மதிப்புக்குரிய அபியின் அப்பாவுக்கு..

மதிப்புக்குரிய அபியின் அப்பாவுக்கு,(மதிப்புக்குரிய என்ற அடைமொழி உங்கள் வயசை மட்டும் கருத்தில் கொண்டு விழிக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க). தங்கள் கடந்த பதிவான "கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே!!" என்ற பதிவை படித்தேன். படித்து முடித்ததும் கருணாநிதி மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றோடு போய்விட்டது. அந்த பெருமை உங்களுக்கே!!


தாங்கள் கருணாநிதியின் கழக தொண்டர்களில் ஒருவர் என்பதை தவிர தங்களை பற்றி வேறு எதுவும் தெரியாது; தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் எனக்கு வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமா உங்கள் சில பதிவுகளை நான் வாசித்துள்ளேன். அந்த வகையில் தாங்கள் ஒரு மிக சிறந்த, நீண்டகால கருணாநிதியின் "தொண்டர்" என்று தெரிந்து கொண்டேன்! இனி உங்கள் கடந்த பதிவு பற்றி...

கருணாநிதி என்பதற்கு இணைப்பெயராக தந்திரக்காரன், ஏமாற்றுக்காரன், குள்ளநரி என்று பல பெயர்களை அகராதியில் உருவாக்கலாம். 'ஓட்டுப்பொறுக்குவதற்காக கரண்டே இல்லாதா வீடுகளுக்கு கலர் டீவி ஆசை காட்டியவன் வேறு எப்படி தான் இருப்பான்?'

கருணாநிதிக்கும் ஈழத்தமிழர்களுக்குமான உறவு என்பது பூனைகளுக்கும் ஆப்பம் பிரித்த குரங்குக்குமான உறவுபோன்றது! காரணம், கருணாநிதியால் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்ததும், கிடைக்கப்போவதும் என்று எதுவுமே இல்லை! ஆனால் ஈழ தமிழர்களை வைத்து கருணாநிதி பெற்ற ஆதாயங்கள் அதிகம். அதற்காக "ஆட்சி இழந்தார், தண்டவாளத்தில் தலையை வைத்தார், அமைதிப்படையை புறக்கணித்தார்" என்று சாதனைப்புராணம் பாடும் உம் தலைவனின் பழைய பல்லவியை மீண்டும் தொடங்காதீர். மாறாக கருணாநிதி ஈழ தமிழர்களுக்கும்,போராட்டத்துக்கும் செய்த ஏமாற்றுத்தனங்களை நூற்று கணக்கில் என்னால் அடுக்கி கொண்டு செல்ல முடியும்!

அது என்னமோ தெரியவில்லை, ஒவ்வொரு தேர்தல்களின் போதும் ஈழத்தமிழர்கள் பால் எதோ இனம்புரியாத பற்று கருணாநிதிக்கு வந்து தொற்றிக்கொள்கிறது. அதையே 'தலைவன் கண்ணசைவுக்கு காத்திருக்கும் தொண்டன் போல' அந்த 'ஈழதமிழர்பற்றை' பப்பிளிஷ் பண்ணி ஓட்டு பிச்சைக்கான அனுதாபமாக மாற்ற வேண்டிய தார்மீக கடமை உங்களை போன்ற தொண்டர்களையும் வந்து தொற்றி கொண்டுவிடும்! இது காலாகாலமாக நடந்து வரும் ஒன்று தான். அப்படிப்பட்ட ஒன்றே தங்களின் கடந்த பதிவும் என்பது வாசிப்பவர்களுக்கு தானாகவே புரியும்.

அந்த வகையில் இன்று நெருங்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அதே பழைய பஞ்சாங்கத்தை கையில் எடுத்து "ஈழத் தமிழர்கள் சிந்திய குருதியும், செய்த தியாகங்களும் வீண்போகாது, தமிழர்களுக்குத் தனிநாடு ஒரு நாள் உருவாகும். ஈழத்தமிழர்களுக்கு தனிஈழத்தை உருவாக்கி விட்டுத் தான் உயிர்துறப்பேன்."
என்று கூவிக்கொண்டே அரசியல் பிச்சை வாங்க தெருவிலே இறங்க எத்தனிக்கிறார்!
அவரின் இந்த புளிச்சு போன காமெடிக்கு பின்னுக்கு இருந்து 'ஜிங் ஜாங்' தட்டும் உங்கள் அறிவை எந்தக்கடையிலே அடகு வைத்தீர்கள்? அது சரி, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலே 'உண்ணாவிரதம்' என்று சூளுரைத்து மெரீனா சாலையில் மெத்தை போட்டு படுத்துவிட்டு எழும்பியத்தை "ஈழத் தமிழர்களுக்கு நன்கே நாட்களில் விடுதலை பெற்றுக்கொடுத்த கலைஞர்" என்று தெருத்தெருவாக போஸ்ட்டர் ஒட்டிய இரக்கமற்ற நபர்களில் நீங்களும் ஒருவராக கூட இருக்கலாம்!!
என்ன சொன்னீர்கள் "கலைஞர் கண் அசைத்தால் திமுகவினர் ஆதரவாக களம் இறங்குவர்." என்றா? ஏன், ஈழத்திலே கொத்து கொத்தாக பிணம் விழுந்த போதும், அதற்க்கு முன்னாடியும் கருணாநிதியை நோக்கி உலகதமிழர்களே மன்றாடிய போது கண்ணை பிடரிக்குள்ளா வைத்திருந்தார்? இல்லை கழக தொண்டர்கள் அனைவரும் 'புரியாணி, குவாட்டர்' தட்டுப்பாடால் மவுனமாக இருந்தார்களா? மனசாட்சி சிறிதும் இல்லாமல் எழுதுவதற்கு உம் போன்றவர்களால் எவ்வாறு முடிகிறது?
வேறு என்ன சொன்னீர்.."தமிழீழ மக்களே! படர கொழு கொம்பு இல்லாமல் தவிக்கும் உங்கள் வீட்டு பிள்ளைகள், நாடு இழந்து மற்ற நாடுகளில் அகதிகளாய் வாழும் இழிநிலையில் இருக்கும் நீங்கள் இத்தனை நாள் போல இல்லாமல் இனியாவது கலைஞரின் கரம் பற்றிக்கொள்ளுங்கள். நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது ஒன்றும் தப்பில்லை." யாரய்யா இழி நிலையில் இருப்பது? உம் தலைவனா இல்லை நாமா? மக்கள் சொத்தை கொள்ளியடித்த மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு, ஆட்சி இழந்து, அதிகாரம் இழந்து அவமானப்பட்டு கிடக்கும் உமது தலைவனை விட நாம் எந்த விதத்திலே குறைந்து விட்டோம்? இன்று உலகம் பூராகவும் பரந்து விரிந்து நாம் சென்றாலும், இன்று வரை எம் பாரம்பரியங்களோடும், கடந்த காலங்களை மறந்து விடாமலும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எமக்கு படர கொழுகொம்பு இல்லை தான் அதற்காக கருணாநிதி போன்ற குருவிச்சையை பற்றிக்கொள்ள வேண்டிய தலையெழுத்து எமக்கில்லை என்பதை உம் தலைவனுக்கு எடுத்து கூறும்.. அத்துடன் இன்னொன்றையும் கூறும் 'தேர்தல் காலங்களில் மட்டும் தொட்டு நக்குவதற்கு ஈழத்தமிழர்கள் ஒன்றும் கருணாநிதியின் ஆட்சிப்போதைக்கான ஊறுகாய் இல்லை' என்பதையும் தெளிவாக எடுத்து சொல்லும்!

அனுபவங்களில் ஒன்று..!




ஆரம்ப நாட்கள் கொடுத்தது
அறிமுகம் இல்லாத பல
முகம்களையும் மட்டுமல்ல
அச்சத்தையும் சேர்த்து தான்!

இன்னும் பல வருடங்கள்
முதுகிலே சுமையும்
மூளையில் அறிவையும்..,
நினைக்கும் போதே
நெஞ்சை கனத்த சோகம்..!

இயற்கையின் நியதியை மீறி
அந்த நாட்களின் இரவுகள்
விடியாத பொழுதுகளாகவே
இருந்துவிடக்கூடாதா? என்று
இறைவனை வேண்டிக்கொள்ளும் வயசு..!

மாலைப் பொழுதுகளில் கிடைக்கும்
சிறு சிறு சந்தோசங்களை எல்லாம்
களைந்து போய்விடும்
காலை நேரக் கணப்பொழுதுகளில்,
அம்மாவின் அதட்டல்களிலும்
அயலவர்கள் கிண்டல்களிலும்
பிடிவாதங்கள் அத்தனையும்
பிடிமானம் அற்றதாகிவிடும்!

'சிறகு முளைத்துப்
பறக்க நினைக்கையிலே
சிறைக்கு அனுப்புவதா?...'
சலித்துக்கொள்ளும் மனசு!!

பால்ய வயசினிலே,
பள்ளி செல்ல தொடங்கும் நாட்களின்
பலரது அனுபவங்கள்
இவை தானே!!

இன்றைக்கு புதுவருடப்பிறப்பாம் என்று "அம்மா" சொல்லியிருக்கு.. :P ஆக , அனைவருக்கும் இனிய சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள்.

ஐ.பி.ல் ஆரம்பம்..(ஆன்லைனில் காண)

பல்வேறு ஊகங்களையும், எதிர்பார்ப்புக்களையும் எழுப்பியவாறே இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டுக்கான ipl போட்டிகள் ஆரம்பமாகிவிட்டது. என்ன தான் சொன்னாலும், இனிவரும் மே மாதம் வரை கிரிக்கெட் உலகின் பார்வை இந்த ipl பக்கமே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
 கடந்த வருடம் பத்து ஆக இருந்த ஐபில் அணிகள் இம்முறை ஒன்பதாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலே கொச்சி அணி கலைக்கப்பட்டு அவ்வணி வீரர்கள் மறுபடியும் ஏலத்துக்கு விடப்பட்டு ஏனைய அணிகளால் வாங்கப்பட்டிருந்தன.

'பணம் கொழிக்கும் விளையாட்டு, வீரர்களின் ஏனைய வகை கிரிக்கெட் போட்டிகளின் மீதான கவனத்தை சிதறடிக்கிறது, ஊழல், மேட்ச் பிக்சிங்' என்று வழமை போலவே இம்முறையும் விமர்சனங்கள் உருவாகத் தான் செய்யும்.

கிரிக்கெட் ரசிகர்களை பொருத்தவரை, தன் நாடு/தனக்கு பிடித்த நாடு என்ற நேசிப்பை தாண்டி, அத்தனை நாட்டு வீரர்களின் கலவையாக உருவாக்கப்பட்ட இந்த ஐபில் அணிகளில் தமக்கு பிடித்த அணியை தேர்வு செய்வதில்  மிகவும் தடுமாறியே போய்விடுவார்கள். உதாரணமாக, தான் நேசிக்கும் நாட்டு அணியில் இரண்டு வீரர்களை மிகவும் பிடித்திருந்தால், அந்த இரண்டு வீரர்களும் ஐபில் அணிகளிலே எதிரெதிர் அணிகளில் விளையாடும் போது அவ்விரு அணிகளில் எந்த அணியை ஆதரிப்பது என்ற குழப்பம் சாதாரணமாகவே வந்துவிடும்.. இதுவும் ஒரு விதத்தில் சுவாரசியம் தான்.

தற்சமயம் நடந்து முடிந்துள்ள சில போட்டிகளிலே நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங் பரிதாபமாக தோல்வியடைந்துள்ளதுடன், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கங்குலியின் புனே வாரிவர்ஸ் அணி  வெற்றி ஒன்றை பெற்றுள்ளது. எனினும், இது தொடக்கம் மட்டுமே என்பதால் போக போக களநிலை மாற்றத்துக்கும், விறுவிறுப்புக்கும்  பஞ்சமிருக்காது என்பதும் மறுப்பதற்கில்லை. இந்த இருபதுக்கிருபது கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை அனுபவ வீரர்கள், அதிரடி வீரர்கள் என்பவற்றை வைத்து வெற்றி தோல்வியையோ,கிண்ணத்தையோ கணிப்பிடுவது மிக கடினமானது. அந்தந்த போட்டிகளில் ஆடுகளத்திலே சிறப்பாக விளையாடும் அணிகளுக்கே வெற்றி!

இந்த பரபரப்பான போட்டிகளை ஆன்லைனில் நேரடியாக கண்டு கழிக்கும் வண்ணம் இம்முறையும் யூடுபி தளத்திலே ஒளிபரப்புகிறார்கள்.. அதை நீங்களும் கண்டு மகிழ... கிளிக்குக