அவள் மேல் காதல் ..!


அந்தி மாலை பொழுது 
ஆட்கள் அற்ற தெருவு
அழகான பொண்ணு
அவ மேல என் கண்ணு!

முதற்ப்பார்வையிலே
முற்றும் இழந்தேனடி
முங்கி எழுந்த கடலினிலே
முத்தெடுத்ததாய் உணர்ந்தேனடி!

உன் கண்களில் எழுந்த மின்னலடி
என்னை கவர்ந்து சென்றது சில நொடி
இனி எண்ணமெல்லாம் நீயடி - எம்
இதயத்தில் வேண்டாம் இடை வெளி!இன்று என்னடி
பெண்ணே நகர மறக்குது
இதயம் நீயின்றித் துடிக்க மறுக்குது
வானம் கறுக்கும் போதெல்லாம், உன்
கனவு வந்து கண்ணை மறைக்குது!

தனிமை மட்டுமே எனக்கு பிடிக்குது
பெண்ணே உன் மேல் தாகம் எடுக்குது
கரம் பிடிக்கும் நாளை எண்ண
கால ஓட்டம் முள்ளாய் தைக்குது!


கிட்ட நெருங்கும் போதெல்லாம்
எட்ட செல்லும் வானமா நீ ?
கரையில் நின்று பார்ப்பவர்க்கு
கடலை தொடும் அந்தி நிலவா நீ ?

படகோட்டியும்  நானாவேன்
பறக்கும் தட்டும் போலாவேன்
பெண்ணே உன்னை கைது செய்ய
காதல் என்ற காவலனாவேன்...! 


மச்சக்கார டோனி...


வேறு என்ன தான் தலைப்பு வைக்கிறது.... டோனியின் வெற்றியின் ரகசியம் அவரின்  அதிஷ்டமா? இல்லை அவருக்கு கிடைக்கும் அணியின் திறமையா? என்று எண்ணும் நேரங்களில் எல்லாம்  டோனியின் அதிஷ்டம்  தான் என்று இறுதி முடிவு  எடுக்க தோன்றுகிறது.


யாரும் நினைத்து பார்த்திராத வெற்றி..!

இந்த போட்டியில் வென்றால் தான் இறுதி போட்டி என்ற நிலையில் மிக முக்கியமான போட்டியாக சென்னை மற்றும் பாங்களூர் அணிகள் களமிறங்கியது. போட்டி  இடம்பெற்ற மைதானம்  உலகக்கிண்ண  இறுதி போட்டியில் இலங்கையிடம் இருந்து "டோனி அணி" வெற்றியை தட்டி பறித்த  மும்பை வான்கடே....!

கடந்த போட்டியில் சென்னை பாங்களூரிடம்  வாங்கிய அடி மறக்கவில்லை போலும் அதால இம்முறை நாணய சுழற்ச்சியில் வென்றவுடன் களத்தடுப்பை எடுத்துக்கொண்டார்கள்.

முக்கியமான இந்த போட்டியில பெங்களூர் சார்பாக கெயிலிடம் நிறையவே எதிர்பார்த்தாலும் இம்முறை ஏமாற்றிவிட்டார். அதே போல வில்லியர்ஸ்  கடந்த போட்டியை போல வந்த சில நிமிடங்களிலே  பெவிலியன் திரும்ப சற்று இக்கட்டில் மாட்டிக்கொண்ட அணியை  இம்முறையும் மிக பொறுப்பான, அதே சமயம் அதிரடியான ஆட்டத்தின் மூலம்  மிக நல்ல ஸ்கோர்ருக்கு   இட்டுச்  சென்ற பெருமை "இந்தியாவின் வருங்கால நட்சத்திரம்" விராத்  ஹோலிக்கே. மிகவும் பிரமாதமான ஆட்டம்..


சென்னையின் பந்துவீச்சு மோசம் தான் என்றாலும் போலிஞ்சரின் புண்ணியத்தால் 175  க்குள் கட்டுக்குள் கொண்டுவந்துட்டார்கள்.

ஒரு மிக பெரிய இலக்கோடு களமிறங்கிய சென்னைக்கு கடந்த போட்டியில் கிடைத்த கசப்பான அதே ஆரம்பம். கஸி டக் அவுட்! .   "ஏறினால் ஏற்றம் இறங்கினால் அதே வேகத்தில் இறக்கம்  "  இது விஜய் என்ற பெயரில் உள்ளவர்களுக்கெல்லாம்  பொருந்தும் போல! ,  தொடர்ந்து சொதப்பும் முரளி விஜய்  இந்த போட்டியிலும்  வந்த வேகத்தில் கடமையை முடித்து கிளம்பினார்.

அடுத்து பத்திரிநாத்! நெருக்கடியான நிலை தான், ஆனாலும் தொடர்ந்து பந்துகளை வீணடித்துக்கொண்டு நிற்கும் போது ஆட்டத்தை பார்க்கவே வெறுப்பாக இருந்தது  மட்டுமல்ல தோல்வி என்றே எல்லோரும் முடிவு செய்திருப்பார்கள். எனினும் ஒருவாறு சமாளித்து ஆடி தன் பங்குக்கு 34 ஓட்டங்களுடன் வெளியேறினார். அது வரை படு மந்தமாக போய்க்கொண்டிருந்த ஆட்டம்  டோனி  களமிறங்கவும்  சற்று விறுவிறுப்பாக தொடங்கியது.
ஒரு பக்கத்தால கெயில் சிறப்பாக பந்து வீசிக்கொண்டு இருந்தாலும் மறு பக்கத்தால வெக்டோரி , ஹோலி ,மிதுன் என்று ஓட்டங்களை வாரி வழங்கினார்கள்.

இருந்தாலும் பதினாறாவது ஓவர் வரை வெற்றி மிக பிரகாசமாக  பாங்களூர் பக்கமே இருந்தது.  பதினேழாவது ஓவர் வீச வந்த சகீர்................! ஓவர் முடிவில் "எதற்காக இவனிடம் கொடுத்தேன்"  என்று வெக்டாரியை சிந்திக்க வைக்கிற அளவுக்கு அந்த ஓவரில் வீழ்ந்தது அடி...  மூன்று சிச்சர் அடங்கலாக மொத்தம் இருபது ஓட்டங்கள்.  அந்த ஓவரில் தான் வெற்றி பாங்களூரிடம் இருந்து விலக ஆரம்பித்தது.  அப்படியே  பத்தொன்பதாவது ஓவரில் மூன்று சிச்சர்களை வாரி வழங்கிய சிறிநாத் அரவிந்த் சென்னையின் வெற்றியை ஓரளவுக்கு உறுதிப்படுத்தினார்.இறுதி ஓவர்! வேண்டியது பதினொரு ஓட்டங்கள்! வெக்டோரி   பந்துவீச்சு!

களத்திலே தாண்டவம் நடக்கும் போது என்ன தான் செய்ய முடியும்!   நான்காவது பந்திலே சிக்ஸ்சருடன் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.

மோர்க்கல் ஆடியது....... ஆட்டமா அது! என்னா ஒரு அனல் பறக்கும் அடி! மொத்தம் மூறு சிச்சர்களுடன் பத்து பந்தில் இருபத்து எட்டு ரன்கள் ....

இந்த போட்டியிலே ரைனாவுக்கு ஒரு சபாஸ், வழமைக்கு மாறாக நிலைமையை அவதானித்து ஆடிய மிக பொறுப்பான ஆட்டம். சென்னை வெற்றி பெற்றதால ஹோலிக்கு கிடைக்க வேண்டிய ஆட்ட நாயகன் விருதையும் தட்டிக்கொண்டார் .

விராட் ஹோலி ஆடிய அந்த அற்புதமான ஆட்டம் விழலுக்கு இறைத்த நீராய் போனதில் சிறு  வருத்தமே.  எனினும் இதுவரை இடம்பெற்ற 71  போட்டிகளிலே மிக விறுவிறுப்பான போட்டிகள் வரிசையில் இந்த போட்டியையும் சேர்த்துக்கலாம்.

இனி நாளை (25 ) இடம்பெறும் மும்பை கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியோடு சென்னை அணி வரும் 28 ம் திகதி இறுதி போட்டியில் சந்திக்கும். அநேகமாக போன முறை இடம்பெற்ற ipl போலவே இம்முறையும் இறுதி போட்டியில்  சென்னை  மும்பையை எதிர்கொள்ளும்  என்று  நினைக்கிறேன். அப்படி வந்தால் சென்னையை பழி வாங்க மிக நல்ல ஒரு சந்தர்ப்பமாக மும்பைக்கு அமையும். இதுவரை இடம்பெற்ற ipl லீக் ஆட்டங்கள் சலிப்படைய  செய்திருந்தாலும்  இனி வரும் இறுதி மூன்று போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கும்.

கடவுள் ஏன் மனிதனை இப்படி படைத்தார்?...


இந்த  உலகிலே உயிரினங்களை படைக்கும் முன்னர் இறைவனுக்கு ஒரு சந்தேகம் வந்திச்சாம். எதிர்காலத்தில் உலகில்  உயிரினங்களின் எண்ணிக்கை  அளவுக்கு அதிகரித்துவிட்டால் என்ன செய்வது ? என்று,

நீண்ட கால ஜோசனையின் பின்னர்  அவருக்கு ஒரு சிந்தனை  தோன்றியதாம்.  படைக்கும் ஜீவராசிகளிலே ஒன்றை மட்டும் முற்றிலும் வித்தியாசமாக படைத்து விடுவது என்று.

 அந்த உயிரினம் தன்வாழ்க்கை காலத்தில்  தாமாகவே தம்மை அழித்துக்கொள்வது  போல இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம்...

பேராசை என்ற வியாதியை தமக்குள் ஏற்ப்படுத்துவதன் மூலம்  அந்த உயிரினம் தமக்கான தேவைகளை  அதிகரித்துக்கொண்டே செல்லவேண்டும், இதனால்   போட்டி ,பொறாமை ,பழிவாங்கும் குணம் போன்ற  அடிப்படை பண்புகளை  கொண்டு  தமக்கும்  தம்மை சூழ்ந்து  உள்ளவற்றுக்கும் நிகழ்காலம் எதிர்காலம் என்று என்றுமே அழிவுகளை  உண்டாக்கிக்கொண்டு  இருக்க வேண்டும். 

இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் ஒரே வழி  அந்த உயிரினம் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை கொண்டிருக்க வேண்டும் என்று கடவுள் முடிவு செய்தாராம்.

ஆகவே கடவுள் தான் படைக்கும் உயிரினங்களில்  "மனிதன்" என்ற உயிரினத்தை தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் ஆறு அறிவை கொடுத்து படைத்து விட்டாராம்.


 இது சிறு வீடியோ தான் ஆனால் பார்த்தவுடனே புல்லரித்துவிட்டது. நீங்களும் தவற விட்டுவிடாதீர்கள்.


பிற்குறிப்பு :-  1. மேற் கூறிய கதை என் கற்பனை மட்டுமே.  இருந்தாலும் 'மனிதன் படைப்பின் ரகசியம்'  இதுவாக தான் இருக்குமோ???

2. வீடியோ முகப்புத்தகத்தில் சுட்டது.

இந்த நாட்கள்...!!


இரண்டு வருடங்கள்
இமைப்பொழுதில் கடந்த போதும்
நினைவுகளில் இருந்து அகல மறுக்கும்
கொடிய நாட்கள்!

வாழவேண்டிய வயசிலே 
வசந்தங்களை பறித்து 
கயவர்களால் நயவஞ்சமாக 
எம் உறவுகளின் உயிர்கள் குடித்து 
உடல்கள் புதைக்கப்பட்ட நாட்கள்!

பள்ளி பருவத்தில்
சிட்டா திரிந்த 
சின்னஞ்ச் சிறுசுகளை
பெத்தவள் முன்னாலே
பிணமாக போட்ட நாள் இது!

பசி கொண்டு வரும்
பருந்தை கண்டு
குஞ்சுகளை காக்கும் கோழியாக,சீறி
பறந்துவரும் கொடும்
குண்டுவீச்சு அரக்கனை கண்டு 
குழந்தையை காக்க,
தன் உடலை 
துண்டுகளாக கொடுத்த
தாயவள் நாள் இது!

உறவை நினைந்து
கடல் கடந்த ஐரோப்பிய வீதிகளில்
நடை பிணங்களாக
நம்மவர்கள் கதறிய நாள் இது ,உலகின்
இறுதி சொட்டு மனிதாபிமானும்
புதைந்து போன
நாள் இது!

தொடர்ந்து துரத்தும்
போர் என்ற அரக்கனிடம் இருந்து
தம்மை காத்துக்கொள்ள,
ஓடி ஓடி
கால்கள் நலிந்து
முள்வேலிகள் நடுவே
முகத்தை புதைத்துக்கொண்ட 
கரி நாள் இது!

நேரில் கண்டவர்களும்
நிழற்ப்படத்தில் பார்த்தவர்களும்
கண்களால் உள்வாங்கி
இதயத்தில் புதைத்துவைத்த
அந்த உருவம்,இன்று
இல்லையே என்று தெரிந்ததும் 
இதயமே நொறுங்கிப்போன
நாள் இது.

பசுமை  படர்ந்து
செழித்து வளர்ந்துநின்ற மரத்தை
அழிக்கும் நோக்கம் கொண்டு, 
பக்கவேர்களை சிதைத்து சென்று
ஆணிவேரை
வெட்டி வீழ்த்திய  நாள் இது!

பட்டு போகுமோ
இனி
அந்த மரமும்  ..!!

கோ(பால)புரத்தில் இருந்தவர்கள்..!"ஒருவனை  பார்த்து  நீ  நாசமாய் போ  என்று சொல்வதற்கு பதிலாக  பத்து பிள்ளை குட்டி பெத்துக்கோ என்று  சொன்னால் போதுமாம் அவன் எதிர்காலத்தில் நடுத்தெருவுக்கு வர" இப்பிடி யாரோ ஒரு பெரியவர் சொன்னதாய் நினைவு, இன்று கலைஞரின் இந்த படு தோல்வியை அறிந்தவுடன்  என் நினைவுக்கு வந்தது தொலைச்சிடிச்சு. என்னை பொறுத்தவரை கலைஞர் வெல்வாரா தோற்பாரா என்று எதிர்வு கூற முடியாமலே இருந்து. காரணம் கலைஞரின் சானக்கியத்துக்கும் அரசியல் முதிர்ச்சிக்கும் ராஜதந்திரத்துக்கும் (அது தாங்க குள்ளநரித்தனம்) முன்னாடி அம்மா எல்லாம் சும்மா.. ஆனால் இப்படி மோசமாய் தோற்பார்  என்று நான் மட்டுமல்ல கலைஞரின் பரம விரோதி கூட எண்ணியிருக்க மாட்டான். என்ன தான் இருந்தாலும் தகப்பன்  கட்டி காத்த சாம்ராச்சியம் இப்படி உடைஞ்சு போனதுக்கு அவரின் பிள்ளைகளும் காரணமாய் போச்சு. அதோடு காமெடியன்களையும் கவர்ச்சி நடிகைகளையும் நம்பி களத்திலே இறங்கினால் முடிவு இப்படி தான் இருக்கும் போல..)

அட நம்ம கேப்டன் கலைஞரை ஓவர்ராக்  பண்ணியதை கல்லில் அல்லவா  செதுக்கி வைக்கணும்..) நான் நினைக்கிறேன் மக்கள் கேப்டன் மீது  நம்பிக்கை வைத்து ஓட்டு போட்டதை விட  திமுக மீது  இருந்த அவநம்பிக்கை தான் அவரின் வாக்கு வங்கியில் ஓட்டாக விழுந்ததென்று.  இன்று கம்பீரமாய் சென்று எதிர்க்கட்சி ஆசனத்தில் உட்காறப்போறாரு.  பாவம் நம்ம "வைகை புயல்"  'சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி' என்றது  போல அவர் நிலை.  இனி தமிழ் சினிமாவில் இருந்தும் கண்ணுக்கெட்டாத தூரத்துக்கு போய்விடுவாரோ! என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு  இருக்கும் போது சூடான விவாதங்களை வலைத்தளங்களிலே எதிர்பார்த்திருந்தேன்(ம்). ஆனால் கூகுளுக்கும் கலைஞரின் சரிவு சங்கடத்தை ஏற்ப்படுத்திவிட்டது போல ) ஆனாலும் சமூக வலைத்தளங்களில் உலாவியபடியால் ஒன்று புரிந்து கொள்ள கூடியதாக இருந்தது.  அதாவது அநேகருக்கு கருணாநிதி கும்பலும் காங்கிரசும் தமிழ்நாட்டு ஆட்சியில் இருந்து துரத்தப்பட்டது  பெரிய சந்தோசமே ஒழிய ஜெயா மேடம் ஆட்சிக்கு வருவது பற்றி பெரிதாக சந்தோசம் இல்லை. அலட்டிக்கொள்ளவும் இல்லை. ( மக்கள் இரண்டு தரப்பின் ஆட்சிகாலங்களிலும் வாழ்ந்தவர்களாச்சே..!)

நான் நினைக்கிறேன் அநேகமாக இரண்டு விடயங்கள்  திமுக தொடர்பில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்ப்படுத்தியிருக்கும். ஒன்று ஸ்பெக்ட்ரம்  ஊழலில் ஏப்பம்விட்ட 'மக்கள் சொத்து'. ( இது கிராமப்புற மக்கள் மத்தியிலே எந்தளவுக்கு புரிதலை ஏற்ப்படுத்தியிருக்கும் என்பது தெரியவில்லை)   மற்றையது  "திமுக காங்கிரஸ் சம்மந்தப்பட்ட"  ஈழ தமிழர் விடயம்.  இந்த இரண்டு விடயங்களே  எதிர்தரப்பு  திமுக வுக்கு எதிராக கையாண்ட மிக பெரிய பிரச்சாரம் என்று கூட சொல்லலாம்.  கூடவே சீமான் காங்கிரசுக்கு எதிராக  கிராமம் கிராமமாக சென்று செய்த பிரச்சாரங்களும் இங்கே மறுக்க முடியாது தான்.  அத்தோடு இறுதி நேரத்திலே சீட்டுக்காக காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு பின்னர் சமரசமானவுடன் ஒன்றிணைந்து இவர்கள் போட்ட ஆட்டம் கூட மக்கள் மத்தியில் கடுப்பை ஏற்ப்படுத்தியிருக்கலாம்.  இவை தவிர இன்னும் பல்வேறு சம்பவங்கள் திமுக செய்த சில நல்ல காரியங்களையும் மூடி மறைத்து அவர்கள் கழுத்தை சுருக்க காரணமாக அமைந்துவிட்டது.  

'தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டு மரமாக  தான் மிதப்பேன்' என்று இனி கலைஞர் கவி வடிக்க  வேண்டியது தான். ஆனால் மக்கள் தூக்கி எறிந்தது கடலில் அல்ல! நீந்தி வருவதற்கு, சாக்கடையில் அல்லவா  தூக்கி வீசிவிட்டார்கள்.  இனி வரும் காலங்களிலே தன் வீழ்ந்து போனா சாம்ராச்சியத்தை மீட்டெடுப்பதை விட வழக்குகளில் சிக்கி தவிக்கும் "மக்களையும்" கட்சியையும் மீட்பதே கலைஞருக்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை.

ஆக என்ன தான் இருந்தாலும் அநேகர் சொல்வதை தான் நானும் சொல்கிறேன், "ஐயா வந்தா என்ன அம்மா வந்தா என்ன ஆட்சி என்னமோ ஒண்ணு தான்" தமிழ்நாட்டு மக்கள் நிலை என்பது இருதலை கொல்லி எறும்புதான். இருந்தும் மக்கள் நினைத்தால் கோ(பால)புரத்தில் குடியிருப்பவனையும் குப்பை மேட்டில் தூக்கி வீசமுடியும் என்பதற்கு  இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டு.  

காதல் என்ற திரைக்கு பின் காமம்..!
காதல் என்ற திரையிட்டு
கொண்ட  காமத்தால்
உண்டான கரு உயிராக வெளிவந்ததும்
கடதாசியில் சுற்றி
கசக்கி எறியும் போது
உன்னைத் தேடுகிறேன் நான்..!

கர்ப்பிணி பெண்ணின் 
கருப்பையில் உறங்கும் சிசு
வெளியுலகை காண முன்னே
கந்தக துண்டுகளால்
குதறி வெளியேறியும் போதும்
உன்னையே தேடுகிறேன் நான்..!

பள்ளி செல்லும் வழியில்
பாதகர்களால் கடத்தப்பட்ட 
பச்சிளம் பாலகனை
பின்னொரு நாளிலே 
பிணமாக  கண்டபோதும்
உன்னையே தேடுகிறேன் நான்..!

மதங்கள்  என்ற நதிகள் 
கடலில்  கலப்பது அறியாமலோ!,
இடையிலே வழிமறித்து
செந்நீரை அதில் கலக்கும்
கயவர்களின் செயலை காணும் போதும்
உன்னை தான் தேடுகிறேன் நான்..!


 இனம் மொழி குலம் என்று
தெளிந்த குட்டைகளையும்
கிளறி காறி உமிழ்ந்து 
அதிலே பலன் பார்க்கும்
ஆதிக்கவாதிகள், அப்போதும்
உனையே  தான் தேடுகிறேன் நான்..!

தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
மனிதன் உணர்விலும், உள்ளத்திலும் இருப்பாய்
அவன் செயல்களிலும் நீயே இருப்பாய் என்று
ஆகமங்கள் கிழித்த விதிகளின் படி
அத்தனைக்கும் கடவுளே..,
உன்னை தான் தேடுகிறேன்!
சேவாக்/ ஒசாமா/ யார் பயங்கரவாதி?


சேவாக் என்ற சிங்கம் சற்று நேரம் களத்திலே நின்றால் எதிரணியின் நிலைமை என்ன ஆகும் என்பதை நேற்றைய போட்டியிலே கிரிக்கெட் ரசிகர்கள்  புரிந்துகொண்டிருப்பார்கள்.  தனி ஒரு மனிதனாக நின்று இலக்கின் மூன்றில் இரண்டு பகுதியை அரைவாசி ஓவர்களிலே விளாசி தள்ளி தோல்வியின் விளிம்பில் நின்ற அணியை வெற்றிக்கு அழைத்து  சென்றார். ஒவ்வொரு அடியும் இடியாக இறங்கியது,  சங்காவின் முகத்தில் ஈயாடவில்லை, போதா குறைக்கு  சேவாக்கின் அருமையான இரண்டு பிடிகளை கோட்டை விட்டார் டெக்கான் வீரர் ஒருவர்.

இசாந் மற்றும் ஸ்ரெயினின் ஓவர்கள் தவிர்ந்த  மற்றைய பந்துவீச்சாளர்களை ஈவிரக்கம் பார்க்காது நொறுக்கி தள்ளினார். அவர் அடித்தது பெரிய விடயம் அல்ல அடிக்கப்பட்ட நேரம் தான் ...! ஆரம்பம் முதலே 179 என்ற மிக பெரிய இலக்கை துரத்தும் போது அடுத்தடுத்து மந்தமான ஓட்ட எண்ணிக்கையில் விழுந்த மூன்று விக்கெட்டுகள். அநேகமானோர் நினைத்திருப்பார்கள் டெல்லி இம்முறையும் தோல்வி தான் என்று, ஆனால் அந்த நேரத்தில் சேவாக் எடுத்த விஸ்வரூபம் தான், அணியின் வெற்றியை இலகுவாக உறுதிபடுத்தும் வரை நிறுத்தவில்லை.  என்னை பொறுத்தவரை இது வரை நடந்த ipl போட்டிகளிலே நேற்று இடம்பெற்ற டெக்கான் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான போட்டி தான் ரசிகர்களுக்கு மிக பெரும் விருந்தாக  இருந்திருக்கும்  என்று சொல்வேன்.இந்த தோல்வியின் மூலம் அரையிறுதிகான வாய்ப்பை  டெக்கான் இழந்துவிட்டது. டெல்லி அடுத்த சுற்றுக்கு நுழையவேண்டும் என்றால் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வென்றால் தான் முடியும். ஏற்கனவே மும்பை இந்தியன், கொல்கத்தா, சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. எனினும் பங்களூர் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் நான்காம் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. ஆக அரையிறுதிக்கு செல்லும் அணிகள் உறுதியாக இன்னும் சில நாட்கள் செல்ல வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------------

இன்று உலகம் பூராகவும் பேசுகிற விடயமாக பின்லேடனின் மரணம் அமைந்துவிட்டது. ஐரோப்பிய ஊடகங்கள் அனைத்திலும் இது பற்றிய செய்திகள் தான். அமெரிக்கர்கள் ஒரு படி மேல் சென்று வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள்.ஆனால் இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது. அமெரிக்கா ஒரு காலத்தில் வளர்த்த கிடா தான் பின்லேடன் கும்பல், தாம் வளர்க்கப்படுவது வேள்விக்கு தான் என்று தெரிந்ததும் வளர்த்த கிடா அமெரிக்காவின் மார்பில் பாய வெளிக்கிட்டது. அதன் பின் மாறி மாறி அடிபட்டு கொண்டார்கள். இறுதியில் பின்லேடன் - அமெரிக்கா  யுத்தத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் அமெரிக்கா என்ற ஏகாதிபத்திய ஓநாய் இருக்கும் வரை , வளைகுடா  நாடுகளிலே  புகுந்து நரி தனம் பண்ணும் வரை பின்லேடன்கள் பிறந்து  கொண்டே இருப்பார்கள். ஒசாமா பயங்கரவாதி தான் அதே போல ஜனநாயகம் என்ற தோல் போர்த்தி வலம் வரும் பயங்கரவாதி தான் அமெரிக்கா.  இவர்களின் விளையாட்டில் பாதிக்கப்படுவது அப்பாவி சனங்கள் தான்.

                         மெரிக்காவை அழிக்க
                         ஒசாமா பலியெடுத்த உயிர்கள்
                         மூன்று ஆயிரம்,
                         சாமாவை அழிக்க
                         அமெரிக்கா கென்ற அப்பாவி மக்கள்
                        ஆறு ஆயிரம் - இப்ப சொல்லுங்க
                         யார் பயங்கரவாதி ...?


பின்லேடனுக்கு கலைஞரின் இரங்கற்பா..!
ஆண்டுக்கு ஒரு துணைவி கொண்டு
அடுக்கடுக்காய் பிள்ளை பெறுவதில்
முன்னுக்கு நிற்ப்பது மு.கா
என்று எண்ணியிருக்க
என்னை பின்னுக்கு தள்ளிய பின்லேடா!

இறுதியாய்  ஒரு தடவை பார்த்து
கண்ணீர் விட்ட பின் 
கவி வடிக்க எண்ணியிருந்தேன்,
கயவர்கள்  உன்னை
கடலுக்குள் புதைத்தார்களோ!

உடன் பிறவா சகோதரனே
ஊழலில் நீ எப்படியோ தெரியல ..
ஆனாலும்  உண்மையிலே
எமக்குள் ஒற்றுமை பல!

புனிதப்போர் என்று
உயிர்களை  கொன்றாய் நீ
புள்ளை குட்டிக்கென்று
உடைமைகள் கொண்டேன் நான்!

மதங்களை வச்சு
மக்களை கொன்றாய் நீ
மக்களை வச்சு 
ஆட்சி வென்றேன் நான்
அடிப்படையில் நமக்கு
பலிக்கடா மக்கள் தான்!

ஆரம்பத்தில் நீயும் 
அமெரிக்கனின் அடிமையாமே, 
கடைசி வரை நான்
காங்கிரசுக்கு அடிமை!
புளைக்க தெரியாதவன் நீ;
இன்று பார்
இடையிலே  கொள்கை மாறியதால்
இறந்துவிட்டாய்!
இறுதி வரை நான்
கொண்ட கொள்கையிலே.. 
இறக்கும் வரை முதல்வன்!

தாடி வைத்த தூயவனே,
தங்கரதத்தில் அனுப்பியுன்னை 
கொடநாட்டு பெண்மணிக்கு
குண்டு வைக்க எண்ணியிருந்தேன்,
பாதியிலே நீ போனதால் 
பதை பதைக்கிறது உள்ளம்
இன்னும் எழுத எண்ணவே
என் கண்ணீரால் நனைந்தது காகிதம்!  

உண்மையை சொல்கிறேன்
இறக்கவில்லை நீ
என் போல் மனிதர்களில்
என்றும் வாழ்வாய் !

                                                                             இங்கனம் 
                                                                             பாசத்தலைவன்
                                                                            மு. கா 

அன்பு "கொல்லும்" ஆபத்து..!
விநாடிகள் தோறும்
எம் விழிகளை கடக்கும்
விசித்திரமான மனிதர்களில் 
ஒருசிலர் மட்டுமே
விழிகளூடு  கலந்துவிடுகிறார்கள்,
அன்பு என்ற அம்பை ஏவியோ  
பாசம் என்ற வலை வீசியோ
எம்மை கவர்ந்து கொள்கிறார்கள்!

இதே பாணியில் தான்
சில கயவர்களும்
கவர்ந்து கொள்ளும் காந்தத்தில்
ஒட்ட வரும் கறள் பிடித்த ஆணியாக...!

சில தருணங்களிலே 
எமக்கு தெரிவதில்லை
அன்பு என்ற அம்பின் முனையில் 
பூசப்பட்டிருக்கும் கொடிய விஷம், 
எமக்கு புரிவதில்லை
பாசம் என்ற வலைக்கு பின்னால்
பலமாக போடப்பட்டுள்ள வேஷம்!


வாய் நுனியில் தேன் தடவி
வார்த்தைகளுக்கு வெள்ளையடித்து
புரட்டு கதைகள் பேசி
வித்தைகள் பல காட்டி
வாய்ப்பு வரும் போது
விசத்தை வீரியமாக கக்க
காத்திருக்கும் நச்சு பாம்புகள்..! 

கொடுக்கை விரித்து
வாயை பிளந்து
வா என்று நெருங்கி வரும்  
விசத் தேளை கண்டு,
அது வருவது அரவணைக்க தான் என  
அதனிடம் அன்பை எதிர்பார்க்கும் 
சில அப்பாவி பிராணிகள்....!
 
இவ்வாறு
பாதிக்கபடுவது
பலம் குன்றிய பிராணி தான் என்பதை
எதிரில் நின்று பார்த்துக்கொண்டு
உண்மை தெரிந்தும்  
உரக்க அதை கூறாது  
ஊமையாக நான்...,
என்றும் சுயநலவாதி தான்!