அரசியல்வாதி ஆகிப்பார்..!அரசியல்வாதி ஆகி பார்..,

உன்னை சுற்றி ஒரு கூட்டம் தோன்றும்,
நீ கெட்டவார்த்தையால் பேசினாலும்
அது அர்த்தம் கண்டு கைதட்டும்!

"வெளுத்ததெல்லாம் பால்" என்று நம்பும்
மக்கள் குணம் நன்கறிந்து,
வெள்ளை உடையாலே
உன்னை போர்த்திக்கொள்வாய்!

மக்கள் மீதிருந்து
விலகியே இருக்கும் உன் பார்வையை
மற்றவரிடம் இருந்து மறைத்துக்கொள்ள,
கருப்பாலே கண்களுக்கு திரையிட்டுக்கொள்வாய்!

ஆளில்லா வீதியிலும்
கை கூப்பி வணக்கம் வைப்பாய்,
வார்த்தை ஜாலங்களாலும்
வீர பேச்சுக்களாலும்
புரட்சிகள் பல வென்று முடிப்பாய்!

கெப்பு தாவும் குரங்குகள் போல
வருடத்தில் பல கொள்கைகள் மாறுவாய்!

நேற்று சொன்னதை
இன்று நினைக்க மறப்பாய்,
இன்று சொல்வதை
நாளை செய்ய மறுப்பாய்!

கூட இருப்பவன் மீது
என்றுமே சந்தேகம் கொள்வாய்,
அவன் குழி பறிப்பானோ என்றஞ்சி
இரா நேர தூக்கங்களை இழந்து தொலைப்பாய்!

தேர்தல் நாட்களே
உன் திருவிழா காலங்கள் ஆகும்.
குப்பங்கள் கிராமங்கள் யாவும்
தினந்தோறும் தெருவடியளப்பாய்,
மக்களின் நண்பன் நான் என்பாய்
கவரிமான் பரம்பரை நாம் என்பாய்
வயோதிபர்களிலிருந்து
குமருகள்,குழந்தைகள் வரை
ஒன்றாக நின்று போஸ் கொடுப்பாய்;
வீதிகளிலே அவற்றை நிறுத்தி
உன் விளம்பர பொருளாக்குவாய்.
வரவு செலவு பாராது-  மக்களை
வாக்குறுதிகளால்
குளிர்மைப்படுத்துவாய்!

தேர்தலில் நீ ஜெயித்தால்
ஓட்டுப்போட்ட மக்களுக்கு மொட்டைபோடுவதாக
இறைவனிடம் வேண்டிக்கொண்டதை
இறுதிவரை இரகசியமாகவே வைத்திருப்பாய் ...!

அரசியல்வாதியாகி பார்...


பிற குறிப்பு - யாவும் கற்பனையே!  தனி மனிதர்களுடனோ, இல்லை அவர்தம்  அரசியல் வாழ்க்கையுடனோ ஒத்துப்போனால் அது தற்செயலானது. (நம்பித்தான் ஆகணும்)