22 திகதி இங்கிலாந்து நெதர்லாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியிலே நெதர்லாந்து அணியிடம் இருந்து மிகப்பெரும் நெருக்கடியை பெற்றிருந்தது இங்கிலாந்து. முதலில் துடுப்பெடுத்து ஆடிய நெதர்லாந்து Ryan ten Doeschate இன் அற்புதமான சதத்துடன் 292 ஓட்டங்களை பெற்றது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 48 .4 ஓவர்களிலே வெற்றியிலக்கை எட்டியது. எனினும் இங்கிலாந்தின் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெதர்லாந்து பந்துவீச்சாளர்களால் எவ்வித நெருக்கடியையும் கொடுக்க முடியவில்லை.
அடுத்து பாகிஸ்தான் கென்யா அணிகளுக்கிடையிலான போட்டியிலே எதிர்பார்த்தது போல பாகிஸ்தான் ஒரு மிகப்பெரும் வெற்றியை பெற்றது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய பாகிஸ்தான் உமர் அக்மலின் அதிரடி 71 ஓட்டங்களும் கென்யாவால் அள்ளி வழங்கப்பட்ட 46 உதிரிகளுடனும் 317 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய கென்யா அப்ரிடியின் சுழலில் சிக்குண்டு 112 ஓட்டங்களுக்கு சுருண்டுகொண்டது.
அடுத்து பரபரப்பான மேற்கிந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியிலே தென்னாபிரிக்கா எந்தவித நெருக்கடியும் எதிர்கொள்ளாது இலகுவாக வெற்றியை பெற்றுக்கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாட வந்த மேற்கிந்தியா ஆரம்பத்தில் கிறிஸ் கெயிலை இழந்தாலும் இரண்டாவது விக்கெட்டுக்காக சிறப்பாக ஆடியது. எனினும் பின்வரிசை ஆட்டக்காரர்களின் தடுமாற்றம் 222 க்குள் சுருண்டுகொள்ள வழிவகுத்தது. அருமையாக பந்துவீசிய இம்ரான் தகிர் 4 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு ஆடிய தென்னாபிரிக்கா வில்லியர்சின் அதிரடி சதத்தின் மூலம் 43 ஆவது ஓவரிலே வெற்றியை பெற்றுக்கொண்டது.
அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான போட்டியிலே அவுஸ்ரேலியாவின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாது நியூசிலாந்தின் துடுப்பாட்ட வரிசை சரிந்துகொள்ள அவுஸ்ரேலியா இலகு வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்து ஆடிய நியூசிலாந்தின் துடுப்பாட்ட வீரர்கள் வேகமாக ஆட்டமிழக்க வெக்ரோரியும் நாதன் மக்கலமும் இணைந்து 200 ஓட்டங்களை கடக்க வைத்தார்கள். 207 என்ற இலக்குடன் களமிறங்கிய அவேஸ்ரேலியா ஆரம்ப துடுப்பாட்டவீரர்களின் அதிரடி ஆட்டத்தின் துணையுடன் 34 ஓவர்களிலே வெற்றியை பெற்றுக்கொண்டது. ஷேன் வேட்சன் 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்டு ஒரு விக்கெட்டை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிசார்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலே பரிதாபமாக இலங்கை தோல்வியடைந்தது. மலிங்க இல்லாத இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பாகிஸ்தானிடம் எடுபடவில்லை. சுழலிலே முரளி மட்டும் ஓட்டம் விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்தி பந்து வீசினாலும் ஒரு விக்கெட்டை மாத்திரமே கைப்பெற்ற முடிந்தது. மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனிஸ்கான் சிறப்பாக செயற்ப்பட்டனர்.
277 என்ற இலக்கை துரத்திய இலங்கைக்கு ஆரம்ப துடுப்பாட்டம் நன்றாக இருந்தாலும் மகேல மற்றும் திலான் சமரவீரவின் அடுத்தடுத்த ஆட்டமிழப்புக்கள் திருப்புமுனையாக அமைந்துவிட்டது. பின்வரிசையில் இறங்கிய சாமர சில்வா சிறப்பாக விளையாடினாலும் அதிகளாவான பந்துகளை வீணடித்து அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார்.
பாகிஸ்தான் சார்பாக இந்த போட்டியிலும் அப்ரிடி சிறப்பாக பந்துவீசி 34 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து நான்கு மிக முக்கிய விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
அடுத்து அனைவராலும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி ஆட்டத்தின் இறுதி பந்துவரை பரபரப்பாக சென்று சமநிலையில் முடிவடைந்துள்ளது. நாணய சுழற்ச்சியில் வென்ற இந்தியா துடுப்பாட்டத்தை தேர்வுசெய்து, மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது. இதிலே அதிரடியாக ஆடிய சச்சின் 5 சிக்ஸ்சர்கள் அடங்கலாக தனது 47 வது சதத்தை பெற்றுக்கொண்டார். அத்தோடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்வான் பந்து வீச்சு இந்தியாவிடம் எடுபடவில்லை. இந்தியா 350 ஓட்டங்களை தாண்டும் என்று எதிர்பார்த்த வேளை ப்ரெஸ்ணனின் சிறப்பான வேகத்திலே 339 க்கு அனைத்து விக்கெட்டுக்களை இழந்துகொண்டது. யுவராஜ் மற்றும் காம்பீர் இரு அரைச்சதங்களை அணிக்காக பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த தொடக்கத்தை கொடுத்தார்கள். பீற்றர்சன் ஆட்டமிழக்கவும் ற்றோட் விரைவில் ஆட்டமிழந்து சென்றார். எனினும் பின் வந்த இயன் பெல் உடன் இணைந்த அணி தலைவர் ஸ்ரரிஸ் மிகவும் சிறப்பாக, வேகமாக இலக்கை நோக்கி நகர்ந்தனர். ஒரு கட்டத்தில் 42 ஓவர்களிலே 281 க்கு 2 விக்கெட், என்று இலக்கை மிக அண்மித்திருந்த இங்கிலாந்துக்கு சகீரின் பந்து வீச்சு மிக நெருக்கடியை கொடுத்தது. எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் ப்ரெஸ்ணன் மற்றும் ஸ்வான் ஆகியோரின் அதிரடி ஆட்டம் மற்றும் இறுதி ஓவரில் அஜிமல் அடித்த சிக்ஸ்சருடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இந்த போட்டியிலே இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக மாறி இருந்தது குறிப்பிடத்தக்கது. சுழல் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய மிகவும் சிரமப்பட்டார்கள். எனினும் இங்கிலாந்துக்கு சாதகமாக முடிய வேண்டிய போட்டியை தனது அனுபவமும், சிறந்த ஜோக்கர் பந்துகளின் மூலமும் போட்டியை திசை திருப்பிய பங்கு சகீர்க்கானுக்கே. இந்திய அணியை பொறுத்தவரை ஐந்தாவது பந்துவீச்சாளர் குறை தற்போதும் வெற்றிடமாகவே உள்ளது. அது தவிர இனி வரும் போட்டிகளில் மூன்று வேகபந்து வீச்சாளர்களை களமிறக்க முனைவார்கள் என்றே தெரிகிறது.