மானை கொன்றால் குற்றம் டால்பின் மீனை கொன்றாலும் குற்றம் ஆனால் தமிழனை கொன்றால்? மனிதனாக அல்ல விலங்காக நினைத்து கூட தமிழன் மீது பரிவு காட்ட இந்த உலகு மறுக்கிறதே. தமிழனாக பிறப்பது இவ்வுலகில் தப்பா? கொன்றவனுக்கு செங்கம்பள வரவேற்ப்பு தட்டிகேட்ப்பவனுக்கு கைவிலங்கு.
முப்பது ஆண்டுகளாக தொடரும் கொடூரம்.இதுவரை 500 மீனவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள், தொடர்கிறது... இன்னமும் இருபது வருடங்களில் வல்லரசு கனவு காணும் இந்தியா இலங்கைக்கு அடி பணிகிறதா!இல்லை இந்த தமிழக மீனவர்களை அந்நியனாகபார்க்கிறதா? புரியவில்லை! அன்று சுபாஸ் சந்திரபோஸ் வெள்ளையனை எதிர்த்து ஆயுதம் தூக்கி போராட இந்தியர்களை அழைத்த போது முண்டியடித்துக்கொண்டு சென்றவர்கள் தமிழர்கள் தான். இவ்வாறு சுயநலம் அற்று போராட புறப்பட்ட தமிழனுக்கு சுதந்திரம் இல்லை இன்று!
ஒரு மீனவனின் உயிரின் விலை 5 இலட்சம் என உயிருக்கு பேரம் பேசுகிறார் அம்மக்களால் தம் தலைவர் ஆக்கப்பட்ட முதல்வர்.மத்திய அரசில் ஒட்டிக்கிடக்கும் இவர் தமிழனுக்கு பிரச்சனை என்றால் காகிதங்களோடு போராடுகிறார். இவர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் அங்கெ கொல்லப்படும் மீனவனின் பிணங்களை வைத்து ஓட்டாக்க,அரசியலாக்க முனைகிறார்களே தவிர உண்மையாக ஒன்று பட்டு போராட இது வரை முன்வரவில்லை என்பது மிக வெக்கப்பட வேண்டிய விடயம்.
இந்தியாவை தன் முதல் எதிரியாக வரிந்துகட்டும் பாகிஸ்தான் கூட இவ்வாறு எல்லை தாண்டும் மீனவனை சுட்டு கொன்றதில்லை. ஆனால் தன் நட்பு நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கை மிருகங்களை வேட்டையாடுவது போல மீனவனை வேட்டையாடுகிறான். இதிலே அறிக்கை வேறு விடுகிறான் " மீனவர்களை கொல்வது தாம் அல்ல வேறு எதோ மூன்றாம் தரப்பு" என்று. இந்த காமெடிகளை கேட்டும் இந்தியா வாய் மூடி மவுனியா இருக்கிறதே!
அன்று மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு வரிந்து கட்டிக்கொண்டு கொதித்தெழுந்த இந்திய ஊடகங்கள் இன்று படுத்துக்கிடப்பதன் மர்மம் என்னவோ? காரணம் கொல்லப்படுபவன் தமிழன் தானே என்ற இளக்காரமா!......அது சரி இதை கண்டு கொந்தளிக்க வேண்டிய தமிழ் ஊடகங்களே மயிலாட்டங்களிலும் குத்தாட்டங்களிலும் மூழ்கி கிடக்கையில் வேற்று ஊடகங்களை குறை சொல்வதில் என்ன நியாயம்?
நித்தியானந்தா (ஆ)சாமியின் படுக்கையறையை பச்சையாக வெளியிட்டு முகத்திரை கிழித்தவர்கள் கடலில் தன் இனம் கொல்லப்படும் போது கொலையாளிகளின் முகத்திரை கிழிக்க தயங்குவது ஏன்?
இதை மீறி கொந்தளித்தாலும் அந்த பிணங்களை கொண்டு தம் முன் பக்கத்தை அலங்கரித்து கட்சி சார்ந்து ஓட்டுப்பிச்சை கேட்க்கும் நிலையிலே மட்டுப்படுத்தப்படுகிறதே!
வெறும் அன்றாட செய்தியாக வெளியிடும் ஏனைய தமிழ் ஊடகங்கள்.
சுதந்திர தினம் கொண்டாடுகிறார்கள் மீனவன் பிணத்தை வைத்து.
இவற்றை எல்லாம் தட்டிக்கேட்க்க வேண்டிய இளைய சமுதாயமோ சினிமா என்னும் மாயையில் தம்மை மூழ்கடித்து சமூகத்தில் என்ன நடக்கிறது என்று புரியாமலே நடிகர்களுக்கு பின்னால் தன் வாழ்க்கையை மாய்த்துக்கொண்டு கிடக்கிறது.
இதற்கு எல்லாம் ஒரே வழி மக்களாக ஒன்றிணைந்து போராட வேண்டியதே தவிர இன்னமும் இந்த அரசியல்வாதிகளை நம்பி இருந்து எந்த வித பயனும் இல்லை.இன்று இந்த விடயம் இணையத்தளங்களிலே ,சமூக தளங்களிலே பரவலாக கொண்டுவந்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது வரவேற்க தக்கது இதன் விளைவாக தற்சமயம் இந்த பிரச்சனையில் சில முன்னணி ஊடகங்கள் தங்கள் கவனத்தை திருப்பி தமிழக மீனவர்களின் பிரச்சனையை பேச தொடங்கியுள்ளன. எனினும் இந்த பிரச்சனை உறங்கு நிலையை அடையவிடாது தொடர்ந்து, பாதிக்கப்பட்டது இதுவே இறுதி மீனவனாக இருக்க வேண்டும்.
இந்த தலைப்பு சில வருடங்களுக்கு முன்னர் கங்குலி தலைமயில் இந்திய அணி சொதப்பலாக விளையாடிய சமயம் பத்திரிகை ஒன்றால் கிண்டலாக எழுதப்பட்டது. அன்றைய சமயம் இது உண்மையும் கூட. உலகில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் விளம்பரங்கள் மூலம் அதிக வருவாயை எட்டும் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியினர் தான். இதில் கோடிகளை குவிப்பவர் சச்சின், எனினும் சமீபத்தில் இந்த சாதனையை டோனி முறியடித்துவிட்டதாக தகவல்.சரி விடயத்துக்கு வருவோம்.
நடந்து முடிந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் பரிதாபமாக தோல்வியை தழுவி கோப்பையை கோட்டை விட்டது தோனி தலைமையிலான இந்திய அணி.இதன் மூலம் ஆபிரிக்க மண்ணில் தொடரை வெல்லும் ஒரு அருமையான சந்தர்ப்பம் நழுவி போய்விட்டது.
இத்தனைக்கும் முக்கிய காரணம் முன்னணி வீரர்களின் பொறுப்பற்ற,நிதானமற்ற விளையாட்டு.பவுசர்களுக்கு திணறுகிறார்கள்.இதை ஆபிரிக்க பந்துவீச்சாளர்கள் தமக்கு சாதகமாக மாற்றிவிட்டார்கள்.
உலகக்கிண்ணம் நெருங்கும் தருணத்தில் இந்திய அணிக்கு இது ஒரு பாதிப்பாக இருந்தாலும் முன்னணி வீரர்கள் விளையாடதால் ஏற்பட்ட தோல்வி , அதி மோசமான தோல்வி இல்லை என்பதால் சற்றே ஆறுதல்.
இதில் பந்துவீச்சாளர்கள் அநேக தருணங்களில் சிறப்பாக செயற்ப்பட்டார்கள் சில சமயங்களில் சொதப்பினார்கள். அத்தோடு இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்டம் மிக மோசம். அதிலும் முதல் மூன்று ஆட்டத்திலும் விளையாடிய முரளி விஜய் ஆட்டத்தை பார்க்கவே கடுப்பாக இருந்தது.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குபவர் ஒன்றில் அடிக்க வேண்டும் முடியாவிட்டால் பேசாமல் அவுட் ஆகி போயிட வேண்டும்.(சேவாக் போல) அதாவது மைதானத்துக்குள் நிலைத்து நிற்பது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் சீரான ஓட்ட எண்ணிக்கை (ஒருநாள் போட்டிகளுக்கு). இதை விட்டு களத்திலே நின்று பவர்ப்ளே ஓவர்களை வீணடித்து விட்டு அவுட் ஆகி போனால் அது அடுத்து வரும் வீரர்களுக்கு மிகவும் நெருக்கடியாக அமைந்துவிடும். முரளி விஜய் T20 மட்டுமே பொருத்தமான ஆளு. இது வரை விளையாடிய ஒருநாள் தொடர்களில் எந்த ஒரு போட்டியிலுமே குறிப்பிடத்தகும் படியாக எதையும் சாதிக்கவில்லை.அப்படி இருக்க எதற்க்காக மீண்டும் அணியில் பூட்டி இழுக்கிறார்கள் என்று புரியவில்லை. இவரிலும் பார்க்க குட்டி பையன் பார்த்திவ் பட்டேல் பரவாயில்லை.
அடுத்து நான் பெரிதும் எதிர்பார்த்த வீரர் ரோகித் சர்மா.இந்த போட்டி இவருக்கு சிறப்பான சந்தர்ப்பமாக அமைந்திருந்தும் தன் திறமையை நிருபிக்க தவறிவிட்டார்.இதன் மூலம் தேர்வுக்குழுவினர் இவரை உலக கிண்ண அணியில் தேர்வு செய்யாததை நியாயப்படுத்தியுள்ளார்! பவுன்சர்களுக்கு திணறுகிறார். அதோடு ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கு இவர் பொருத்தமானவர் இல்லை.
மீண்டும் மீண்டும் சொதப்பும் யுவராஜ் சிங், இரண்டாவது போட்டியில் ஒரு ஐம்பது தவிர குறிப்பிடும் படியாக எதையும் சாதிக்கவில்லை.இறுதிப்போட்டியில் விக்கெட்டுக்கள் தொடர்ந்து சரிந்த போது ஒரு மூத்த வீரராக களத்தில் நின்று போராடாமல் வேண்டா வெறுப்பில் தோல்வி என்றே முடிவு கட்டி விளையாடியது போல பந்தை தூக்கி கையில் கொடுத்துவிட்டு நடையை கட்டினார்.உலகக்கிண்ணத்திலாவது மீள்வாரா! இல்லை மாள்வாரா? எனினும் பகுதி நேர பந்துவிச்சாளராக சிறப்பாக செயற்பட்டார்.
சமீப காலமாக விளம்பரங்களில் பளபளக்கும் டோனியிடம் முன்னைய அதிரடியை காண கிடைக்குதில்லை.ஓட்ட குவிப்பிலும் சோர்ந்துவிட்டார்! இந்த தொடரிலும் இவரின் அதிக பட்ச ஓட்டம் 36 . இப்பிடியே சொதப்பினால் அப்புறம் கங்குலியின் கதி தான். இந்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோனியின் செயற்பாடு தேனியின் எதிர்கால கிரிக்கெட்டுக்கு பதிலாக இருக்கும் என்பது எனது கணிப்பு. (எனினும் விக்கெட் காப்பாளராக இருப்பதால் சொதப்பினாலும் சிறிதுகாலம் தப்பி பிழைப்பார்.)
இந்திய அணியில் தற்போதுள்ள துடிப்பான வீரர், சிறந்த பீல்டர் என்றால் என்னை பொறுத்த வரை ரைனா தான் முதலிடம். சில சமயம் இவர் பாட்டிங் கங்குலியின் "ஷாட்" களை நினைவுபடுத்தும். இவர் அடிக்கும் சில சிக்ஸ்சர்கள் பிரமிக்க வைக்கும். எனினும் அநேக தருணங்களில் மோசமான ஷாட் களை அடித்து ஆட்டமிழந்து சென்றுவிடுகிறார். தென் ஆபிரிக்காவுடனான இறுதி போட்டியிலும் ஒரு தேவையில்லாத ஷாட் ஐ அடித்து அவுட் ஆகி தோல்விக்கு வித்திட்டார். பவுன்சர்களை எதிர்கொள்வதில் இவரும் திணறுகிறார்.
எதிர்காலத்தில் டோனியின் கேப்டன் பதவிக்கு ஆப்பு அடிப்பவர் விராட் ஹோக்லி ஆக தான் இருக்கும். நிதானமாக நிலைத்து நின்று ஆடும் திறமை இயல்பாகவே இவரிடம் இருக்குறது. ஐ சி சி வெளியிட்டுள்ள ஒருநாள் வீரர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அடுத்துவரும் டெஸ்ட் தொடர்களில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன். தற்சமயம் நல்ல போர்ம் ல் இருக்கும் இவரால் உலககிண்ண இந்திய அணிக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.
ஐந்தாவது ஒருநாள் போட்டியில் IPL ஆட்டம் காட்டி சிறிது நேரம் ஆபிரிக்க வீரர்களின் வயிற்றில் புளியை கரைத்துவிட்டார் யூசுப் பதான். ஒரு கட்டத்தில் 119 /8 என்ற மோசமான நிலையில் இருந்த அணியை மீட்க பதான் தனி ஒருவராக நின்று போராடினார். அனைத்து வந்துவீச்சாளர்களையும் அடித்து நொறுக்கினார். ஒவ்வொரு சிக்ஸ்சரும் பிரம்மாண்டம். இந்திய அணிக்கு இந்த தொடரில் சிம்ம சொப்பனமாக இருந்த த்சொடோபே யின் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸ் ஒரு நாலு ஓட்டம்- என விளாசி அவர் கொட்டத்தை அடக்கினார். சகீரும் மறு புறத்தில் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க ஒரு கட்டத்தில் இந்தியா வென்றிடும் என்ற நிலைமையும் வந்தது. எனினும் அவசரப்பட்டு அடித்து ஆட்டமிழக்க முடிவு தென்னாபிரிக்காவுக்கு சாதகமாக மாறியது. அதே போல மூன்றாவது போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி பெற்று கொடுத்த பெருமையும் பதானுக்கு. ஆக உலக கிண்ண பதினொருவர் அணியில் இடம் பிடிக்க அநேக வாய்ப்பு உள்ளது. கிடைத்தால் யுவ்வியின் இடம் தான் பறிபோகும் நிலை தற்போது..?
பந்து வீச்சை பொறுத்தவரை சகீர் கலக்கினார் அதுவும் இறுதி ஓவர்களில் ஓட்டங்களை வாரி வழங்கும் சகீர் தற்பொழுது இறுதி ஓவர்களை சிக்கனமாகவே வீசுவது ஆறுதல். முனாப் பட்டேலும் குறிப்பிடத்தக்க அளவு சிறப்பாக செயற்பட்டு உலககிண்ண அணியில் இடம்பிடித்துவிட்டார். நெக்ரா தான் எதிர்பார்ப்புக்கு மாறாக சொதப்பினார். சிங்கும் பரவாயில்லை.
உலக கிண்ண பதினொருவர் அணியில் பந்துவீச்சாளர்கள் சார்பாக சகீர், கர்பஜன் சிங் நிச்சயம் இடம்பெறுவார்கள். ஆனால் நெக்ரா, பட்டேல், பிராவீன் குமார்-இவர்களில் இருவருக்கு தான் வாய்ப்பு.எனினும் 2003 உலக கிண்ண போட்டியில் விளையாடிய அனுபவமும் இதற்கு முன்னைய இந்திய மண்ணில் இடம்பெற்ற போட்டிகளில் சிறப்பாக செயற்ப்பட்ட நெக்ராவுக்கு அதிகம் வாய்ப்பு உண்டு . ஆக பட்டேல், பிராவீன் இருவரில் ஒருவர் தான் அடுத்தவர். (அனேகமாக பிரவீன் தான் உள்ளே செல்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.)
ஆபிரிக்க அணியை பொறுத்தவரை இது கொண்டாடப்பட வேண்டிய வெற்றி அல்ல. சொந்த மண்ணிலே தட்டு தடுமாறி இந்த வெற்றியை பெற்றுக் கொண்டது அவர்களின் "பலத்தை" காட்டுகிறது. எனினும்ஆபிரிக்காவின் முதுகெலும்பு கலீஸ் விளையாடாத பாதிப்பு தெரிந்தது. ஆபிரிக்காவின் பந்துவீச்சு மிரட்டுகிறது. எனினும் ஆசிய கண்டத்தில் இவர்களின் வேகம், பவுன்சர் எந்த அளவுக்கு எடுபடும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தற்சமயம் காசிம் அம்லா,கலீஸ்,சிமித்,டுமினி போன்ற வீரர்கள் சிறந்த போர்மில் இருப்பது ஆபிரிக்காவுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.
எந்த ஒரு மனிதனும் தன் தாய் அரவணைப்பிலே இருக்க, வளரவே விரும்புவான்.ஆனால் இது தமிழர்கள் விடயத்தில் முரண்படுவது ஏன்! இன்று அநேக தமிழர்கள் தன் "தாய்" மொழியை விடுத்து மாற்றான் மொழியை அரவணைக்கிறார்கள். அதையே அதிகமாக பேச விரும்புகிறார்கள்.அப்படி பேசுவதன் மூலம் தன்னை அருகில் இருப்பவர்களை விட சற்று உயர்த்தி காட்ட முற்படுகிறார்கள்! 2000 ம் ஆண்டுகளுக்குக்கு பிறகு இன்று இலங்கையிலே தமிழர்கள் மத்தியில் ஆங்கில மோகம் தலை விரித்தாடுகிறது. ஆங்கில மொழி மூல கல்வி பாடசாலைகளிலே புகுத்தப்பட்டுள்ளது. அநேகமான மாணவர்களும் அதையே விரும்பி நுழைகிறார்கள். இதற்க்கு பெற்றோர்களும் முக்கிய காரணம்.பக்கத்து வீட்டுக்காரி பிள்ளை ஆங்கில மொழியில் கல்வி கற்கிறதாம் என்பதற்காக தன் பிள்ளையையும் அதே ஆங்கில மொழியில் கல்வி கற்க அனுப்புவது. இது நான் அன்றாடம் பார்க்கும் சம்பவவங்கள்.
ஆங்கிலம் கற்பதை தவறு என்று சொல்லவில்லை.ஆனால் நாம் கற்கும் கல்வியே ஆங்கில மொழி மூலம் கற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தோடு ஆங்கில மோகத்தில் தாய் மொழியில் மாற்றான் மொழியை கலந்து கதைப்பது அருவருக்கத்தக்கது. நீங்கள் சொல்லலாம் நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப இவ்வாறு மாறுவது தவறு இல்லை என்று.ஏற்றுக்கொள்கிறேன்! நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப நாம் மாறுவதில் தவறு இல்லை.ஆனால் நாகரிக மாற்றம் என்று சொல்லி நம் மொழியை கலப்படம் செய்ய நமக்கு என்ன உரிமை உள்ளது.
உலகின் அழிந்துவரும் மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று ஐநாவின் தரவு கூறுகிறது. இது, கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் பிறந்த மூத்தகுடி நாம் ,உலகில் தொன்மையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்று பீத்திக்கொள்ளும் நம்மை தலை குனிய வைக்கும் விடயம்.
ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனத்தின் மொழியை அழித்தாலே போதும், மெல்ல அந்த இனமும் அழிந்துவிடும் என்பது நீங்கள் அறிந்த விடயம். இன்று நம் இனத்தை அழிக்கும் காரியத்தை நாமே செவ்வன செய்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!
நான் பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எமக்கு கல்வி கற்ப்பிக்கும் ஆசிரியர் சொன்னார் "தன் குழந்தையை- அம்மாவை "மம்மி" என்றும் அப்பாவை "டாடி" என்றும் அழைக்குமாறு சொல்லிக்கொடுப்பதாகவும் நீங்களும் அப்படியே உங்கள் பெற்றோரை அழைக்க வேண்டும் என்றும். அப்பொழுது எனக்கு அவர் சொன்னது பெரிதாக படவில்லை. ஆனால் இப்பொழுது அவர் சொன்னதை நினைக்கும் போது மிகவும் கடுப்பாக உள்ளது, அந்த நேரத்தில் எழும்பி நாலு வார்த்தை கேக்கவில்லையே என்று தோன்றுகிறது. இவ்வாறு ஆசிரியர்களே ஆங்கில மோகத்தில் இருந்தால் மாணவர்கள் எங்கனம்.
அதெப்படி, இங்கிலிசுகாரன் ஆங்கிலத்தில கதைக்கிறான்.பிரான்ஸ்காரன் பிரஞ்சில கதைக்கிறான்.சுவிஸ்காரன் ரொச்சில கதைக்கிறான்.ஏன் சிங்களவர் கூட சுத்த சிங்களத்தில தான் கதைக்கிறார்கள்.ஆனால் நான் தமிழன் என்று சொல்லி மார்பை தட்டிக்கொள்ளும் தமிழன் மட்டும் தன் தாய் மொழியில் கதைப்பதை பெருமையாக எண்ணுகிறான் இல்லை.
கரீபியன் தீவுகளிலே இந்திய வம்சாவளியினர் வாழ்வதாகவும் ஆனால் அவர்கள் தங்கள் அடையாளத்தை தொலைத்தே இன்று வாழ்ந்துகொண்டு இருப்பதாகவும் ஒரு தடவை இணையத்தில் படித்து இருக்கிறேன். அப்பெடிஎன்றால் நாளை புலம்பெயர்ந்துள்ள தமிழ் சந்ததியின் நிலையும் இது தானே..?
நம் எதிர்கால சந்ததிக்கு என்று விட்டு செல்ல மொழி என்ற ஒன்று மட்டுமே தமிழர்கள் வசம் உள்ளது.அதையாவது சிதைக்காமல் விட்டு செல்வது நமது கடமை.
யாழ்ப்பாணத்து கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்த வரை எனக்கு தெரிந்து இலங்கை அணியை விட இந்திய அணிக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இது அநேகருக்கு தெரிந்த விடயம் தான்.ஆனால் காரணம் தெரியுமா? இதற்க்கு பல்வேறு காரணம் இருந்தாலும்...... முக்கிய காரணம் சில இருக்கு.
நான் இலங்கையில் பிறந்தனான். பிடித்த பொழுது போக்கு என்றால் கிரிக்கெட் தான் முதலிடம். பிடித்த அணி நீங்கள் நினைப்பது போல இலங்கை இல்லை.இந்திய அணியை தான் எனக்கு பிடிக்கும்.எனக்கு மட்டும் இல்லை,யாழில் உள்ள எனக்கு தெரிந்த அநேகருக்கு இந்திய அணிதான் best. இதனால் பாடசாலைகளிலும், வெட்டியாக தெருக்களில் நண்பர்கள் கூட்டமாக நின்று இலங்கை அணியா இல்லை இந்திய அணியா பெஸ்ட் என்று வெட்டி விவாதம் வேறு நடக்கும்.இலங்கை அணி அல்லாது இந்திய அணியை பிடிப்பதற்கு காரணம் என்னவெனில். என்னை பொறுத்த வரையில் முதல் காரணம் சச்சின் தான்.(இந்தியா விளையாடும் போது எவன் அவுட்டானாலும் சச்சின் அவுட்டாகக்கூடாது என்பது தான் என் வேண்டுதல், காரணம் தான் தெரியுமே! அன்று ஒட்டுமொத்த அணியும் சச்சினை நம்பி தான் இருந்தது, இதுக்கு உதாரணம் 2003 உலகக்கிண்ண போட்டிகளை எடுத்துக்கொள்ளலாம். இந்திய அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்றது சச்சின் தானே.) 2003 தான் நான் பார்த்த முதலாவது உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி.அதிலே பாகிஸ்தானையும் இலங்கையையும் சச்சின் புரட்டி எடுத்தது இன்றும் மறக்க முடியாதது. அன்று அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் பெற்ற (இறுதிப்போட்டி உட்பட) தோல்வியை தவிர வேறு எந்த போட்டியிலும் இந்திய அணி தோற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இந்திய அணியை பிடித்ததற்கான அடுத்த முக்கிய காரணத்துக்கு வருவோம். இலங்கையை பொறுத்த வரை இந்தியாவுக்கு அருகில் இருப்பது யாழ்ப்பாணம் தான் ஆகவே இந்தியாவின் தேசிய தொலைக்காட்சியான தூர்தர்சன் அலைவரிசை யாழ்பாணத்தின் மிக தெளிவாக ஒற்றை அன்ரனாவுடன் வேலை செய்யும்:-) ஆக இந்தியா பங்குபற்றும் அனைத்து போட்டிகளும் அவர்கள் ஒளிபரப்புவார்கள். அதே சமயம் இலங்கை விளையாடும் போட்டிகளை பார்க்க அன்று இவ்வாறு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அதனால சிறு வயசில் இருந்தே இந்தியாவின் போட்டிகளை பார்த்து பார்த்து இந்திய அணியின் ரசிகர் ஆகிவிட்டோம். (இது எங்கட பிழை இல்லை தானே!)
என்ன ஒரு மொக்கை பதிவு வாசிச்ச போல இருந்தாலும், எதுக்கு இவங்கள் சொந்த நாட்டு அணியை விட்டு இன்னொரு அணியை நேசிக்கிறாங்கள் என்று நீங்கள் நீண்ட காலமாக ஜோசிச்சு இருந்திரிப்பீர்கள்.இப்பொழுது காரணம் புரிந்திருக்கும் உங்களுக்கு. ஒன்றை நேசித்தால் அந்த நேசிப்பில் இருந்து விடுபடுவது என்பது மனிதனுக்கு அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.
அதே போல வரும் உலகக்கிண்ண போட்டிகளை இந்திய அணி சார்பாக எதிர்பார்த்து இருக்கும் கோடிகணக்கானோரில் நானும் ஒருவன். அதுக்காக கிரிக்கெட் வீரர்களின் கட்டவுட் வச்சு பாலபிசேகமும் தீபாராதனையும் காட்டிகிறனான்கள் என்று நினைத்துவிடாதிங்க;-) இவை வாழ்க்கையில் வெறும் பொழுது போக்கு அங்கம் மட்டுமே.
சிங்கம் சிங்களா வரும்
பன்றிங்க தான் கூட்டமா வருமாம்,
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை
நன்றாக புரிந்துகொண்ட
பன்றிகளே
எனக்கு உயர்வாக தெரிகிறது.!!
அப்துல்கலாம்
ஆபிரகாம் லிங்கன்
என்றில்லாது,
அஜித் விஜய்
ரஜனி என
தங்கள் முன்னோடிகளாக
வழிமொழியும்
இளையசமுதாயம்இருக்கும் துணிவில்,
நாலு படம் ஹிட் கொடுத்தால்
நான் தான் அடுத்த முதல்வர்
என்று கிளம்புறான் நடிகன்!!
ஓடித்திரிந்த வீதிகள் எங்கும்
நான் போகத்தடை,
கேட்டால்
சோதனை சாவடியாம்!
அட
நேற்று தானே பொருளியல் வாத்தி சொன்னார்
வீதிகள் "பொதுப்பண்டம்" என்று
பொய் சொன்ன
பொருளியல் வாத்தி மீது
சின்ன கோவம் இப்போ!!
கெப்பு தாவும் குரங்குகள் போல
கொள்கை தாவும் மந்தி(ரி)கள்
இருக்கும் போது
மக்கள் நிலை
அந்தரங்கம்!!
தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக பெரும் சக்தியாக இருந்தவர் "தந்தை" செல்வா அவர்கள்.இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அரசியல் ரீதியாக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த அரசியல்வாதி.இவரின் மறைவுக்கு பின்னர் அந்த இடத்தை நிரப்புவதற்கு தகுதியானவர் இதுவரை இல்லை என்பதுவே எனது கருத்து . தந்தை "செல்வா" பற்றி எனக்கு தெரிந்த சிறு குறிப்பு தான் கிழே..
பொதுவாகவே ஆக்ரோசம் மிக்க பேச்சும்,நடவடிக்கையும் தான் அரசியல் வாதி என்பதற்கான அடையாளம் என்பது மறுக்க முடியாது, காரணம் ஒரு கூட்டத்தின் முன்னால் நின்று ஒரு அரசியல்வாதி உரையாற்றும் போது மனப்பாடம் பண்ணி ஒப்புவிப்பது போல அவர் பேச்சு இருந்தால், அவர் சொன்ன கருத்துக்களில் ஆழ தன்மை இருந்தாலும் அது சாதாரண மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துவிடாது. அத்தோடு மக்களாலும் அப்படிப்பட்ட அரசியல்வாதி உற்று கவனிக்கப்படமாட்டார்.ஆனால் அந்த கூட்டத்துக்கு முன் நின்று அதே விடயத்தை ஆக்ரோசத்துடனும்,உணர்ச்சிகளை முக பாவனை மூலம் வெளிக்காட்டி பேசும் போது அது சாதாரண மக்களையும் சென்றடைந்துவிடும்.ஆனால் "தந்தை" செல்வா இதற்க்கு நேர் மாறானவராம்.மிகவும் மென்மையான போக்கு கொண்டவர் மட்டும் அல்லாது அவர் கூட்டங்களில் உரையாற்றும் போது மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் உரையார்றுவாராம்.எனினும் இவர் உரையாற்ற தொடங்கினால் அவர் முன் எந்த பெரிய கூட்டம் நின்றாலும் மிக அமைதியாகி செவிமடுப்பார்களாம். இவ்வாறு மென்மையான போக்கு கொண்ட அரசியல் வாதியாக எனக்கு தெரிந்து ஈழத்தை பொறுத்தவரையில் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் தந்தை செல்வா மட்டும் தான்.
(மூன்று தசாப்தகால யுத்தங்களை கடந்தும் கம்பீரமாக நிற்கும் தந்தை செல்வா அவர்களின் நினைவு தூபி)
அது மட்டுமல்லாது அவர் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆவதற்கு,பேச்சை மிக குறைத்து, செயல் வீரராக இருந்ததும் முக்கிய காரணமாம். ஈழத்தை பொறுத்தவரை இவ்வாறாக வாய்பேச்சை குறைத்து செயல்வீரராக மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் ஆனவர்கள் இரண்டு பேர் என்று பொதுவான கருத்து. இதில் ஒருவர் தந்தை செல்வா ....
மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததாம், ஈழத்தமிழர்களான எம் விடயத்தில், மாடு மட்டும் அல்ல எது எது எல்லாம் ஏறி மிதிக்க முடியுமோ, அது அது எல்லாம் ஏறி மிதிக்கிறது.கிழக்கில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையாலும் வெள்ளபெருக்காலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை இழந்து அநாதரவாக நிற்கிறார்கள்.
2004 சுனாமி மூலமாக பிடித்த சனியன் விடாமல் தொடர்ந்து துரத்துகிறது நம்மை. அந்த அனர்த்தத்திலே 50 ௦௦௦ மேற்பட்ட மக்களை பலி கொடுத்தது இன்றும் மறக்க முடியாத வடு.இந்த அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது கிழக்கு மக்களுமே.
அடுத்து சில இடைவெளியில் கிழக்கில் யுத்தம் தொடங்கியது.ஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கியது இருப்பிடங்களை நாசமாகியது.பலரை அநாதரவாக்கியது.இன்றும் பழைய வாழ்க்கைக்கு திரும்பாமல் ஆயிரக்கணக்கானோர் அந்தயுத்தத்தின் வடுக்களுடன் வாழ்கிறார்கள். கிழக்கின் யுத்தம் முடிந்து சில நாட்களில் வடக்கை சனியன் பிடித்தது.மோசமான யுத்தத்தால் எதெல்லாம் இழக்க கூடாதோ அதெல்லாம் இழந்தோம்.எஞ்சி இருப்பவர்களும் நிம்மதியற்று முள்வேலிக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு இன்றைய நிலை...
இவ்வாறு இருக்க மீண்டும் கிழக்கில் இயற்க்கை அன்னையின் கொடூராம் அம் மக்கள் மீது.வெள்ளத்தில் மூழ்கி உள்ளது பல கிராமங்கள். மக்கள் இருக்க இடம் இன்றி, மாற்றி உடுக்க உடை இன்றி அவதிப்படுகிறார்கள்.அரசின் உதவி என்பது "யானை பசிக்கு அறுகம் புல்" என்ற நிலை தான்.புலம் பெயர் அமைப்புக்கள் சிலவும் தம் உறவுகளுக்காக தன்னிச்சையாக உதவிகளை மேற்கொள்ளுவது தெரிகிறது. . இங்கே சில நல்ல உள்ளங்களும் உதவி செய்ய முன்வந்துள்ளார்கள்.முடிந்தால் தொடர்புகொள்ளுங்கள்.
இன்று அரசியல் விமர்சகர்களாலும், அரசியலாலர்களாலும், வெட்டி வீராப்பு பேசுபவர்களாலும் கண்கொத்தி பாம்பாக கவனிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர் சீமான். இணையத்தளங்களில் சீமான் பற்றிய விமர்சனம் படு சூடாக நடந்துகொண்டிருக்கிறது.சமீபத்தில முகநூலில் சீமான் பற்றிய விமர்சனம் நடந்துகொண்டிருந்தது.(வழமையாக அந்த நபருக்கு இது தான் வேலை)எனினும் வழமைக்கு மாறாக சீமான் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள் சிலர் .இதென்னடா இப்படி எல்லாம் விமர்சிக்கிராங்களே, யார் இவங்க என்று நினைத்து விமர்சனம் முன்வச்ச சிலரின் முகநூலுக்கு சென்று பார்த்தேன். அப்ப தான் தெரிந்தது அநேகமானோர் தங்கள் அபிமான கட்சி ( தி மு க ) சார்பாக ஒரு நோக்கத்தோடு தான் இந்த விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் என்று.
பொதுவாக இப்பொழுது சீமான் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்.
1. அ தி மு க வுக்குதேர்தலிலே ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.(முக்கியமானது)
2. சீமானுடைய பேச்சுக்களும் நடத்தைகளும் சினிமா தனமாக இருக்குதே ஒழிய ஆக்க பூர்வமாக இல்லை.
3.ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்.
4.பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு பெரியார் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுகிறார்(முக்கியமாக தேவர் சிலைக்கு மாலையிட்டது).
5. பாஞ்சாலம் குறிச்சி(1997) படத்தில் தமிழரின் பண்பாடுகளுக்கு முரணாக உதட்டோடு உதடு முத்தக்காட்சி வைத்தவர் சீமான்.(முட்டையில மயிர் பிடுங்கிறாங்க)
6. சீமான் என்பது தமிழ் பெயர் இல்லை (இப்பிடியும் சொல்லுறாங்க சிலர்)
இப்படியாக பல பல குற்றச்சாட்டுக்களை இணையங்களிலே அடுக்கிக்கொண்டே போகிறார்கள். (ஆனால் இவ்வாறு விமர்சனம் முன் வைப்பவர்கள் பொது களத்தில் இறங்குகுகிரார்களா என்றால் நிச்சயமாக பதில்- இல்லை! )
பேச்சு என்பதும் ஒரு ஆயுதம் தான். ஒருவர் கூட்டத்தின் முன் வந்து எந்த வித உணர்ச்சிகளையும் காட்டாது ஒரு கருத்தை சொல்லிவிட்டு போவதை விட, அதே விடயத்தை உணர்ச்சிகரமாக சொல்லும்பொழுது அது மக்களிடையே விழிப்பை உண்டாக்கிறது. இதை சினிமாத்தனம் என்பது என்னை பொறுத்தவரை முட்டாள்தனம். அத்தோடு ஆக்ரோசமாக பேசுவது என்பது எல்லோராலும் முடியாத விடயம்.(நான் அறிந்த வரை மிகவும் மென்மையாக பேசி அது மக்களாலே உற்று கவனிக்கப்படும் பேச்சாக "தந்தை" செல்வாவின் பேச்சு இருந்துவந்தது.)
சரி முதலாவது குற்றச்சாட்டுக்கு வருவோம்.தமிழகத்தை பொறுத்தவரை தி மு க, அ தி மு க என்ற இரு பெரும் திராவிட கட்சிகளை தவிர்த்து இன்னொரு கட்சி ஆட்சியில் வருவது என்பது இன்றைய நிலைமையில் முயல் கொம்பு தான். தமிழர்களுக்கு குறிப்பாக தினந்தோறும் கொடுமைகளை அனுபவிக்கும், சுட்டு கொல்லப்படும் அந்த தமிழ் நாட்டு மீனவர்களுக்கும்,ஸ்பெக்ராம் ஊழலில் கோடி கோடியாக மக்களில் பணங்களை கொள்ளையடித்தும் ,மற்றும் முக்கியமாக ஈழ தமிழர்களுக்கு மிக பெரிய துரோகத்தை செய்த காங்கிரஸ், திமுக கூட்டணியை தோற்கடிப்பதற்காகவே தான் அ தி மு க வுக்கு ஆதரவு வழங்குவதாக தன்னிலை விளக்கம் கொடுக்கிறார் சீமான்.
சீமான் சொல்வதிலும் நீயாயம் இல்லாமல் இல்லை.அதற்காக ஜெயலலிதாவை நியாயப்படுத்த வரவில்லை.ஊழலிலே கருணாநிதிக்கு சளைக்காதவர் அவர்.எனினும் இஸ்பெக்ராம் ஊழல், திமுகா மீண்டும் காங்கிரசோடு கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பதன் மூலம் புஸ்வானம் ஆக்கப்பட்டுவிடும் என்கிறார் ஜெயலலிதா.( இவவின் ஊழல் இன்னமும் கிடப்பில் கிடக்கிறதே என்ற கவலை போலும்)இதிலும் உண்மை இல்லாமல் இல்லை. மிருகங்களை போல கடலிலே தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் போதும்,தமிழின தலைவர் என்பவர்- தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போதும் வெறும் காகிதங்களோடும் கண்டனங்களோடும் தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது போல காட்டிகொண்டிருக்கிறது தி மு க. காங்கிரசை பொறுத்தவரை தமிழ் நாடும் இந்தியாவுக்குள் தான் இருக்குறது என்பதை மறந்து பல காலம். ஆக இந்த கூட்டணியால் தமிழனுக்கு விடிவு இல்லை என்பதை விட, கடுமையாக இருள் சூழ்ந்து வருகிறது என்பதுவே உண்மை.
ஆகவே தி மு க விற்கு மாற்றீடாக அ தி மு க வை கொண்டு வருவதை விட மாற்றீடு வேறு எதுவும் மக்களுக்கு இருக்கப்போவதில்லை, ஏனெனில் இவற்றுக்கு மாற்றீடாக வேறு பலமான கட்சிகள் இல்லை .சீமானை பொறுத்தவரை தனித்து நின்று வெல்லும் அளவுக்கு தற்சமயம் அவர் கட்சி வளர்ந்துவிடவில்லை.தற்சமயம் அவ்வாறு தனித்து நின்றால் நிச்சயமாக வாக்குகள் சிதறடிக்கப்படும் அதன் மூலம் மீண்டும் தி மு க+ காங்கிரஸ் கூட்டணியே ஆட்சிக்கு வந்து, மீண்டும் பழைய பஞ்சாங்கமே. அதே போல தேர்தலில் பங்குபற்றாது வெறும் பார்வையாளராக சீமானின் கட்சி நின்றாலும் நிச்சயமாக மேலே சொன்ன நிகழ்வு தான் நடக்கும்.
ஒரு தராசில் ஒரு தட்டில் அ தி மு க வும் ,மற்றைய தட்டில் தி மு க +காங்கிரஸ் கூட்டணியும் இருப்பதாக நினையுங்கள். உங்களுக்கு எது கனமாக தெரிகிறதோ, உங்களுக்கு எந்த தட்டில் உள்ளது அளவுக்கு அதிகமாக வேதனையையும், துரோகத்தையும் கொடுத்ததோ அதை அப்புறப்படுத்துவதே இன்றைக்கு மக்களின் தேவை.............இதை தானே சீமானும் செய்கிறார்.
ஈழத்திலே உச்ச கட்ட யுத்தம் நடந்துகொண்டு இருந்த வேளை ராமேஸ்வரத்தில் நடந்த கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கடுமையாக தாக்கி பேசியதால் "இறையாண்மைக்கு எதிரானது" என்று கூறி சீமானும் இயக்குனர் அமீரும் தமிழக அரசால் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.சிறையில் இருந்து வெளி வந்த பின்னர் அமீர் தன் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டார்.
ஒரு முறை இயக்குனர் அமீரிடம் இது பற்றி நிருபர் கேட்ட போது "தான் இந்த விடயங்களில் இருந்து தற்போது ஒதுங்கி இருப்பதாகவும், ஆனால் சீமான் சிறையில் தன்னோடு இருந்த போது கூட எந்த வித மன மாற்றமும் இல்லாமல் உறுதியோடு இருந்தார்" என்று கூறினார்.அந்த சம்பவத்தின் பின்னரும் சீமான் அநியாய வழியில் (தேசிய பாதுகாப்பு சட்டம்) சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இப்படி அநாதரவான தமிழினத்துக்கு ஆதரவாககுரல் கொடுப்பதையே தேச விரோதமாக கருதிகிறது இப்போதைய மத்திய மாநில அரசுகள்!
ஆகவே நாம் விமர்சனம் என்று கூறி தமிழனுக்காக முன்னின்று குரல் கொடுக்கும் ஒரு சிலரையும் கடுமையாக தாக்கி விமர்சிக்கும் போது ,எதிர்காலத்தில் தன் இனத்துக்காக, மக்களுக்காக என்று எவனும் குரல் கொடுக்க வரமாட்டான், அவ்வாறு குரல் கொடுக்க வந்தாலும் இந்த மக்கள் தன் மீது "துரோகி பட்டம்" "சுயலனவாதி பட்டம்" "ஓட்டுப்பொறுக்கி பட்டம்" என்று பல்வேறு விதமான பட்டங்களை தானே இறுதியில் வழங்குவார்கள் என்று ஒதுங்கியே இருந்துவிடுவான்.
இருந்தாலும் எனக்கு ஒரு பயமும் தொற்றி கொள்கிறது.சில காலங்களுக்கு முன்னர் சீமானை போலவே தன் துணிவு மிக்க பேச்சாற்றலால் ஒரு மிகப்பெரும் கூட்டத்தை தன் பின்னால் கொண்ட வை.கோ,எதிர்காலத்தில் பலம் மிக்க அரசியல்வாதியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அண்ணன் வை.கோ, பிற்காலத்தில் கருணாநிதியோடு ஏற்பட்ட முரண்பாடுகளால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் கருணாநிதிக்கு எதிர்ப்பு அரசியல் செய்யும் பொருட்டு அ தி மு க வுடன் இணைந்து இன்று ஜெயலலிதா எந்த அறிக்கை விட்டாலும் எதிர்த்து கேள்வி கேட்க்க முடியாது மொளனி ஆக்கப்பட்டது போல எதிர்காலத்தில் சீமானின் நிலை வந்தால்........."கருணாநிதி வந்தால் மட்டுமல்ல ஜெயலலிதா வந்தாலும் நான் இருக்கும் இடம் சிறைச்சாலை தான்" என்கிறார் சீமான். இன்றைய பொழுதில் சீமானது நிலை கத்தில் மேல் நடப்பது போன்று. கடந்து முடிப்பார் என்று நான் இதுவரை நம்புகிறேன்.எதிர்கால சீமானின் அரசியல் இதற்க்கு விடையாக அமையும்.
என் மனசில் பட்டத்தை மட்டுமே இங்கே கொட்டியுள்ளேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
ஒவ்வொருவருக்கும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவங்கள் என்று பல இருக்கும். இதிலே ஒரு சில சம்பவங்கள் மனசிலே பசுமரத்து ஆணி போல நீங்காத நினைவுகளாக மாறிவிடும்.அதே போல என் மனசில் நிறைந்து கிடக்கும் அந்த நினைவு தான் இவை. 95 இறுதி பகுதி அது, ஓரிரு நாட்களிலே நடுநிசியிலும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது உயிர் மட்டும் மிஞ்சினால் போதும் என்று இலட்சக்கணக்கான மக்கள் தமது சொந்த இருப்பிடத்தை விட்டு கையில் கிடைக்கும் பொருட்களுடன் வேறு இடங்களுக்கு பெயர்ந்த நாட்கள். யாழ் இடப்பெயர்வில் அன்று 7 வயசு சிறுவனாக ஊரோடு ஒத்து பிறந்த மண்ணை விட்டு வெளியேறிய அந்த நினைவுகளை எழுதுகிறேன்.
95 இன் இறுதி பகுதி ,வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் போராளிகள் அறிவிக்கின்றார்கள் "தாம் யாழ் குடா நாட்டை விட்டு வெளியறப்போவதாகவும் இராணுவம் யாழுக்கும் உட் புக போவதாகவும் ஆகவே மக்களை பாதுகாப்பு தேடி தென்மராட்சி ,வன்னி போன்ற பிரதேசங்களுக்கு இடம்பெயருங்கள்"என்று,இந்த அறிவித்தல் விட்டு சில மணி நேரங்களிலே மக்கள் தங்கள் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக யாழை விட்டு வெளியேறுகிறார்கள்.குண்டுச்சத்தங்களுக்கும், பேரிரச்சலுடன் எம் தலைகளை தேடும் மிகையொலி விமானங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ் குடாநாட்டையும் மற்றைய பிரதேசங்களையும் இணைத்து நிற்கும் இரண்டு பாதைகள் ஊடாக 5 இலட்சம் மக்கள் இரவோடு இரவாக வெளியேறிக்கொண்டு உள்ளார்கள்.
நாங்களும் எங்கள் சொந்தங்களை சேர்ந்த சுமார் எழு ,எட்டு குடும்பங்களும் ஒருவீட்டில் கூடி,ஒருசிலர் தாமும் இடப்பெயர வேண்டும் என்றும் இன்னும் சிலர் எது நடந்தாலும் நாம் ஒன்றாகவே இங்கேயா தங்கிவிடுவதாகவும் பெரியவர்கள் இடையே வாதங்கள் நடந்தது. இறுதியில் இடம்பெயருவதாக முடிவு எடுத்தார்கள்.காரணம் நம் குடும்பங்களிலே இளைஜர்களும் பெண்களினது பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.இதெல்லாம் 7 வயசு சிறுவனாக நானும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிக்கிறேன்.
இந்த முடிவுகளுக்கிடையே யாழ் குடாநாட்டில் இருந்த அநேகமான மக்கள் இடம் பெயர்ந்து விட்டார்கள் அதனால் வாகன ஒழுங்கு செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது.ஏதாவது வாகனங்கள் வருமா என்று நாம் மூட்டை முடிச்சுக்களை எடுத்துக்கொண்டு வீதியில் சென்று நிற்கிறோம் (யாழ்- காரைநகர் வீதி) ஆனால் வீதியோ எந்த சன நடமாட்டமும் இன்றி வெறிச்சோடி இருக்கிறது.அனேகமாக எமக்கு முன்னாடியே எமது கிராமத்தை சேர்ந்தவர்களும் அயல் கிராமத்தை சேர்ந்தவர்களும் வெளியேறிவிட்டார்கள்.நாம் தான் இறுதியாக வெளியேறுகிறோம் என்று நினைக்கிறேன்.
நீண்ட நேரம் காத்திருந்து எந்த வித வாகனங்களும் வரவில்லை, நேரமோ மாலை பொழுது மறைந்து இரவு வரவேற்கிறது. அந்த சமயம் சில போராளிகள் வருவதை கண்ட எம்மவர்கள், அவர்களிடம் எம் நிலைமையை எடுத்து கூறிகிறார்கள். அவர்களும் தாம் ஒழுங்கு செய்வதாக கூறி சென்றார்கள். சொன்னது போலவே சிறிது நேரத்தில் ஒரு வாகனம் வந்தது ,அதோடு 2 ,3 போராளிகளும் வந்தார்கள்.(ஒருவர் வாகனத்தை ஓட்டி வந்தவர்).
விரைவாக நாம் கொண்டு வந்த மூட்டை முடிச்சுக்களை ஏற்றினார்கள்.எனினும் நாம் அதிகமானோர் இருந்ததால் வாகனத்தில் இடப்பற்றாக்குறை இருந்தது ஒருவாறாக சிரமப்பட்டு எல்லோரும் ஏறினோம். முதியோர்களும் இருந்ததால் அவர்கள் வாகனத்தின் தட்டில் இருக்க(ரக்ரர் வாகனம்) மிகுதி எல்லோரும் கடுமையாக நெரிபட்டு நிற்கிறோம்.இவ்வாறாக புறப்பட ஆயத்தமாகும் போது அங்கெ எங்களில் ஒருவர் கொண்டு வந்த துவிச்சக்கர வண்டி அநாதரவாக நிக்கிறது. அதை விட்டு போக மனம் இல்லாது நம்மவர்கள் நிக்க அந்த போராளிகள் சிரமத்தின் மத்தியில் ஒருவாறாக சமாளித்து அந்த துவிச்சக்கர வண்டியையும் தம் வாகனத்தில் சுமத்திக்கொள்ள எம் பயணம் தொடங்குகிறது.
இருளும் எம் பயணத்தை சூழ்ந்து கொள்ள எங்கே செல்கிறோம் என்ற எந்தவித முன் திட்டங்களும் இல்லாமல் சென்றுகொண்டு இருக்கிறோம்.அப்பொழுது ஒரு போராளி எதோ ஒரு பாலம் உடைந்துவிட்டதாகவும் ( கோப்பாய் பாலம் என்று நினைவு)அதனால் மாற்று வழியாதான் செல்ல வேண்டும் என்று சொல்ல நம்மவர்களும் சஞ்சரித்து கொள்கிறார்கள்.குண்டு வெடிக்கும் சத்தங்களும் தொடர்ச்சியாக கேட்ட வண்ணம் இருக்கிறது . இப்படியாக பயணம் ஒரு வெளி பிரதேசத்தினூடாக தொடரும் பொழுது எம்மை நோக்கி யாராலோ வெளிச்சம் வீசப்படுகிறது.எங்களில் சிலர் சொல்லுகிறார்கள் "ஆமிக்காரன் பரா லைட் அடிச்சு பாக்கிறான்,ஷெல் அடிக்க போகிறான்" என்று. (அநேகமானோருக்கு தெரியும் பரா லைட் என்கிறது இரவு நேரங்களிலே எதிரிகளின் நடமாட்டத்தை அவதானிக்க இராணுவத்தால் பயன்படுத்தபடுவது என்று).இருந்தாலும் அந்த போராளிகள் எம்மை விட்டு ஓடி சென்று ஒளிக்காமல் தொடர்ந்து எம்மை கொண்டு செல்கிறார்கள்.நல்ல வேளை எம்மை நோக்கி ஷெல் அடிக்கவில்லை.அடித்திருந்தால் யாரும் அன்று உயிரோடு தப்பியிருக்க மாட்டோம்.ஏனெனில் அன்று மருத்துவ வசதியும் இல்லை. யாழ் போதனா வைத்தியசாலையும் கூட தம் செயற்பாடுகளை முடக்கி அன்று இடம்பெயர்ந்தது
இப்படியாக பயணம் நள்ளிரவை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. அப்பொழுது திடிரென மிக வேகமாக உளவு இயந்திரம் ஒன்றை செலுத்தி வந்த இருவர் அதை நாம் செல்லும் வாகனம் மீது கட்டுப்பாடு இழந்து மோதுவது போல கொண்டு வந்தார்கள்.எனினும் எம் வாகனத்தை ஓட்டி வந்த அந்த போராளியின் திறமையால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே போராளிகள் வாகனத்தை நிறுத்தி மிகுந்த ஆத்திரத்தோடு அந்த உளவு இயந்திரத்தை செலுத்தி வந்தவரை நேக்கி செல்ல ,போராளிகளை கண்டதும் அவர்கள் ஓடி ஒழித்துவிடுகிறார்கள்.
சிறிது நேரத்தில் மீண்டும் எம் பயணம் தொடர்ந்து வாகனம் பருத்தித்துறை எனும் பிரதேசத்தை வந்தடைய நடு நிசி ஆகிவிட்டது.அவர்களும் எம்மை ஒரு பாடசாலையில் இறக்கிவிட்டு "இன்று இரவு இங்கே தங்குமாறும் நாளை உங்களுக்கு தங்குவதற்கு இடம் ஒதுக்கி தருவதாகவும்" கூறி சென்றுவிட்டார்கள்.
அடுத்தநாள் காலை எழுந்து வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை அரைகுறையா சாப்பிட்டு இருக்க மீண்டும் அந்த போராளிகள் வந்து எமக்கு வேறு இடம் ஒதுக்கியுள்ளதாகவும் அங்கெ வருமாறும் எம்மை அழைத்து செல்கிறார்கள்.நாமும் கால் நடையாக வீட்டில் இருந்து எடுத்து வந்த பொருட்களோடு நடக்க தொடங்குகிறோம்.சிறிது தூரம் சென்றதும் எமக்கு ஒதுக்கியுள்ள இடத்தை காட்டுகிறார்கள்.அதுவும் ஒரு பாடசாலை, செயற்பாடுகள் இன்றி முடங்கி கிடந்தது. எம்மவர்களும் உள்ளே சென்று தமக்கான இடங்களை ஒதுக்கி கொள்கிறார்கள்.
இவ்வாறாக நாட்களும் நகருகிறது.எமக்கு அன்றாட தேவைகளுக்கும் உணவுக்கும் தொண்டு நிறுவனங்கள் மிகவும் உதவியாக இருந்தன.இவற்றுள் யுனிசெப் நிறுவனம் இன்றும் என் மனசில் நிக்கிறது.சமைத்து சாப்பிடுவதற்கான அத்தியாவசிய பொருட்களும் தரப்பட்டன.எம்மவர்களும் குடும்பங்களாக சேர்ந்து சமைத்து பரிமாறி உண்டனர்.
இப்படியே நாட்கள் மாதங்களாகி நகர்ந்துகொண்டு இருந்தன.நாம் தங்கி இருந்த அந்த முகாமுக்கு(பாடசாலைக்கு)முன் வீதிக்கு இரு மருங்கிலும் போராளிகளின் இராணுவ முகாம்.எனினும் எம்மிலும் பதின்ம வயசை கடந்த நபர்கள் இருந்த போதும் நான் அறிந்து ஒரு பொழுதும் அவர்கள் எம் முகாமுக்கு வந்து ஆட்சேர்ப்பில் ஈடுபட்டது இல்லை.ஆனால் எமது முகாமுக்கு அருகில் உள்ள பொது இடங்களில் போராட்டம் சம்மந்தமான கருத்தரங்கும் வீதிநாடகமும் வைத்து தம் போராட்டத்தின் நியாயங்களை எடுத்து கூறி மக்களை போராட்டத்தில் இணையுமாறு வேண்டிக்கொள்வார்கள்.அவர்களின் கருத்தரங்குகளின் முடிவிலும் வீதி நாடகங்களின் முடிவிலும் சிலர் இயக்கத்தில் சென்று இணைந்துகொண்டதாக எம்முகாமுக்குள் பேசிக்கொள்வார்கள்.என்னை பொறுத்தவரையில் கருத்தரங்கில் ஒன்றும் புரியாது.ஆனால் அவர்களின் வீதி நாடகங்களை சென்று வேடிக்கை பார்த்த நினைவுகள் உண்டு.அத்தோடு ரஞ்சன் பூங்கா, பருத்தித்துறை கடலுக்கு செல்வது என்று இம்மாலை நேர பொழுதுகளும் சென்றுகொண்டிருந்தது.
ஆறு மாதங்கள் ஓடியது மீண்டும் போராளிகள் தென்மராட்சியை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள் அநேகமான மக்களும் அவர்களுடனே வன்னிக்கு இடம் பெயருகிறார்கள்.ஆனால் நம்மவர்கள் "என்ன நடந்தாலும் மீண்டும் சொந்த ஊருக்கே போய்விடுவது" என முடிவெடுத்து வாடகைக்கு லொறி ஒன்றை பிடித்து அதன் மூலம் மீண்டும் யாழுக்கு செல்ல ஆயத்தமாகிறோம் .எனக்கு மிகுந்த சந்தோசம் நான் பிறந்த இடத்துக்கு மீண்டும் போகிறேன் என்பதை நினைத்து. பயணம் தொடங்கியது, எம்மை போலவே ஆயிரக்கணக்கானோர் வீதி நிறைந்து தமது சொந்த பிரதேசத்துக்கு மீள் குடியேற சென்று கொண்டிருந்தார்கள்.
சிலர் மாட்டு வண்டிகளில் அளவுக்கு அதிகமான தமது சுமைகளை ஏற்றியதால் மாடுகள் வாயால் நுரை தள்ள நடந்துவருவதை கண்டு பரிதாபப்பட்டது இப்பொழுதும் என் கண் முன்னே நிற்கிறது.வீதி எங்கும் மக்கள் அலையாக திரண்டு சென்றுகொண்டிருந்ததால் வாகனம் மிக மெதுவாகவே ஊர்ந்து சென்றது.யாழ் நகரத்தை அடைந்தபொழுது இருட்டிவிட்ட காரணத்தால் அங்கெ நின்ற இராணுவம் (அப்பொழுது தான் முதல் தடவையாக இராணுவத்தை காண்கிறேன்) "ஊரடங்கு வேளை பிறப்பித்து இருப்பதாகவும் தொடர்ந்து செல்ல முடியாது இரவு இங்கே தங்கிவிட்டு காலையில் பயணத்தை தொடருமாறு கூற செய்வதறியாது நாமும் அன்று இரவை அந்த யாழ் நகர் வீதியிலே கழித்தோம்.
மறு நாள் விடிந்ததும் குடிப்பதற்கும், முகத்தை கழுவி கொள்வதற்கும் தண்ணீர் பிரச்சனையா இருந்திச்சு .அதே நேரம் அருகில் ஒரு கோவில் இருந்தது .அது யாழ் நகர் வீதியில் உள்ள ஒரு கோவில்(பெயர் நினைவில் இல்லை) திருவிழாக்களின் பொழுது ஊஞ்சல் திருவிழா என்ற ஒன்று நடைபெறுவது உங்களுக்கு தெரிந்திருக்கும்.அந்த கோவிலிலும் ஊஞ்சல் திருவிழா நடந்திருக்கிறது அந்த நேரம் ஷல் அடிக்க சுவாமியை ஊஞ்சலிலே விட்டு விட்டு கோவிலில் நின்றவர்கள் தம் உயிரை காப்பாற்றும் நோக்கோடு ஓடியிருக்கிறார்கள்.ஏனெனில் நாம் அந்த கோவிலுக்குள் சென்ற நேரம் சாமி ஊஞ்சலிலே இருந்தது.ஆறு மாசமாக சாமியும் ஊஞ்சலில் இருந்திருக்காரு;) (சாமிக்க இன் நிலைமை என்றால் மனிதர்கள் நாம் எம்மாத்திரம்) நாமும் வேறு வழி இல்லாது அந்த கோவில் தீர்த்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்திவிட்டு,சிறிது நேரங்கழித்து எமது ஊர் நோக்கிய பயணம் தொடங்கி,ஊரை வந்தடைகிறோம்.
ஆனால் ஊரோ பார்ப்பதற்கே பாழடைந்ததாக குப்பையும் பற்றைகளுமாக மூடி கிடக்கிறது.அத்தோடு ஆள் நடமாட்டமும் மிகவும் குறைவாகவே இருந்தது.காரணம் ஊரை விட்டு இறுதியாக புறப்பட்டதும் நாங்கள் தான் ஊருக்கு முன்னதாக வந்து சேர்ந்ததும் நாங்கள் தான்.அநேகமானோரின் வீடுகள் உடைக்கப்பட்டு இருந்தது .சில வீடுகளில் களவுகளும் நடந்திருந்தன.அத்தோடு ஊருக்குள் புகுந்த ஆமி மதில்களிலும், வீட்டு சுவருகளிலும் சுட்டு சுட்டு பழகியுள்ளார்கள்;) ஆகவே நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு சில மாதங்கள் எடுத்தது.
இப்படியாக நாட்டில் என்ன நடக்கிறது புலிகள் என்றால் யார், இராணுவம் யார் எதற்க்காக சண்டை நடக்கிறது என்று எதுவுமே பகுத்து அறிய தெரியாத வயசு என்பதால் என்னை பொறுத்த வரை அந்த நேரத்தில் இந்த நிகழ்வு ஒரு அவலமாக தெரியவில்லை.பாடசாலைகளுக்கு மூடுவிழா;) தொடர்ந்து மிரட்டும் பயங்கர குண்டுச்சத்தங்களையும், பேரிரச்சலை கிளப்பி வரும் விமானங்களை தவிர வேறு எந்த கஸ்ரங்களும் அந்த வயசில் தெரியவில்லை.அத்தோடு என் வயசை ஒத்த சிறுவர்களும் எம் குடும்பங்களில் இருந்ததால் எமக்கு அது ஒரு விளையாட்டாக தான் தெரிந்து.
ஆனால் இப்பொழுது நினைத்துப்பார்க்கும்பொழுது அந்த நாட்களில் கடுமைகள் புரிகிறது. கால் நடையாக தொடர் இடப்பெயர்வு, சொந்தங்களின் பிரிவுகள், பட்டினி, காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கொடுமைகள்,இறந்தவர்களுக்கு இறுதிசடங்கு செய்து அவர்களை அடக்கம் செய்ய கூட முடியாத பேரவலம்,தாகத்தால் அழுத குழந்தைக்கு குடிக்க நீர் இன்றி மழைநீரை குடையில் ஏந்தி கொடுத்த கொடுமை,எந்த நேரத்தில் தலையில் குண்டு விழும் என்று தெரியாத நிம்மதியற்ற வாழ்க்கை எனஎத்தனையோ அவலங்களை எம் மக்கள் அந்த நாட்களில் எதிர்கொண்டுள்ளனர் .
அன்று தங்களின் பளுக்களுக்கு மத்தியில் எமக்கு பேருதவி செய்த,வெறிச்சு கிடந்த ஊரில் எவ்வித உதவியும் இன்றி தன்னந்தனியாக நின்ற எமக்கு உதவிய அந்த போராளிகள் அனேகமாக இன்று உயிருடன் இருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்;( அவர்களையும் நன்றி கூறி வணங்கி என் இந்த நினைவுகளை முடித்துக்கொள்கிறேன்.
இந்த உலகிலே கொடுமையானது தமிழனாக பிறப்பது, அதனிலும் கொடுமையானது ஈழ தமிழனாக பிறப்பது..