங்க பணக்காரன் ஆனோம். உங்களுடைய பணத்தாலே முன்னேறிய கூட்டம் சினிமாகாரர்கள். நீங்க தான் எங்களுக்கு தலைவர்கள். அதைவிட்டுட்டு எங்களை தலைவர்களாக்கிக்கிட்டு பலபேர் இருக்காங்க..அந்த நிலைமை மக்களுக்கு வரக்கூடாது." இன்றும் பலருக்கு உறைக்காமல் இருக்குதே.

பதிவு முழுமை பெறாததால் தற்சமயம் நீக்கப்பட்டுள்ளது.

எனது விளக்கம் / பதில்கள்

நான் எழுதிய அந்த பதிவு இந்தளவுக்கு வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்க்கு காரணம் தவறான புரிதல்கள் தான். இல்லை???? என்ன நடக்காததையா நான் சொல்லிவிட்டேன்?  ஏன் நான் எழுதிய அனைத்தும் உண்மை என்றதுக்கு ஈழ பதிவர் ஒருவரே சாட்சி. சொல்லப்போனால் என்னை எழுத தூண்டியதும் அவர் தான்.

என் பதிவு தொடர்பாக நாற்று குழுமத்திலே மதுரன் கேள்வி எழுப்பியிருந்தார். அதுவும் அந்த பதிவு பப்பிளிஷ் செய்யப்பட்டு பத்து நாட்க்களின் பின்னர்...  இது ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் தனது கருத்துக்களை,சந்தேகங்களை, விமர்சனங்களை என்பதிவில் பின்னூட்டத்தில் கேட்டிருந்தால் நான் நிச்சயமாக பதில் கொடுத்திருப்பேன். மாறாக நாற்று குழுமத்தில் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பியதன் காரணம் தான் புரியவில்லை.. அதனால் அந்த விவாதம் தேவையற்ற வாதங்களையும் விதண்டாவாதங்களையும் ஏற்ப்படுத்தியதுடன், அநாகரிகமான பின்னூட்டங்களும் ... இறுதியாக "நாற்று குழுமம் என் வீடு. என் வீட்டில் வந்து கதைத்தால் நான் அப்படி தான் கதைப்பேன்" என்பது போல  குழும ஓணரால் சொல்லுகிற அளவுக்கு சென்றுவிட்டது. அத்துடன் சிறிது நேரத்துக்கு பின் அந்த பின்னூட்டம் அழிக்கப்பட்டுவிட்டது..  நாற்று குழுமத்தில் பதிவு செய்யும் பதிவுகள், கமெண்ட்கள் அழிப்பதென்பது இது தான் முதன் முறையும் அல்ல. "மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று சொல்வார்களே" நானும் விலகிட்டேன்.. ஒரு வேளை மதுரன் தன் எதிர் கருத்துக்களை என் பதிவின் கீழே முன் வைத்திருந்தால் இந்த சங்கடங்கள் நிகழ்ந்திராமல் இருந்திருக்கலாம்.


சரி மதுரன் என் பதிவு சம்மந்தமாக கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.
கந்தசாமி & துஷி

இன்று கந்தசாமியின் தமிழர்கள் ஏன் இப்படி என்ற பதிவை படித்தேன். அதில் ஒருசில விடயங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் பலவற்றை நான் எதிர்க்கிறேன். கந்தசாமி அண்ணே! ஒரு வார்த்தை சொன்னீங்களே “ இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?” ஆமாம் கந்தசாமி அண்ணே குறைந்துவிடத்தான் போகிறது. இந்த சுயத்துக்காகத்தான் 30 வருடகால போராட்டமும் இலட்சக்கணக்கான உயிர்க்கொடைகளும்.

மது  இது உங்களது தவறான புரிதல்.  நான் சுயம் என்று சொன்னது 'என் பதிவில் குறிப்பிட்ட விடயங்களை மட்டும்' தான். அதாவது, நம்மவர்கள் தம் வாழ்நாள் பாதியை அடுத்தவனை பற்றி சிந்திப்பதிலே கழித்துவிடுவதை, எப்போ பார்த்தாலும் பழம் பெருமை, வீரம் பற்றி பேசுவதை, கலாசாரம் கலாசாரம் எண்டு ஒரு வட்டத்தை கீறி அதுக்குள்ளேயே வண்டி ஓட்டுவதை. கேவலம், இந்த சுயத்துக்காக தானா நீங்கள் சொல்லும் முப்பது வருட போராட்டம்?  முப்பது வருடமாக போராடியும் தீர்வு காணாமல் போனமைக்கு காரணம் என்ன? எம் ஒற்றுமை இன்மையும்,பிரிவினைகளும் தானே.  இப்படிப்பட்ட சுயம் தேவையா? ஏன், மூத்த குடிமக்கள் என்று பீத்திக்கிற நாமா இன்று .......பெய்ய கூட ஒரு துண்டு நிலம் இல்லாததுக்கு காரணம் இப்படிப்பட்ட எங்கள் சுயம் தானே. இந்த சுயத்திலே என்ன பெருமை வேண்டிக்கிடக்கு?


எது அண்ணே தனி மனித சுதந்திரம். அடுத்தவன் அடிபட்டு கிடப்பான். அதை பார்த்தும் பார்க்காம போறதா தனிமனித சுதந்திரம். 
அடுத்தவன் அடிப்பட்டு கிடக்கும் போது சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் பழக்கம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில்தான்.  மேற்கத்தேய நாடுகளில் இல்லை. குறித்த விபத்தை காணும் ஒருவன் ஒரு 'call' பண்ணினாலே போதும் அடுத்த சில நிமிடங்களில் அம்புலன்ஸ் வண்டி நிற்கும். வேடிக்கை பார்த்தல் என்ற பேச்சுக்கே  இடமில்லை.


அல்லது அடுத்தவன் கஸ்டப்படும்போது கண்டும் காணாம போறதா தனிமனித சுதந்திரம். சரி நீங்க சொல்வது போலவே இருந்தால் நாங்க என்ன தனிமனித சுதந்திரம் இல்லாமலா இருக்கிறம். நீங்க சொல்லுறமாதிரி அடுத்தவன் என்ன பாடுபட்டாலும் அதை கண்டுகொள்ளாம போறதுதான் தனிமனித சுதந்திரம் என்றா அந்த கன்றாவி எங்களுக்கு தேவையே இல்லை.
 
அங்கே ஒரு பகுதி மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில இருக்கும் போது, யுத்தத்தால் நேரடியாக பாதிக்கப்படாத பிரதேசங்களை சேர்ந்த மக்களில் எத்தனை சதவீதமான தமிழர்கள் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் மண்ணையும் வேடிக்கை பார்க்கும் நோக்கம் அற்று அபிவிருத்தி செய்யும் நோக்கோடு சென்று, அவர்களின் கஸ்ரங்களையும் துன்பங்களையும் பகிர்ந்திருப்பார்கள். ஒரு கிராமம் சேர்ந்து பத்து குடும்பங்களை தத்தெடுத்தாலே இன்று பாதி பிரச்சனை முடிந்திருக்குமே! ஐயோ ஆமிக்காரனுக்கு பயம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். இவ்வாறு பல சம்பவங்களை என்னால் கூற முடியம்.
கிழக்கிலும், அதன் பின்  வன்னியிலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது,  ஏனைய பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களை பொறுத்தவை அவையெல்லாம் "ஒரு சம்பவம்". எத்தனை  பேர் செத்தார்கள் என்று கேட்டு உச்சு கொட்டிப்போட்டு தமது அடுத்த கருமத்துக்கு சென்றுவிடுவார்கள்.

ஊரில இருக்கிறவங்க எவ்வளவுதான் சண்டை பிடித்தாலும் யாருக்காவது ஏதாவது பிரச்சினை எண்டு வந்தால் எல்லோருமே ஒன்றுகூடி நிப்பம் பாருங்க. தாழ்த்தப்பட்ட சாதி என்று சமூகத்தால் தள்ளி வைக்கப்படுபவனுக்குமா? எவ்வளவுதான் சண்டைபிடித்தாலும் அந்த நேரத்தில மாமா, மச்சான் என்று அத்தனைபேருமே ஒண்டா நிப்பம் பாருங்க... அது தனிமனித சுதந்திரம் இல்லையெண்டா அந்த கன்றாவி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்.
இப்படி ஒன்று கூடி, இருக்கிற பிரச்சனையையும் பெருப்பித்து, மாமனும் மச்சானும் அருவாள் தூக்கி வெட்டுப்பட, கடைசியில் அது குடும்பங்களுக்கிடயிலான சண்டையாக வந்து நிற்கும் சம்பவங்கள் தான் அதிகம்.

ஒரு குடும்பத்தில் பிரச்சினையெண்டா சனமெல்லாம் வேலிக்குள்ளால தலையகுடுத்து பார்த்துக்கொண்டு நிக்கும் எண்டு சொன்னிங்களே! உங்க மனட்சாட்சிய தொட்டு சொல்லுங்க நீங்க சொன்னது எந்தளவுக்கு உண்மை. 100 பேர் நின்று பார்த்தா அதில 60 பேர் அந்த பிரச்சினையை விலக்கு பிடிக்கத்தான் நிப்பாங்கள். அப்பிடி அடுத்தவனின் பிரச்சினையை தீர்த்துவைப்பது தனிமனித சுதந்திரம் இல்லையென்றால் எங்களுக்கு அது தேவையே இல்லை.

ஒரு குடும்பத்துக்குள் பிரச்சனை என்றால் அதில் வெளி ஆட்க்களுக்கு ,மூன்றாம் நபர்களுக்கு அந்த பிரச்சனையில் என்ன வேண்டி கிடக்கு? கணவனும் மனைவியும் சண்டை பிடித்தால் நாளை ஒற்றுமை ஆகிவிடுவார்கள். இதில் மூன்றாம் நபர்கள் சென்று  விலக்கு தீர்ப்பதை விட, அந்த குடும்பத்தினுள்ளே ஏற்ப்படும் புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமை தான் முக்கியம்.  அது அவர்கள் தனிப்பட்ட விடயம்.   ஆனால் இந்த விலக்கு தீர்ப்பவர்கள் தான் நாளை ஊர் முழுவதும் கதையை கொண்டு சென்று, ஓட்டு மொத்தத்தில அந்த குடும்பத்தையே நாறடித்துவிடுபவர்கள்.


நாங்கள் அடுத்தவனை பார்த்து பொறாமைப்படிகிறோம்,. ஆனால் அதைவிட இருமடங்கு அக்கறை கொள்கிறோம். பக்கத்துவீட்டுக்காரன் கஸ்டப்படும்போது எட்டிப்பார்த்து ஏன் என்று கேட்காத ஒரு ஊர்க்காரனையாவது காட்டமுடியுமா? அடுத்தவன் கஸ்டத்துக்கு உதவ முடியாவிட்டாலும் அவனுக்கு ஆறுதலாக இருப்போம். அடுத்தவன் எப்படிப்போனால் என்ன என்று கண்டுகொள்ளாமல் போவதை விட அவன் துயரத்துக்கு ஆகக்குறைந்தது ஒரு ஆறுதலாகவாவது இருப்பது ஆயிரம் மடங்கு மேல்.
பக்கத்து வீட்டுக்காரனை எட்டி பார்க்கும் போது அவன் கஸ்ர பட்டால் உதவி செய்வது நல்ல விடயம் தான். ஆனால், பக்கத்து வீட்டுக்காரன் வெஸ்டன் டொயிலேட் கட்டினா கூட எட்டி பார்த்து "வடலிக்க குந்தினதுகளுக்கேல்லாம் வெஸ்டன் டொயிலேட் கேக்குதாம்" என்று புறம் கூறுவதிலும் பார்க்க, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இரு என்பதுக்கமைய மூடிக்கிட்டு இருக்கலாம் தானே.
எங்களை கடந்த காலத்தை மறக்கத்தெரியாத முட்டாள்கள் என்றீர்களே. உண்மைதான் நாங்கள் முட்டாள்கள்தான். செத்தவீட்டிற்கு முன்வீட்டில் கலியாணம் கொண்டாட தெரியாத நாங்களெல்லாம் முட்டாள்கள்தான். நாங்கள் கடந்த காலத்தை ஒருபோதும் மறந்துவிடப்போவதில்லை. கடந்தகாலங்கள்தான் எங்களை செப்பனிடுகிறது. அப்படி கடந்த காலத்தையும் மறந்துவிட்டு அடுத்தவன் பற்றி சிந்திக்காமல் எமக்காக மட்டுமே வாழ்வதுதான் நாகரிகம் என்றால் நாங்கள் நாகரிகமற்றவர்களாகவே வாழ்ந்துவிட்டுபோகிறோம்.
 
//பொதுவாகவே மனிதர்களை பொறுத்தவரை அவர்கள் மறக்க நினைப்பதெல்லாம் தாம் கடந்து வந்த கடுமையான நாட்களை தான். யாருமே அந்த நாட்களுக்கு திரும்பி போக விரும்பார்கள். உதாரணமாய் வறுமையில் வாடிய காலங்கள்....இவ்வாறு வறுமையின் தாக்கத்தால் வாடி, மிக கடுமையாக கஸ்ரப்பட்டு எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தம் உழைப்பால் முன்னேறி, மீண்டும் நாடு வரும் போது வசதியாக தான் வாழ நினைப்பார்கள். தம் கடந்த காலங்களில் வறுமையால் இழந்தவற்றை எல்லாம் அனுபவிக்க நினைப்பதில் தப்பேதும் இல்லை தானே.  அதை விடுத்து  ஓலை குடிசையில போய் உக்கார்ந்து கொண்டு, பருப்பும் சேறும் மட்டும் சாப்பிட்டு, காலுக்கு செருப்பு கூட போடாமல் நடந்து.... கேட்டால் "ஐயகோ! நான் கடந்த காலத்தை மறக்கவில்லை" எண்டு  பிதற்றுவானேயானால் என்னை பொறுத்தவரை அவன் வாழவே தெரியாத முட்டாள்.// - இது தான் நான் முழுமையாக சொன்ன விடயம். 
கடந்தகாலத்தை படிப்பினையாக எடுத்துக்கொள்வது வேறு. கடந்த காலத்திலே தேங்கி நிற்ப்பதென்பது வேறு.
அதை விடுத்து முழுதாக புரிதல் இல்லாமல் குதர்க்கமாக பேசுவதற்கு நான் பொறுப்பல்லமது!
அங்கே ஒரு மிக பெரிய மனித பேரவலம் நடந்து கொண்டிருக்கும் போது கல்யாண வீடுகளும்,கோவில் திருவிழாக்களும்,வைபவங்களும்  கொண்டாடியவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள்  நிச்சயமாக 'முட்டாள்களும்' இல்லை, அடுத்தவன் பற்றி 'நல்லவிதமாக' சிந்திப்பவர்களும் இல்லை. கந்தசாமி அண்ணே... எங்களுக்குள் இன்னமும் மனிதாபிமானம் செத்துப்போய்விடவில்லை. எங்கள் இதயங்களுக்குள் இன்னமும் ஈரம் கசிந்துகொண்டேதான் இருக்கிறது. வெள்ளைக்காரணைப்போல அடுத்தவனை கொத்துக்கொத்தாக கொன்று அவர்களின் ரத்தத்தில் பசியாறவில்லை. உங்கள் கண்களுக்கு அதுதான் நாகரிகமாக தெரிந்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். எங்களுக்கு அந்த நாகரீகம் வேண்டவே வேண்டாம்.
மனிதாபிமானமா? ஈரம் கசியுதா? ஈழத்தில் உள்ள சாதி அமைப்பை,பிரிவினைகளை உண்டாக்கியது- தொடர்ந்து பேணி வருவது இதே ஈரமுள்ள இதயங்கள் தானே. பள்ளியில ஆசிரியர் சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி தருவார்; ஆனா தன்ர பிள்ளைய சாதி குறைஞ்ச இடத்தில கல்யாணம் செய்து கொடுக்கமாட்டார்.. இப்படியானவர்கள் இப்போ ஈழத்தில் இல்லையா? அதுமட்டும் இல்லை, வடக்கிலே அப்பொழுது சகோதர படுகொலைகள் நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது - மாற்று இயக்கங்கள் தெரு தெருவாக தங்களுக்கிடையிலே கொல்படும் போது கொலையாளிகளுக்கு  தேநீர் ஊற்றி கொடுத்த மக்களும் இருக்கிறார்கள்.
 
இரண்டு இனம் இருந்தே ஒற்றுமையாக வாழ தெரியாதவர்கள் நாங்கள். ஆனால் ஒரு நகருக்குள் இருபது இனத்தவர்கள் அகதிகளாக வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நீங்கள் சொல்லும் வெள்ளையர்களிடம் உண்டு. அவர்கள் தம் எதிர்நாட்டிலே குண்டுகள் வீசினாலும் தம் நாட்டு குடிமக்களுக்கு பூரண உரிமை வழங்குகிறார்கள். அவர்கள் நாகரீகத்திலும் வளர்ச்சியிலும் பார்க்க நாம் அரை நூற்றாண்டு பின்தங்கி தான் இருக்கிறோம். அதற்க்கு காரணம் நீங்கள் சொன்ன "எப்பவுமே அடுத்தவனை பற்றி தான் சிந்திப்போம்"
திரும்பவும் சொல்கிறேன். நீங்கள் சொன்னவற்றில சில விசயங்கள் உண்மை. ஆனால் ஊரிலிருப்பவர்களை நீங்கள் வில்லன் கணக்கில் சித்தரித்துவிட்டீர்கள்
சில விசயங்கள் அல்ல. நான் சொன்னது முழுவதுமே உண்மை. ஏனெனில் நானும் அந்த சமூகத்தை சேர்ந்தவன் தான்.
துஷி & கந்தசாமி...
நிரூபனோ அல்லது வேறு யாராவதோ புலம்பெயர் தமிழரை பற்றி குறிப்பிட்டால் துரோகம், பிரிவினை, மண்ணாங்கட்டி, மயிர் என்று கூப்பாடுபோட்டுக்கொண்டு வரும் நீங்கள் ஊரிலிருப்பவர்களை பற்றி எந்த வகையில் தூற்றினீர்கள். நிரூபனாவது குறிப்பிட்ட ஒரு சிலர்தான் என்று பதிவில் குறிப்பிட்டுவிடுவார். ஹா ஹா நல்லா இருக்கய்யா உங்க நியாயம். 
இதே கேள்வியை தான் நானும் கேட்கிறேன். புலம்பெயர் தமிழர்களை தாக்கி ,நையாண்டி செய்து பதிவுகள் எழுதும் போது ஆமாம் சாமி போடுபவர்களுக்கு இப்போ மட்டும் எதுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வரணும் . ஏன் புலம்பெயர்ந்தவர்களும் தமிழர்கள் இல்லையா? அவர்கள் தாய்நாட்டு ஈழம் இல்லையா? ஆக உங்க மனதிலே பிரிவினைகளை வைத்துக்கொண்டு இவ்வாறு துள்ளுவது யாரை திருப்தி படுத்த?  சொல்லப்போனால் நான் எழுதிய பதிவுக்கான மூலம் நிருபனின் பதிவு தான். நான் சொன்ன தகவல்களுக்கான ஆதாரம் அங்கே உள்ளது. இல்லையெனில், நிரூபனை போல  "ஒரு சிலர்" என்று நான் குறிப்பிடாதது தான் உங்கள் கோபத்துக்கு காரணமா?
சமூக பிரச்சினைகளை எழுதத்தான் வேண்டும். அதற்காக ஒரேயடியாக ஒரு சமூகத்தையே வில்லன் கணக்காக சித்தரித்து அல்ல
சமூகத்தை வில்லனாக சித்தரிக்கவில்லை. எங்களுக்குள்ளும் அகற்றப்படவேண்டிய சாக்கடைகள் இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளது. அதை விடுத்து இன்னொரு சமூகத்தை குற்றம் சொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளதை தவிருங்கள் என்று தான் சொல்ல வந்தேன்.


நண்பர்களே இப்பிடி எழுதிறதெண்டா நாங்களும் புலம்பெயர் மக்கள் பற்றி நிறைய எழுதலாம். ஆரம்பத்தில் சமூக பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த நான் பிறகு அதை விட்டுவிட்டேன். காரணம் எங்கள் குப்பைகளை நாங்களே கிளறினால் நல்லா இருக்காது என்று தான்.
புலம்பெயர் தமிழர்கள் பற்றி என்னத்தை உங்களால் எழுத முடியும். அதை தான் ஏற்கனவே ஒருவர் தன் தோளில் சுமக்கிறாரே. மிஞ்சி மிஞ்சி போனால் நாலு குள்ள நரிகள் செய்த நாசகார வேலையை புலம்பெயர் தமிழர்கள் செய்தார்கள் என்று எழுதுவீர்கள். அடைப்புக்குறிக்குள் "இது ஒருசிலரை பற்றி தான் குறிப்பிடப்பட்டுள்ளது" என்பது வேறு.
 
கருணா குழு புலிகளுக்கு  செய்த துரோக வேலைகளுக்காக பொத்தம் பொதுவாக 'ஈழ தமிழர்கள் புலிகளுக்கு செய்த துரோகம் (கருணாவும் ஈழ தமிழன் தானே)' என்று எவனாச்சும் எழுதினால் ஏற்றுக்கொள்வீர்களா?

நீங்கள் புலம்பெயர் தமிழர்கள் என்று சொல்லாது சம்மந்தப்பட்டவர்களை ஆதாரத்துடன் குறிப்பிட்டு எழுதினால் நானும் உங்கள் பக்கம் தான். அதை விடுத்து பொத்தம் பொதுவாக 'புலம்பெயர் தமிழர்கள் செய்தார்கள்' என்று பிரித்து சுட்டுவது தேவையற்ற பிரிவினைகளை தான் உண்டு பண்ணும்.
இது யாருடைய மனதையாவது பாதித்து இருந்தால் அதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. அந்தளவிற்கு கோபத்தில் இருக்கிறேன். நாளை ஒருவேளை கோபம் குறைந்திருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்.
வழிமொழிகிறேன்! இது தான் என்கருத்தும்.


இதற்க்கு  மேலேயும் நான் எழுதியது சரி தான் என்பதற்கு உங்களின் ஒரு பதிவே மிக சிறந்த ஆதாரம்.யாழ்ப்பாண மக்களின் பார்வையில் வன்னிமக்கள் ஒரு அனுதாபத்திற்கு உரியவர்களாகவும், தாழ்த்தப்பட்ட சமூகமாகவும் தான் நோக்கப்படுகிறார்கள். இதை படித்துவிட்டு பலர் வரலாம், யாழ்ப்பாணத்தவர் அப்படியல்ல என்று. ஆனால் யதார்த்தம் அதுதான். அவர்களின் முன்னேற்றம், அவர்களை ஒரு அனுதாபத்திற்குரியவர்களாக பார்க்கும் யாழ்ப்பாணத்தவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கே அவர்கள் தம்மை விட முன்னுக்கு வந்து விடுவார்களோ என்ற பீதியில், அம்மக்களிடத்தில் மனம் நோகும் வார்த்தைகளையும், பழையவற்றை ஞாபகப்படுத்தி அதன்மூலம் அவர்கள் மனங்களை நோகடித்து, விரக்தியில் ஆழ்த்தி தமது குரோதங்களை வெளிப்படுத்திவருகிறார்கள்.

http://www.sirakuhal.com/2011/07/blog-post.html

விடியலுக்காய் .........முட்கள் படர்ந்த பயணம் 
கற்கள் விரித்த படுக்கை 
தூக்கம் துறந்த இரவுகள் 
பசி தின்ற பகல்கள் 
உறவைப்பிரிந்த கணங்கள்
உடல்கள் புதைந்த நிலங்கள்.

எத்தனை இழப்புக்கள்! 
எத்தனை இடர்கள்! 
எத்தனை வலிகள்! 

இத்தனைக்கு நடுவிலும் 
உறுதி கொண்ட கண்கள்.
தளர்ந்துவிடாத கணங்கள்.

விட்டில் பூச்சியாகவும் உமை 
சில வீணர்கள் நினைக்கக்கூடும்!  
அவர்கள் அறிவார்களா 
மரணத்தை அனைத்து 
நீங்கள் ஒளி தேடிச்சென்றது 
நாளைய "நம்" விடியலுக்கென்று?

தமிழர்கள் ஏன் இப்படி...?

'தானுண்டு தன்ர வேல உண்டு' என்று சொல்வார்களே.. இந்த ஐரோப்பிய மக்களை  பொறுத்தவரை எனக்கு அவர்களிடம் பிடித்த விடயமே இது தான்.

பொதுவாக மனிதர்கள் என்றாலே குறை நிறைகள் இருக்க தான் செய்யும். ஆனால் நான் ஐரோப்பிய சூழலில் வாழ்ந்த வரை அவர்களிடம்  கண்ட  குறைகளை விட நிறைகள் தான் மிக அதிகம்.

முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள்  தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான்.

அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல  உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது.  அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஏனெண்டால் பக்கத்து வீட்டில போய் குந்தி இருந்துகொண்டு ஊர் வம்பு கதைப்பது தான் எதோ ஒருவிதத்தில குடும்ப பிரச்சனையாக வந்து நிக்கும், இந்த குடும்ப பிரச்சனையில ஊரில இருக்கிற நாலு "பெரிய மனுசனுகள்" மூக்க நுழைக்கும் போது அது ஊர் பிரச்சனையாகும், கடைசில இந்த ஊர் பிரச்சனை பெருத்து பெருத்து   நாட்டில ஒரு முக்கிய பிரச்சனையாய் நாளைக்கு  வந்து நிக்கும்.. இது தேவையா?


அடுத்தவனை, அடுத்தவன்  வீட்டை எட்டி பார்ப்பது என்பது  நம்மவர்களின் அன்றாட கருமங்களில் ஒன்றுகிப் போனது  என்று சொன்னாலும் மிகை இல்லை.  நம்ம ஊர்களில பார்த்தோம் என்றால் இரண்டு வீடுகளுக்கு இடையிலான எல்லையை ஓலைகளால்(வேலி) அடைத்திருப்பார்கள்; இது கூட அவர்களுக்கு வசதியாகிப்போகும்!  ஒரு வீட்டில குடும்ப பிரச்சனை எண்டால், அருகில உள்ள வீதியால போற- வாற சனம் பாதி அந்த வேலிக்க தான் தலையைக்குடுத்துட்டு நிக்கும். 

அதுமட்டும் இல்ல. தன்ர  பக்கத்து வீட்டுகாரன்ர பிள்ளை வெளிநாட்டில இருந்து காசு அனுப்பி, அந்த பக்கத்து வீட்டுக்காரன் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா கூட 'வடலிக்க குந்தினதுகளுக்கெல்லாம் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கேக்குதாம்' எண்டு சொல்லி பொறாமைப்படுகுதுகளாம் நம்ம சனம்... என்ற உண்மையை  நம்ம பதிவர்கள் யாரோ எழுதியதாக நினைவு..! அடச்சே ...அவன் வெளிநாட்டில உழைச்சு வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா என்ன, வீட்டுக்க டொயிலேட் கட்டினா என்ன..! அத போய் எட்டிப்பாத்து ...............!!

இந்த ஐரோப்பியர்கள் இருக்கார்களே.. நடுறோட்டில  ஒரு ஆணும் பொண்ணும் நாலு மணி நேரமா கிஸ் அடிச்சுக்கொண்டு நிண்டாலும், அதால போற வாற எவனுமே திரும்பி கூட பார்க்கமாட்டான், இல்லை  பட்டிக்காட்டு தனமா ஒட்டி நிண்ணு கமெராவில போட்டோ எடுத்து நியூசில போட்டு, எதோ கலாசாரத்தை காப்பாற்றிவிட்டேனே எண்டு பீத்திக்கமாட்டான். ஆனா நம்ம ஆக்கள் இருக்கார்களே  வயசு போன பாட்டி ஸ்டைலா ட்ரெஸ் போட்டுக்கொண்டு றோட்டில நிண்டாலே போதும்; எதோ நமீதா கண்டது போல நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்ப்பார்கள் பாருங்கோ.. பாட்டி செருப்பு எடுத்து காட்டும் வரை இமையே மூட மாட்டார்கள். சில வேளை இடையில எவனாச்சும் வந்து "ஏண்டா! வயசுபோனதுகளை கூட நாட்டில நிம்மதியா உலாவ விடமாட்டிங்களா?" எண்டு கேட்டால் "அண்ணே வயசானதுகள் எல்லாம் இப்பிடி ட்ரெஸ் பண்ணினால் நம்ம கலாசாரம் என்ன ஆவது" எண்டு பிளேட்ட மாத்தி கலாசார காவலர்கள் ஆவார்களே; அங்கே  நிக்கிறார்கள் நம்மவர்கள்..

பொதுவாகவே மனிதர்களை பொறுத்தவரை அவர்கள் மறக்க நினைப்பதெல்லாம் தாம் கடந்து வந்த கடுமையான நாட்களை தான். யாருமே அந்த நாட்களுக்கு திரும்பி போக விரும்பார்கள். உதாரணமாய் வறுமையில் வாடிய காலங்கள்....இவ்வாறு வறுமையின் தாக்கத்தால் வாடி, மிக கடுமையாக கஸ்ரப்பட்டு எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தம் உழைப்பால் முன்னேறி, மீண்டும் நாடு வரும் போது வசதியாக தான் வாழ நினைப்பார்கள். தம் கடந்த காலங்களில் வறுமையால் இழந்தவற்றை எல்லாம் அனுபவிக்க நினைப்பதில் தப்பேதும் இல்லை தானே.  அதை விடுத்து  ஓலை குடிசையில போய் உக்கார்ந்து கொண்டு, பருப்பும் சேறும் மட்டும் சாப்பிட்டு, காலுக்கு செருப்பு கூட போடாமல் நடந்து.... கேட்டால் "ஐயகோ! நான் கடந்த காலத்தை மறக்கவில்லை" எண்டு  பிதற்றுவானேயானால் என்னை பொறுத்தவரை அவன் வாழவே தெரியாத முட்டாள்.  ஆனால் நம்ம சனம் இருக்கே..எவனாச்சும் வெளிநாட்டால வந்து சொகுசாய் சுத்தி திரிஞ்சா பொறுக்காது.. செருப்பே இல்லாமல் திரிஞ்சதுகளுக்கு இப்ப பள்சர் கேக்குதாம் எண்டு புகைக்க தொடங்கிடுகிறார்களாம்.. 

இவ்வாறு தங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை பார்க்காது எப்பவுமே அடுத்தவன் முதுகை எட்டி பார்த்து முகம் சுழிக்கும் நம்மவர்கள் இருக்கும் வரை ஐரோப்பியர்களை விட அரை நூற்றாண்டு பின்னுக்கு தான் நிற்போம்.

என்னை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இனி வரும் தலைமுறைகளில் தமது சுயத்தை இழந்தாலும் வாழ்க்கையில் ,வாழ்க்கை தரத்தில்,நாகரீகத்தில்  முன்னேறிவிடுவார்கள். 

இந்த சுயம் எண்டு சொன்னேனே... இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?

முடிஞ்சா சிரியுங்கோ..


தமிழேண்டா ..!

பொதுவாகவே மனிதர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை "எல்லாம்  இந்த ஒரு சான் வயிற்றுக்கு தானே..!" என்று ஒற்றை வரியில் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இந்த வரியை சரியாக, காலாகாலமாக கடைப்பிடித்து வருகிற பெருமை தமிழனுக்கு மட்டும் தான் உண்டு.  எப்பூடி ....

*உலகிலே ஒப்பீட்டளவில் தமது  அன்றாட உணவை தயார் செய்வதற்காக அதிகளவு நேரத்தை செலவழிப்பவர்கள் தமிழர்களாக தான் இருப்பார்கள். இந்த விஷயத்தில் யாராலும் தமிழர்களை அடிச்சுக்க முடியாது. தினமும் மூன்று நேரம் அவியல், பொரியல் ,வறுவல்..  இதனால் தானோ என்னமோ உலகிலே விருந்தோம்பல் என்றால்(அதுக்கு மட்டும் தான்) தமிழனுக்கு என்று  தனி இடம்  உண்டு.

*அதே போல, தனக்கு வாய்க்கு ருசியான உணவு வாழ் நாள் முழுவதும் வேண்டுமே... என்பதற்காய் ஒரு ஆண் தனக்கு பெண் தேடும் போது பெற்றோரிடம் சொல்லிக்கொள்வான் "நல்லா சமைக்கத் தெரிந்தவளாக பாருங்க" என்று. இவ்வாறு தனக்கு துணைவியாக வரப்போவளிடம் முதல் கண்டிஷனாக 'பெண் சமைக்க தெரிந்தவளாக இருக்க வேண்டும்' என்று கருதுபவனும் தமிழனாக தான் இருக்க வேண்டும்.

*உலகின் வளர்ச்சியடைந்த-அடைந்து வருகின்ற, குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்க நாட்டவர்களின் சராசரி ஆயுட்கால எல்லை எம்மை விட அதிகம். தொண்ணூறு வயசென்றாலும் பொல்லு பிடிக்காமல் தெருக்களிலே நடந்து செல்வதை பார்க்க எமக்கே ஆச்சரியமாய் இருக்கும். இத்தனைக்கும் அவர்கள் எம்மை போலெல்லாம் வாய்க்கு ருசியாக அவிச்சு கொட்டுவதில்லை. அவர்களை பொருத்தவரை உடல் நலம் தான் முக்கியம். அதற்கேற்ற போலவே அவர்களின் உணவு பழக்கங்களும்..  ஆனால் நம்மாக்கள் இருக்கார்களே அறுபத்தி ஐந்து-எழுபதிலே கடைசி டிக்கட் வாங்கிற நிலைக்கு வந்திடுவார்கள்.  இல்லை மூன்றாம் கால் உதவி வேண்டி  கைத்தடி  பிடிக்க தொடங்கிடுவார்கள். எம்மை பொறுத்த வரை உடல் நலம் எல்லாம் இரண்டாம் பட்சம், வாய்க்கு ருசி தான் முதல்.

*தமிழர்கள் வசிக்கும் அநேகமான வீடுகளிலே அந்தந்த  வீட்டு பெண்கள் ஐந்து-ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள். வேலைக்கு போகணும் என்று அல்ல.. சமைக்கணும்! இவ்வாறு வெளிவேலை வெட்டி இல்லாது, சமைக்கணுமே.... என்டதற்க்காய் அஞ்சு மணிக்கு அல்லார்ம் வச்சு எழுந்து அடுப்பு ஊதுறத்திலும் தமிழனுக்கு முதலிடம் கொடுக்கலாம்.

*நான் இப்போ இரண்டரை வருசமா பெற்றோரை பிரிந்து வேறு ஒரு நாட்டில இருக்கிறன். நாட்டில இருந்து கிழமேல மூணு தடவையாவது தொடர்பு கொள்வார்கள். அப்பிடி தொடர்பு கொண்டதும் "ஹலோ.. சுகமா இருக்கியா!" எண்ட வார்த்தைக்கு அடுத்ததாய் கேட்ப்பார்கள் " சாப்பிட்டியா..!" அதோட விட்டாலும் பறுவாயில்ல.. 'என்ன சாப்பாடு, என்ன கறி..' எரிச்சல் தான் வரும்.. அட, நம்ம வீட்டுக்காரர்  மட்டும் தானா இப்படி! என்று நினைச்சு என் நண்பர்களிடமும் கேட்டு பார்த்தன்.. அவர்களுக்கும் இதே நிலைமை தான்.

*சில அரசியல்வாதிகள் இருக்கார்கள். மேடையில ஏறியவுடன் நெஞ்சை நிமிர்த்தி, மீசைய முறுக்கிக்கொண்டே   "உலகின் மூத்த குடிமகன்டா தமிழேன்...!" என்பார்கள். அப்பப்ப இதை கேட்டப்புறம் நானும் ஜோசிச்சு பார்ப்பதுண்டு, உலகின் மூத்த குடிமகன் தமிழனின் சாதனைகள், கண்டுபிடிப்புக்கள்? ......... யார் சொன்னது தமிழன் எதுவுமே கண்டு பிடிக்கல எண்டு.. சமீபத்தில கூட இடியப்பம் பிழியிற மெசினை கண்டு பிடித்துள்ளானே! இதற்க்கு முன்னர்  மின்சாரத்தில இயங்கிற ஆட்டுக்கல்லை கண்டு பிடித்த பெருமையும் தமிழனது தான் என்று நினைக்கிறன். ஆக தமிழனின் கண்டு  பிடிப்பு கூட சாப்பாட்டை மையமா  வச்சு தான்.

*ஈழத்தை பொருத்தவரை அதன்  மூத்த குடிமக்கள் தமிழர்கள் தான். ஏன், மகாவம்சம் கூட போற போக்கில இந்த சந்தேகத்தை சில இடங்களில் கிளப்பி விடும். ஆனா இந்த மூத்த குடிகள் தமது  காலத்துக்கு முற்பட்ட- தமது காலத்துக்குரிய முக்கிய விடயங்களை ஆவணப்படுத்த வேண்டுமே; எம் சந்ததியூடு அவற்றை எடுத்து செல்ல வேண்டுமே என்ற சிந்தனைகள் ஏதும் அற்றே வாழ்ந்து முடித்தார்கள்.
ஏறத்தாழ கிபி பதினேழாம் நூற்றாண்டு வரை தின்றுவிட்டு படுப்பதையே தமது பிறப்பின் நோக்காக கொண்டு செயற்பட்டார்கள். (நிரூபன் அவர்கள் தனது தொடரிலே   குறிப்பிட்டிருப்பார்.)

*அன்று மட்டுமல்ல, இன்று கூட அதை தான் செய்கிறார்கள். அதாவது, எமக்கு பிற்பட்ட காலம், எமது சந்ததி என்று எது பற்றியும் யோசிப்பதில்லை. எமக்கு என்று ஒரு மிகப் பெரிய விடுதலை அமைப்பு இருந்த போது, அதற்கு  சகல விதத்திலும் ஒத்துழைப்பு கொடுத்து, நோக்கத்தை விரைவாக அடைந்து கொள்ள எத்தனிப்பதை விட தின்று படுப்பதே முக்கிய நோக்காக கொண்டிருந்தார்கள்(தோம்). ஆனால் சில வேளைகளில் அந்த விடுதலை அமைப்பின் போராளிகளுக்கு உணவு (மட்டும்) கொடுப்பதையே தமது வரலாற்று கடமையாக கொண்டிருந்தார்கள். அதை விட.....?
அது போல கொடிய யுத்தத்தால் ஒரு பகுதி மக்கள் ஒரு வேளை உணவின்றி உடல் சுருங்கி வாடிய போதும், அந்த மக்களுக்காக யுத்தத்தால் பாதிக்கப்படாத பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது ஒரு நேர உணவையே இழக்க தயாராக இருக்கவில்லை.


ஆக  எந்த விதத்தில பார்த்தாலும் பொதுவாகவே தமிழனின் சிந்தனை, செயல், நோக்கம் எல்லாமே சாப்பாடு என்ற ஒன்றை மட்டுமே மையமாக வைத்து சுத்தி வருகுது. ஆமாம்..  ஒரு சான் வயிற்றுக்கு தான் இந்த மனித பிறப்பு என்னும்  யதார்த்தத்திற்கு   அமைவாக வாழ்பவன் தமிழன் மட்டும் தான்..... என்பதை ஆணித்தரமாகவும், பெருமையாகவும் கூறிக்கொண்டு இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்..   தமிழேண்டா..!!

வேட்டை நாய்கள்..


அதிகாரங்கள் முன்னிறுத்தப்பட்டு
சனநாயகம் என்ற
வர்ணம் பூசப்பட்ட 
எதோ ஒரு நாட்டின்
ஏவல் எந்திரங்கள் நாம்!

உணர்வுகள் எமக்கிருந்தும்
இடத்திற்கேற்ப அவற்றை
இறக்க வைக்கவும்
கற்றுத்தரப்பட்டுள்ளது!

சீருடை தரித்தவுடன்
மனிதம் மரித்துகொள்ளவும்
பழக்கப்படுத்திக்கொண்டோம்!

பார்வைக்குட்ப்பட்ட பின்
பலம் குன்றிய எதுவும்
எம் கோரப் பசிக்கு
உணவாகிப் போகலாம்!

அந்த வகையில்..

கட்டளைக்காக காத்திருக்கும்
வேட்டை நாய்களாகவும்
சில சமயங்களில்...
கடித்துக் குதறுவதற்கு
கொஞ்சத் தசைகளும்
சில எலும்புத்துண்டுகளும்...!

திருப்பிச்செலுத்திய இந்திய அணி - ஒரு பார்வை.

இங்கிலாந்து மண்ணிலே வைத்து இந்திய அணி மொத்தமாக வாங்கிய கடனில் முக்கால்வாசி  பகுதியை வட்டியுடனேயே திருப்பிக் கொடுத்துள்ளது. இங்கிலாந்து அணி கூட இதை எதிர்பார்த்திராது. அதனால் தானோ என்னமோ மைதானத்துக்குள் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்ட ஸ்டீபன் பின் தனது  'நாகரிகாமான' செயற்பாடுகளை அரங்கேற்றிக் கொண்டார்.

இந்திய அணி கடந்த மாதத்துக்கு முன்னர் இங்கிலாந்து மண்ணிலே பெற்ற படுதோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதே பலவீனங்களை கொண்ட இந்திய அணியே இன்று மிகப் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அநேகமாக உலகக்கிண்ண போட்டிகளுக்கு பின்னர் டோனி அணி பெற்றுக்கொண்ட மிக பெரிய வெற்றி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல உடல் உபாதையால் பல முன்னணி வீரர்கள் அணியில் இருந்து விலகி இருக்கும் போது, இளம் வீரர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரிவர பயன்படுத்தி, சொந்த மண்ணில் தாம் இன்றும் விழுத்த முடியாத அணி தான் என்பதை நிரூபித்துள்ளார்கள். 

ஒரு வேளை, இன்றைய நிலையில் இதே அணி இங்கிலாந்தில் விளையாடியிருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா என்பதற்கு  "பதில் இல்லையே.." காரணம் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்கள் தான். இன்றும் இந்திய மண்ணில்  சுழலுக்கு மிகவும் தடுமாறுகிறது இங்கிலாந்து அணி. அதே சமயம் இங்கிலாந்து அணியின் வேகம் இந்திய மண்ணில் எடுபடவில்லை. கடந்த இரண்டாயிரத்து எட்டில் ஏழு போட்டிகள்  கொண்ட தொடரை ஐந்துக்கு பூச்சியமென இந்திய அணி கைப்பெற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் துடுப்பாட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக விராட் ஹோலியின் துடுப்பாட்டம் முதிர்ச்சியாக இருந்தது. சொல்லப்போனால் இரண்டாவது மற்றும் நான்காவது போட்டிகளில் இவர் விளையாடிய விதம் அற்புதம். இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிக்கு இவர் தான் முக்கிய காரணம். அத்துடன் ஹோலி இதுவரை விளையாடிய அறுபத்தி ஆறு ஒருநாள் சர்வதேச போட்டிகளிலே தனது ஏழாவது சதத்தை இந்த தொடரில் கடந்துள்ளார். இப்படியே சென்றால் இந்திய அணிக்கு மிக சிறந்த எதிர்கால வீரர் உண்டு. ஹோலியை விட ரஹானே, கம்பீர், ரைனா, டோனி, ஜடேஜா என்று அத்தனை துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாகவே செயற்ப்பட்டிருந்தார்கள். 

இத்தொடரிலே ஆரம்ப விக்கெட்டுக்கள் விரைவாக சரிந்த போது நெருக்கடியான நிலையிலும் ஆறாம், ஏழாம்  இலக்க துடுப்பாட்டவீரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு அணியை வெற்றிக்கு /சிறந்த நிலைக்கு கொண்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் முழுவதுமே அணியின் முதுகெலும்பாய் செயற்பட்டு தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்ற டோனியின் தலைமை மிக சிறப்பாக இருந்தது. முக்கியமாக இவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதத்தை குறிப்பிடலாம். அத்துடன் ஐந்து போட்டிகளிலே நான்கு போட்டிகளில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டோனி எந்த ஒரு போட்டியிலும் இறுதி  வரை ஆட்டமிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று வரை நூற்றி ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட ஒருநாள் போட்டிகளிலே விளையாடியுள்ள டோனியின் துடுப்பாட்ட சராசரி ஐம்பதுக்கு மேல் - இதற்கு காரணம் டோனி ஆறாம் இலக்கத்தில் களமிறங்குவது தான் என்று கூறினாலும், நிகழ்காலத்தில் நூற்றி ஐம்பது போட்டிகளுக்கு மேல் விளையாடி ஐம்பது (+) சராசரியை கொண்டுள்ள வீரர்கள் யாரும் இல்லையே..(மைக்கல் பெவன் 'இருந்தார்')


ஹர்பஜனின் இடத்தை பிடித்திருந்த அஸ்வினின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. முக்கிய தருணங்களில் விக்கெட்டுக்களை வீழ்த்தியதில் பெரும் பங்கு வகித்திருந்தார். ஹர்பஜன் அணிக்கு திரும்பி தனது திறமையை மீண்டும் சிறப்பாக நிருபிக்காவிடத்து அவரின் நிலை அந்தோ கதி தான்! அதேபோல அவ்வப்போது சுழலில் கலக்கிய இன்னுமொரு வீரரான ரவீந்திர ஜடேஜா ஒரு சகல துறை வீரர் என்ற நிலையிலும்  சிறப்பாக செயற்ப்பட்ட போதும் யுவராஜ் அணிக்கு திரும்பினால் அவரின் இடம் அநேகமாக பறி போகும் நிலை தான். எனினும் சச்சின் இடத்தை அவ்வப்போது நிரப்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

உமேஷ் யாதவ், வருண் அருண் என்று நூற்று நாற்பதிலும் வேகமாக வீசக்கூடிய பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் விளையாடியிருந்தாலும் இந்த தொடரை வைத்து அவர்களை மதிப்பிட முடியாது. என்னை பொருத்தவரை இவர்களை விட இர்பான் பதான் எவ்வளவோ மேல்...!

அப்புறம் இங்கிலாந்து அணி பற்றி......
ஸ்வான், குக், ஜோனாதன் ட்ராட், கெவின் பிட்டர்சன் என்று நாலஞ்சு பேர் தொடர் தொடங்க முதல் கண்ணு தெரிஞ்சாலும் தொடரிலே தெரிஞ்சது என்னமோ இந்திய அணி வீரர்களின் முகம் மட்டும் தான்.  அத்துடன் அன்டர்சன், பிராட் ஆகியோர் அணியில் இருந்திருந்தாலும் இந்த தோல்விகள் தவிர்க்க முடியாதது தான்.  இனி ஒரே ஒரு  டி ருவண்டி இருக்கு.. அதையாவது  வென்று கொஞ்சம் கவுரவத்தோட நாடு போவார்களா..?  என்பதை  பொறுத்திருந்து தான் பார்க்கணும்..)

கடாபியும், மகிந்தரும் .

நான்கு தசாப்த கால லிபியாவின் சர்வதிகார ஆட்சி முறை முடிவுக்கு வந்திருப்பது அந்த நாட்டு மக்களுக்கு மாத்திரமல்லாது சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் அனைவருக்கும் சந்தோசத்தை கொடுக்கும் என்பது ஒரு புறமிருக்க, சர்வதிகாரி கடாபியை கைது செய்த பின்பு சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாதது. காணொளி ஆதாரத்துடன் வெளி வந்திருக்கும்  இந்த செயலுக்கு மேற்க்குலகுகளின் நடவடிக்கை எப்படி இருக்கப்போகிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அநேகமாக இது தொடர்பில் மென் போக்கை தான் கடை பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். காரணம் தம் முகத்தில் தாமே சேறடிக்க யார் தான் விரும்புவார்கள்.

 அன்று அடால்ப் கிட்லர் தொடக்கம் இன்று மொகமர் கடாபி வரை  நாட்டு மக்களின் நலனை புறம் தள்ளி,  தம் (குடும்ப) நலனை முன்னுறுத்தி  சர்வதிகார  போக்குடன்  செயற்ப்படும் ஆட்சியாளர்களுக்கு முடிவு கடுமையானதாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் அவர்களின் பிம்பங்களாக இன்னும் இவ்வுலகில் நடமாடுவோருக்கு  இது ஒரு படிப்பினையாக, பயத்தை ஏற்படுத்துக்கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 
கடாபிக்கு எதிரான போராட்டத்துக்கு 'சுயநல போக்குடன்' மேற்குலக வல்லரசுகளின்  பூரண ஆதரவு கிடைத்திருந்தாலும், அராஜக ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த  லிபிய நாட்டு மக்களின் கிளர்ச்சிக்கு  கிடைத்த வெற்றி தான் இது. எனினும் லிபியாவின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப்போகிறது?  மேற்குலகின் கைப்புள்ளயாக தன்னை முன்னிறுத்திக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இங்கே இன்னொன்றும் கவனிக்கதக்கது. புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் எந்த போக்கை மகிந்த அரசு கடைபிடித்ததோ, அதே போக்கு தான் கடாபிக்கு இறுதி நேரத்தில்  நிகழ்ந்துள்ளது. ஆக மகிந்தரின் நண்பரான கடாபியின் மரணம் தொடர்பாக மகிந்த அரசின் குரல் எவ்வாறு  ஒலிக்கப்போகிறது? தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளப்போகிறதா? இல்லை அடக்கி வாசிக்கப்போகிறதா?

மனிதாபிமானம் அற்றவர்களால் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகள்.

உலகின் பொதுவான  சர்வதேச சட்டவிதிகளுக்கமைய சில பிரதேசங்களுக்குள் யாராக இருந்தாலும் ஆயுதங்கள் சகிதம் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.  உதாரணமாக பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், வைத்தியசாலைகள்..

ஆனால் இலங்கையை பொறுத்த வரை பல தசாப்தங்களாகவே இது விதிவிலக்கு. இலங்கை அரசோ, இராணுவமோ  இவற்றை சற்றும் சாட்டை  செய்வதில்லை.  நான் கல்வி கற்ற பாடசாலைக்குள் இராணுவம் எத்தனையோ தடவைகள் ஆயுதங்களுடன் பிரவேசித்ததை கண்டுள்ளேன்.  அதே போல இறுதி யுத்தத்தில் இவர்கள் வைத்தியசாலைகளையும் இராணுவ இலக்காக கொண்டு செயற்ப்பட்டத்தை  இன்று உலகே  அறியும்.

ஆனால் இலங்கை இராணுவம் மட்டும் தானா இப்படி... 

அது 1987 ம் ஆண்டு  இதே நாள், திடீரென யாழ் போதனா வைத்தியசாலைக்குள் உள் நுழைந்த  'அமைதி காக்கும் படையினர்' என்ற போர்வையில் இலங்கைக்குள் உள் நுழைந்திருந்த ராஜீவ் படைகள், அவ் வைத்தியசாலையில் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதிகள், நோயாளிகள் உட்பட அறுபத்தி எட்டு பேரை ஈவு இரக்கம் அற்று கொலை வெறியோடு சுட்டுத்தள்ளினார்கள்.  யார் மீதோ உள்ள வெறுப்பை கோழைத் தனமாக அப்பாவி உயிர்கள் மீது காட்டினார்கள். 

இதில் மிக கொடுமையான விடயம் என்னவென்றால், எத்தனையோ  இந்திய இராணுவ சிப்பாய்கள் புலிகளுடன் மோதி குற்றுயிராக வைத்தியசாலைக்குள் கொண்டு வரப்பட்ட போது இதே வைத்தியர்களும் தாதிகளுமே அவர்கள் உயிரை காப்பாற்றி  மறு வாழ்வு கொடுத்தவர்கள். 

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும், "காந்தி தேசம் என்ற பெயருக்கும்" தலைக் குனிவை ஏற்ப்படுத்தும் விதமாக அன்று ஈழத்திலே இந்திய இராணுவம் செயற்ப்பட்டதற்கு இது ஒரு உதாரணம்.. இதை விட இன்னும் எத்தனையோ சம்பவங்கள் உள்ளன. ஒரு வேளை இவையெல்லாம் காணொளி வடிவில் அன்றே வெளி வந்திருந்தால் உலகையே உலுப்பியிருக்கும். ஏன், இவற்றையெல்லாம்  வழிநடத்திய ராஜிவின் இறப்பு  இந்தியர்களுக்கே மனவருத்தத்தை கொடுப்பதாக அமைந்திருக்காது.


இன்று  இருபத்திநான்கு வருடங்கள் ஓடி விட்டது. ஈழ தமிழனாக பிறந்துவிட்டால் நீதி என்ற ஒன்றை என்றுமே எதிர்பார்க்க முடியாது என்பதற்கு அமைய, எம்மால் அந்த உயிர்களுக்கு இன்று அஞ்சலி மட்டுமே செலுத்த முடியும்.

இன்று எந்த நேரத்திலும் ஈழ தமிழர்கள் மீது தமது வஞ்சகத்தை தீர்க்க துடிக்கும் சோனியாவுக்கும், சிதம்பரத்துக்கும், சுப்பிரமணிசுவாமிக்கும் ஏனையவர்களுக்கும்  இந்த விடயம் நன்றாகவே தெரியும்.  ஆனால்   ராஜிவின் கொலைக்காக கண்ணை மூடிக்கொண்டு  அந்த மூன்று உயிர்களை தூக்கில்  ஏற்ற துடிக்கும் காங்கிரசும், அதன் அடிவருடிகளும் இந்த சம்பவத்தை பொறுப்பேற்க முடியுமா? இழந்து போன அந்த உயிர்களை திருப்பி கொடுக்க முடியுமா? அந்த உயிர்களின் உறவுகளுக்கு இவர்கள் சொல்லப்போகும் பதில் என்ன?

புலம்பெயர்ந்த தமிழரும்,பச்சோந்திகளும்..!

பச்சோந்தி! இந்த  உயிரினத்தை பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.  தான் வாழும் சூழலுக்கேற்ப  தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு வித உயிரினத்தை இவ்வாறு அழைப்பார்கள்.   உயிர்வாழும் சூழலில் தன் பாதுகாப்பு கவசமாகவும்   "நிறம் மாறுவது" அதற்கு உதவுகிறது.


அதே போல, இந்த பெயர் கொண்டு சில மனிதர்களையும் விளிப்பார்கள். காரணம் சூழ்நிலைக்கும், தாம் சார்ந்த நபர்களுக்கும் ஏற்ப  தன் பேச்சு, செயல்களை மாற்றிக்கொள்ளும் மனிதர்களை பச்சோந்தி என்பார்கள். "நீ ஒரு பச்சோந்தி" என்று ஒருவனை ஏசும் போது அவனுக்கு கோபம் வரும். பச்சோந்தி என்று ஒருவனை விழிப்பது  சமூகத்தில் தாழ்வான வார்த்தையாகவே இருந்து வருகிறது.

ஆனாலும்,  சில தருணங்களில் எம் சூழ்நிலை நாம் பச்சோந்தி போல இருந்தாலே வாழ முடியுமாக உள்ளது.  உதாரணம் புலம்பெயர்ந்ததேசம்.

நாம் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு மேலைத்தேய/பிற  நாடு ஒன்றுக்கு குடி பெயரும் போது, அங்கேயுள்ள சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வது கட்டாயமாகிறது. அதாவது பச்சோந்தி போல.

உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை பல பழக்கவழக்கங்களை மாற்றினாலே நம்மால் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஆரம்பத்தில் இது  மிகவும் கடினமாக தான் இருக்கும் , ஆனால் போக போக அதுவே பழக்கத்துக்கு வந்துவிடும். அதன் பின் பழையன கழிதலும் புதியன புகுதலும் போல  நாம் மாறிவிடுகிறோம்  என்று சொல்வதை விட,  சூழல் நம்மை மாற்றிவிடுகிறது  என்பதுவே உண்மை.

உதாரணமாக  நாட்டில் கிராமபுரங்களில் வசிக்கும் போது சாதாரணமாக  செருப்பு போட்டே அறியோம், ஆனால் இங்கு வந்தும்    அதே பழக்கத்தை பின்பற்றினால் இங்குள்ளவர்கள் நம்மை ஒரு வித்தியாசமான "ஜந்தாக" பார்ப்பது ஒருபுறம் இருக்க, இங்குள்ள காலநிலையால் குளிர் பிடித்தே இறந்துவிடுவோம். இவ்வாறு தான் உடுத்தும் உடை,  உணவு என்று பல பழக்கங்களை மாற்றிக்க வேண்டிய சூழ்நிலை.

புலம்பெயர்ந்து சென்றவர்கள்  மீண்டும் நாட்டுக்கு வரும் போது பல பழக்கவழக்கங்களில் மாறியிருப்பார்கள்.   அது  அவர்களின் இயைவாக்கம். ஆனால் சிலர் இதை நாகரிக மோகம் என்று விளிப்பார்கள். தவிர்க்க முடியாதது தான்!


அதாவது சூழ்நிலைக்கு ஏற்றவாறு எம்மை உடனடியாக மாற்றிக்கொள்வதென்பது  மிக கடினமானது தான்.  ஆரம்பத்தில் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த பின் மேற்க்கத்தேய  சூழ்நிலைக்கு ஏற்ப எம்மை மாற்றிக்கொள்ள எவ்வாறு கஸ்ரப்பட்டிருப்போமோ, அதே நிலை தான் மீண்டும் பல வருடங்கள் கழித்து  தன் சொந்த நாட்டுக்கு வரும் போதும். 

ஆனால் இந்த இயைவாக்கம் உணவு, உடை தவிர்ந்து கலை,  பண்பாடுகள் பக்கம் சாய்ந்து   செல்லும் போது நமது  சுயத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

எனக்கு தெரிந்து  இங்குள்ள  ஒரு குடும்பம்-  கணவன் மனைவி புலம்பெயர்ந்து வந்தவர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.  பிள்ளைகள் இங்கே  பிறந்து இப்பொழுது  பாடசாலையில் படிக்கிறார்கள். ஆனால் அவர்களின் பாடசாலையிலே மாணவர்களுக்கான முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படும்  போது இவர்கள்  புறக்கணிக்கப்பட்டார்கள். காரணம் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள்  வழங்கபடுவதில்லையாம். இவர்கள்  இந்துக்களாக  இருந்ததால் தொடர்ந்து  புறக்கணிக்கப்பட்டார்கள். இதனால்  தற்சமயம் அந்த  இருவரும் பெற்றோரின்   சம்மதத்துடன் கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்டார்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால்,  வீட்டிலே தாயும் தகப்பனும் இந்துக்கள் பிள்ளைகள் கிறிஸ்தவர்கள். அதோடு அந்த இரு பிள்ளைகளுக்கும் தமிழ் என்பது வேப்பெண்ணை....


இவ்வாறு தான் புலம்பெயர் தமிழ் சமூகத்தின்  இயைவாக்கம் இவ்வாறு ஆரம்பித்து மொழி பண்பாடு, கலை .............. எதிர்காலத்தில் தம் அடையாளத்தை,  சுயத்தை அழித்திவிடுமோ...???

சில புலம்பெயர் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தம் காலாச்சாரத்திலே வளர்க்க முனைவார்கள். ஆனால் இது ஒரு போதும் முடியாதது. ஒரு பந்தை நீருக்குள் அடியில் வைத்திருக்கும் நோக்கோடு எவ்வளவு நேரம் தான் கையால் அமிழ்த்தி வைத்திருப்பது. கையை விலக்கவும் பீறிட்டு மேலெழும்பி நீரின் சமநிலையில் தான் வந்து நிற்கும்.  அதே போல தான் புலம்பெயர் தேசத்தில் பிறக்கும் தமிழ் சந்ததியும், தாம் வாழும் சூழலுக்கு ஏற்பவே தம் வாழ்க்கையை பழக்கி கொள்வார்கள், அது தான் அவர்களின் எதிர்காலத்துக்கும் உகந்ததாகவும் இருக்கும். அதை விடுத்து  நம் காலாச்சாரத்தில் அவர்களை கட்டாயப்படுட்டுவது முட்டாள் தனமானது. மாறாக  நம் சில கலை, பண்பாடுகளை பின்பற்ற செய்வதில் தப்பேதும் இல்லை.
புலம்பெயர் தேசங்களிலே தமிழ் மொழி என்பது அநேகமாக முதலாவது தலைமுறையுடன் காணாமல் போகும் நிலையில் தான் உள்ளது. உதாரணத்துக்கு இங்கே பிறந்து, இங்குள்ள பாடசாலையில் கல்வி கற்ப்பவர்களில் எத்தனை பேருக்கு தமிழ் மொழி  எழுத, வாசிக்க தெரியும் என்பது கேள்விக்குறியே?  எனினும், இங்கே பிறந்து இங்குள்ள சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு தமிழ் என்பது  என்றுமே இரண்டாம் மொழி தான். தமிழ் மொழி அவர்கள் பெற்றோரின் தாய் மொழி. பெற்றோருடன் தொடர்பாடலை மேற்கொள்வதை தவிர வேறு எந்த விதத்தில் அவர்கள் வாழ்க்கைக்கு  தமிழ் மொழி தேவைப்படப்போவதில்லை. காரணம் அவர்களின் எதிர்காலம் அவர்கள் பிறந்த அந்தந்த  நாட்டு  மொழிகளிலே தான் கடக்கப்போகிறது.

ஆக, என்ன தான்  இருந்தாலும்  புலம்பெயர்ந்த  தமிழ் சமூகம்  இன்னமும் நான்கு அல்லது  ஐந்து  தலைமுறையின் பின் தமது அடையாளங்களை முற்றாக இழந்துவிடுவார்கள்  என்பது  மட்டும் கசப்பான உண்மை.

ஜி ரிவியும் ,சிறீதரனும் என் கேள்வியும்..!

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் பெரும்பாலான நாடுகளில் அனைத்து தமிழர்களாலும் அறியப்பட்ட தொலைக்காட்சி தான் இந்த ஜி ரிவி. அரபு நாடுகளிலும் இது தன் தேவையை தொடருகிறது என்று நினைக்கிறேன். 

பல தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் இருந்தும், கட்டணம் அறவிடாது (நன்கொடைகள் தவிர) சேவையை தொடரும் தொலைக்காட்சியும் இது ஒன்று என்று தான் நினைக்கிறேன். அதே போல தென்னிந்திய கலை, களியாட்ட நிகழ்வுகளை அதிகளவில் ஒளிபரப்புவதில்லை. மாறாக புலம்பெயர் தமிழ் சமூகத்தில்- இளையோர்களிடையே தமிழை ஊக்குவிப்பதில் பாலமாக செயற்பட்டு வருகிறது. அத்துடன்  ஈழம் சம்மந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கவும் தவறுவதில்லை. 

அந்த வகையில் சமீபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின்  அரசியல் கலந்துரையாடலை நேரடியாக ஒளிபரப்பியிருந்தார்கள்.

சிறீதரனை பற்றி ஏற்க்கனவே முழுமையாக நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழ் இனைய ஊடகங்கள் அவ்வப்போது அவர் மீது முன்வைக்கும் விமர்சன தாக்குதலை படித்திருக்கிறேன். இருந்தாலும், இந்த இனைய தமிழ் ஊடகங்களின் செய்திகள் மீது எனக்கு பெரிதாக நம்பகத்தன்மை இல்லை, அலட்டிக்கொள்வதும்  இல்லை.  தனிப்பட்ட குரோதங்களை பொது வெளியில் வெளிப்படுத்த இவர்கள் தயங்குவதும் இல்லை. இவர்கள் ஒருவித வியாபாரிகளும் கூட... ஆக சிறீதரன் முன்னர்  எப்பிடி இருந்தாரோ.. இருந்திட்டுப் போகட்டும். நான் அவரை பற்றி ஆராய வரவில்லை மாறாக அவர் கருத்துக்களை தான் ...

ஜி ரிவியில் அவர் முன் வைத்த கருத்துக்கள் யதார்த்தமானதாக தான் இருந்தது. அரசியல்வாதிக்கே உரித்தான வீர வசனங்கள், வேக பேச்சுக்களை  தவிர்த்து தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

முக்கியமாக, ஈழத்திலே உதிர்ந்து போய் காணப்படும் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதில் உள்ள பிரச்சனையை- தலைமைத்துவ போட்டியிணை வெளிப்படையாக சொல்லியிருந்தார்(சங்கரியார் -சம்மந்தன்..). இருந்தாலும் தமிழர்களை பொறுத்தவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக முட்டி மோதிச் செயற்படும் அரசியல் கட்சிகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வருவது இப்போதைய தேவையாக உள்ளது.  ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது! ஒரு பூனைக்கு மணி கட்டிவிட்டால் அந்த மணியை கூட இருக்கும் ஏனைய பூனைகள் அறித்தெறியும் நிலையில் தான் இவைகள் உள்ளன.

இன்னொன்று, அவர் கூறிய கருத்துக்களில் சிந்திக்க வைத்தது, 'தமிழ் தேசிய கூட்டமைப்பை உலகளாவிய ரீதியில், அதாவது ஈழ தமிழர்கள் பரந்து  வாழும் தேசங்களில் விஸ்தரிப்பது.'

தலைமையை தாய் நாட்டில் இருக்க, ஏனைய நாடுகளில் கிளைகளை அமைத்து அரசியல் ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். இதன் மூலம் உலகில்  தாய் நாட்டை பிரிந்து வாழும் தமிழர்களுக்கும், தாய் நாட்டிலே வாழும் தமிழர்களுக்குமிடையே பாலமாக -பலமாக செயற்ப்பட வாய்ப்புள்ளது.

ஆனால் இதிலும் சில சிக்கல்கள் உள்ளது. முக்கியமாக;
1.தலைமைத்துவ பிரச்சனை. (நாம தான் பெட்டிக்குள் அடைபட்ட நண்டுகளாச்சே)
2. பிரதிநித்தித்துவபடுத்தக்கூடிய மிகச்சிறந்த அரசியல் தலைமை இன்மை!
3.பழைய குரோதங்களை, கோபங்களை மறந்து ஈழத்தில் உள்ள அரசியல் 
  கட்சிகள் ஒன்றுபடுமா-அதிலுள்ள சிக்கல்கள்.
5.இவையனைத்துக்கும் மேலாக நம்பகத்தன்மை/ இவர்கள்  செயற்பாடு 
   மக்களை நோக்கியதாக இருக்குமா?

முடியாது என்பது ஏதும் இல்லை. இந்த குறைபாடுகள் நீங்கி  மேற்சொன்னவாறு  நிகழ்ந்தால், ஈழதமிழர்களுக்கென்று மிகப்பலமான ஒரு அமைப்பை - கட்சியை உலகளாவிய ரீதியில் அமைக்கலாம்.  இது மிக பெரிய ஒரு வாய்ப்பாக எம் முன்னே உள்ளது.. தமிழ் ..தமிழர் என்று நம் அரசியல்வாதிகள் கோசம் போடுவது உணர்வுபூர்வமானது என்றால் இதை செய்துகாட்டலாமே?

திருமாவும் பின்னே சீமானும் ...!
கல்யாணமும் கலாச்சாரமும்... !

என்ன தான் கால ஓட்டம்  வேகமாக சுழன்றாலும், நம் வாழும் சூழலிலே நவீனத்துவம் புகுத்தப்பட்டாலும், அநேக  தருணங்களில் சம்பிரதாயம் பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுபவர்களாகவே  காணப்படுகிறோம். ஒரு விதத்தில் அவையெல்லாம் நம் மரபோடு ஒன்றித்துவிட்டது எனலாம்.

 சில சமயங்களிலே நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்களை  எண்ணும்  போது வியப்பாகவும்  வேடிக்கையாகவும்  இருக்கும்,  இன்னும் சில வேளைகளில்  "என்னடா இந்த மூட நம்பிக்கைகளையெல்லாம் பின்பற்றியிருக்கிறார்களே!  " என்பது போல எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும்.  ஆனால், நாம் பல சமயங்களில்  நம் முன்னோர்கள் எதற்காக இந்த நடைமுறைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம் புரியாமலே அதை காலா காலமாக பின்பற்றி வருவோம்.


இதில் ஒன்று  திருமண சடங்கின் போது பின்பற்றப்படும் நடைமுறைகள்,மரபுகள்.....

நல்லதோ  கெட்டதோ ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்கமுடியாத நாளாக திருமண நாள் அமைந்துவிடும்...

அத்தோடு, அந்த  நாள் அன்று  "ஐயர் ஓமம் வளர்த்து மந்திரம் சொல்வதிலிருந்து, இறுதியில் ஒவ்வொருவராக வந்து வாழ்த்து சொல்வது வரை"  மணமக்களை ஒரு வழி பண்ணிடுவார்கள். கிராம புறங்களில் தான்  "மிக நேர்த்தியாக"  இவற்றை பின்பற்றுவார்கள்.

திருமணவீட்டிலே வாழை கட்டுவதில் இருந்து, மணமக்களுக்கு அறுகரிசி தூவி வாழ்த்துவது  வரை எல்லாவற்றுக்கும் நம் முன்னோர்கள் ஒவ்வொரு காரணத்தை வரையறுத்து வைத்துள்ளார்கள். ஆனால் பல சமயங்களிலே "இவற்றை எதற்காக செய்கிறோம்" என்று  அர்த்தம்  புரியாமலே நாமும் செய்வோம்...

திருமண வீட்டின் முன்னே வாழை மரம் கட்டுவது வழக்கம்.  இதற்கு காரணம் 'திருமணம் செய்யும் ஜோடி வாழையடி வாழையாக சந்ததி விருத்தியடைய  வேண்டும்' என்ற  அர்த்தப்படவே  என்பது  யாவரும் அறிந்ததே. ஆனால் அதை விட  இன்னொரு காரணமும் உண்டு. அதாவது, ஒரு வாழை ஒரு தடவை தான் குலை போடும் ,அதே போலவே  ஒருவர் வாழ்க்கையிலே ஒரு தடவையே திருமணம் என்று  பொருள்படுவதற்காக வாழைமரம் கட்டப்படுவதை நம் முன்னோர்கள்  மரபாக கொண்டிருந்தார்களாம்.

தவிர, தென்னை  ஓலையும் கட்டும்  வழக்கம் உள்ளது.  தென்னை என்பது கற்பகதரு அதோடு நூற்றாண்டுகள் தாண்டிய ஆயுள் கொண்டது.  இதே போலவே மணமக்களின் வாழ்வும் இருக்க வேண்டும் என்று பொருள்படுமாம்.

திருமண வைபவத்தின்  இறுதியிலே  அறுகரிசியும் அறுகம்புல்லும் கொண்டு வயதில்  பெரியவர்கள் மணமக்களை ஆசிர்வதிப்பார்கள். ஆனால் உண்மையிலே அறுகரிசி பயன்படுத்தல் என்பது தவறான முறை. முன்னைய காலத்தில் நெல்லும்  அறுகம்புல்லும் கொண்டே ஆசிர்வதித்தார்களாம்.( சற்று நாட்களுக்கு முன்னர்  தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலே  ஒரு பெரியவர் சொல்ல கேள்வி). ஆனால், காலப்போக்கில் நெல் அரிசியாகிவிட்டது. ( 'நெல்லு அரிசியாக தானே மாறும்' என்று நீங்கள் கேட்க்கிறதும் நியாயம் தான்.)

நெல் பயன்படுத்துவதற்கு காரணம் "ஒரு சிராங்கு (கைப்பிடி) நெற்களை  விதைத்தால்  அறுவடையை பன்மடங்காக தரும் பண்பு கொண்டது".  அதே போலவே அறுகம்புல்லும்,  மிக குறுகிய காலத்தில் வேருன்றி படர்ந்து  பரவக்கூடிய ஆற்றல் கொண்டது.  இந்த காரணங்களுக்காகவே இவற்றை ஆசி வழங்குவதற்காக பயன்படுத்தினார்கள்.


'பெண் என்பவள் ஆணுக்கு அடுத்தவளே, அவளால் ஆண்களை போல சமூகத்திலே சகயமாக வாழ முடியாது.  அவள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கணும்,  தலை குனிந்து தான் நடக்கணும்' என்பவையும் முன்னையகாலத்தில்  நம் முன்னோர்கள் ஏற்படுத்திக்கொண்டவை  தான். ஒரு திருமணத்தின் போதும் இதற்கு ஏற்றா போல சில  நடைமுறைகளை உண்டாக்கி வைத்துள்ளார்கள்.

"திருமணம் அன்று பெண் கழுத்தில் ஆண் தாலி கட்டி கொள்ள வேண்டும், ஆண் கால்களிலே பெண் மெட்டி அணித்து விட  வேண்டும். ஏனெனில் ஆண் என்பவன் என்றுமே தலை நிமிர்ந்து நடப்பவன். ஆகவே கழுத்தில் இருக்கும் தாலியை பார்த்தவுடன்  ஒரு பெண் திருமணமானவளா என்று அடையாளம்  கண்டுகொள்வான். ஆனால் பெண்ணோ  தலை குனிந்து தான் நடப்பவள், ஆகவே அவள் ஒரு ஆண் திருமணமானவனா என்று அறிந்து கொள்ள அவனின் காலில் அணியும் மெட்டி உதவியாக இருக்கும்."

 அதே போலவே தாலியில் போடப்படும் மூன்று முடிச்சுக்களுக்கும் அர்த்தங்களாக "முதலாவது புகுந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள். இரண்டாவது பிறந்த வீட்டுக்கு கட்டுப்பட்டவள் மூன்றாவது தெய்வத்துக்கு கட்டுப்பட்டவள்" என்ற அர்த்தங்கள் பொருள்படும்.  இவ்வாறு அநேக சம்பிரதாயங்கள் ஆணை காட்டிலும் பெண்ணை சுற்றி போடப்பட்ட  ஒரு கட்டுப்பாடாகவே எண்ணத்  தோன்றுகிறது.

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள இந்த நடைமுறையை எவ்வாறு எடுத்துக்கொள்வது.................!!  அவர்களின் அன்றைய காலத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் பொருத்தமாக இருந்தது, ஆனால் கலாச்சாரம் என்ற போர்வையில்  இன்று  சிலவற்றை ஏற்றுக்கொள்வது  கடினம்  தான். 

சீமானா இப்படி ..?

"திருமா என்பவன் பாதி தமிழன் அல்ல ஆதி தமிழன், அவன் சோர தமிழன் அல்ல வீரத் தமிழன் என்பதால், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு எங்கு அநீதி நிகழ்கிறதோ, பொங்கு தமிழர்க்கு இன்னல்கள் நிகழ்ந்தால் சங்காரம் நிசம் என சங்கே  முழங்கு என்று பாடிய பாவேந்தனின் பாட்டுக்கு இணங்க கொதித்து எழுகிற என் ஆருயிர் அண்ணன் திருமா அவர்கள் வாழ்க!"- இது நான் சொல்லலிங்க ... 'வீரத்தமிழன் திருமா' மேடைக்கு பேச அழைக்க, பின்னணி இசை இல்லாத குறையாக சீமான் முழங்கித் தள்ளிய வார்த்தைகள் தான் இவை!

நான் இதற்க்கு முன்னாடி திருமாவை பற்றி ஏதேதோ எல்லாம் அறிந்சிருந்தன்.. இந்த வீடியோவை பார்த்ததுக்கப்புறம் "அட! நம்ம சீமானே சொல்லிப்புட்டார்.. ஆக, திருமா தங்க தலைவனாய் தான் இருப்பார். அவர் சீறும் சிங்கம், பாயும் சிறுத்தை!"  என்று  சீமான் மீதுள்ள நம்பிக்கையால் மனம் முடிவு செஞ்சு பெருமிதப்பட்டாலும், என்  மூளை கேட்க்கவில்லை.. ஆகவே நம்ம பெரியண்ணன்  கூகுளின் உதவியை வேண்டினேன். திருமாவின் பெயரை கொடுத்து அண்ணன் எப்படிப்பட்டவர் என்ற ஆதாரத்தை கேட்டேன்! 
பல்வேறு தகவல்களுடன் இப்புடியும் ஒரு படம் வந்திச்சு 

                               ஒரு வேளை இது சிறிலங்கா புலனாய்வு துறையின் சதியாய் இருக்குமோ?

அண்ணே சீமான்! எதுக்கு உங்களுக்கு இந்த வேலை.  அரசியல்வாதி எண்டாலே செம்பு தூக்குபவன் தான் என்ற  எழுதப்படாத வரையறையூடு  தான் நீங்களும் பயணிக்கிறீர்களா? திருமா நடத்துவது சாதி அரசியல் என்றால் நீங்கள் இவ்வளவு காலமும் நடத்திக்கொண்டிருப்பது இன அரசியலா? இது தான் உங்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடா? எவ்வளவு நம்பியிருந்தோம்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று நீங்க சொன்ன போது கூட 'அரசியல் என்று  இறங்கிட்டால் சில தந்திரங்கள், விட்டுக்கொடுப்புக்கள் இருக்கலாம்' என்ற ரீதியில் நான் கூட உங்களை ஆதரிச்சேன். ஏன், ஒரு பதிவு கூட போட்டிருந்தேன். இப்புடி பண்ணிப்புட்டிங்களே! "ஈழ தாய்க்கு" தான் விழா எடுக்குறிங்கள்.. அது போதாதா? நீங்கள் உங்கள் மானத்தை மட்டும் அடகு வைக்கவில்லை.. உங்களுக்கு பின்னால், உங்களையே நம்பிவந்த ஆயிரக்கணக்கான உண்மையான உணர்வாளர்களின் மானத்தையும் சேர்த்து தான்..! 

ஏண்ணே! உங்களுக்கு திருமா பற்றி தெரியாதா? முத்துக்குமாரின் ஆவி கூட உங்களை மன்னிக்காதுண்ணே! தேவர் சிலைக்கு மாலை போட்ட போதும்- உங்க தம்பி படத்தில் அவரை கவுரவித்த போதும் எழுந்த கேள்விகளுக்கு 'ஐயோ நான் தெரியாமல் செஞ்சுப்புட்டன்' என்று ஆதங்கப்பட்டீங்களே(!) இன்னுமா ....?  முடியலேண்ணே!

தமிழன் என்றால் ஏமாளி தான் என்று முதுகில பச்சை குத்துறத்துக்கு வேறு எந்த இனத்தவனும் வெளியில இருந்து வரவேண்டியதில்ல..!

அண்ணே! இனி 'பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி' எண்டு பொது இடங்களில சொல்லாதேங்கண்ணே... அசிங்கமாய் இருக்கு!  அதையும் மீறி பேரன்-தம்பி எண்ட வார்த்தைகள் உங்க வாய்க்குள் நுழைந்தால் 'ஜெயலலிதாவின் பேரன், திருமாவின் தம்பி' எண்டு சொல்லுங்கோ பொருத்தமாய் இருக்கும்!

புதைந்து போன பருவம் ..!


அம்மா என்றொரு உறவு
அவளை சுற்றி எமதுலகு
அதற்கடுத்தற் போல்  எதையும்
அலட்டிக்  கொள்ளாத பருவம்..!

நேற்று என்பதை மறந்து
நாளை என்பதை நினையாது
இன்றைய பொழுதிலே
சிந்தையை இழக்க வைக்கும் பருவம்..!

எம் சுமைகளையெல்லாம் களைந்து
பெற்றவர்  தோள்களில் சுமத்தி
"சுதந்திரம் பெற்றவர்களாய்"
உணர்ந்து  நின்ற  பருவம்..!

பள்ளி  நாட்கள்
பழகுவதற்கு இனிய நண்பர்கள்
கல்வி கசக்கும் போதும்
கலகலப்பு   இழந்துவிடாத  பருவம்..!

கோவில் கேணி
வாய்க்கால் வயல் என்று
எம் இனிமை பொழுதுகள்
பரந்து விரிந்து கிடந்த பருவம்..!

இறந்த காலம்
மீண்டும் நிகழாது என்றோ 
பிறிதொரு நாட்களில் 
நெஞ்சின் நினைவுகளாய் மீட்க
அன்றே புதைத்து வைத்த பருவம்..!

அக்தர் சச்சின் பற்றி சொன்னது சரியா?

கிரிக்கெட் உலகிலே மைதானத்தில் அன்று தொடக்கம் ஆக்ரோசமாக ஆடக்கூடிய அணிகளில் பாகிஸ்தான் அணிக்கு  தனி இடம் உண்டு. அதே போல பல்வேறு பட்ட திறமைமிக்க,  உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய பெருமையும் பாகிஸ்தான் அணிக்கு உண்டு. என்னை பொறுத்தவரை உலகின் நம்பர் வன் அணியாக இருக்கக்கூடிய அத்தனை தகுதியும் பாகிஸ்தான் அணிக்கு இருந்து வந்தது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு உள்ள மிக பெரிய குறைபாடு  அடிக்கடி சர்ச்சைகளில்  சிக்கிக்கொள்ளுதல். பாகிஸ்தான் அணியும் சர்ச்சைகளும் அண்ணன் தம்பி போல! உச்சத்தில் இருக்க வேண்டிய அணி இன்று கட்டெரும்பாய் தேய்ந்து போய் இருப்பதுக்கு காரணமும்  இது  தான். 

பாகிஸ்தான் அணிக்குள் எடுத்துக்கொண்டால் அன்று தொடக்கம் அதிகளவான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டவர்களில் அக்தருக்கு முதல் இடம் கொடுக்கலாம்.

அக்தரை  பொறுத்தவரை இரண்டு வகைகளில் பிரபலமானவர். ஒன்று அவரின் அசுர வேக பந்து வீச்சு மூலம், மற்றையது மைதானத்துக்குள்ளும் -வெளியிலும் நடந்துகொள்ளும் விதம். மிகத்திறமை வாய்ந்த ஒரு வீரரின் முழுமையான பங்களிப்பை பாகிஸ்தான் அணி  பெற்றுக்கொள்ள முடியாமைக்கு காரணம், அவர் தேடி சென்று வம்பை விலைக்கு வாங்கி அணி நிர்வாகத்தின் கோபத்தை கிளறுவதும், ஐசிசியால் அடிக்கடி தடைவிதிக்கப்படுவதும் தான்.

சர்ச்சைகளே உருவான அக்தர் இப்பொழுது  எழுதிய  கான்ட்ரோவெர்ஸியலி யூவர்ஸ் என்னும் சுயசரிதை புத்தகத்தில் சச்சின் ,ராவிட் பற்றி குறிப்பிட்டுள்ள விடயங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த இரு வீரர்களும் மேட்ச் வின்னர்கள் இல்லை என்று குறிப்பிட்டதோடு, சச்சின் தன் பந்தை கண்டு அஞ்சி நடுங்கினார் என்று  ஒரு பிட்டையும் தூக்கி போட்டுள்ளார்.  

சச்சின் ராவிட் மேட்ச் வின்னர் இல்லையா!
சச்சினை பொறுத்தவரை  ஆரம்பத்தில் சில போட்டிகளின் பின்னர் பலகாலமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவே களமிறங்கி வருகிறார். ஆக, ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மேட்ச் வின்னராக- இலக்கின் இறுதி வரை அணியை அழைத்து செல்பவராக  இருப்பது  சாத்தியமற்றது என்று அக்தருக்கு புரியாதது வியப்பாகவே  உள்ளது.  மற்றும்படி சச்சின் சிறந்த துடுப்பாட்ட வீரரா இல்லையா என்பதை அக்தர்  தீர்மானித்துவிட  முடியாது.
ஆனால் ராவிட் மேட்ச் வின்னர் இல்லை என்று சொன்னது அவரின் சிறுபிள்ளை தனமான-எந்தவிதமான தரவுகளையும் ஆராயாமல் எழுந்தமானமாக எழுதியுள்ளார் என்பதை தான் காட்டுகிறது! இதுவரை ராவிட் இந்திய அணிக்காக விளையாடிய 344  ஒருநாள் போட்டிகளிலே அவ்வணி 160 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இவ் வெற்றிகளின் போதான ராவிட்டின் துடுப்பாட்ட சராசரி 51 - இது ஒன்றே  போதும் ராவிட் மேட்ச் வின்னரா இல்லையா என்ற முடிவுக்கு வர! 

தூபமிடும் அப்ரிடி
அதே போல அக்தரின் இந்த பிரச்சனைக்கு தூபம் போடும் வகையில் பாகிஸ்தானின் சகலதுறை வீரர் அப்ரிடியும் தன் பங்குக்கு, சச்சின் அக்தரின் பந்தை எதிர்கொள்ளும் போது அவரின் கால்கள் நடுங்கியதை நேரில் கண்டேன் என்று மீண்டும் இந்திய ரசிகர்களை சூடேத்தும் விதமாக கூறியுள்ளார். சாதாரணமாக ஒரு துடுப்பாட்ட வீரர் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது கால்கள் முன் பின் நகரத்தான் செய்யும்- இது பயத்தால் ஏற்ப்பட்ட நடுக்கம் தான் என்று அப்ரிடியால் உணரமுடிகிறதென்றால் ஆச்சரியம் தான்! நான் நினைக்கிறேன் அப்ரிடிக்கு இந்திய அணி மீது வெறுப்பு வர காரணம், கடந்த ipl  போட்டிகளுக்கான ஏலத்திலே   பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டதாக  இருக்கலாம். ஒரு முறை அவரே  இதை நேரடியாகவே சொல்லி ஆதங்கப்பட்டிருந்தார்.
இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளிலே பாகிஸ்தானுடனான போட்டியில் சச்சின் அக்தர் பந்துவீச்சுக்கு கொடுத்த மரண அடியை மறந்து, அக்தரால் இவ்வாறு எழுத எப்படி  தான் முடிந்தது. இன்றும் அக்தர் பந்துக்கு ஆஃப் சைடில் சச்சின் அடித்த சூப்பர்  சிக்சர் கண் முன்னே  நிற்கிறது.  அந்த போட்டியிலே ஒரு கட்டத்திற்கு பிறகு அக்தரை பந்து வீச அழைத்த போது, அவர் சச்சினின் ருத்திர தாண்டவத்தை கண்டு அஞ்சி பந்து வீச மறுத்தாராம் என்று அந்த போட்டியிலே பாகிஸ்தான் சார்பாக விளையாடிவர்களில் ஒருவரான வாசிம் அக்ரமே குறிப்பிட்டுள்ளார்.

அன்று வக்கார் யூனிஸின் பந்தில்  தாடையிலே  அடிவாங்கி ரத்தம் சொட்ட, அதுக்கு சிறு  கட்டுப்போட்டுவிட்டு மீண்டும் மைதானத்துக்குள் வந்து துடுப்பெடுத்தாடியத்தில் இருந்து, கார்ட்னி வால்ஷ், கார்ட்லி ஆம்புரோஸ் போன்ற எத்தனையோ ஆபத்தான பந்துவீச்சாளர்களை எல்லாம் எதிர்கொண்டு தான் இன்று உலகின் மிக சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற நிலையை அடைந்தவர்.  அப்படிப்பட்ட சச்சினுக்கு அக்தர் எல்லாம் ஒரு பொருட்ட அல்ல.

அக்தரை பொறுத்தவரை அவரின் புத்தகம் விற்றுத்தீர்க்க வேண்டும். அவ்வாறு விற்று தீர்க்கப்பட வேண்டுமென்றால் அப்புத்தகத்திலே சர்ச்சைக்குரிய விடயங்களை எழுதி அதையே விளம்பரமாக வேண்டும்- அதை தான் செய்துள்ளார்.

ஆக, அக்தரை பொறுத்தவரை இப்பொழுது இந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பகிரங்க மன்னிப்பு கோர  வேண்டும். இல்லையெனில் அவர் இந்தியாவுக்குள் நுழையும் போது கல்லெறி மட்டுமல்ல, செருப்பெறி விழுவது கூட தவிர்க்க முடியாதது தான்!