என்ஜாய் ஃப்ரண்ட்..

காட்சி 1

வணக்கம் அண்ணே!

வணக்கம் தம்பி! வாங்க. கண்டு கனகாலம், இந்த பக்கமே வர்றதில்ல போல? வந்து இதில உக்காருங்க.

ஓம், நன்றி அண்ணே.... வேல தானே.. அது தான். இண்டைக்கு ஞாயிற்று கிழமை லீவு; அப்பிடியே உங்கள எல்லாம் பாக்கலாம் எண்டு வந்தனான்.

ஓம் தம்பி, வெளிநாட்டு வாழ்க்கையெண்டால் இப்படித்தானே.

என்ணண்னே இண்டைக்கு ரூமில நிறைய பொடியள் இருக்காங்கள். ஏதாவது விசேஷமா?

இல்ல தம்பி, இண்டைக்கு எங்களுக்கும் லீவு தானே; அது தான் வந்திருக்காங்கள். ஒவ்வொரு கிழமையும் லீவு எண்டா இப்படி தான், வந்து எல்லாருமா தண்ணி அடிச்சிட்டு கிடப்பம். அதுக்கு பிறகு அடுத்தநாள் விடிஞ்சா தான் உண்டு. 
சரி தம்பி... உங்களுக்கும் தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கா? வாங்களன் சும்மா பம்பலா ஒரு ரவுண்டு அடிப்பம்.

இல்ல அண்ணே எனக்கு அந்த பழக்கம் எல்லாம் இல்ல.

பியர் கூட அடிக்கமாட்டிங்களா தம்பி?

இல்ல அண்ணே நான் அல்கோல் பாவிக்கிறேல்ல.


தம்பி! தண்ணி அடிக்கிறவன் எண்ட ரீதியில சொல்லுறன். நீங்கள் குடுத்து வச்சனியள். உங்கட எதிர்காலம் நல்லா இருக்கும். இனி வாழ்க்கேல்ல அல்கோல் தொட்டுடாதேங்க. இதால உடம்பும் கெட்டுப்போம், காசும் கரியாய் போடும்...நானும் முந்தி உங்கள போல தான் இருந்தனான்.. ஆனா இந்த நாதாரிங்க எனக்கும் ஊத்தி தந்து கெடுத்துப் போட்டணுங்கள்.
( பின்னால இருந்து வந்த ஒரு தகர டப்பா அண்ணையின் முதுகை பதம் பார்க்க "டேய் *********  ஏண்டா எறியுறாய்")

தம்பி குறை நினைக்கதேங்க! எல்லாம் ரெடியாகிவிட்டுது; நாங்கள் தொடங்கப்போறம்.. இப்பவே தொடங்கினால் தான் நாளைக்கு காலமை வேலைக்கு போக முடியும்.

சரி அண்ணே! பறுவாயில்ல நீங்க நடத்துங்க...

காட்சி 2 ( சுமார் அரை மணிநேரத்தின் பின்)

தம்பி குறை நினைக்கிறியளோ?

இல்ல. நான் ஏன் அண்ணே குறை நினைக்கிறன்!

சரி, வந்து ஒரு பெக் அடியுங்களன்.

இல்லண்ணே. எனக்கு உதெல்லாம் சரிவராது.

அட என்ன தம்பி!  இதெல்லாம் இல்லாமல் வாழ்க்கேல்ல வேற என்னத்தை கண்டனியள். பிறந்தோம் இறந்தோம் எண்டு இருக்கக்கூடாது. நாளைக்கு செத்தாலும்...எதுவுமே இல்ல. என்ஜாய் பண்ணுற வயசில என்ஜாய் பண்ணனும். அப்புறம் இதெல்லாம் கிடைக்காது. தம்பி, தண்ணி அடிக்கிறவன் எல்லாம் கெட்டவனும் கிடையாது, தண்ணி அடிக்காதவன் எல்லாம் நல்லவனும் கிடையாது.

அண்ணே இப்ப கொஞ்சத்துக்கு முதல் தானே நான் தண்ணி அடிக்கிறேல்ல எண்டு சொன்னதுக்கு என்னை பாராட்டினிங்கள். இப்ப அப்பிடியே மாத்தி பேசுறியள்!

தம்பி அது பழைய கதை..அத விடு. 
எனக்கு வெறி எண்டு நினைக்காதேங்க. நான் எப்பவும் உண்மையை தான் சொல்லுவவவ..(எழுந்து என்னை நோக்கி வந்தவர்)

தம்பி நான் ஒண்டு சொல்லட்டுமா..? நாம தண்ணி அடிக்கலாம் அது பிரச்சனையே இல்ல. ஆனால்.... தண்ணின்ர கண்றோல்ல நாம இருக்கக்கூடாது; எங்கட கண்றோல்ல தான் தண்ணி இருக்கணு..ணு....
( 'பொத்'தென்று ஒரு சத்தம்)
.." தம்பி.... ஒரு கைகொடுத்து இந்த அண்ணனை எழுப்பி விடு பாப்பம்"

சேவாக் சாதனை, சிறு வேதனை!

சிறு வயசில் இருந்தே சச்சினின் தீவிர ரசிகனாக, அவரையே தனது ரோல் மொடலாக கொண்டு கிரிக்கெட் விளையாடி வரும் ஒருவனுக்கு பிற்காலத்திலே அதே தனது ரோல் மொடலுடன் ஒன்றாக, அதுவும் ஆரம்ப துடுப்பாட்டத்தில் சச்சின் பங்காளியாக விளையாடக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் எவ்வளவு பெரிய அதிஷ்டகாரன். அந்த விதத்தில் ஒருவர் தான் விரேந்தர் சேவாக்.

ஆனால் இன்று ஒருபடி மேல் சென்று சச்சின் சாதனைப்படிகளில் ஒன்றை, யாருமே அவ்வளவு எளிதில் எட்டிப்பிடிக்க முடியாது என்று கருதப்பட்டத்தை கடந்துள்ளார். 

இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொன்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலே 'ஒருநாள் போட்டியில்இரட்டை சதம்' என்ற இலக்கை தனது சாதனைகளில் இன்னொன்றாக பதிவு செய்திருந்தார் சச்சின். அப்பொழுது பெவிலியனில், இருக்கையில் இருந்து எழுந்து தனது சந்தோசத்தை கைதட்டல்கள் மூலம் வெளிப்படுத்திய சேவாக் நினைத்திருப்பாரா? இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த மைல்கல் தன்னால் முறியடிக்கப்படும் என்பதை!

மேற்க்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது. அத்துடன் இந்தப்போட்டி இந்திய ரசிகர்களை பொருத்தவரை பெரும் சந்தோசத்தையும், கூடவே சிறு வருத்தத்தையும் கொடுத்திருக்கும் என்பது உண்மையே.

ஒருநாள் போட்டியோன்றிலே இரட்டை சதம் என்ற சச்சினின் சாதனை உடைக்கப்பட்டது வருத்தத்தை கொடுத்தாலும், அதை உடைத்தது அதே இந்திய அணிவீரர் தான் என்பது பெரும் ஆறுதலையும் சந்தோசத்தையும் கொடுத்திருக்கும். அத்துடன் சேவாக்குக்கு இந்த சாதனை மூலம் பெறப்பட்ட பெறுமதி வாய்ந்த விருதாக சச்சினிடம் இருந்து கிடைத்த வாழ்த்து செய்தி தான் இருக்கும் என்பதையும் நம்புகிறேன்.

இந்த தொடரிலே டோனி இல்லாத நிலையில் சேவாக் ஒரு கேப்டனாக, முன்னணி துடுப்பாட்ட வீரராக பெரும் பணி இருந்த போதும், முதல் மூன்று போட்டிகளிலும் சோபிக்க தவறிவிட்டார். எனினும் நான்காவது போட்டியிலே  தனது வழமையான பாணியிலே ஆட்டத்தை தொடங்கிய சேவாக் மேற்கிந்திய தீவுகளின் ஒட்டுமொத்த பந்து வீச்சு வரிசையை நிலைகுலைய செய்து விட்டார். தனது அறுபத்து ஒன்பதாவது பந்திலே பவுண்டரி மூலம் சத்தத்தை கடந்தவர்; அதன் பின் தன் அவசர தனத்தால் காம்பீர், மற்றும் ரைனாவின் ஆட்டமிழப்புக்கு காரணமாக இருந்தாலும், தொடர்ந்து பதற்றப்படமால் நூற்று நாற்பதாவது பந்துகளிலே தனக்கே உரிய பாணியில் மீண்டும் ஒரு பவுண்டரி மூலம் தனது இரட்டைசதம் என்ற மைல்கல்லை எட்டி பிடித்தார்.

மேற்க்கிந்தியாவுக்கு எதிரான இந்தப்போட்டியிலே மேற்கிந்திய அணி வீரர்களின் மோசமான களத்தடுப்பும் சேவாக்குக்கு கடைசி வரை பக்க பலமாக அமைந்துவிட்டது. இருபது ஓட்டங்களை பெற்றிருக்கும் போது ஒரு ரன் அவுட் வாய்ப்பையும், பின்னர் நூற்று எழுபது ஓட்டங்களை பெற்றிருக்கும் போது கிடைத்த சுலபமான கேட்சையும் அவ்வணி வீரர்கள் தவறவிட்டார்கள். 

இனி வருங்காலத்திலே 219 என்ற சேவாக்கின் இந்த இலக்கு அவ்வளவு சீக்கிரம் எந்த ஒரு துடுப்பாட்ட வீரராலும் உடைத்துவிட முடியாது. கிரிக்கெட் உலகிலே இந்த சாதனையை கடக்கக்கூடிய தகுதி ஒரு அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கே சாத்தியமாகும். ஆனால் தற்போதைய கிரிக்கெட் சூழலில் இதற்க்கு தகுதியான வீரர் யாரும் இல்லை என்பதுவே எனது பதில். இருந்தாலும் 'எதுவுமே நிரந்தரம் இல்லை'.

படங்கள்- cricinfo-

நிறம்மாறும் நடிகர்கள்..

இந்த சினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரிதாக வேறுபாட்டுகள் ஒன்றும் இல்லை. இவர்களுக்கு  இடத்துக்கிடம் பேச்சை மாற்றுவது இயல்பாகவே வருகிறது. இதற்க்கு உதாரணமாய் நம்ம பல அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டலாம். அதே போல நடிகர்களில் இவ்வாறு மாத்தி பேசுவதில் சமீபத்தில் புகழ் பெற்றவர் வடிவேலு தான். அது அரசியல் ரீதியாக..

சமீபத்தில் நடிகர் கார்த்தி; ஒரு தெலுங்கு நிகழ்ச்சிக்கு போனவர், அங்கே நிகழ்ச்சி தொகுப்பாளரான ஒரு பொண்ணு வந்து 'உங்களுக்கு தமிழ் ரசிகர்களா தெலுங்கு ரசிகர்களா பிடிக்கும்' என்று கேட்டதற்கு அடுத்த வினாடியே தெலுங்கு ரசிகர்கள் தான் என்று சொல்லி  பல்லிளித்தார். அது பரவாயில்லை, ஆனால் அதற்க்கு காரணமும் சொல்கிறார் பாருங்கள் "தெலுங்கு ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவும் கைத்தட்டல்களும் தமிழ் ரசிகர்களிடம் கிடைக்காதாம்" என்று... எவ்வளவு பெரிய நன்றி கெட்டத்தனம் இது. இவர் நடித்த முதலாவது படத்தையே வெற்றியாக்கியவர்கள் இந்த தமிழ் ரசிகர்கள் இல்லையா? இன்று தமிழ் சினிமாவில் இவ்வளவு தூரத்துக்கு உயர்த்திவிட்டவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் இல்லையா? எந்த அறிமுக நடிகர்களுக்கும் அவ்வளவு சீக்கிரம் கிடைக்காத அங்கீகாரத்தை இவருக்கு கொடுத்தது இந்த தமிழ் சினிமா ரசிகர்கள் தானே.

இது இவரின் சினிமா வியாபார தந்திரம் தான்! ஆனால் இதற்க்கு தமிழ் சினிமா ரசிகர்கள் பகடைக்காய்! ஏற்றி விட்டவர்களை அவமானப்படுத்துவது இவர்களுக்கு இலகு; ஏன்னா இவர்கள் தான் "நடிகர்களாசே!"   இதற்க்கு முன்னர் நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவை மலையாள சினிமாவுடன் ஒப்பிட்டு தாழ்த்தி பேசியமை நினைவிருக்கலாம். இப்படியான பச்சோந்திகளுக்கு தானா இவ்வளவு ஆர்ப்பாட்டம். இவர்களுக்கு சினிமாவும், ஹீரோயிசமும் இல்லாவிட்டால் வெறும் சீரோக்கள் தான். 


ஒரு வேளை நாளை தமிழ் நிகழ்ச்சி ஒன்றுக்கு கார்த்தி வரும் போது இதே கேள்வியை இவரிடம் கேட்டால் பதில் எவ்வாறு வரும்? பச்சோந்தி தனமாக தானே? அந்த கணத்தில் யாராவது செருப்பு கழட்டி எறியமாட்டார்களா? இல்லை மீண்டும் கட்டவுட் வச்சு தமிழரின் மானத்தை பாலாக ஊற்றுவார்களா?



1970 ம் ஆண்டு நடிகவேள் எம் ஆர் ராதா அவர்கள் மலேசியா சென்று ஒரு உரை ஆற்றியிருப்பார்.  சினிமா துறையில் இருந்து கொண்டே, அந்த துறையில் முத்திரை பதித்தவர் அதே துறை பற்றி எதிர்மாறான கருத்துக்களால் விமர்சிக்கிறார் என்றால் அதில் அர்த்தம் இல்லாமலா இருக்கும்?  கிண்டலும் கேலியுமாக அவர் ஆற்றிய உரையில் இந்த சினிமாவையும், நடிகர்களையும் பற்றி அவர் கூறிய வசனங்கள் அத்தனையும் இன்றும் நிதர்சனமாக தான் உள்ளது.

  MR Radha - Malaysia Speech

இதிலே எம் ஆர் ராதா சொன்ன சில வரிகள் "மக்களுடைய பணத்தை மோசம் செய்கிற கூட்டம் இந்த சினிமாக்காரங்க கூட்டம். நாங்களெல்லாம் இன்னைக்கு பணக்காரன் ஆனேம்னா இராவும் பகலும் நினைக்க வேண்டியது உங்கள. சினிமா டிக்கெட் வாங்கிக்கொன்னு பாக்கிறிங்களே அந்த பணத்தில் தான் நாங்க பணக்காரன் ஆனோம். உங்களுடைய பணத்தாலே முன்னேறிய கூட்டம் சினிமாகாரர்கள். நீங்க தான் எங்களுக்கு தலைவர்கள். அதைவிட்டுட்டு எங்களை தலைவர்களாக்கிக்கிட்டு பலபேர் இருக்காங்க..அந்த நிலைமை மக்களுக்கு வரக்கூடாது." இன்றும் பலருக்கு உறைக்காமல் இருக்குதே.