காதிலே ஹெட் ஃபோனை மாட்டிக்கொண்டு, மனசுக்கு இனிமையான பாடலை கேட்டுக்கொண்டு, பஸ்ஸில் ஜன்னலோர பயணம் எனக்கு மிகவும் அலாதியானது. என்ன தான் மனசு பாரமாய் இருந்தாலும் அந்த தருணங்களில் எல்லாம் மறந்து போய்விடும்.
அன்றும் அப்படி தான், சில இடைக்கால இனிமையான பாடல்களை ஹெட் ஃபோன் வழியாக கேட்டு ரசிச்சுக்கொண்டே, பஸ் ஏறுவதற்காக தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட அரை மணித்தியால பயணம் மேற்கொள்ள வேண்டும். எனினும், வழமைக்கு மாறாக அன்று பஸ்ஸும் என்னை கால் கடுக்க நிற்க வைக்காது வேளைக்கே வந்து விட்டது.
உடனே நம்மூர் பழக்கம் போல அடித்து முந்திக்கொண்டு ஏறாமால், எல்லோரும் ஏறி முடிந்த பின்னரே நானும் ஏறினேன். காரணம், தள்ளுப்பட்டுக்கொண்டு ஏறினால் வெள்ளைக்காரன் எதோ ஒரு வித்தியாசமான ஜந்து போல பார்ப்பான் என்பது முன்னைய அனுபவம்.
ஏறியவுடன் அமருவதற்கு வசதியாக அருகிலே ஒரு இருக்கை கிடந்தது. இருந்தும், ஜன்னலோர இருக்கையில் அமர வேண்டும் என்ற என் அவா, சற்று ஒரு அடி முன்னுக்கு சென்று ஒரு தடவை கண்களாலே பஸ்ஸின் ஜன்னலோர இருக்கைகளை நோட்டம் விட வைத்தது. ஒன்றும் அகப்படவில்லை.... சரி, கிடைத்த இருக்கையிலே உட்காரலாம் என்று முன்பக்கம் திரும்பாமலே அதே ஒரு அடி பின்னெடுத்து இருக்கையில் அமர முற்பட்டேன்; எதோ முட்டுப்பட்டது, சட்டென்று திரும்பி பார்த்தால் ஒரு ஆபிரிக்கன், கொல வெறியோட என்னை பார்த்தான். நான் உட்கார போனது அவன் மடியில்...
நான் தான் முதலில் வந்தேன் என்று அவனுடன் வாக்குவாதம் செய்யலாம் தான். ஆனால், அடி வாங்க உடம்பில தெம்பு வேணுமே!
இருக்கிறதை விட்டு பறக்க ஆசைப்பட்ட கதையாக அதுவும் போச்சு. சரி போனால் போகட்டும், நமக்கு தான் இரண்டுகால்கள் இருக்கே, நின்றால் என்ன தேஞ்சா போய்விடும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு பஸ்ஸின் பின்பக்கமாய் போய் நின்றுகொண்டேன்.
பஸ்ஸும் புறப்பட, சற்று நேரத்திலே மீண்டும் ஹெட் ஃபோன் வழி இனிமையான பாடல் ஒன்றுடன் ஒன்றித்துவிட்டேன். என்பார்வைகள் பஸ்ஸின் கண்ணாடி வழியே காட்சிகளை தரிசித்தாலும், மனம் பாடலிலே ஒன்றித்துவிட்டது.
இவ்வாறு, சிறிது நேரம் போனதே தெரியாது சென்று கொண்டிருக்க, எதோ ஒரு சைகை, என் நினைவுகளை அந்த பாடல்களில் இருந்து மீட்டு அதன் பக்கம் திருப்ப வைத்தது.....
ஒன்றல்ல, இரண்டு பெண்கள்! ஒன்று குண்டாக, மற்றையது ஒரு மெலிந்த பெண்ணு..!
'என்ன..' என்றேன் முகபாவனையில்!
அதில், மெல்லிய பொண்ணு என்னை நோக்கி 'காதில இருக்கிற ஹெட் ஃபோனை கழட்டு' என்பது போல சைகையில் சொன்னது.
"என்ர காது, என்ர ஹெட் ஃபோன், கழட்ட சொல்ல நீ யார்..?" என்று நானும் கேட்கலாம் தான். ஆனா, கேட்டது ஒரு பெண்ணாச்சே. சரி என்று நானும் கழட்டி விட்டு, 'என்ன' என்று கேட்பது கணக்காய் மீண்டும் தலையை மேல் நோக்கி ஆட்டினேன்.
யாருக்கு தெரியும் இப்பிடி ஒரு பிட்டை தூக்கி போடப்போறாள் என்று!
"நீ அழகாய் இருக்காய்" என்றாள் அந்த பொண்ணு, அத்தனை பேர் சூழ்ந்திருக்க... (அவர்கள் பாசையில்)
எனக்கோ ஷாக்காய் போச்சு. நெளிந்துகொண்டே சுற்றி உள்ளவர்களை தடவை பார்த்துவிட்டு, "என்ன ..?" என்றேன் மீண்டும் ஒருதடவை, .....புரியாதவன் போல!
" நீ அழகாய் இருக்காய்" என்றாள் மீண்டும் சிரித்துக்கொண்டே..
அது தான் தாமதம், உடனே வெள்ளை உடையிலே அழகு தேவதைகள் என்னை சுற்றி கும்மியடிப்பதாக என் நினைவுகள் சூழ்ந்து கொண்டது, சிறகுகள் முளைத்து வானத்தில் பறப்பது போல உணர்ந்தேன்! என்று பொய்யெல்லாம் சொல்லமாட்டேன். காரணம் அந்த இரு பெண்களும் தான்.
மேற்கத்தைய நாட்டவர்களை பொறுத்தவரை, போடும் உடையில் இருந்து, நடு ரோட்டில் நின்று முத்தம் கொடுப்பது வரை ஆணுக்கும் பெண்ணும் ஒரே அளவு சுதந்திரம் கொ(எ)டுத்திருப்பார்கள்; நல்ல விடயம் தான். ஆனால், இந்த இரு பெண்களும் அதையும் ஒரு படி தாண்டி, அந்த ஓரிரு நிமிடங்களில் நான் கவனித்த செயற்பாடுகள் ,குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று எவனோ சொல்லி வைத்ததை என்னுள் நினைவுபடுத்திக்கொண்டிருந்தது .
அந்த மெல்லிய பெண், தன் இரண்டு கைகளையும் பஸ்ஸில் நிற்பவர்கள் பலன்ஸுக்காக(balance) பிடிக்கும் கம்பிகளிலே பிடித்து அடிக்கடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டே நின்றாள். மற்றைய குண்டுப்பெண் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் இரண்டு கால்களையும் தூக்கி அருகில் இருக்கும் இருக்கையில் போட்டு, அந்த இருக்கையில் இருந்தவனை ஒரு வழி பண்ணுறேன் என்றே நின்றாள். பாவம்! அந்த இருக்கையில் இருந்தவன் கூட என்னை போல் ஒரு அப்பிராணி போல!
என்ன தான் இருந்தாலும், ஒரு பொண்ணு , அதுவும் கிட்டத்தட்ட பதினேழு பதினெட்டு வயசு மதிக்கத்தக்க பொண்ணு ஒருவனை பார்த்து அழகாய் இருக்காய் என்று சொன்னால் எவன் தான் அந்தரத்தில் பறக்கான்! எனக்கும் 'லைட்டா' அதே உணர்வுதான்! மனசுக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பறந்த பட்டாம் பூச்சிகளை அப்படியே அமத்தி வைத்திருந்தேன். எதையுமே என் முக பாவனையில் காட்டிக்கொள்ளாதவனாய், மீண்டும் ஹெட் ஃபோனை தூக்கி காதிலே மாட்டினேன்.
எனினும் அந்த பொண்ணு 'ஹெட் ஃபோனை மாட்டாதே உன்னோடு கதைக்கணும்' என்றது மெதுவாக! இருந்தும், நான் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை........................ என்று சொல்வதை விட வாங்கிக்கொள்ளாத போல நடித்தேன்.
'அப்படி என்ன தான் கதைக்கப்போறள்' என்று எனக்குள்ளும் ஆவலாக இருக்காதா என்ன? (உணர்வுளை அடக்கிக்கொள்ள நான் என்ன நித்தியானந்தா சாமியா!) அதால ஹெட் ஃபோன் வால்யூமை மிக மிக குறைத்துவிட்டேன். அவளும் விடுவதாக இல்லை. என் அருகிலே வந்தாள். என்னை தன் பக்கம் திரும்பச்சொல்லி முதுகில் தட்டி கூட பார்த்தாள். இருந்தாலும் நானும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. காரணம், பஸ்ஸுக்குள் இருந்தவர்கள் பலர் எம்மையே கவனித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கோ வெக்கமாய் போச்சு! என் பார்வையை பஸ்சுக்கு வெளியே செலுத்தி அந்த பெண்ணை சற்றும் பொருட்படுத்தாதவனாக நின்றுகொண்டிருந்தேன்.
சிறிது நேரத்தில ஒரு பஸ் தரிப்பிடம் வர, மேலும் சிலர் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள். பஸ்சும் புறப்பட, கூடவே அந்த பெண்ணின் பேச்சையும் காணோம். எங்கே........ என்று சுற்றும் பார்த்தால், சற்று முன் பஸ்ஸில் ஏறிய ஒரு சைனிஸ்காரனின் முதுகை தட்டிக்கொண்டிருந்தாள். அவனும், யாரோ ஆண் சண்டைக்காக தன்னை தட்டுகிறான் என்று நினைத்தானோ என்னமோ!, சற்று கடுப்புடனே திரும்பினான்.
உடனே அந்த பொண்ணும், அவன் பேச்சை எதிர்பார்க்க முன்னமே அதே சிரிப்போடு சொன்னாள் "நீ அழகாய் இருக்காய்......."
கடுப்போடு திரும்பியவன் முகத்தில் ஆயிரம் வோல்ட் வல்பு, எனக்கோ மெயின் பியூஸ் போயிட்டுது.
இருந்தாலும், அந்த சயினிஸ்காரன் ரொம்பவே ஸ்பீட்டு ......!!