நண்பர்களுடன்....

புகைத்தல் உடம்புக்கும், உனக்கும் கெடுதலை தான் கொண்டு வந்து சேர்க்கும் என்று நான் என் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் என்னை படு கேவலாமாக ஒரு பார்வை பார்த்துட்டு சொல்லுவார்கள் "நீ பிறந்ததுக்கு இதுவரை என்னத்த அனுபவிச்சிருக்க" அதுக்கு மேலயும் நான் வாய் திறக்குறதில்ல.. ஏனெண்டால் 'புகைத்தல் உடல் நலத்துக்கு கேடுதான்; ஆனால் அதையும் தாண்டி நல்ல விஷயங்களும் இருக்கு' எண்டு சொல்லி அந்த நல்ல விஷயங்களை பட்டியல்படுத்த தொடங்கிடுவார்கள்..

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனக்கு பழக்கமான ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார்' தம்பி! இந்த சிகரெட் பழக்கத்தால எனக்கு மாசம் முன்னூறு யூரோக்கு கிட்ட வீணாய் போகுது; அதால இனி நான் சிகரெட் பழக்கத்தை விட்டுடலாம் எண்டு நேற்று தொடக்கம் முடிவெடுத்துட்டன்.. நேற்று ஃபுல்லா நான் சிகரெட் பிடிக்கவே இல்ல'... இப்பிடி பெருமையா பெருமூச்சோடு சொல்லி முடிக்க, நானும் பேசாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன்!

சில மணிநேரம் கழித்து இருவருமாக வெளியிலே புறப்பட்டோம்; போய் திரும்பிகிற போது ' தம்பி இதோகொஞ்சம் நில்லுங்க வருகிறன்' என்று சொல்லி அவசரமாக அருகில் இருக்கும் கடைக்குள் நுழைந்தவர், வரும் போது சில மணிநேரத்துக்கு முன்னர் பார்த்த 'அதே வாயில்-அதே சிகரெட்!!' இம்முறையும் நான் பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

இத்தனைக்கும் நான் அவரிடம் எந்த கேள்வியோ விளக்கமோ கேட்கல! ஏனெண்டால் விளக்கம்/பதில் எப்படி வரும் எண்டு எனக்கு நல்லாவே தெரியும்! இப்பிடி எத்தனை பேரோட பழகியிருப்பம்:)

முன்னரெல்லாம் சிகரெட் பெட்டியிலே 'புகைத்தல் உடல் நலத்துக்கு கேடு' என்று எழுதப்பட்டு தான் விற்பனைக்கு வரும்..ஆனா இந்த புகைப்பிரியர்களுக்கு அதை வாசிச்சு வாசிச்சே அது ஒரு புளித்துப்போன ஒரு வசனமாய் ஆகியிருக்கும் போல.... ஆனால் இப்பொழுது சிகெரட் பெட்டியிலே, புகைப்பவர்களது நலன் கருதி(!) புகைப்பதன் மூலம் உடலில் வரும் வியாதிகள் உடல் உறுப்புக்களை என்ன பாடு படுத்தும் என்பதை புகைப்பட வடிவிலும் சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டியும் புகை பிடிப்பதை அவர்களால் நிறுத்த முடியவில்லை என்றால், அவர்களின் புகைத்தல் அடிமைத்தனத்தை நினைத்து வருத்தம் கொள்வதா.. இல்லை, இந்த புகைப்படங்களை பார்த்தும் அவர்களின் 'எதையும் தாங்கும் நெஞ்சத்தை' பாராட்டுவதா............... முடியல!!!
------------------------------------------------------------------------------------------------


சே குவேரா பற்றி அறியாதவர்கள் மிக குறைவு என்றே சொல்லலாம். அதுவும் இந்த சமூக வலைத்தளங்களை பாவிப்பவர்கள் நிச்சயமாக எதோ ஒரு கட்டத்தில், எதோ ஒரு விதத்தில் சே குவேரா பற்றி அறிந்திருப்பார்கள். சொல்லப்போனால் சமூக தளங்களிலே சே குவேராவை தமது ரோல் மொடலாக(!) கொண்டவர்களை அங்காங்கே அதிகமாக காணலாம். சிலர் ஒரு பந்தாவுக்காக சே போன்ற புரட்சியாளர்களின் புகைப்படங்களோடும், வசனங்களோடும் இணையப்புரட்சியாளர்களாக சுற்றுவது வேறு கதை... அது தேவையில்லை! ஆக, மொத்தத்தில் சமூக தளங்களிலே சே குவேரா ரொம்ப பரீட்சயம்!

அப்படி இருக்க சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த சம்பவம் ஒன்று என்னை மகா அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதோடு, சரியான கடுப்பையும் கிளப்பிவிட்டது.. ஆனாலும் இன்று வரை அந்த சம்பவத்தை நினைக்கும் போது என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தாமல் இருக்க முடியவில்லை..

அதாவது சில நாட்களுக்கு முன்னர் எனது நண்பன், அவனுக்கு ஒரு முப்பது வயசுக்கு மேல் வரும்; அவன் வழமை போலவே கம்பியூட்டரில் தனது முகநூல் கணக்கை பார்வையிட்டுக் கொண்டு இருந்தான்.. இருந்தவன், சற்று நேரத்தில என்னை கூப்பிட்டு ஒரு போட்டோவை காட்டி...

"இவர் தான் முன்னாள் புளெட் தலைவர், உனக்கு தெரியுமா?" என்று முகத்தை சீரியஸாக வைச்சுக்கொண்டு கேட்டான்.... யார்ரா எண்டு கிட்ட போய் பார்த்த எனக்கு அப்பிடியே ஷாக்..

"டேய் எதை வச்சுடா இவர புளெட் தலைவர் என்கிறா?"


"எனக்கு தெரியும்; முந்தி புளெட்காரங்கள் இப்படி தான்.. தாடியோடையும், தொப்பியோடையும் இருப்பினம்...."

-------------------------------------------------------------------------------------------------
இல்லை என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை என்றாகிப்போன இணையம் என்னும் பெரும் கடலிலே, மீண்டும் ஒரு முயற்சியாக புரட்சி எவ்.எம் என்னும் இனைய வானொலி ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்ப்பட்டுக்கொண்டு உள்ளது. நீங்களும் புரட்சி எப்.எம்'முடன் இணைந்திருக்க இங்கே சொடுக்கவும்.

ஸ்டாலின் கிராட் (மகத்தான வெற்றி)


உலகையே ஒருகணம் திரும்பி பார்க்க வைத்த, சர்வதிகாரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து உலகை காப்பாறிய, உலக வரலாற்றில் என்றுமே இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு வீரம் பொருந்திய நகரின் பெயர்... அது தான் ஸ்டாலின் கிராட்!

ஐரோப்பாவிலும், அதை தாண்டியும் உள்ள பலம்பொருந்திய அத்தனை நாடுகளையும் அடித்து நொறுக்கிய சக்திவாய்ந்த பாசிச படைக்கு ஒரு நகரம் சமாதி கட்டியது... அது தான் ஸ்டாலின் கிராட்!

கிட்லரின் போக்குக்கு இறுதி அத்தியாயத்தை தொடக்கி வைத்ததும் இந்த ஸ்டாலின் கிராட் என்ற நகர் தான்.

இரண்டாம் உலக போரினால் இராணுவ, அரசியல் போக்குகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வைத்த தொடக்க புள்ளியும் இதே ஸ்டாலின் கிராட் தான்.. இவ்வாறு இந்த நகரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

அணு அணுவாக தமது சொந்த நிலம் பறிபோவதை கண்முன்னே கண்டு பொங்கி எழுந்து எதிர்த்து நின்ற சோவியத் யூனியன் மக்களுக்கு இறுதியில் வாழ்வா சாவா என்ற நிலையை ஸ்டாலின் கிராட் நகரம் ஏற்ப்படுத்திவிட்டது. இந்த நகரையும் கிட்லர் படைகளிடம் இழந்தால் தம் இருப்புக்கும் அதுவே இறுதி நாள் என்பதை அம்மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். அப்படியும் அவர்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் கிட்லர் படைகளிடம் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடைந்தாலும் உயிர் மிஞ்சுமா என்பதும் கேள்விக்குறியே?
இவ்வாறு மண்டியிட்டு சரணடைந்து வாழ்வதையோ இல்லை சாவதையோ விட தாம் நேசித்த மண்ணுக்காக, தம் எதிர்கால சந்ததியின் இருப்புக்காக இறுதிவரை சண்டையிட்டு மடிவதையே அம் மக்களும் விரும்பினார்கள்.

அது மட்டும் அல்ல! இந்த ஸ்டாலின் கிராட் நகர் கிட்லரிடம் வீழ்ந்தால், கிட்லரின் அடுத்த இலக்கு பிரித்தானியா தான். அதன் பின் அமெரிக்கா ஆசியா என்று கிட்லரின் கால்கள் ஆழ பதிய கூடிய அச்ச சூழல் இருந்தது. ஆக இந்த முதலாளித்து வல்லரசுகளுக்கு மட்டுமல்லாது, உலகின் தலை எழுத்தையே நிர்ணயிக்கும் ஒரு யுத்தமாக தான் ஸ்டாலின் கிராட் நகருக்கான யுத்தம் உலகத்தால் பார்க்கப்பட்டது.

மறுபுறம், ஏற்கனவே சோவியத் யூனியன் படைகளின் மூர்க்கத்தனமான எதிர் தாக்குதல்களால் ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும், படைகளின் உள பலத்திலும் சற்று குன்றி போய் இருந்த ஜெர்மன் படைகளுக்கும் இந்த ஸ்டாலின் கிராட் வெற்றியானது மிக பாரிய நெஞ்சுரத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தது. ஆகவே இந்த வெற்றிக்காக கிட்லர் என்ன விலை கொடுக்கவும் துணிந்தார்.

1942 ம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தொன்பதாம் திகதி அதிகாலையிலே ஸ்டாலின் கிராட் நகரம் போர்க்கோலம் தரித்து. இம்முறை வழமைக்கு மாறாக சோவியத் யூனியன் படைகளே யுத்தத்தை தொடக்கி வைத்தார்கள். களமுனைகள் திறக்கப்பட்டு பிரமாண்டமான யுத்தம் ஆரம்பித்தது. ஆனால் கிட்லர் படையின் எதிர்பார்ப்புக்கு மாறாக திறக்கப்பட்ட களமுனைகளிலே யுத்தத்தின் போக்கு ஆரம்பத்திலிருந்தே சோவியத் யூனியன் படைகளின் வசமே சாதகமாக சென்று கொண்டிருந்தது. தேசப்பற்று மிக்க சோவியத் மக்களின் முன்னால் ஆயுத பற்று கொண்ட கிட்லர் படைகள் தடுமாறியது. தம் ஒவ்வொரு அடி மண்ணையும் காத்து நிற்க சோவியத் படைகள் காட்டிய எதிர்ப்பால் ஜெர்மன் படை நடுங்கியது.

இதன் ஒரு பகுதியாக 330 000 ஆட்களைகொண்ட ஜெர்மன் படையின் இருபத்திரண்டு டிவிஷன்கள் சோவியத் யூனியன் படைகளால் ஊடறுத்து சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் சுற்றி வளைக்கப்பட்ட படைகளுக்கான ஆயுத வழங்கல்கள் தடைப்பட்டது. இந்த டிவிசன்களை மீட்க ஜெர்மன் மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளும் சோவியத் படைகளால் தவிடு பொடியாக்கப்பட்டது.

சுற்றிவளைக்கப்பட்ட படைகளை சரணடைய சொல்லி கேட்டுகொண்டபோது அப்படைகளின் தளபதி அதை மறுத்துவிட்டான். இதனால் இந்த படைகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் சோவியத் படைகள் களமிறங்கின. இதன் போது பல இலட்சம் படைகள் கொல்லப்பட்டதுடன், தொண்ணூறு ஆயிரத்துக்கும் மேலான ஜெர்மன் படைகள் கைது செய்யப்பட்டு, மிகப்பெரும் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றவும், எஞ்சிய படைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சிதறி ஓட்டம் பிடிக்கவும் ஸ்டாலின் கிராட் நகரம் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இவ் வெற்றியானது சோவியத் மக்களின் நெஞ்சுறுதியையும், இவர்கள் தம் தாய் தேசத்தின் மீது கொண்டிருந்த பற்றையும் உலகுக்கு பறைசாற்றி நின்றது. இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தம் நாடு ஆக்கிரமிக்கப்படுவதற்க்கு எதிராக காட்டிய வீரம் செறிந்த எதிர்ப்பும், தன்னலம் அற்ற உழைப்பின் மூலமே இந்த மகத்தான வெற்றியை பெற முடிந்தது.

ஸ்டாலின் கிராட் வெற்றி செய்தியை இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் தம் வெற்றியாக எடுத்து கொண்டாடின. சோவியத் யூனியன் அரசானது ஸ்டாலின் கிராட் நகரை பாதுகாத்து நின்ற தனது படைகளுக்கும், அந் நகரத்துக்கும் ,நகர மக்களுக்கும் மதிப்பளிக்கும் விதமாக ஸ்டாலின் கிராட் நகருக்கு "வீரத்திருநகர்" என்ற சிறப்பு பட்டத்தையும் வழங்கி கவுரவித்தது.

ஜெர்மனின் மிகப்பலம் வாய்ந்த டிவிசன்கள் எல்லாம் ஸ்டாலின் கிராட்டில் அடித்து துவம்சம் செய்யப்பட்டதால் ஒட்டு மொத்த ஜெர்மன் படைகளுக்கும் மிகப்பெரும் கிலியை இத்தோல்வியானது ஏற்ப்படுத்தியது. கிட்லரின் முதுகெலும்பையே உடைத்து போட்ட இத்தோல்வியானது அவரின் பாசிச கூட்டணிகளையும் அடங்க வைத்தது. இங்கே கிட்லர் வாங்கிய அடியானது அவரின் சாவு மணியானதுடன், அவருடமும் அவரின் பாசிச படைகளிடமும் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களும், ஜெர்மனும் மீட்க்கப்படும் வரை தொடர்ந்தது.
ஆறு மாதங்களாக நடைபெற்ற ஸ்டாலின் கிராட் நகருக்கான யுத்தமானது இன்று வரை உலகிலே நிகழ்த்த மிகப்பெரும் மரபு வழி யுத்தமாக உலகத்தால் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமிப்புக்கும், பாசிசத்துக்கும் எதிராக மனித குலம் பெற்றுக்கொண்ட இந்த வெற்றி என்றும் உலகத்தால் நினைவு கொள்ளப்படும்.

-முற்றும்.