மதத்தால் "மதம்" கொள்ளும் மனிதர்கள்.

                                                                                                                                        எத்தனையோ கிளைகளாக  பிரிந்து  பாய்ந்தாலும் இறுதியில் கடலிலே ஒன்றாக    கலக்கும் நதிகள்  போல இந்த உலகிலே பல்வேறு  மதங்கள் இருந்தாலும் அத்தனையும் நல்லதையே சொல்கிறன. தீயதை சொல்வதென்றால் மதங்கள் எதற்கு. ஆனால் மனிதன் தன் சுயநலன்களையும்,மனதில் தோன்றும்  மூட நம்பிக்கைகளையும் அதிலே புகுத்தி தன் தலைக்கு ஏற்ப  தொப்பியை மாற்றிக்கொள்வது  போல  தன்  மனதில் தோன்றும் சுய நலம், வக்கிரம்,சந்தர்ப்பவாதம்  போன்ற  இயல்புகளுக்கு ஏற்ப மதங்களையும் மாற்றி அதனுள்ளே மூட நம்பிக்கைகளை புகுத்தி அதை எல்லோரையும் ஏற்க வைக்க எண்ணுகிறான். சில சமயங்களில் மனித குலத்துக்கு மிக விரோதமான செயல்களையும் மதம் என்ற போர்வை போர்த்தி தான் வணங்கும் கடவுள்களை சாட்சியாக வைத்து  சர்வ சாதாரணமாக அரங்கேற்றி விடுகிறார்.

மதங்களில் மூட நம்பிக்கைகள் புகுத்தப்படுகிறது என்று நான் சொல்கிறேன், மதமே ஒரு மூட நம்பிக்கை தான் என்பது ஒரு நாஸ்தீகனின் வாதமாக இருக்கும். மதம் மனிதன் வாழ்வுக்கு அவசியமான அறநெறிகளை வழிகாட்டுவதாகவே இருக்க வேண்டுமே ஒழிய வன்முறைகளை அல்ல. என்னை பொறுத்தவரை எல்லா மதமும் ஒன்றே. அத்தோடு இந்த மதங்களின் பெயரால் செய்யப்படும் மூட பழக்கங்களுக்கு எதிரானவன்.  இன்று மதம் என்ற பெயரில் என்ன நடக்கிறது?

உதாரணமாக கோவில்களிலே வேள்வி என்ற பெயரில் ஆடுகளை வெட்டுவது என்ற காணொளி சமீபத்தில் பரவியது. எந்த மதமும் கொலையை அனுமதிக்கவில்லை. ஆனால் கடவுளின் பெயரால் கோவில்களில் உயிர் பலி நடக்கிற காரணம் தான் இது வரை எனக்கு புரியவில்லை. மாமிசம் உண்டுவிட்டு கோவில்களுக்கு செல்ல தடை விதிக்கும் சைவசமயத்தவர்கள்  இந்த உயிர்  பலிகளை எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்பது மிக வேடிக்கை மட்டும் இல்லாமல் இதை பற்றி சிந்திப்பவர்களை  மதம், கடவுள் போன்ற நம்பிக்கைகளை முற்றாக இல்லாது ஒழித்துவிடுகிறது .

இந்து மதத்தில் மட்டும் அல்ல ,எல்லா மதங்களிலும் இந்த வன்மங்கள் புகுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக சமீபத்தில் தலிபான்கள்   வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக பெண்ணின் மூக்கை அறுத்தது எறிந்தார்கள்.அதே போல  சிறிது நாட்க்களுக்கு முன்  தப்பான உறவு வைத்திருந்தார்கள் என்பதற்காக, இது தம் மதத்துக்கு எதிரானது என்று கூறி  இருவரை நிற்க  விட்டு கல்லால் எறிந்து கொன்றுள்ளார்கள்.  இதை போல  மதம் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான வன்மங்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் மிக அதிகம்.

சமீபத்தில் பார்ப்பவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்ஒன்று, மதம் என்ற போர்வையில்  நிகழ்ந்தேறியுள்ளது.  கென்யா நாட்டில் "சீசி" என்ற இனத்தை சேர்ந்த சில பேர் சூனியக்காரர்களாக   அடையாளம் காணப்பட்டு அப்பகுதியில் உள்ள சிலரால் மக்கள் முன் பார்த்து நிற்க நடு ரோட்டில் போட்டு உயிருடன் கொளுத்தப்பட்டுள்ளார்கள்.இதற்கு காரணம் அந்த சூனியக்காரிகள் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் ஆபிரிக்க கிறிஸ்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதாவது மதம் என்ற பெயரில் மனித குலத்துக்கு எதிரான இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார்கள். இதற்கு முன்னரும்  கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவர்கள் என்று இவ்வாறு ஆயிரக்கணக்கான சூனியக்காரிகள் உயிருடன் கொளுத்தப்பட்டாலும் தற்சமயம் காணொளி வடிவில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(காணொளி மிக கொடூரமானது)

யூதர்கள் ஜேசுவை சிலுவையில் தான் அறைந்தார்கள். ஆனால் இவர்கள் ஜேசுவின் பெயரால் மனிதர்களை உயிரோடு கொளுத்துகிறார்கள்.  மதங்கள் இப்படிப்பட்ட மனித குலத்துக்கு எதிரான வன்மங்களை தான் சொல்கிறன என்றால் அந்த மதங்கள் நமக்கு எதற்கு. மனிதன் வாழ்வுக்கு இந்த மதங்கள் எந்த வகையில் உதவுப்போகிறது!

3 comments:

 1. omg kanoli kodooram

  ReplyDelete
 2. மதத்தை நம்பலாம்... மதங்கொண்ட மனிதரை நம்பகூடாது.

  உங்க கட்டுரை தரமான சிந்தனையை உள்ளடக்கியுள்ளது.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. சி.கருணாகரசு @ உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்

  ReplyDelete