முகநூலில் உள்ளவர்களது ஸ்கைப் முகவரியை கண்டறிய ..

வணக்கம் நண்பர்களே!
இன்று எனக்கு தெரிந்த ஒரு சிறு தொழில் நுட்ப தகவலை  உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இது பலர் அறிந்து இருக்கலாம். ஆனால் இந்த பகிர்வால்  ஓரிருவர் புதிதாக அறிந்து கொண்டாலும் சந்தோசமே.

நாம் முகநூலிலே பல நண்பர்களுடன் தொடர்பில் இருப்போம். ஆனால் அவர்களில் நாம் விரும்பும் நபரோடு முகம் பார்த்து கதைக்க விரும்பினால், இலகுவாக தொடர்பு கொள்ள ஸ்கைப்பை தான் அனைவரும் விரும்புவோம். ஆனால் முகநூலில் இருக்கிற அனைவரும் தங்கள் ஸ்கைப் முகவரியை முகநூலில் சுயவிபர குறிப்பில் காட்சிப்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆகவே அதை எவ்வாறு பெறுவது?  இதற்கு  ஸ்கைப்பிலே வசதி  உள்ளது.

நீங்கள் செய்யவேண்டியது,  ஸ்கைபிலே சென்று  contacts >import contacts ஐ சொடுக்குங்கள்.  அதன்  பின்னர் கீழ் குறித்த படத்தில் உள்ளவாறு தோன்றும்.


இதிலே, உங்கள் முகநூலின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கொடுத்து import என்பதை அழுத்துங்கள். சற்று நேரத்திலே உங்கள் முகநூலில் தொடர்பில் உள்ளவர்களது மின்னஞ்சல் முகவரிகளுடன் ஸ்கைப் முகவரியையும் வெளிக்காட்டும். (முகநூலுக்கும், ஸ்கைபுக்கும் ஒரே மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்துபவர்களது விபரங்கள் (ஸ்கைப் முகவரி) மட்டுமே வெளிக்காட்டும்.)


ஸ்கைபிலே இந்த வசதி இருப்பது அநேகருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால், இப்படி ஒரு வசதி இருக்கு என்பதை இது வரை அறியாதவர்களும் இருப்பார்கள். அப்புறம் என்ன! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்று என் மின்னஞ்சலுக்குள் ஜெர்மனியில் இருந்து யாரோ ஒரு நபர் திருட்டுத்தனமாக உள் நுழைந்திருந்தார். எதற்காக உள்நுழைந்தார் என்று தெரியவில்லை. ஆனால், நான் எனது பிளாக்கருக்கான மின்னஞ்சலை  பொதுவில் யாருக்கும் தெரியப்படுத்தியதில்லை. பொதுவில் தொடர்பு கொள்வதற்கு வேறு ஒரு மின்னஞ்சலை தான் பாவிக்கிறேன். அந்த மின்னஞ்சலுக்குள் தான் உள் நுழைந்திருந்தார்.   உடனே எனக்கு வார்னிங் வர நான் உசாராகிவிட்டேன். இது தான் அந்த ip

தயவு செய்து நண்பர்களே உங்கள் பிளாக்கருக்கு நீங்கள் உள் நுழைவதற்காக பயன்படுத்தும் மின்னஞ்சலை பொதுவில் விடாதீர்கள். பிறருடன் தொடர்பு கொள்வதற்கு பிறம்பாக ஒரு மின்னஞ்சலை பாவித்துக்கொள்வதே மிகவும் பாதுகாப்பானது.

"என் தாய்க்கு.." நூறாவது பதிவு!

பதிவுலகுக்கு எதற்கு வந்தேன், எப்படி வந்தேன்  என விவரமாக சொல்லி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால் 'பொழுது போகவில்லை வந்தேன்'. (அட நம்புங்கப்பா!)  தனிமை என்பது எவ்வளவு கொடுமை! அதை இரண்டு வருடங்களாக அனுபவித்த எனக்கு, இன்று என் நண்பன், உறவு, காதலி என்று எல்லாமே  இந்த பதிவுலகும், என் பிளாக்கரும் ஆகிப்போச்சு! இங்கு வந்ததால் நான் அறிந்து கொண்டவை பல, இழந்து கொண்டவை என் பல இரவுகள் தூக்கம். உண்மையை சொல்லவேண்டும் என்றால் இன்னும் சில கிழமைகளில், மாதங்களில் பதிவுலகில் இருந்து காணாமல் போய் விட கூடிய சந்தர்ப்பம் உண்டு, ஆனால் மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையுடன்...

தொன்னூற்று ஒன்பதாவது பதிவு வரை என்னோடு கூடவந்த என் தாய் மொழிக்கு  இந்த  நூறாவது  பதிவு.

ன்னை வர்ணிக்க
வார்த்தைகள் தேடி தோற்றுப்போகிறேன். 
தேடிப் பொறுக்கும் வார்த்தைகளையும் 
கோர்த்தும் சேர்த்தும் 
இயலாமையால் சோர்ந்துவிடுகிறேன்;
பாவலர்கள் பலர் போற்றிய உனக்கு ,இந்த 
பாலகன் நான் எம்மட்டு? 
  அன்னைக்கடுத்து நான்
  அதிகமாக நேசிப்பது உன்னையே
  அதனால் தான்,
  நான் இவ்வுலகில் சுவாசிப்பதும், வாசிப்பதும்.

  "அம்மா" என்ற  சொல் முதல்
  என் நாவை  அரவணைத்துக்கொண்ட
  தாய் நீ - அதன் பின்
  என் பேச்சிலும், மூச்சிலும்
  சந்தோசத்திலும், வலியிலும்
  உன்னையே உணர்ந்து கொள்கிறேன்.

  உன் பெருமையை
  உன் புகழை
  உன் இனிமையை
  என்னவென்று சொல்வேன்!

  ஒளவை, பாரதி, வள்ளுவன் என்று- உனை
  ஆலமரமாக்கி  அதன் ஆணிவேரகிப்போனவர் பலர்.
  நாவலர், சேக்கிழார்  போன்று
  உன் விழுதுகளாக நின்றவர்களும் உளர்.

  இன்று வேற்று மொழி  கதைப்பதையே
  வீரமாக கொள்ளும்  நம்மவர்கள் பலர்,
  வேற்றுமொழியில் இருந்து வந்து
  தமிழ் மொழியே செம்மொழி  எனக்கண்டு
  பாண்டித்தியம்  பெற்ற
  'வீரமா முனிவர்'களும் உளர்.

  இலக்கிய  உலகிலும்
  இல்லற  வாழ்விலும்
  உன்னால் பிழைத்துக்கொள்பவர்கள்  பலர்.
  அரசியல் உலகிலும், அடுத்தவனை
  அடிமை கொள்ள எண்ணும் அராஜக வாழ்விலும்
  உன்னை வைத்தே பிழைப்பு  நடத்துபவர்களும் உளர்.


  இன்று  இலத்திரனியல்  உலகில்
  இணையம்  என்ற கடலில்
  உன் கரம் பிடித்து  கரை சேர துடிக்கும்
  கப்பல்களாக பலர் - அதில்
  சிறு ஓடம்  நான்
  உன்பால் சிரம்  தாழ்த்துகிறேன்!

  இது வரை என்கூட பயணிக்கும் உறவுகளுக்கும், எனக்கு பின்னூட்டமிடும் உறவுகளுக்கும் மிகவும் நன்றிகள். 
                                                    

  நட்புடன் 
                                                    கந்தசாமி.


  'புதிய புதிய யாழ்ப்பாணம்,' தொடங்கப்போகிறேன். ஆதரவு தாரீர்!

  நேற்று நள்ளிரவை தாண்டிய நேரம், சுமார் இரண்டு மணி  இருக்கும். இரவெல்லாம் கம்பியூட்டரோட இருந்த அசதியால் ஆழ்ந்த உறக்கத்தில இருந்திருந்தேன். அப்பொழுது திடீரென்று "டாங்" என்று  எழுந்த சத்தம், என் நித்திரையை குழப்பி எழ வைத்தது. என்னடா! என்று நானும் அடிச்சி தடவி எழுந்தா, என்ர  ரூம் முழுக்க ஒரே மல்லிகைப்பூ வாசம். 'நான் தான் எந்த மல்லிகைபூ சென்ட்ரும்  பாவிக்கிறதில்லையே......!' எனக்கோ நடுக்கமாய் போச்சு.  அப்பொழுது  தான் ஒரு எலி, நான் நேற்று இரவு தண்ணீர் குடித்துவிட்டு வைத்திருந்த கிளாஸை தட்டி விழுத்திவிட்டு  யன்னல் பக்கமாய் தாவிக்கொண்டிருந்தது. 
  அப்பாடா! என்று நானும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, மீண்டும் படுக்கவென்று  சரிந்தால், என்  கட்டிலுக்கு அருகில் உள்ள ஜன்னலோரம் எதோ அசைவு கண்டு திரும்பினேன்.

  எதோ ஒரு உருவம்!
  ஐயோ.,
  ஐயோ பேய் ......! பொம்புள பேய் ...! என்று நானும்  அதிர்ச்சியோடு அலறத் தொடங்கினேன். அது தான் தாமதம், உடனே  அந்த உருவம் மேலும் ஜன்னலுக்கு அருகில் வந்தது. என்னை கண்டுகொண்டவுடன்  'சத்தம் போடாதே,  நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்' என்றது. 
  நானும் பயத்துடனே "சரி" என்றுவிட்டு, அந்த உருவத்தை சற்று உற்று பார்த்தேன். அது எங்கட செத்துப்போன தாத்தா போலவே  இருந்தது.  சற்று நடுக்கத்துடன், மனசிலே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு   "நீங்க செத்துப்போன  என்ர  தாத்தா தானே"  என்று  கேட்டேன்  அதை நோக்கி.. .  

  "இல்ல,  நான் உன் தாத்தா இல்ல.  உன்ர  தாத்தான்ர அப்பா" என்றது.

  அப்போ,  நீங்க என்ர  தாத்தா  போல  இருக்கீங்களே!  என்று கேட்டேன் நான்.

  அப்பிடி இல்ல கந்தசாமி! எனக்கு பிறந்ததால, உன்ர தாத்தா தான் என்னை போல இருந்தாரு, என்று சொல்லி, தன்னை புத்திசாலி என்று காட்டிக்க முனைந்தது  அந்த  உருவம். 

  நீ என்னை தாத்தா என்றே கூப்பிடலாம் என்று சொல்லிவிட்டு  "அதுசரி, முதலில் பேய் என்று தானே  கத்தினாய், சற்று  பிறகு ஏன்  பொம்பிள பேய் என்று கத்தினாய்? " என்று கேட்டர்  ஆவலாய்.  
  'இல்லை தாத்தா,  நள்ளிரவில மல்லிகைப்பூ மணம் வீசினா அது பொம்பிள பேயாய் தான் இருக்கும் எண்டு நான் சினிமாவில பார்த்திருக்கன். அது  தான் அப்படி கத்தினான்' என்றேன் நான்.  என் புத்திசாலித்தனத்தை பார்த்து பூரிப்படைந்த  தாத்தா,  அதை   பெருமூச்சாக   வெளிக்காட்டிக்கொண்டார்.

  'தாத்தா!  இந்த நேரத்தில அங்க தூங்காமல் எதுக்கு என்னை பார்க்க இவ்வளவு தூரம் வந்தனி,  என் மீது உனக்கு அவ்வளவு பாசமா'  என்று கேட்டேன்  நான்.
  ஓம் கந்தசாமி, நீ என்ர மகன்ர, மகன்ர, மகனாச்சே. என்ர வம்சத்தை விருத்தி செய்யப்போறவனாச்சே! அது தான், கொஞ்ச நாளாய் விண்ணுலகில் விடுமுறை வாங்கி உன்னை விடுப்பு பார்க்க,  உன் பின்னாலே சுத்திக்கொண்டு இருக்கிறன்'  என்றவர்,  தொடர்ந்து;
  "நாலு கழுத வயசாச்சு, இன்னமும் உனக்கு பொறுப்பு வரேல்ல! சும்மா பொடியளோட சேர்ந்து ஊர் சுத்துகிறியே, ஒரு வேலைக்கு போகணும் என்ற எண்ணமே   இல்லையா  உனக்கு...?"  என்றார்  என்  மீது  பெரும் அக்கறை கொண்டவராக..

  'எனக்கும் வேலைக்கு போகணும் என்று ஆசை தான் தாத்தா! ஆனா, அது நோகாத வேலையாய் இருக்கணுமே'  என்றேன் நான். 
  அது என்னடா நோகாத வேல! கொஞ்சம் விளக்கமா சொல்லேன்ரா கந்தசாமி என்றார்  தாத்தா.
  அது தான் தாத்தா  'இருந்த இடத்திலே இருந்து கஸ்ரப்படாம, ஏதாவது வேலை என்றால் எனக்கு ஒக்கே தான்'  என்றேன்.
  அப்போ நீ என் கூட வா,  உனக்கு நான் அப்படி ஏதாவது வேலை எடுத்துத்தாறேன் என்றார் தாத்தா!  
  சரி  தாத்தா! என்று நானும் அப்பாவித்தனமாய் தலையை ஆட்டிவிட்டு ... திடீரென்று   நினைவுக்கு வந்தவனாக  "என்ன  தாத்தா நக்கலா,  நீ தான் எல்லாம் அனுபவிச்சுவிட்டு என்பது வயசில போய்விட்டா. ஆனா, எனக்கு இப்ப தான் இருபத்தி நாலு வயசு. இன்னும் கல்யாணம் காட்சி கூட பார்க்கல, அதுக்குள்ளே  என்னை உன் கூட   கூப்பிடுறியே  இது  நியாயமா?"  என்று கடிந்து கொண்டேன்.  
  கோவப்படாத  கந்தசாமி,   நான் சும்மா தான்   சொன்னேன். சரி,  அப்போ  எப்படி தான் நோகாத வேலை தேடுறது? என்று தன் கையை தூக்கி நாடி மேலே வைத்து  ஜோசிக்க  தொடங்கினார்  தாத்தா!

  'ஆ,  ஒரு ஐடியா! உன்கிட்ட தான் கம்பியூட்டரும், இணையமும் இருக்கே.  நீ ஏன் ஒரு இணையத்தளம் தொடங்கக்கூடாது? பத்து டொலர் கட்டினா இப்ப சொந்தமா ஒரு  டொமைன்  எடுத்திடலாமே....'  என்றார் தாத்தா.

  என்ன தாத்தா விளையாடுறியா! அதுக்கு தான் எழுதத் தெரிஞ்சிருக்கணுமே. பள்ளிக்கூட காலத்தில நான் முழுசா ஒரு கட்டுரை எழுதியதே கிடையாது. இப்படி தான், ஒரு முறை  ரீச்சர் கோவிலை பற்றி ஒரு கவிதை எழுதச்சொன்னா....

  என்ன, எழுதினியா நீ ?- ஆர்வக்கோளாறில் தாத்தா...

  ஓம் தாத்தா,  முதல் நாள்  தான்    அஜித்தின்ர  'ஜி'   படம்   பார்த்திருந்தன்.  அதில   ஒரு   பாட்டு வரும்  தானே  "டிங் டாங் கோவில் மணி  கோவில் மணி நான் கேட்டேன்" என்று..  அந்த பாட்ட  அச்சு  பிசகாமல் எழுதி கொடுத்தன். ரீச்சர்  பிரின்ஸுபால்'ட   என்னை   இழுத்துப்போகாத   குறை  தான்....
  இந்த லட்சணத்தில நான் எங்க,  இணையத்தளம் தொடக்கி ...எழுதி....!

  'அட போடா கந்தசாமி!   உனக்கு இன்னமும் விவரம் பத்தல. இப்ப இணையத்தளம் தொடங்கிறத்துக்கு பெருசா எழுதப்படிக்கவெல்லாம் தேவையில்ல.  ஒரே ஒரு தகுதி மட்டும் இருந்தா போதும்!' என்று சொல்லி சிரித்துக்கொண்டார்  தாத்தா.

  அது என்ன  தகுதி  தாத்தா?

  அது தான்ரா,  கொப்பி  பண்ணி  பேஸ்ட் பண்ணுறது.... உனக்கு தெரியாதா என்ன?

  ஓம் தாத்தா! அதுவும்  ஈசியான வேல தான்.  ஆனா, எவனாச்சும் கண்டு பிடிச்சா நாறடிச்சுடுவானே! என்றேன் ஆதங்கத்துடன்.
  உனக்கு தெரியாது கந்தசாமி! இப்ப இணையத்தளம் வச்சிருக்கிறவங்கள்  எல்லாம் உந்த வலைப்பூ வச்சிருக்கிற ஆக்களின்ர பதிவுகளை தானே கொப்பி பண்ணி போடுறாங்களாம். 

  இதால ஒரு பிரச்சனையும் வராதா தாத்தா? 

  இல்ல கந்தசாமி!   கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு இணைய தளத்தில பார்த்தன், "டாவின்ஸ் கூர்ப்பு விதியை கொப்பி அடிக்கினம், வள்ளுவற்ரையையும் பாரதியின்ரையையும் கொப்பி அடிக்கினம், ஆகவே நாங்களும் அடுத்தவேன்ர எழுத்துக்களை கொப்பி அடிப்போம்" என்று அரைவேக்காட்டுத்தனமாய் ஒரு இணையத்தளக்காரர் தங்கட இணையத்தளப்பக்க மூலைல எழுதி வச்சிரிக்கினம். அது போல நீயும் உன்ர இணையத்தளத்தில எழுதி வைக்க வேண்டியது தானே.


  ஓம் தாத்தா,  நல்ல ஐடியா தான்!


  அது மட்டுமில்ல கந்து, நீ உந்த கொப்பி பண்ணிய செய்திகளுக்கு தலைப்பு வைக்கிறதிலையும் கவனமாய் இருக்கணும். ஏனெண்டால், நீ இணையத்தளம் தொடங்கினாப்பிறகு, யாழ்ப்பாணத்தின்ர கலாச்சார காவலர்களில்  நீயும்  ஒருத்தனாய்  ஆகிடுவாய். 


  அப்பிடியா தாத்தா..? பெரிய பொறுப்பாச்சே !


  அதோட, நீ  எப்போதும் கையில காமராவோட தான் இருக்க வேணும். முக்கியமா,  பஸ்சுகளில ஆணும் பெண்ணும் முட்டுப்பட்டாலோ, இல்லை  ஆட்கள் இல்லா  தெருக்கள், பூங்காக்களில ஒரு ஆணும் பெண்ணும் கதைச்சுக்கொண்டு நின்றாலோ  உடனே படம் பிடிச்சு 'யாழ்ப்பாணத்தில் கலாச்சார சீர்கேடு' என்ற தலைப்பில,  அந்த படத்தை உன்ர இணையத்தளத்தின் முன் பக்கத்தில பிரசுரிக்கணும்.


  சரி தாத்தா.  அப்புறம் 'தமிழன்' என்ற கோசம் ஏதாவது.....??


  உலகம் புரியாத பயலடா நீ கந்தசாமி!  நேற்று இப்படி  தான், ஒரு  பிரபல தமிழ் இணையத்தள பக்கம் போனேன். அதில ஒரு செய்தி இருந்திச்சு  "நீங்கள் மானத்தமிழன்  என்றால் இதை வாசியுங்கள்" என்று! உடனே அடிச்சுப் பதைச்சு நானும் அதை வாசிச்சேன், வாசிச்சு முடிச்சதும் அந்த இணையத்தளத்துக்கு ஒரு இ-மெயிலும் அனுப்பினேன், "நான் உங்கட செய்தியை படிச்சிட்டேன். ஆகவே, தயவு செய்து என்னையும் மானத்தமிழனாய் ஏற்றுக்கொள்ளுங்கள்"  என்று.. ஏனெண்டால், நமக்கு மானம் தான் முக்கியம் பாரு...! அது சரி, நீ வாசிச்சனியா கந்தசாமி  அந்த செய்தியை?


  வாசிக்கவில்லையே  தாத்தா...! 'அப்போ...... நான் மானத்தமிழன் இல்லையா?' அழத்தொடங்கினேன் நான்.

  உடனே என் நிலைமையை கண்டு பரிதாபப்பட்ட தாத்தா 'கவலைப்படாத கந்தசாமி. அடுத்த தடவ இப்படி ஒரு செய்தி வந்தா உடனே  உனக்கு தகவல் அனுப்புகிறன். நீயும்  ஓடிப்போய் வாசிச்சு, உன்னையும் மானத்தமிழனாய் உறுதி செய்து கொள்!' என்றார்.
   நன்றி தாத்தா.  அது சரி,  நான் தொடங்க இருக்கிற  இணையத்தளத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்? என்று கேட்டேன் ஆர்வத்தோடு.


  "ஏதாவது  புரட்சிகரமான பெயராக இருக்கணும்.....என்ன வைக்கலாம்....." என்று சொல்லிக்கொண்டே, மீண்டும் தன் கையை தூக்கி நாடி மேலே வைத்து  ஜோசிக்க  தொடங்கினார்  தாத்தா!


   "ஆ..    புதிய புதிய யாழ்ப்பாணம்  என்று  பெயர்  வைக்கலாம் கந்தசாமி!" என்றார், எதோ பெரிய கண்டுபிடிப்பு நடத்திய சந்தோசத்தை முகத்தில் காட்டியவாறு.

  "ஏன் தாத்தா, இரண்டு தரம்  'புதிய' என்று  வரணும்? புதிய யாழ்ப்பாணம் என்று பெயரை வச்சு,  நியூ ஜப்னா என்று  இங்கிலிசிலையும்  வச்சாத்தான் என்ன?" புரியாதவனாக கேட்டேன் நான்

  அது வேண்டாம் கந்தசாமி!  நீ தாத்தா சொன்ன போல பெயரை வை. என்றுவிட்டு, எதோ ஒரு அழைப்பு வரவே கையில் வைத்திருந்த கருவியை தூக்கி காதில் வைத்தவர், "ஹலோ சொர்க்கத்திலிருந்தா" என்று கதைக்க தொடங்கினார்.  சிறிது நேரத்தின் பின்  "இதோ நான் உடனே  வருகிறேன்" என்று பேசி முடித்தவர்.  'கந்தசாமி எனக்கு அழைப்பு  வந்திருக்கு நான் சொர்க்கத்துக்கு  போகணும்  மீண்டும் சந்திப்போம். உனக்கு  ஜெயம்  உண்டாகுக ' என்று சொல்லிக்கொண்டே கிளம்ப முற்பட்டவரை மறித்த  நான்..

  "தாத்தா ஒரு நிமிஷம்!"

  என்ன கந்தசாமி?

  "நீ.........  சொர்க்கத்திலா இருக்கா..?"

  கடற்கரையில் அவமானப்பட்ட நபர்!


  நீண்டநாள் எனதாசை
  கரைநகரிலுள்ள
  "கசூரினா பீச்"க்கு
  செல்ல வேண்டுமென்று,
  ஒரு நாள் சென்றேன்
  தனியாக..!

  நீண்ட நேரம்
  நீருக்குள் கிடந்து
  மீண்டும் கரை வந்த போது..

  பூவரசு நிழலின் கீழ்
  கறுத்த குடை ஒன்று
  ஆட்கள் அற்று
  அநாதையாக விரித்து கிடந்தது!

  சிறிது நேரத்தில்
  அங்குமிங்கும் ஆடிய குடை,
  காற்றுக்கு தான் ஆடுகிறது! என
  கவனித்த போது
  அதன் மறைவில் ஒரு உருவம்...

  ஆர்வக்கோளாறில்
  கிட்டப்போய் எட்டிப்பார்த்தேன்...

  ஐயோ!

  ஒன்றல்ல! ஒரு சோடி,
  எதோ "ஆராய்ச்சி" பண்ணீனம்!
  என்னை கண்டதும்
  "இங்கிதம் தெரியாதவன் நீ"
  எண்டு ஏசுகீனம்!

  பேசாமல் வந்துவிட்டன் நான்,
  இருந்தும்..,
  கரைக்கு வந்ததும்
  இருப்புக்கொள்ளாது
  மீண்டும் கடலை தேடும்
  அலைகள் போல,
  'சின்ன பொடியன்' எனக்கு
  இன்னும் ஒருக்கா
  எட்டிப் பாக்கணும் போல....!

  என்ன செய்ய,
  மீண்டும் என்னை
  ஏசுவீனமே!
  'இங்கிதம் தெரியாதான்'
  எண்டு...!!

  பின் குறிப்பு ;- என்றோ எழுதியது, வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே!  கலாச்சார காவலர்களே! இதில் உங்கள் கற்பனை குதிரையை அவிழ்க்காதீர்கள்;-) 


  சினிமா /வசதியான முதியோர் இல்லம்... புரியல்லீங்க..

  சினிமா நடிகரோ, கிரிக்கட் வீரரோ ஒருவரின் திறமை மீதான ரசிப்புத்தன்மைக்கும் ,தனி மனித வழிபாடுக்கும் என்ன தான் வித்தியாசம்!  ஒரு ரசிகனின் ரசிப்புத்தன்மை எவ்வாறு தனி மனித வழிபாடாக மாறுகிறது!  நான் நினைக்கிறேன்,  ஒருவரின்  திறமை மீதான  ரசிப்புத்தன்மை அளவுக்கு அதிகமாகும் போது  அதுவே தனிமனித வழிபாடாக மாறிவிடுகிறதோ!! ... 

  காரணம்,  இவ்வாறு ரசிகர்களை-அபிமானிகளை கொண்டிருப்பவர்கள்  தவறான நடவடிக்கையில் ஈடுபட்டாலும்,  தவறான கருத்துக்களை கூறினாலும் அதை நியாயப்படுத்துகிறான் தன்னை "ரசிகன்" என்று சொல்லிக்கொள்பவன். மீறி  யாராவது விமர்சித்தால் வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு சண்டைக்கு வருகிறான்.  உச்சகட்டமாக,  'தன் நாயகன் விமர்சனங்களுக்கு அப்பாற்ப்பட்டவர்' என்று கூட சொல்கிறான். 
  ஏன் இப்படி...!

  தான் ரசிக்கும் ஒருவர் எவ்வாறான  கருத்துக்களை  சொன்னாலும், எவ்வாறான செயல்களை செய்தாலும் அவற்றை  தன்கருத்தாக,  தன் செயலாக  எண்ணி   நியாயப்படுத்துவதற்கு  ரசிகனின் ரசிப்புத்தன்மை தாண்டிய  தனி மனித வழிபாடு தான்  உந்து சக்தியாக அமைந்துவிடுகிறதா..?? ஒண்டுமே புரியல்லீங்க!!  இந்த விடயத்தில் பல தடவைகள் நண்பர்கள் மத்தியில் முரண்பட்டிருக்கிறேன். 

  நான் கூட சச்சினின் ரசிகன். அதாவது, சச்சினின் துடுப்பாட்ட திறமையை ரசிக்கும் ஒரு ரசிகன்.  ஆனால், யாராவது சச்சினை பற்றி விமர்சித்தால்  கோபம் வருவதுமில்லை, கண்ணை மூடிக்கொண்டு சென்று சண்டை பிடிப்பதுமில்லை. விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்று யாரும் இல்லை தானே!!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  பொதுவாகவே நான் தொலைக்காட்சி நிகழ்சிகள் பார்ப்பது குறைவு. இணையத்தில் மேயவே பல இரவுகள் நித்திரையை தியாகம் செய்யவேண்டியுள்ளது.  இருந்தும்  சமீபத்தில்  எதேட்சையாக  இங்கே உள்ள   தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில்  ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் நாட்டிலுள்ள தம் பெற்றோர்களை கூப்பிட்டு இங்குள்ள முதியோர் இல்லத்தில் விடுவதை பற்றி உங்கள் கருத்து என்ன?  என்ற ரீதியில் நேரடி தொலைபேசி அழைப்பு நிகழ்ச்சியாக அது அமைந்திருந்தது.

  அழைப்பு எடுத்த எல்லோரும் அவ்வாறு முதியோர் இல்லத்தில் விடுவது தவறு என்ற ரீதியிலே, தமது கருத்துக்களையும் கூறி விவாதித்துக்கொண்டிருந்தார்கள் . 

  ஆனால், ஒரு அறிவாளி!,  அழைப்பை ஏற்படுத்தி சொன்ன கருத்து என்னை எரிச்சல் பட வைத்துவிட்டது.  " நாட்டிலே இருக்கிற முதியோர் இல்லங்கள்  வசதி குறைந்தது, அதோட நல்ல பராமரிப்பு முறையும் இல்ல. ஆனா, இங்க அப்படி இல்ல. இங்க உள்ள முதியோர் இல்லங்கள் மிகவும் வசதியானவை. நாங்கள்  வீட்டிலேயே வைத்து எங்கட  பெற்றோரை கவனித்துக்கொள்வதை விட அவர்கள் சிறப்பாக கவனித்துக்கொள்வார்கள். ஆகவே அவர்களை இங்குள்ள முதியோர் இல்லத்தில் விடுவது தவறில்லை " என்று தனது மனசில் இருந்ததை கக்கினார். 

  ஆதாவது, அவர் சொல்ல வருகிறார் 'நாட்டிலே உள்ள முதியோர் இல்லங்கள் வசதியாக இல்லை. அதனால, அவர்களை இங்கே கூப்பிட்டு வசதியான முதியோர்  இல்லத்தில்  விடுகிறேன்.' 

  அவரின் இறுதி நோக்கம் என்னமோ முதியோர் இல்லத்தில் விடுவது தான். ஆனால், அதிலும் அவருடைய கொள்கை, ஒரு நல்ல  வசதியான முதியோர் இல்லத்தில் தான் விட வேண்டும். 

  பிள்ளை கடைசி காலத்தில என்னை அன்பாய், அரவணைப்பாய் பார்த்துப்பான்  என்று பெற்றதுகள்  நம்பி இருந்தா,  இதுகள்  வசதியான முதியோர்  இல்லம் தேடி அலையிதுகள். நாட்டில சும்மா இருக்குறதுகளை  கூப்பிட்டு முதியோர் இல்லத்தில் விடுகிறார்களாம். இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் தான் பாருங்கோ!  மனுசனுக்கு பசி வந்தா மட்டுமில்ல, பணம் வந்தாலும் அவனுள் இருக்கிற எல்லாம் பறந்துவிடுமோ..!    ஒண்டுமே புரியல்லீங்க!!


  கோடி அழகில் ஒருத்தி ..!


  தென்றல் காற்றில் திரை கிழிய
  வெள்ளை மலர் ஒன்று முகம் மலருது,
  பனித்துளியின் சிதறல்களால்
  அதுவும் மெதுவாய் நாணம் கொள்ளுது!

  வாய் மொழி மவுனமாக
  வார்த்தைகள் புதைந்து போகுது - உன்
  கூர் விழி பார்வையால், புது
  சொல்லாமொழி கருவாகுது!

  இருளின் கருமை கிழிப்பதால்
  நீயும் நிலவும் ஒன்றானது - என்
  இருதயம் தினமும் துடிப்பதால்
  அதுவும் உன்னை கொண்டாடுது!

  இரவின் மடியில் நிலவாய் நீ
  இயற்கை படைப்பின் மகளாய் நீ
  சுவர் தேடும் சித்திரமாய் நீ - பல
  காளையர் கனவின் சுவர்க்கமாய் நீ;

  பாதி அழகில் பிறை நிலவே
  முழு மதியாய் முன்னே வா
  கோடி அழகில் ஒன்றான
  உன்னழகை பாட வா..?!

  பின் குறிப்பு :- சமீபத்தில எதோ ஒரு தளத்தில, மேலே இருக்கும் அந்த புகைப்படத்தை கொடுத்து  அதற்கு ஏற்ற கவிதை எழுதி அனுப்புமாறு ஒரு போட்டி வைத்தார்கள். நான் கலந்துகொள்ளவில்லை, இருந்தாலும் எதோ நாலு வரி எழுதணும் போல இருந்துச்சு அது தான்;-)

  வாழ்க ஊடகங்கள் சேவை (வியாபாரம் )/ டோனி எடுத்தது சரியான முடிவா ?

  பொதுவாகவே  சில/பல ஆண்களிடம்    உள்ள  ஒரு   குறைபாடு,  ஒரு அழகான  இளம்  பெண்  தன்னை பார்த்து பல்லிழித்தாலோ!  இல்லை  தன்னை  பரிதாபத்துக்குரியவள்!  என்று  காட்டிக்கொண்டாலோ,  எவ்வளவு  கல் நெஞ்சனாக   இருந்தாலும்  அவன்  மனசு   கசிந்து  கரைபுரண்டு  ஓடிவிடுகிறது. (இங்கே  அந்த  பெண்  அழகானவளாக  இருக்க  வேண்டியது  முக்கியம்!) இவ்வாறானதொரு சம்பவம்  தான்  சில  நாட்களுக்கு  முன்னர்   யாழில்  உள்ள ஒரு  பெண்ணுக்கும், வெளிநாட்டிலே உள்ள ஒரு(!) நபருக்கும்  இடையே    நடந்துள்ளது.  இதுவே  நமது வியாபாரிகளுக்கு (இனைய ஊடகம் ) பெரும் தீனியாகி போய்விட்டது.


  காதலோ  கவர்ச்சியோ  எதோ  ஒரு வகையில் இருவரும் தொடர்புகொண்டுள்ளார்கள்.  அதுவும்  ஸ்கைப்பிலே  முகம்  பார்த்து  நேரடியாக தொடர்புகொண்டுள்ளார்கள்.  அவ்வாறு அப்பெண்னுடன்   ஸ்கைப்பில்  கதைக்கும்  போது  ஸ்கிரீன் ஷாட்  எடுத்துள்ளார்  குறித்த  "ஏமார்ந்த"  நபர்.  ஆக, ஏமாறுவதற்கு  முன்னர்   'அப்பாவியான'  அந்த  நபர்  எதற்காக  பல கோணங்களில் அப்பெண்ணை   ஸ்கிரீன் ஷாட்  எடுத்தார்  என்பது   இங்கே  கேள்வி?????? 

  அத்துடன்,  முன்பின்  தெரியாத  ஒருவர்   தனக்கு   வறுமை ,கஸ்ரம்  என்று சொன்னால்  சில ஆயிரம்  கொடுப்பதே  மிக  பெரிய  விடயம்.  ஆனால்  இந்தநபர்  இலட்சக்கணக்கில்  வாரி வழங்கியுள்ளார்.  அதுமட்டுமல்லாது  அந்த  பெண்ணை  வெளிநாட்டுக்கு  எடுப்பதற்கும்  முயற்சித்தாராம். (பெற்றோருக்கு தெரியாமல்).  ஆக,  அந்த பெண்ணின்  சூழ்நிலையை  (பெண்ணும் சளைத்தவர் இல்லை)  தனக்கு சாதகமாக்கிக்  கொள்ள பார்த்தார்  என்று கொள்ளலாமா????    இவ்வாறு  ஆழமாக  பார்க்கப்  போனால்  இது   இரு  நபர்களின்  தனிப்பட்ட  பிரச்சனை.  அப்பெண்ணும்  ஏமாற்றியுள்ளார்.  அதேபோல  குறித்த  நபரும்  சில  பல  நோக்கங்களை  கொண்டு  கடைசியில்  ஏமார்ந்து  போயுள்ளார்.

  ஆனால்  ஒரு  ஊடகம்   இந்த  சம்பவத்தை   'குறித்த  பெண்ணின்  போட்டோவில் இருந்து   தப்பேதும்  அறியா அப்பெண்ணின்  குடும்பம் வரை'  இணையம்  என்ற   பொது வெளிக்கு  கொண்டு வந்து   அசிங்கப்படுத்துவிட்டது.  சரி, ஏமாற்றிய  பெண்ணின்  புகைப்படத்தை போட்டீர்கள்,  எதற்காக  ஏமார்ந்த (!) குறித்த  நபரின்  புகைப்படத்தை போடவில்லை. 


  இந்த விடயத்தில்  நம் தமிழ்  இனைய  ஊடகங்களின்  ஒற்றுமை பாராட்டத்தக்கது.  அதாவது,  ஏதாவது  ஒரு  ஊடகம்  பெரும்  பரபரப்பான  ஒரு  செய்தியை  பிரசுரித்தால்,  உடனே  போட்டி  போட்டு  அந்த செய்தி  தொடர்பாக  எந்த  வித உறுதிப்படுத்தலையோ, உண்மை தன்மைகளையோ  ஆராயாது,  வரிக்கி  வரி   அச்சொட்டாக   காபி(copy ) பண்ணி  தமது  பக்கத்திலும்  கொண்டுவந்து  பதித்துவிடுவார்கள்.  வாழ்க இவர்கள் சேவை (வியாபாரம்)
   >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  கிரிக்கெட்  என்பது  சோம்பேறிகளின்  விளையாட்டு  என்றும் சிலர் விமர்சிப்பார்கள்.  அதை  உறுதிசெய்யும்  விதமாக மேற்கிந்திய தீவுகளுக்கு  எதிரான   இறுதி  டெஸ்ட்  போட்டியிலே  டோனி  எடுத்த  முடிவு  பலரது  விமர்சனத்துக்கு  உள்ளாகி  இருக்கிறது. 

  பொதுவாக  விளையாட்டு  வீரனோ,  இல்லை  அணியோ  போராடும்  குணம்  இருந்தால்  தான்  சிறப்பான  ஆட்டத்தை / வெற்றியை   எதிர்பார்க்க முடியும்.   அத்துடன், வெற்றி  தோல்வி  என்பது   இரண்டாம் பட்சம். ஆனால்  வெற்றிக்காக  சற்றேனும்  போராடாது  வெளியேறுவது   என்பது  மிகவும்  கோழை  தனமானது.  அதே போல, டோனி  அந்த  போட்டியில்  எடுத்த  முடிவு  நிச்சயம்  இந்திய  அணி  ரசிகர்களுக்கு  எரிச்சலை தான்  கொடுத்திருக்கும். 

  உலக  சம்பியன் அணி ,  டெஸ்ட் தரவரிசையில்  முதல்  இடத்தை  தம்  வசம்  வைத்திருக்கும்  அணி  வாய்ப்பிருந்தும்  முயற்சிக்காமல்  வெளியேறுவது  என்பது  ஏற்றுக்கொள்ள  முடியாத ஒன்று தான்.  தொண்ணூறு  பந்துகளில்  86   ஓட்டங்கள், கூடவே  கைவசம்  இன்னமும்  7 விக்கெட்டுக்கள்,  அதுவும்,  ராவிட், லஷ்மன்,  க்ஹோலி,  டோனி , ஹர்பஜன்,  பிரவீன் குமார்   என்று தொடர்ச்சியாக  துடுப்பாட்டம்  செய்யக்கூடிய  வீரர்கள்.  ஆக   இந்திய  அணிக்கே  சாதகமாக  இருந்தது.  இறுதிவரை  போராடியிருந்தாலும்  தோல்வி என்பது  நிச்சயமாக  ஏற்பட்டிராது.

  போட்டியின்  இறுதிநாள்  துடுப்பாட்ட  வீரர்களுக்கு  சாதகமாக  இருக்காது  என்பது  அறிந்து   தான்.   ஆனால்  இலக்கு   ஒன்றும்  அடையமுடியாத தூரத்தில்  இருக்கவில்லை.  எடுக்க வேண்டிய ஓட்டங்களை விட  பந்துகள் அதிகமாகவே தான்   இருந்தது.    இறுதி  பத்து  ஓவர்களிலாவது  இலக்கை  துரத்த  முயற்சி  செய்திருக்கலாம்.  ஆனால் எதையும் செய்யாமல்  அணி  எடுத்த  இந்த  முடிவு  மேற்கிந்திய தீவுகளுக்கே  அதிகம்  சாதகமாக  போய்விட்டது.  இதுவே  இறுதிப்போட்டியில்  வெல்ல வேண்டிய  கட்டாயம் இருந்திருந்தால்  நிச்சயமாக  கடைசி வரை வெற்றிக்காக  போராடியிருப்பார்கள்/வேண்டும்.  ஆனால்  "தொடர்  நம்வசம்  தானே"  என்ற நினைப்போ  என்னமோ  டோனி  இந்த  முடிவு  எடுக்க  காரணமாகி  விட்டது.  

  தற்சமயம்  இருபதுக்கிருபது  போட்டிகளின் ஆக்கிரமிப்புக்கு  மத்தியில்  டெஸ்ட்  போட்டிகளிலே  இப்படி  மந்தமான   செயற்பாடுகள், டெஸ்ட் போட்டிகள் தொடர்பில்   சுவாரசியம்  அற்ற  தன்மையையும்  சலிப்பையும்  ரசிகர்கள்  மத்தியில்  உண்டு  பண்ணும்  என்பதில்  ஆச்சரியம்  இல்லை  தான்!

  நாயை வெட்டும் நரிகள்..!

  யுத்தம்  முடிந்து  சமாதானம்  ஏற்ப்பட்டு விட்டது;  இனி  மக்கள்  அமைதியான சுதந்திரமான  வாழ்க்கை  வாழலாம் (!) என்று சொல்லிக்கொண்டே ஆயிரக்கணக்கான  மக்களை கொன்று குவித்து  அதை  புறநகர்  பகுதியிலே பாற் சோறு  கொடுத்து  கொண்டாடி  மகிழ்ந்த அரசு,   இன்று   வேதாளம் முருங்கை  மரம்  ஏறுகிற  கதையாக   மீண்டும்   மக்களை   என்பதுகளுக்கு இழுத்து செல்கிறதா?

  மக்கள்  சுதந்திரமாக   அமைதியான  வாழ்க்கை  வாழவேண்டும்  என்று கருதினால்  யுத்தம்  முடிந்த கையேடு  முதல் வேலையாக  இந்த ஒட்டுக்குழுக்களை  நிர்வாணம்  ஆக்கி  இருக்கவேண்டும்.  அதாவது அவர்கள் ஆயுதம் களையப்பட்டு அடித்து  துரத்தியிருக்க  வேண்டும்.  ஆனால் அதை  செய்யாது  ஒரு  துளியும்  தகுதியில்லாதவர்களை  எல்லாம்   பாராளுமன்றத்தில் வைத்து அழகுபார்க்கிறது.


  அதற்கு  கைமாறாக "நம்மவர்களும்"  இன்று  நடக்கவிருக்கும் உள்ளுராட்சி தேர்தலிலே தமது  விசுவாசத்தை  காட்ட  இனவாத  அரசை நோக்கி  தங்கள் வால்களை ஆட்ட  வெளிக்கிட்டுவிட்டார்கள் .

  ஒரு  நாயை  பிடித்து  அதன் தலையை  துண்டித்து  தன்  எதிரியாக கருதப்படுபவன் (!)  வீட்டு  வாசலிலே குற்றி நடும்  அளவுக்கு  நம்மவர்கள்  மனம் உள்ளது.  இருந்தும் ஆச்சரியப்படவதற்க்கில்லை,  மனிதனையே வெட்டும் இவர்களுக்கு  நாயெல்லாம்  எந்த  மட்டு..!

  கடந்த  எட்டாம்  திகதி  எங்கள்  ஊருக்கு  அருகிலுள்ள ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின்  வீட்டிலேயே  இந்த விசுவாசிகள் தங்கள் அட்டகாசத்தை  காட்டியுள்ளார்கள்.  நள்ளரவில் புகுந்து வீட்டுக்கு   தார்  நிரப்பிய  பைகளால் வீசியுள்ளார்கள்.  கூடவே  சிறிது  நேரம் அங்கே உட்கார்ந்து தண்ணியும் அடிச்சு அங்கயே போத்திலையும்   அடித்து  உடைத்துவிட்டு போயுள்ளார்கள்.   அப்ப  பாருங்களன்,  எவ்வளவு  துணிவு  என்று..  நள்ளிரவு தானே  "சட்டமும் தூங்கிவிட்ட  நேரம் போலும்."  இந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சியாக  இருந்தது,   காரணம்  அவர்  ஒரு ஆசிரியரும்  கூட.   உயர்தரம் படித்தது  அவர் கல்வி  நிறுவனத்தில் தான்.


  நிச்சயமாக  இது  இராணுவத்தின்  நேரடி   வேலையாக  இருக்காது.  அவர்கள் ஆசியுடன்   நம்மவர்  விசுவாசிகளின்  நன்றிக்கடன்கள்! 

  கடந்த   மாதம்  அளவெட்டியில் கூட்டமைப்பு  மீதான  தாக்குதல்  சம்பவத்துக்கு  பின்னர்  தொடர்ச்சியாக  மேற்கொள்ளப்பட்ட  வன்முறைகளில்  இது  கடைசியாக  இடம்பெற்றுள்ளது .   பாவம்,  இந்த முட்டாள்களுக்கு புரியவில்லை இப்படி கூட்டமைப்பு  மீது  மேற்கொள்ளும்   வன்முறைகள்   இன்னமும் மக்களை  அவர்கள்  பால் நெருக்கமாக்கும்    என்று...  இருந்தும்  நாட்டிலே  சமாதானத்தை  விரும்பும்  அரசு (!)  இதை  தொடர்ந்து  அனுமதிக்கப்போகிறதா?  இல்லை   தமிழ்   மக்களின் வேலியாக  தன்னை  வெளி  உலகுத்துக்கு  காட்டிக்கொண்டு  வழமை  போலவே   அவர்களை மேய(விட)ப்போகிறதா?

  பயங்கரவாதிகளை உருவாக்குவோம்.

  இந்த உலகத்தின்  எந்த மூலையில்  பிறந்தவனும் அமைதியான   வாழ்க்கையே விரும்புவான்.  அடிப்படை சுதந்திரம்  மறுக்கப்பட்ட போதும்  அவன் அவ்வளவு சீக்கிரம்  வன்முறையின் பக்கம் நாடமாட்டான்.  அதையும் மீறி அவன் வன்முறையின்  பக்கம் செல்ல  என்னை பொறுத்த  வரை  இரண்டு காரணங்களை சொல்வேன் .

  ஒன்று அவன்   மனநோயாளியாக   இருக்கவேண்டும்,
  இரண்டு  அவனை வன்முறைக்கு தள்ளிய புறச்சூழல் காரணிகள்.

  இதில் முதலாவதை  விடுவோம். உற்று நோக்கினால் அது மிக குறைந்த  பகுதி தான்.  ஆனால் இரண்டாவதை    உருவாக்குவதில்  பெரும் பங்கு வகிப்பது  அதிகார வர்க்கம் தான் என்பது மறுப்பதற்கில்லை.   எந்த ஒரு  வன்முறையாளனையும்  எடுத்துக்கொள்ளுங்கள் அவனை உருவாக்கியதற்கு பின்னால் எதோ ஒரு அதிகார வர்க்கம், அவர்களால் முடக்கப்பட்ட   நாட்டின் சட்டங்கள், மறுக்கப்பட்ட நீதி  போன்றவை  தான் பின்னணியாக  இருக்கும்.

  இதில்  முக்கிய   பங்கு ஒரு நாட்டின் இராணும் போலீஸ் துறையை சாரும். அமெரிக்காவில் இருந்து  இலங்கை வரை யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது கணக்காய்  வேலியே (!) பயிரை  மேயும் சம்பவங்கள் நடந்துள்ளன /நடந்துகொண்டுள்ளன.


  வாதாம் கொட்டை  பறிப்பதற்காக  இராணுவ விடுதிக்குள்  நுழைந்த பதின்மூன்றே வயசான சிறுவனை  இரக்கம்  சிறிதும்  இன்றி ஒரு இராணுவ அதிகாரி (நாட்டையும், மக்களையும் காப்பாற்றுபவர்களாம்)  குடி போதையில்(!) சுட்டு கொன்றுள்ளார்.  சரி, வெறியிலே  புத்தி பேதலிச்சு  சுட்டுவிட்டான் என்று வைப்போம்; ஆனால்  சுடப்பட்டு அந்த சிறுவன்  குற்றுயிராக கிடந்த போது அங்கே  நின்ற  ஏனைய இராணுவத்தினர் என்ன செய்திருக்க வேண்டும்...?

  உயிருக்கு  போராடியவனை  உடனடியாக வைத்தியசாலை  கொண்டு செல்லும் நடவடிக்கையை கூட எடுக்காது,   எதோ "தெருநாயை சுட்ட  பின் ஈ எறும்பு மொய்க்குமே"  என்பது போல இலைகளாலே மூடி விட்டுள்ளார்கள்.

  இது  கடந்த  ஞாற்று கிழமை  நடந்தது.  இன்னமும்  குற்றவாளி கைது செய்து நீதிமன்றத்திலே  நிறுத்தவில்லை.  இதுவே  ஒரு அரசியல்வாதியின் மகனுக்கோ  இல்லை அதிகாரங்களை சட்டை பையில்  கொண்டலைபவனின் மகனுக்கோ நடந்திருந்தால்  அரைமணி  நேரத்தில் குற்றம் செய்தவன் கைதுசெய்யப்பட்டு  இருப்பான்.   ஆனால் பாதிக்கப்பட்டது ......?,   எதோ அறுபதடி கிணற்றில் தூண்டில் போட்டு  மீன்  பிடிப்பது  போல  ஐந்து  நாட்களாக குற்றவாளியை தேடுகிறார்களாம்.   சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு "நியாயமான  தண்டனை"  வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே!

  இன்று முகநூலில் ஒரு சிலர்  இந்த செயலை நியாயப்படுத்துகிறார்கள். காரணம் அந்த சிறுவன்  குண்டு  வைக்க வந்திருப்பான்  என்று நினைத்து  இராணுவ வீரன் சுட்டது தவறில்லையாம்.  என்ன கொடுமை! , அப்படியெனில் மும்பையில் குண்டுவைத்து அப்பாவி  மக்களை  கொன்ற கசாப்பை  எதற்காக ராஜ மரியாதையோடு உள்ளே வைத்திருக்கிறார்கள்.  அவனையும் சுட்டுத் தள்ள வேண்டியது தானே.   இவர்கள் கதைப்பார்கள், காரணம் செத்தது  இவர்கள் பிள்ளையோ, உறவவோ  இல்லையே ! 

  இனி அந்த  மகனை  பெற்ற  தாய்க்கோ, குடும்பத்துக்கோ, சுற்றி உள்ளவர்களுக்கோ  இராணுவம்  என்றால் ஒரு காழ்புணர்ச்சி, குரோதம்  சாகும் வரை  தொடர்ந்து  இருக்க தான் செய்யும்.  இப்படியானவர்கள்  நாளை  நீதி கிடைக்காத போது  வன்முறையின் பக்கம் நாடினால் அதற்கு யார் பொறுப்பு!   இவ்வாறு  இவர்களே  ஒருவன்  வன்முறையாளனாக உருவாக காரணமாக இருந்துவிட்டு,  நாளை  அவனுக்கு "பயங்கரவாதி" என்று பெயரும் கொடுத்து  துப்பாக்கிகள்  சகிதம்  துரத்துவார்கள்.

  "நாட்டை காக்க தன் உயிரையே பணயம்  வைக்கும்  இராணுவம்/பொலிஸ் துறை"  என்பது எவ்வளவு  புனிதமான தொழில்/கடமை.  நாட்டின் பாதுகாப்பிற்காக இல்லற வாழ்க்கை துறந்து  தன்னுயிரை கொடுத்த தன்னலமற்ற வீரர்கள் எத்தனை எத்தனை.  ஆனால் ஒரு சிலரால் /கூட்டத்தால்    நாட்டுக்கே  அவமானம் தேடித்தரவும்  இவர்களால்  மட்டுமே  முடியும்.


  இது முதலாவது சம்பவம் இல்லை.  இதை போல இதற்கு முன்னரும்  பல சம்பவங்கள் நடந்துள்ளது;  இனியும்  நடக்காது  என்பதற்கு  எந்த வித உத்தரவாதமும்  இல்லை.  இந்த  உலகிலே மோசமான  இராணுவம்  என்றால் என் அனுபவத்தில்  இலங்கை  இராணும் என்று  தான் கண்ணை மூடிக்கொண்டு சொல்வேன்.   ஆனால்  இதே  கேள்வியை 87 களில்  ஈழத்தில்  இந்திய   இராணுவத்தின்  கட்டுப்பாட்டில்  வாழ்ந்த  தமிழ் மக்களை   கேட்டு பாருங்கள் ...!

  முகநூலும் முகமூடிகளும்...

  வீட்டுக்கு  ஒரு கணணி,  அதிகரித்து  வரும்  இணையப்பாவனை  என்று  தற்சமயம்  நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது  கிராம புறங்களிலும்  வீட்டுக்குள்ளே அதிக நேரம் அடைந்து  கிடப்பவர்களுக்கு  பெரும்பாலும் மிகப்பெரிய பொழுது போக்கு அம்சமாக  முகநூல் (facebook)  தான்  இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  நண்பர்களுடன்  அரட்டையடிப்பதாக  இருந்தாலும்  சரி, அவர்களின் பக்கம் சென்று  தகவல்களை ஆராய்வதாக  இருந்தாலும்  சரி  நேரம் போவதே தெரியாமல் கணணி முன் உட்கார்ந்து  இருப்பவர்கள் அதிகம்.  ஆனால்  இதுவே அளவுக்கு அதிகமாகும் போதோ இல்லை  கட்டுப்பாடு  இன்றி பயன்படுத்தும் போதோ  அதனால்  வரும்  பின்விளைவுகளும் மோசமானதாகவும், மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும்  அமைந்துவிடுகிறது.

  சில மாதங்களுக்கு முன்னர்  என் முகநூல் நண்பர்கள்  பக்கத்தில் நான் பார்த்த விடயம்; ஒரு  ஐம்பது வயசு மதிக்கத்தக்க  நபர் ஒருவர்  இருபது வயசு பெண்ணின் புகைப்படத்துக்கு கீழே பின்னூட்டுகிறார்  "தயவு செய்து  உங்களுக்கு பிடித்தமான விடயங்களை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்"  என்று,  கூடவே  தனது  மின்னஞ்சல் முகவரியும் .... அப்ப பாருங்களவன் எப்பிடி போகுது என்று.  இப்படி தான் ஆரம்பிப்பார்கள்..! இப்படியானவர்களை உள்ளே அனுமதித்தது யார் தவறு!

  இன்னும்  சிலர்  இருக்கிறார்கள்  இவர்களுக்கு முகநூல்  என்பது  மஞ்சள் பக்கம் என்ற  நினைப்பு.  மிகவும் ஆபாசமான  படங்களை பகிர்ந்து கொள்வது  பச்சை தனமான  வார்த்தை  பிரயோகங்கள் என்று நண்பர்கள்  வட்டத்தை உருவாக்கி வைத்துக்கொண்டு  சுற்றி  இருப்பவர்களை  பற்றி சிந்திக்காமல் நடந்துகொள்வார்கள்.

  அதே போல தனிப்பட்ட  விரோதத்தின் காரணமாக பழிவாங்க எண்ணுபவர்களுக்கு முகநூல் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.  இதனால்  இன்னொருவரின் முகநூல் கணக்கை   திருடுபவர்களும்   அவர்களின் புகைப்படங்களை எடுத்து  போலியான ஒரு கணக்கை  திறப்பவர்களும்  சாதாரணமாய் போச்சு.  இப்படியான திருடர்களை  கடிந்து  கொள்வதில் எந்த பயனும்  இல்லை. மாறாக இதற்கெல்லாம்  காரணம் நமது கவனயீனம் தான். 

  இதற்கு என்ன தீர்வு
  ஒரு சிலருக்கு தமது  நண்பர்கள்  வட்டத்தை பெருக்க வேண்டும் என்று ஆசை.  இன்னும் சிலருக்கு தமது புகைப்படங்களை விதம் விதமாக எடுத்து பகிர்ந்து  கொள்ள வேண்டும் என்ற ஆசை. அத்துடன் முகநூலில்  இருக்கும் சாட்டிங் வசதி... இவ்வாறு விளையாட்டுத்  தனமாக செய்வதே பின்னர்  வினையாக மாறிவிடுகிறது.


  முக்கியமாக  எமக்கு  முகமறியாத  நபர்களை  இணைத்துக்கொள்வதை முடிந்தவரை  தவிர்க்கலாம்.  அதிலும் சுயவிபரத்தை   மறைத்து அனானியாக வரும் நபர்களை முற்றாக  தவிருங்கள்.  அப்படி இணைத்துக்கொண்டாலும்  நமது     புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை  பகிர்ந்து கொள்ளும் போது  இரகசிய காப்பு விதிகளை (privacy settings) கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

  முக்கியமாக பெண்கள் தமது புகைப்படங்களை  பகிர்ந்து  கொள்வதில்  மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பது சுற்றி  இருப்பவர்கள் மூலம் நான் கண்ட அனுபவம்.   அதுமட்டுமல்லாது  இதனால் பின்னொரு பொழுதில்  பிரச்சனை வரும் போது  உங்கள் மீது  குற்றம் சாட்டவே கிளம்பிவிடுவார்கள். "நீ பெண்!, எதற்காக முகநூல் பாவிக்கிறாய், தெரிந்து கொண்டு  தானே புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாய்,  இப்படியெல்லாம் ஒரு பெண் செய்யக்கூடாது,  உன்  நடவடிக்கை ஆரம்பம் முதலே சரியில்லை"  என்று ஆளாளுக்கு உங்கள் மீது  தான்  கை நீட்டுவார்கள். ஆக  எதற்காக வம்பை விலை கொடுத்து வாங்கி  பழி சுமப்பான்.


  முகநூல் பயன்படுத்துவதற்கு முற்றாக பாதுகாப்பு இல்லாதது என்றால் பேசாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.  ஆனால் எமது கணக்கை பாதுகாப்பதற்க்கான வசதிகள்  இருந்தும்   அதை நாம் பயன்படுத்தாமை எமது தவறு தானே.  ஆகவே  இது தொடர்பாக முகநூலில் தரும் கட்டுப்பாடு வசதிகளை (privacy settings) முழுமையாக பின்பற்றுங்கள்.  உங்கள் பாதுகாப்புக்காக  சிறிது நேரத்தை செலவு செய்வதில் உங்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை.

  என்ன கொடும சாமி இது..?

  சின்ன  வயசில பாடசாலையில் படிக்கும் போது  வரலாறு  ஆசிரியர்  "முனை" என்பதற்கு  பின்வருமாறு  வரைவிலக்கணம் கொடுப்பார்,    " கடலுக்குள் நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி முனை எனப்படும்" னு ..   பருத்தித்துறை முனை, பவுல் முனை, தெய்வேந்திர முனை என்று அதற்கு சில உதாரணமும் சொல்லுவார். இலங்கை வரைபடத்தை பார்த்தால் விளக்கம் புரியும்.

  இதே போல  இப்ப நம்மவர்கள் ஒன்றை உருவாக்கி  உள்ளார்கள்..! என்ன தெரியுமா!  "அசையும் அசையா பொருட்களில்  நீட்டிக்கொண்டிருக்கும் பகுதி பிள்ளையார் எனப்படும்"  

  என்னடா கடவுளை கிண்டல் பண்ணுறான்' னு நினைக்காதீங்க.  கீழே பாருங்க கொடுமைகளை..

   


  [ நம்மாக்கள் புத்திசாலிகள், எந்தப்பக்கம் நீட்டிக்கொண்டிருந்தாலும் அதுக்கு அலங்காரம் பண்ணி ஒரு முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். ]

  வாழும் உலகில் கடவுளை கண்டவர் என்று  இது வரை எவரும் இல்லை. (யாரப்பா அது நித்தியானந்தா சாமி'னு சொல்லுறது ).  அதேபோல கடவுள் என்பவர்  இப்படி  தான் இருப்பார்  என்று அவருக்கு உருவம் கொடுத்தவன் மனிதன் தான்.  இதெல்லாம் மரம் செடி கொடி காய்கறி பழங்களுக்கு எப்படி தெரியும்..

  அழகான கோவில் கட்டி வச்சால், இப்படி  அடுத்தநாள் பட்டு போகும் மரங்களில் வந்து கடவுள் குடி கொள்வதன் நோக்கம் தான் என்ன!
  இப்படியான மூட நம்பிக்கைகள் நம்மவர்களிடம் மட்டும்மல்ல மேற்கத்தேய நாட்டவர்களிடமும் உண்டு. அவ்வப்போது ஜேசு கண்ணில் இருந்து ரத்தம் வருது  கண்ணீர் வருது என்று  செய்தி உலாவும் பின் அமிழ்ந்துவிடும். ஆனால் ஒப்பீட்டளவில் நம்மவர்களின் செயற்ப்பாட்டை விட மிக மிக குறைவு.

  (சிங்களவர்கள் கண்ணில் படும் அரச மரத்துக்கெல்லாம் வெள்ளை துணியால் சுத்தி விடுவார்கள்.  நம்மவர்கள் கண்ணில் படும்  ஆலமரத்துக்கெல்லாம் கலர்த்துணியால் சுத்திவிட்வார்கள்.  இந்த விடயத்தில் மட்டும் ......! )