திருமண நாள் அன்று ..!


 ஆண் பெண் என்ற இரு சாதி
வர்க்கம் மறந்து ஒன்றித்து
வாழ்க்கை பயணம் தொடங்கும்
தண்டவாளம் கல்யாணம்!

புதிய உயிர்களை
பூமியில் எழுப்பிட
போடப்படும்  ஆழமான
அஸ்திவாரம்  கல்யாணம்!

வெட்டிவிட்ட உறவுகளும்
எட்ட நின்ற உறவுகளும்
பகைமை மறந்து
புதுமை பேசி மகிழும் 
போகி பண்டிகை  கல்யாணம்!

ஆயிரம் உறவுகள்
புள்ளியில் ஒன்றித்து
புது உறவுகளை விஸ்தரிக்கும்
விசித்திரம் கல்யாணம்!

பல்சுவையோடு பந்தி வைத்து
வந்தவர்கள் வயிறு நிறைத்து
வாழ்த்துக்களை பிரதியாக பெறும்
பண்டமாற்று கல்யாணம்!

வாழ்வின் புரிதல்கள் பலவற்றுக்கு
வழிகாட்டும் வாழ்க்கை பாலம் 
கல்யாணம்!
 


                                           

ஆப்பு வாங்கியவர்(கள்) 25/06/2011


தமிழ் இனைய  உலகிலும்  சரி,  பதிவுலகிலும் சரி எப்போதுமே  பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.  ஒரு விடயம்  வந்து  பரபரப்பாக பேசப்படும் போதே  சூட்டோடு  சூடாக அடுத்த  விடயமும்  வந்துவிடும்.  சமீபத்தில் இருந்து  பார்த்தோமானால்  நித்தியானந்தர்,  சாய் பாபா,  கலைஞர் தோல்வி , கனிமொழி கைது   என்று பதிவுலகை  பரபரப்பாக்கியது.  அந்த வரிசையில் இப்ப மாட்டிக்கிட்டவர் சாரு நிவேதிதா.

"இவள் ஒரு பொண்ணு  தானே! நான்  என்ன சொன்னாலும், எவ்வளவு வக்கிரமாக  கதைத்தாலும்   பப்ளிக்  பண்ணி   என்னை  காட்டிக்  கொடுக்கமாட்டாள்,  அப்படி  காட்டி  கொடுத்தால் அது  அவள்  வாழ்க்கையை தான்  பாதிக்கும்.  ஆகவே  ஒரு  போதும்  அவள்   காட்டி கொடுக்கவேமாட்டாள்"  என்ற  பிற்போக்கான ( பின்நவீனத்துவமோ!)  எண்ணமோ  என்னமோ,   ஒரு பெரியமனுசன் (!)  ஒரு  பெண்ணிடம்  எப்படியெல்லாம்  கதைக்கக்கூடதோ   அந்த  வக்கிரத்தை   எல்லாம் உமிழ்ந்து  தள்ளியுள்ளார்.



ஆரம்பத்தில் சாட் செய்யும் போது  மிக  நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி போக  போக  தன்  வக்கிரங்களை கொட்ட தொடங்கியுள்ளார்... இறுதியில் சகிக்கமுடியாத வார்த்தைகள்..

இனி  இலக்கிய  உலகில் இவருக்கு என்று கவனிக்கத்தக்க  இடம் இருக்குமா?     (இதுவரை இருந்திச்சா என்ன!)  என்றால் பதில் இல்லையே..  ஆங், இன்னொன்று,  அந்த  சாட்  ஆதாரம் போலியானது  என்று வாதிடும் அன்பர்கள்  'சைபர் க்ரைம்' பொலீசில் புகார் கொடுக்கலாமாம்.

இதை தான் சொல்வார்களோ ஆப்பை தேடி சென்று ஒக்காருவது  என்று..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வயசு போனால்  கூடவே  ஞாபக மறதியும் வந்துவிடும் என்பது  இயற்கை தான். ஆனால் ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிப்போர்  ( தறுதலைகள்  எண்டும்  சொல்லலாம் )  ஒன்று  கூடும்  இடத்தில் இப்படியானவர்கள் இருப்பது...?  இன்று  எம் நாட்டின் நாடாளுமன்றத்தில் வீ ற்றிருப்பவர்களில்  பெரும்பான்மை  இவர்கள் தான்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால்,  கடந்த நாளுக்கு  முன்னர்  இலங்கை ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  மிக பெரிய கல்லை தூக்கி மகிந்தரின் தலையிலே போட பார்த்தார்.  "பிரபாகரன் கொல்லப்பட்ட போதும் அவரின் குடும்பம் காப்பாற்றப்பட்டு அரச தலைவர் மகிந்த  ராஜபக்ஷ் மேற்பார்வையில்  பாதுகாக்கப்பட்டு  வருகிறது" என்று...


ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாலகுமாரன், ரமேஷ்  போன்றோர் எங்கே என்று மனித உரிமை  அமைப்புக்கள்   குடைஞ்சு  கொண்டு  இருக்கும் போது இது வேறையா..!  நல்ல வேளை விடயம் பெரிதாக  முன்னர் மறுப்பறிக்கை விட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.  

இதே போல உங்களுக்கு  நினைவிருக்கலாம்  "ஐநா பாதுகாப்பு  சபை கூட்டத்திலே  தான் வாசிக்க வேண்டிய  தனது  நாட்டு  உரைக்கு பதிலாக   பக்கத்தில  இருந்த போர்த்துக்கல் நாட்டின் உரையை எடுத்து  மூன்று நிமிடங்களாக  தன்னிலை மறந்து வாசித்த  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச் எம் கிருஷ்ணா பற்றி.."

இவர்களிடம் எல்லாம் வேண்டிக்கொள்வது ஒன்றே ஒன்று தான்.. சற்று விலகி நில்லுங்கோ,  நாட்டின்  மீது  அக்கறை கொண்ட  எத்தனையோ படித்த இளைஞர்கள்  உள்ளார்கள்.  அத்தனை தகுதியும் அவர்களிடம் உள்ளது  ஒன்றே  ஒன்று  தவிர  'அதிகாரத்தை வாங்கும் பணபலம்'

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
 ராவிட்  -  முப்பதெட்டு வயசானாலும் ஆட்டம்  இன்னமும் மாறல..  இரண்டாவது  இனிங்சில்  தனி ஒரு  மனிதனாக  நின்று  பொறுப்போடு ஆடி  போட்ட சதம்,  தனது  முதலாவது  டெஸ்ட் போட்டியிலே  பிரவீன் குமார்  எடுத்த  முக்கிய  ஆறு  விக்கெட்டுக்களுமாக  முன்னணி  வீரர்கள் பலர்  பங்குபற்றாத மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்  இந்தியா  வெற்றியை  அள்ளிக்கொண்டது.  இனி வரும் போட்டிகளிலும்  மேற்கிந்திய தீவுகள்  இந்திய அணிக்கு பெரிய  நெருக்கடிகளை கொடுக்கும் என்று  நான்  எதிர்பார்க்கல.


 சரி  இதில என்ன ஆப்பு என்று தானே கேக்கிறீங்க ...

இந்த போட்டியிலே முன்  கூட்டியே  எடுத்துக்கொள்ள  வேண்டிய  வெற்றி அம்பயர்களின் சில தவறான  தீர்ப்புக்கள் காரணமாக  தள்ளி போய்விட்டது. போதா குறைக்கு இறுதி விக்கெட்டுக்காக நின்றவர்களும் இந்திய அணிக்கு சற்று  பதட்டத்தை கொடுத்துவிட்டார்கள்.  இத்தனைக்கும் நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வசதியாக நடைமுறை படுத்தப்படும்  யுடிஆர்எஸ் முறைக்கு  இதே  இந்திய அணியும்  நிர்வாகமும் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது..

நானும்  பல போட்டிகளில் பார்த்திருக்கேன்  அம்பயர்களின்  தீர்ப்புகள்  இந்திய  அணிக்கே பல சமயங்களில்  பாதகமாக   அமைந்துவிடுகிறது.  எதுக்கு இப்படி ஆப்பை தேடி சென்று வாங்குவான்.

என்ன , ஒரு வித்தியாசமான முயற்சி தொடரலாம் எண்டு நினைக்கிறன்.  நீங்க என்ன சொல்லுறிங்க..!

கலைஞரே ஏன் இப்படி ..?


ஈழத்தில்  அடக்குமுறைக்கு  எதிராக கிளர்ந்தெழுந்த  இளைஞர்கள்  தமக்குள் ஒற்றுமை  இல்லாது  மூலைக்கு ஒரு  திசையாக முட்டி  மோதி  செயற்படுவதை  கண்டு  சங்கடப்பட்ட  அன்றைய  தமிழ்நாட்டு  முதல்வர்  MGR  அவர்கள்,  குறித்த கட்சிகளின் தலைமைபீடத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக  குறித்த ஒரு  தினத்தில்  தன்னை வந்து சந்திக்குமாறு  அழைப்பு  விட்டாராம்.

உடனே இதை  அறிந்த  கருணாநிதி  அவர்கள்,  தானும்  குறிப்பிட்ட  ஈழ  இயக்க தலைமை  பீடங்களை  சந்திக்க வேண்டும் என  கூறி  MGR  அறிவித்த அதே நாளில் அதே  நேரத்தில் தன்னையும் வந்து   சந்திக்கும் படி அழைப்புவிட்டாராம்.


இதனால் சங்கடப்பட்ட  ஈழ  இயக்கங்களில் ஒரு  சில  தலைமைகள்  மட்டும் MGR ஐ சென்று  சந்திக்க ஏனையவை  இருவரையும்  சந்திப்பதை  புறக்கணித்தார்களாம். அதன்  பின்னர்   MGR ஐ சந்திக்கும் போது ஈழ   இயக்கங்கள் தமது  சங்கடமான நிலை பற்றி எடுத்து  கூற, கருணாநிதி  பற்றி  ஏற்கனவே  நன்றாக புரிந்து வைத்திருந்த MGR ரும்  அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டாராம்.

ஆக  இந்த ஒரு  விடயமே  போதும்  கருணாநிதி  அவர்கள்  ஈழ தமிழ் மக்கள் விடயத்தில் கொண்டுள்ள அக்கறை  பற்றி  புரிந்து கொள்ள...

ஆனால் இப்பொழுதெல்லாம்  இறுதி  கட்ட யுத்தத்தின் போது  கலைஞரின் மவுனம்/பித்தலாட்டம்   சம்மந்தமாக  கலைஞரை  ஊடகவியலாளர்கள்  கேள்வி  கேட்கும் போதெல்லாம்  உடனே பழைய புராணம் பாட தொடங்கிவிடுகிறார்.

83 ல் பதவி துறந்தேன், ராஜீவ் படைகள்  ஈழத்தில் இருந்து  திரும்பிய  போது நான்  சென்று அவர்களை வரவேற்கவில்லை , தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்பா எழுதினான்  என்று  அடுக்கடுக்காய்  எடுத்து  விடுகிறார்.

ஒரு பெரியமனுசன்  தான்  செய்ததை ஒரு போதும்  சொல்லி காட்டன்  என்று சொல்வார்கள். ஆனால் தமிழின  தலைவராக  தன்னை வரிந்து  கட்டி கொள்ளும்  கலைஞர் விடயத்தில் இது  மாறுபடுகிறது.  ( சமீபத்தில் ரசிகன் என்ற  ஒரு நிகழ்ச்சி கலைஞர்  ரீவியில் எதேச்சையாக பார்த்தேன்... சின்ன புள்ளைங்களை எல்லாம் கொண்டு வந்து வச்சு கலைஞரை பற்றி புகழ்ந்து தள்ளுறாங்கையா .. இதில காமெடி என்னன்னா, கலைஞர் ஊழலுக்கு எதிரானவராம் ஹிஹிஹி )

ஆக இதிலிருந்து இன்னொரு முடிவுக்கும்  வரலாம்  எதிர்காலத்தில் "ஈழ மக்களுக்காக என்ன செய்தாய்" என்று கேள்வி  எழும்  போது  சொல்லுவதற்கு நாலு விடயங்கள் தேவைப்படுமே  என்பதை முன்னுணர்ந்த கலைஞர் மேற்குறிப்பிட  புராணங்களை  செய்திருக்கலாம்.( மிக பெரிய ராஜதந்திரி ஆச்சே)  அதுவே  அவரின் அரசியலுக்கு ஏணிப்படியாக அமைந்தது  ஒரு கல்லில் இரு  மாங்காய்   போல..

ஆனால் இன்று  இறுதி காலத்தில் "நியூட்டனின் மூன்றாம் விதி போல" முன்னர் செய்ததெல்லாத்துக்கும் சன்மானம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்/ இருப்பார்.



காங்கிரஸ்  தலைமையிலான  ஐக்கிய  முற்போக்கு  கூட்டணியில் இணைவீர்களா?  என்று  ஜெயா  அம்மையாரை  ஊடவியலாளர்கள்  கேட்ட போது,  ஆம்/இல்லை  என்று  ஒரே  பதிலில் சொல்லாமல், "அவர்கள்   தரப்பில் இருந்து அப்படி ஒரு அழைப்பு வரவில்லை"  என்று  சொல்லியிருக்கார்.  ஆக அப்படி  ஒரு அழைப்பு வந்தால்  அதை  பரிசீலனை செய்யும் நிலையில் தான் இருக்கார்..!

அம்மையார் தொடர்பாக எனது இரு மதிப்பீடு 
1. இறுதி யுத்தத்தில் நடந்த கொடூரங்களை காணொளி வடிவில் கண்ட பின் ஈழ தமிழர்கள் பால் உண்மையிலே கரிசனை கொண்டிருக்கலாம்..!
இல்லை 
2 . காங்கிரசில் இருந்து திமுக வை விரட்டிவிட்ட பின்  தான் சென்று ஒட்டிக்கொள்வதற்காக  ஈழ பிரச்சனையை கையில் எடுத்து  காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கு எண்ணலாம்... 
ஏன் இந்த சந்தேகம் என்றால் நம்பி கெடுபவன் தமிழனாச்சே....

பொறுத்திருந்து  பார்ப்போம்...!!
நல்லதே நடந்தால் சந்தோசம்..!!!

அதிகாரம் எங்கள் கையில் ..!




கட்டி வச்சும் சுடுவோம்
கர்ப்பழித்தும்  கொல்லுவோம்
தீயினாலும் கொளுத்துவோம்
தெரு நாயே என்றும் காறி உமிழ்வோம்!

அரசாங்கம் என்ற அச்சாணியும் 
எங்கள் சட்டை பையில்
அதிகாரம் என்ற நாணய கயிறும் 
எங்கள்  'இரு'ம்பு  பிடியில்!

சுமைகளாகி போன மக்கள்
இப்போ நடுத்  தெருவில் , நாளை 
எதிர்காலம் தொலைத்த சிசுக்கள்
தமிழ் தாய்  கருவில்!

ஆட்டம் காணும் அவர்கள் வாழ்க்கை
அரைவாசியிலே முடிய கூடும் - இதை  
கேட்க இங்கே ஆட்கள் இல்லை 
கேளிக்கையாக்கும் கூட்டமும் தொல்லை!

மக்களுக்கான ஆட்சி  போச்சு
அவர்களே அரசியல் முதல் ஆச்சு
கடவுளோ இதற்கு சாட்சி 
காணாமல் போய்விடுமோ மனித மீட்சி!

காதலை வென்ற காமம்..!


பெண்கள் விடயத்தில்
பெரும் "கலைஞரான"
முகாலய மன்னனுக்கு
மீண்டும் மீண்டும் பசி எடுத்தது!

குடலை நிரப்புவதற்கான
உணவுப்பசியல்ல இது...,
மாறாக
உடல் வேட்கை தணிப்பதற்கானது..!

கண்ணை கவரும் பெண்டிருக்கெல்லாம்
கணவனாக ஆசைப்பட்டான்..,
அவன் தலையில் இருந்த "முடி"
அரச நாட்டு அழகிகள் பலரை
அந்தப்புரத்தில் அலங்கரித்தது..!


சுவைத்து முடிந்தவுடன்
தூர வீசும் பழங்களால்
வீரிட்டு கிளம்பும் அவன் பசி
விரைவில் அடங்கிவிடுமா என்ன?

அரச உடை
அவன் தோல் போர்த்தியிருந்ததால்
அடுத்தவன் பெண்டிர் மீதும்
அவன் கண்கள் பாய முடிந்தது,
அவ்வாறே அகப்பட்டுக்கொண்டாள்
அபலை பெண் மும்தாஜ்;
காமம் கொண்டவனுக்காய்
தன் கணவனை இழந்தாள்!

முகாலயன் பசி போக்கியதால்
பதின்நான்கு கருவுற்று
பின்னொரு நாளில்
அவ்வுடலில் இருந்து பிரிந்தாள்!

பசி தீர்த்தவள்
பாதியிலே போனதால்
மன்னர் மனப்பிரமை கொண்டார்
மரணித்த தன் காமத்தை
காதல் என்ற பெயரில்
கல்லறையாக எழுப்பினார்..!

காமத்தை வென்றவன்
காதல் செய்யான் என்றுணர்த்தும்
ஷஜகானின் அடையாளமாய்
தாஜ்மகால்..!

பிற்குறிப்பு - முதலாவது படம் காசி ஆனந்தன் அவர்களுடையது.

இலங்கைக்கு பொருளாதார தடை ..!!


ஒருவனுடைய   மிக  நெருங்கிய  நண்பனும், கொடும்  எதிரியும் ஒத்த முனையுள்ள  இரு காந்தங்கள் போல ஒரே வீட்டில் வசித்துவருகிறார்கள். இங்கே எதிரியை அழிக்கும் நோக்கம் மட்டும்  கொண்டு அந்த வீட்டின் மீது   தீ வைக்க  எண்ணுகிறார்கள்...! காரணம், நண்பன் பாதுகாக்க பட வேண்டும்...! இது எந்த விதத்தில் நியாயம்?  வீட்டில் தீ வைக்கும் போது அங்கே வசித்துவரும் நண்பனும் பாதிக்கபடுவானே..!!   இதே நிலை தான் இன்று; இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற நோக்கம்  கொண்டு சில கருத்துக்கள்  போராட்டங்கள்  பரப்பபடுகின்றன...


அப்படி ஒரு தடை ஏற்ப்படுத்தப்பட்டால் பாதிக்கப்படப்போவது  'அங்கே வாழும் தமிழர்களும் தான்' என்று சம்மந்தப்பட்டவர்கள்  உணராதது  அறியாமையா..!  அதிலும் யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான்  மிக  பெரிய  பாதிப்புக்கள் ஏற்படும் என்பது நிதர்சனம்..

ஒருவேளை  புலம்பெயர்  தமிழர்கள் நாட்டிலுள்ள  தமிழர்களை கவனித்துக்கொள்வார்கள்  என்று எண்ணுகிறார்களோ என்னமோ..! ஆனால் அது நடக்காதது.  குழு அமைத்தோ, இல்லை தொண்டு நிறுவனங்கள் மூலமோ புலம்பெயர் தமிழர்கள் உதவுவதை சிறீலங்கா அரசு அனுமதிக்காது.  அதுவும் தமிழர்களால் பொருளாதார தடை என்ற ஒன்று இலங்கைக்கு ஏற்படுத்தப்பட்டால் அந்த பாதிப்பு  தமிழர்களை அதிகம் சுமக்க வைக்கவே  இலங்கை அரசு  முயற்சிக்கும்  என்பது  இனப்பிரச்சினை பற்றிய சிறு அறிவு கொண்ட சிறு பிள்ளைக்கும் விளங்கும்.

சில தமிழ் ஊடகங்களும்  இப்படியான கருத்துக்களை பரப்புகின்றன.. அவர்களின் எண்ணமெல்லாம்  தாம் தான் தமிழ் தேசியத்துக்கான ஊடகம், தாமே தமிழர்களை வழிநடத்துகிறோம் என்பது.. ஆனால் இவர்களிடம் ஏனைய சக ஒத்த கொள்கை  கொண்ட  ஊடகங்களுடன் ஒரு துளி அளவுக்கும் ஒற்றுமை இல்லை.  அப்பப்போ தாக்குதல், கிண்டல், குத்தல்  செய்திகளை மாறி மாறி வெளியிடுவார்கள்.

இதில காமெடி என்னவென்றால் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்று செய்தி வெளியிட்ட ஊடகம்  ஒன்று,  இன்று சிறீலங்கா டயலாக் தொலைபேசிக்கு  தங்கள் முன் பக்கத்தில் விளம்பரம் செய்கிறார்கள் ஹிஹி... என்னவென்று சொல்வது  இவர்களை.  ஆக தங்கள் சுயலாபத்துக்காக (விளம்பரத்துக்காக) எதுவும் செய்யும் நிலையில் தான் இப்போ இவர்கள்...!

ஜீ எஸ் பீ பிளஸ் வரிச்சலுகையை ரத்து செய்வது என்பது ஐரோப்பிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தன்னிச்சையான முடிவு.  இதனால்  பாதிப்பு பெருமளவில் தமிழர்களுக்கு இல்லை, என்றாலும் இலங்கை பொருளாதாரத்தில் விழும் பாரிய அடிகள் தமிழர்களையும் சென்று தாக்கும் என்பது  நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்பது  இல்லை.



நிதானமாக நடக்க வேண்டிய தருணம் இது.. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தப்படவேண்டும், அப்படி நிறுத்தப்பட்டால் தான் எதிர்காலத்தில் வரும் அரசாங்கங்களுக்கு பயத்திலாவது சிறுபான்மை இனம் மீதான  பார்வை மாறும்.. இதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால்  இதற்காக தேர்வு செய்யும் வழி எம்மக்களை பாதிக்காததாக இருக்க வேண்டும்.. மக்களுக்காக தான் மண்ணே ஒழிய  மண்ணுக்காக மக்களா..!!

இவன் ஒரு வம்பன்..!




இவன் ஒரு வம்பன் ,
இரண்டு நாய் தெருவிலே
இன்புற்றிருந்தால்  பிடிக்காது
பொல்லை கொண்டு அடித்தோ..
கல்லை தூக்கி எறிந்தோ..
கண்ணில் படும் போதெல்லாம்
கலைத்துவிடுவான் காத தூரம்..!

வாயில்லா ஜீவன் அது
வம்பனை காணும்போது
வாலை சுருட்டிக்கொண்டே ஓடிவிடும்,
வாய் மட்டும் இருந்திருந்தால்
"பாடையில போவானே" எண்டு
வஞ்சிக்கும் இவனை கண்டு..,

நாட்கள் நகர்ந்த ஒருநாள்
வம்பன் வரும் வழியில்
வாலை மடித்து துஞ்சிக்கிடந்த நாய்
வசதியாய் போச்சு இவனுக்கு, இருந்தும்
வம்பனுக்கு ஒரு சந்தேகம்
வாலும் ஆடவில்லை - அதன்
வாயும் அசையவில்லை
வருத்தத்தில் செத்திருக்குமோ..!

முடிவு செய்துகொள்ள , அதன்
மூக்கு மேல விரலை வச்சான்
மூச்சு வருதா ..?

அவன் எதிர்பார்க்கவில்லை;
அடுத்த நொடியிலே
"அவ்" என்று ஒரு கடி..,
அத்தனை நாள் ஆத்திரமும்
மொத்தமாய் சேர்த்து வச்சு.!

பாவம் வம்பன் ,
மூக்கு மேல வச்ச விரலில்
மூணு பல் ஆழமாய் - இப்போ
ஆசுப்பத்திரிக்கு போய் வாறான்..,
அஞ்சு ஊசி போட்டாச்சாம்
அடுத்து வரும் நாட்களில்
மிச்சம் இருபத்தி ஆறு..!

சிறந்த விளையாட்டு செய்தியில் மகிந்தர் ! ( சிறு வரலாறு)

இந்த வாரத்தின்   சிறந்த   விளையாட்டு  செய்தி  என்று  சொல்வதை  விட இந்த ஆண்டின்  மிகச் சிறந்த விளையாட்டு  செய்தி  என்று  சொல்வதே  சாலப்பொருந்தும்.. 

மகிந்த ராஜபக்சே  புத்த பெருமானின்  இரத்த உறவினராம்,  அது  மட்டுமல்லாமல்லாது  துட்டகைமுனு  மகிந்தவுக்கு பூட்டன் முறையாம்..  இவ்வாறு  சொல்லியிருக்கிறார்  இலங்கையின் பிரபல  சினிமா நடிகர் ஜாக்சன் அந்தனி.

உண்மையிலே இந்த  விடயத்தை  வரலாற்று ரீதியா ஆராய முற்பட்டால் விடை  'மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும்  முடிச்சு போட்ட கதையாக தான் வரும்'.


கி .பி  5 -6 ஆம் நூற்றாண்டுகளில்  பவுத்த மதத்தை  முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட   மகாவம்சம்  விஜயனின் வருகையுடன் ஆரம்பிக்கப்படுகிறது.  அதிலே கதாநாயகனாக   துட்டகைமுனு முன்நிறுத்தப்படுகிறான்.  ஆனால் மகாநாமதேரரால்  எழுதப்பட்ட  இந்த  மகாவம்சத்தில் அநேகமானவை  புனைவுகள் என்பது பலர் அறிந்தது.   உதாரணமாக புத்தர்  இலங்கைக்கு மூன்று  தடவைகள்  வந்ததாக மகா வம்சத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் மகாவம்சம் தவிர்ந்த  வேறு எந்த புராணங்களிலோ வரலாறுகளிலோ புத்தர் இலங்கை சென்றதாக குறிப்பிடப்படவில்லை.  அதே போல புத்தர் இந்தியாவை விட்டு வேறு இடங்களுக்கு  சென்றதாகவும் இது வரை அறியப்படவில்லை  ( அன்று இந்தியா  என்பது   பாகிஸ்தான் நேபாளம்  போன்ற  நாடுகளையும் உள்ளடக்கி இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது)

காக்கவண்ணதீசன்  மற்றும்  விகாரமாதேவிக்கு  மகனாக பிறந்தவன் துட்டகைமுனு.   இவன் ஒரு பவுத்தன். பவுத்த  மதத்தை தளுவியவனே  ஒழிய  இவன் சிங்களன் அல்ல.  இவன் காலத்தில் (கிமு 101 -77 )  சிங்களம் என்ற இனமோ சிங்களம் என்ற   மொழியோ இருந்திருக்கவில்லை.

சிங்களம் என்ற  இனம் கிறிஸ்துவுக்கு  பின்னர்  3 - 4  ம் நூற்றாண்டுகளில் ஒரு தனித்துவமான  மொழி  பேசுபவர்களை  அடிப்படையாக கொண்டு உருவாகியதாக  அறியப்படுகிறது.   இதற்க்கு உதாரணமாக   'ஒரு  இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  நூலான  மாகவம்சத்தை எழுதிய மகாநாம தேரர் அந்நூலை  அவ்வினத்திற்க்கான  பிரத்தியோக மொழியில்,  அதாவது சிங்கள மொழியில் எழுதவில்லை , பாளி மொழியிலே  எழுதியிருந்தார் '.  ஆக அக்காலத்திலே ஒரு வரலாற்று  நூலை எழுதக்கூடிய வளர்ச்சியை சிங்கள மொழி கொண்டிருக்கவில்லை என்பதற்கு  இது கூட சிறு உதாரணம்.  இது மட்டுமல்லாது அந்த காலத்து வரலாற்று கல்வெட்டுக்கள் பல பாளி  என்ற ஒரு மொழியிலே எழுதப்பட்டிருக்கிறது. 

நாகர்  இனத்தை பூர்வீகமாக கொண்டவன்  துட்டகைமுனு.  அதே போலவே துட்டகைமுனுவுடன்  போரிட்டு  மடிந்த எல்லாளனும் நாகர் இனத்தை  சார்ந்த தமிழனாக இருந்தான்.  நாக வழிபாட்டை கொண்ட  நாக இனத்தவர்கள் பிற்காலங்களில்  தமிழர்களாக  மருவியதாக  சொல்லப்படுகிறது.  இதற்கு உதாரணம்  இன்று கூட  தமிழர்கள் மத்தியில் நாக வழிபாடு உள்ளது.  அது மட்டுமல்லாது  நாக என்ற  சொல்லை அடிப்படையாக  கொண்ட பெயர்கள் இன்றும் தமிழர்கள் மத்தியில் உள்ளது. ( நாகலிங்கம், நாகதம்பிரான்...)  ஆக ஒரு விதத்தில் எல்லாளன் மற்றும்  துட்டகைமுனுவின்  பூர்வீகம் ஒன்று,  இரத்த உறவுகள்.



அதே போல  துட்டகைமுனு  எல்லாளன் யுத்தத்திலே  துட்டகைமுனு  படையில்  பவுத்த  மதத்தை தழுவிய தமிழர்களும் , எல்லாளன்  படையில் பவுத்த  மதத்தை தழுவிய தமிழர்களும்  இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.  இப்படி இருக்க  எல்லாளன் துட்டகைமுனு யுத்தத்தை தமிழர் சிங்களவர் யுத்தமாக கருத முடியாது.  அத்துடன் இன்று  உள்ள சிங்களவர்கள் பலர்  தமிழ் பூர்வீகத்தை கொண்டவர்கள்.  ஆனால் தம்மை ஒரு தனித்துவமான இனமாகவும் வலிமையான  இனமாகவும்  காட்டுவதற்கு  இவர்களுக்கிடையிலான  யுத்தத்தை தமிழர்  சிங்களவர்  யுத்தமாக  மகாவம்சத்தின்  ஆசிரியர் புனைந்துவிட்டார்.  இது  போன்ற புனைவுகளே இன்றைய இனப்பிரச்சனைக்கும் அழிவுகளுக்கும் அடிப்படை  காரணமாக அமைந்துவிட்டது.

ஆக  கி.மு (560 - 480 ) ஐந்தாம் நூற்றாண்டுகளிலே  வட  இந்தியாவில் வாழ்ந்த புத்தபெருமானுக்கும்   கி.மு (101 - 77 )  முதலாம் நூற்றாண்டுகளிலே இலங்கையை  ஆட்சி செய்த  துட்டகைமுனுவுக்கும்  சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை.

அப்படி இருக்க  கிறிஸ்துவுக்கு முன்  முதலாம் நூற்றாண்டில்  சிங்களம் என்ற இனம்   உருவாகுவதற்கு முன்னர் வாழ்ந்த துட்டகைமுனு  இரண்டாயிரம் வருடங்கள் கடந்த நிலையில் மகிந்தவுக்கு எப்படி  பூட்டனாவார்.  புத்தபெருமானுக்கு எவ்வாறு  ரத்த சம்மந்த உறவினராவார்...!!!

ஆனால்  துட்டகைமுனு  பவுத்த மதத்தை  தளுவியிருந்தானே ஒழிய  புத்தரின் சிந்தனைகளுக்கிணங்க  வாழவில்லை.  'நான் புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே  யுத்தம் செய்கிறேன்'  என்று  கூறிவிட்டு  எல்லாளனுடனான யுத்தத்தை மேற்கொண்டான்  என்று மாகாவம்சம் குறிப்பிடுகிறது.  ஆகவே  இந்த விதத்தில் வேண்டுமென்றால் மகிந்தருக்கு  துட்டகைமுனு  பூட்டனாக இருக்கலாம் .  ஆனால் புத்தருக்கு  இரத்த உறவு என்பது  'கேக்கிறவன் கேனயனாய் இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்'  என்பது போல.

முன்னரெல்லாம்  அரசனின்  பெருமைகளை  புகழ் பாடி  பொற்கிழி பெற்று செல்வார்களாம்  புலவர்கள். ஆனால் இன்று அதிகாரவர்க்கங்களுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் ஆளும் வர்க்கத்தை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக புகழ் பாடினாலே  பிழைக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டது .

சுரேஷ் ரைனா+ இந்திய அணி = ஒருநாள் தொடர்... சாதிக்குமா..?


உலகக்கிண்ண போட்டிகள்,  ipl போட்டிகள்  என்று மிக நீண்ட தொடர்களுக்கு பின்னர் மிக சிறு இடைவெளியில் மீண்டும் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

கிரிக்கெட் என்றாலே சலிப்பை உண்டுபண்ணும் அளவுக்கு தற்சமயம் தொடர்ச்சியாக இடம்பெற்ற போட்டிகளால் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்ப்படுத்துமா என்பது கேள்விக்குறியே..!


உலகக்கிண்ணத்தை வென்ற தெம்பு இருந்தாலும் அவ் வென்ற அணியில் விளையாடிய முன்னணி வீரர்கள் ஓய்வு காரணமாக இளம் இந்திய  அணியே ஒரு நாள் மற்றும் இருபதுகு இருபது  போட்டிகளில்  பங்குபற்ற உள்ளது.

காம்பீர் யுவராஜ் காயம் காரணமாக வெளியேற  மீண்டும் ஒரு முறை அணியை வழிநடாத்தும் பொறுப்பு சுரேஷ் ரைனாவிடம் வழங்கப்பட்டுள்ளது.. சாதிப்பாரா..? இல்லை சறுக்குவாரா..?   உப தலைவர் பொறுப்பை ஹர்பஜன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.  அத்துடன் உலகக்கிண்ண போட்டிகளுடன் விலகிக்கொண்ட  கேரி கிர்ஸ்டனுக்கு பதிலாக நியமனம் பெற்றுள்ள புதிய பயிற்சிவிப்பாளர் டங்கன் பிளச்சருக்கு  இது முதலாவது தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தற்சமயம்  ரைனா , விராட் ஹொலி  சிறந்த பார்மில் இருப்பது   இந்திய அணிக்கு பலம்.  பலர்  எதிர்பார்த்த,  ipl   போட்டிகளில் சிறப்பாக செயற்ப்பட்ட வீரர்களான அம்பாதி ராயுடு , பவுல் வால்ததி, இர்பான் பதான் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை.  அப்பாதி ராயுடு மும்பை இந்தியன் அணி சார்பாக சிறப்பாக விளையாடியவர்.  இவர் தேர்வு செய்யப்படாமைக்கு கிரிக்கெட் (icl ) அரசியல் காரணமாய் இருக்குமோ ..?  மனோஜ் திவாரியை விட இவர் செயற்ப்பாடு ipl போட்டிகளில் சிறப்பாகவே இருந்தது..

பஞ்சாப் அணிக்காக வால்ததி ஆரம்பத்தில் சிறப்பாக செயற்ப்பட்டாலும் இறுதி போட்டிகளில் குறிப்பிடும் படியாக இல்லை, அத்துடன்   இருபதுக்கிருபது போட்டியை கணக்கில் கொண்டு  "ஒரு T20 காக"" என்ற காரணமும் தேர்வு செய்யப்படாமைக்கு காரணமாக இருக்கலாம்.

மற்றையது  இர்பான் பாதன்,  இவரது  துரதிஷ்ரம்  ipl போட்டிகளில் இவர் போகும் அணி மோசமாக  சொதப்புகிறது . முன்னர் பஞ்சாப்,  இப்போ டெல்லி...! இருந்தாலும் அவ் அணி சார்பாக சிறப்பாகவே செயற்பட்டார்.  உதாரணமாக அவர் அணியில் இருந்த 'தென்னாபிரிக்க புயல்' மோர்க்கலிலும் பார்க்க இவர் செயற்ப்பாடு சிறப்பாகவே இருந்தது,  மட்டுமல்லாது  சச்சின் மற்றும் மைக் ஹசியை கிளீன் போல்ட் ஆக்கியதை மறக்க முடியாது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக  களமிறங்கக்கூடிய சச்சின், சேவாக், காம்பீர் இல்லாத  இடத்தை நிரப்ப பார்த்திவ் பட்டேல் , தவான் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்..  அத்துடன் ரோகிற் சர்மாவுக்கு கடந்த தென்ஆபிரிக்க தொடருக்கு பின்னர் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. வாய்ப்பை சரியாக பயன்படுத்துவாரா..?  விக்கெட் கீப்பராக பார்த்திவ்வுடன், சாகாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் .


ipl போட்டிகளில் சிறப்பாக செயற்ப்பட்ட அஸ்வின், பத்திரிநாத் என்று  தமிழக வீர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். எனினும்  ஹர்பஜன் இருக்கும் போது அஸ்வின் பதினொருவர் அணிக்குள் உள்வாங்க படுவாரா என்பது சந்தேகமே..!

பந்துவீச்சாளர்களில் மீண்டும் பிரவீன்குமார் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.. இவருடன் இசாந்த் , முனாப் பட்டேல் , வினய் குமார், சுழல் அமித் மிஸ்ரா. .. சிறீசாந் கழட்டி விடப்பட்டமை ஆறுதல் :-)  ( டெஸ்ட் போட்டிகளில் தொற்றிக்கொண்டுள்ளார்)

மறு புறத்தே மேற்கிந்திய தீவு அணியை எடுத்துக்கொண்டாலும் டரன்  சாமியை தலைமையாக கொண்ட முன்னணி வீரர்கள் இல்லாத இளம்வீரர்களுடனே  முதல் T20 மற்றும் முதல் இரு ஒரு நாள் தொடர்களில் களமிறங்குகிறது.  ipl போட்டிகளிலே ஒரு கலக்கு கலக்கிய கிறிஸ் கெயில் இடம்பெறாதது  அவ்வணியின் துரதிஸ்ரமே..  மற்றொரு முன்னணி வீரர்  சந்தர்போலுக்கும் இடம் வழங்கப்படவில்லை...

தொடர்ந்து சொதப்பி வரும் சர்வான் அணியில் இடம்பிடித்துள்ளார்.  இவர் எழுச்சி பெறும் பட்சத்தில் அவ்வணி இன்னும் பலம் பெற வாய்ப்புள்ளது.. மற்றும்படி பாகிஸ்தானுடன் மோதி 3 -2   என்ற கணக்கில் தோற்ற  அணியே தேர்வு செய்யப்பட்டுள்ளது. முன்னர் ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் முடிசூடா முன்னர்களாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது பல்வேறு பிளவுகளால் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பது ஆரோக்கியமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை தரும் விடயமே. 


 'இதுவரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற' ஆறு  ஒருநாள் தொடர்களில் இரண்டு  தொடர்களை மட்டுமே  இந்தியா  கைப்பற்றியுள்ளது.  இதில் இறுதியாக 2009 இல் நடந்த தொடரை தோனி தலைமையிலான  அணி 2 -1 என்ற ரீதியில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. ஆக இம்முறை இளம் வீரர்களை கொண்ட ரைனா அணி சாதிக்குமா..?  இல்லை சறுக்குமா..?

இவர்களுக்கு எப்போ கல்யாணமாச்சு!


சுவாரசியம் இல்லாத வாழ்க்கை சுண்ணாம்பு அடிக்காத சுவர் போல.. அழகாகவும்  இருக்காது, கூடவே  ஒருவித வெறுமையும்... ! (யார் சொன்னது என்று எல்லாம் கேட்க்கப்படாது!) 

சமீபத்தில் "கல்யாணம்" என்ற கருவில் எழுதவிருந்த பதிவுக்கு புகைப்படம் தேவைப்பட்டது. ஆகவே எம்பெருமான் கூகுளின் உதவியை நாடினேன். வழக்கம் போல கூகுளில் இமேஜ்'ல்  சென்று கல்யாணம் என்று டைப் பண்ணி search 'ஐ  அழுத்தினேன். என்ன அதிசயம், வந்த முதலாவது படமே காமெடித்தனமான  அதிர்ச்சியை தந்தது. ஆமாங்க இவர்கள்  எப்போ கல்யாணம் செய்துக்கிட்டார்கள்!

பாருங்கோ, சூரியா ஜோதிகாவுக்கு கூட இரண்டாவது இடம் தான் 

எவரோ  இந்த இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்து புகைப்படத்தை இணையத்தில் உலாவ விட்டுவிட்டார்கள். கொடும, அது கூகுளில்  முதல் பக்கத்தில முதலாவது புகைப்படமாக  வந்து நிற்கிறது.  இதை சம்மந்தப்பட்டவர்கள் பார்த்திருந்தால் அவர்களின் மனநிலை எப்பூடி இருந்திருக்கும்;-)

-----------------------------------------------------------------------------------------------------------------

பெரிய ஒரு புயலில்  இருந்து விடுபட்டு வெள்ளப்பெருக்கில்  மாட்டிக்கிட்தோ தமிழகம்!  திமுக ஆட்சி ஒழிந்ததாக சந்தோசப்பட்டது  நீண்ட நாள் நிலைக்கவில்லை. சில வாரங்களிலே தான் ஆட்சிக்கு வந்ததன் அடையாளமாக ஜெயா மேடம் தன் முதல் அதிரடி நடவடிக்கையை நிகழ்த்திவிட்டார்.  கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது,  இது அனைவரும் அறிந்த விடயமே.

ஆனால் என் கேள்வி! கலைஞர் ஆட்சியின் போது தமிழர்களின் புது வருடப்பிறப்பு தை முதல் நாள்  என்று நடைமுறைப்படுத்தப்பட்டது, (எனக்கும் இது தான் சரி என்று தோன்றுகிறது)  ஆனால் இப்போ ஆட்சி மாறியாதால் கூடவே இதுவும் மாறுமா?  மீண்டும் சித்திரை மாதத்தில் தான் தமிழர்களின் புதுவருடம் என்று கொண்டுவரப்படுமா..?



 எதிர்காலத்தில் "தை முதல் தேதி தமிழர்களின் புதுவருசம்" என்று எண்ணும்  போதெல்லாம் அங்கே கலைஞர் தான் முன் நிற்பார்,  இது ஜெயா மேடத்துக்கு பிடிக்காதே!  எது எப்படியோ இந்த இரண்டு நபர்கள் (கட்சிகள்)  குடுமிச்சண்டையில்(!)  உருளப்போவது என்னமோ  தமிழர்கள் தலை தான்!

------------------------------------------------------------------------------------------------------------------


கடந்த பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டியிலே இலங்கை சார்பாக பங்குபற்றி தங்கம் வென்ற  குத்துச்சண்டை வீரர் மஞ்சு  வன்னியராட்சி  "தடை செய்யப்பட்ட" ஊக்கமருந்து பாவித்ததாக சர்ச்சையில் சிக்கியது  அறிந்ததே.
இப்பொழுது மீண்டும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உப்புல் தரங்க உலக கிண்ண போட்டிகளிலே "தடை செய்யப்பட்ட"" ஊக்கமருந்து பாவித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது...

இதற்க்கு முன்னர் தமிழர்கள் மீது "தடை செய்யப்பட்ட" குண்டுகள் வீசி அநியாயமான வழியில் யுத்தம் செய்ததாக ஐநா வரை விசாரணை  நீண்டு கொண்டுள்ளது......,  அதற்கிடையில் மீண்டும் ஒரு "தடை செய்யப்பட்டதா!".    இது  இலங்கையின்  "தடை செய்யப்பட்ட" காலப்பகுதி போல!! (எல்லாவற்றிற்கும்  ஒரு நாள் நியாயம் கிடைக்காமலா போய்விடும்!)