ஸ்டாலின் கிராட் (மகத்தான வெற்றி)


உலகையே ஒருகணம் திரும்பி பார்க்க வைத்த, சர்வதிகாரிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து உலகை காப்பாறிய, உலக வரலாற்றில் என்றுமே இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஒரு வீரம் பொருந்திய நகரின் பெயர்... அது தான் ஸ்டாலின் கிராட்!

ஐரோப்பாவிலும், அதை தாண்டியும் உள்ள பலம்பொருந்திய அத்தனை நாடுகளையும் அடித்து நொறுக்கிய சக்திவாய்ந்த பாசிச படைக்கு ஒரு நகரம் சமாதி கட்டியது... அது தான் ஸ்டாலின் கிராட்!

கிட்லரின் போக்குக்கு இறுதி அத்தியாயத்தை தொடக்கி வைத்ததும் இந்த ஸ்டாலின் கிராட் என்ற நகர் தான்.

இரண்டாம் உலக போரினால் இராணுவ, அரசியல் போக்குகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வைத்த தொடக்க புள்ளியும் இதே ஸ்டாலின் கிராட் தான்.. இவ்வாறு இந்த நகரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

அணு அணுவாக தமது சொந்த நிலம் பறிபோவதை கண்முன்னே கண்டு பொங்கி எழுந்து எதிர்த்து நின்ற சோவியத் யூனியன் மக்களுக்கு இறுதியில் வாழ்வா சாவா என்ற நிலையை ஸ்டாலின் கிராட் நகரம் ஏற்ப்படுத்திவிட்டது. இந்த நகரையும் கிட்லர் படைகளிடம் இழந்தால் தம் இருப்புக்கும் அதுவே இறுதி நாள் என்பதை அம்மக்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். அப்படியும் அவர்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் கிட்லர் படைகளிடம் சரணடைய வேண்டும். அவ்வாறு சரணடைந்தாலும் உயிர் மிஞ்சுமா என்பதும் கேள்விக்குறியே?
இவ்வாறு மண்டியிட்டு சரணடைந்து வாழ்வதையோ இல்லை சாவதையோ விட தாம் நேசித்த மண்ணுக்காக, தம் எதிர்கால சந்ததியின் இருப்புக்காக இறுதிவரை சண்டையிட்டு மடிவதையே அம் மக்களும் விரும்பினார்கள்.

அது மட்டும் அல்ல! இந்த ஸ்டாலின் கிராட் நகர் கிட்லரிடம் வீழ்ந்தால், கிட்லரின் அடுத்த இலக்கு பிரித்தானியா தான். அதன் பின் அமெரிக்கா ஆசியா என்று கிட்லரின் கால்கள் ஆழ பதிய கூடிய அச்ச சூழல் இருந்தது. ஆக இந்த முதலாளித்து வல்லரசுகளுக்கு மட்டுமல்லாது, உலகின் தலை எழுத்தையே நிர்ணயிக்கும் ஒரு யுத்தமாக தான் ஸ்டாலின் கிராட் நகருக்கான யுத்தம் உலகத்தால் பார்க்கப்பட்டது.

மறுபுறம், ஏற்கனவே சோவியத் யூனியன் படைகளின் மூர்க்கத்தனமான எதிர் தாக்குதல்களால் ஆள்பலத்திலும், ஆயுத பலத்திலும், படைகளின் உள பலத்திலும் சற்று குன்றி போய் இருந்த ஜெர்மன் படைகளுக்கும் இந்த ஸ்டாலின் கிராட் வெற்றியானது மிக பாரிய நெஞ்சுரத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தது. ஆகவே இந்த வெற்றிக்காக கிட்லர் என்ன விலை கொடுக்கவும் துணிந்தார்.

1942 ம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தொன்பதாம் திகதி அதிகாலையிலே ஸ்டாலின் கிராட் நகரம் போர்க்கோலம் தரித்து. இம்முறை வழமைக்கு மாறாக சோவியத் யூனியன் படைகளே யுத்தத்தை தொடக்கி வைத்தார்கள். களமுனைகள் திறக்கப்பட்டு பிரமாண்டமான யுத்தம் ஆரம்பித்தது. ஆனால் கிட்லர் படையின் எதிர்பார்ப்புக்கு மாறாக திறக்கப்பட்ட களமுனைகளிலே யுத்தத்தின் போக்கு ஆரம்பத்திலிருந்தே சோவியத் யூனியன் படைகளின் வசமே சாதகமாக சென்று கொண்டிருந்தது. தேசப்பற்று மிக்க சோவியத் மக்களின் முன்னால் ஆயுத பற்று கொண்ட கிட்லர் படைகள் தடுமாறியது. தம் ஒவ்வொரு அடி மண்ணையும் காத்து நிற்க சோவியத் படைகள் காட்டிய எதிர்ப்பால் ஜெர்மன் படை நடுங்கியது.

இதன் ஒரு பகுதியாக 330 000 ஆட்களைகொண்ட ஜெர்மன் படையின் இருபத்திரண்டு டிவிஷன்கள் சோவியத் யூனியன் படைகளால் ஊடறுத்து சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் சுற்றி வளைக்கப்பட்ட படைகளுக்கான ஆயுத வழங்கல்கள் தடைப்பட்டது. இந்த டிவிசன்களை மீட்க ஜெர்மன் மேற்கொண்ட அத்தனை நடவடிக்கைகளும் சோவியத் படைகளால் தவிடு பொடியாக்கப்பட்டது.

சுற்றிவளைக்கப்பட்ட படைகளை சரணடைய சொல்லி கேட்டுகொண்டபோது அப்படைகளின் தளபதி அதை மறுத்துவிட்டான். இதனால் இந்த படைகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் சோவியத் படைகள் களமிறங்கின. இதன் போது பல இலட்சம் படைகள் கொல்லப்பட்டதுடன், தொண்ணூறு ஆயிரத்துக்கும் மேலான ஜெர்மன் படைகள் கைது செய்யப்பட்டு, மிகப்பெரும் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றவும், எஞ்சிய படைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சிதறி ஓட்டம் பிடிக்கவும் ஸ்டாலின் கிராட் நகரம் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்டது.

இவ் வெற்றியானது சோவியத் மக்களின் நெஞ்சுறுதியையும், இவர்கள் தம் தாய் தேசத்தின் மீது கொண்டிருந்த பற்றையும் உலகுக்கு பறைசாற்றி நின்றது. இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தம் நாடு ஆக்கிரமிக்கப்படுவதற்க்கு எதிராக காட்டிய வீரம் செறிந்த எதிர்ப்பும், தன்னலம் அற்ற உழைப்பின் மூலமே இந்த மகத்தான வெற்றியை பெற முடிந்தது.

ஸ்டாலின் கிராட் வெற்றி செய்தியை இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் தம் வெற்றியாக எடுத்து கொண்டாடின. சோவியத் யூனியன் அரசானது ஸ்டாலின் கிராட் நகரை பாதுகாத்து நின்ற தனது படைகளுக்கும், அந் நகரத்துக்கும் ,நகர மக்களுக்கும் மதிப்பளிக்கும் விதமாக ஸ்டாலின் கிராட் நகருக்கு "வீரத்திருநகர்" என்ற சிறப்பு பட்டத்தையும் வழங்கி கவுரவித்தது.

ஜெர்மனின் மிகப்பலம் வாய்ந்த டிவிசன்கள் எல்லாம் ஸ்டாலின் கிராட்டில் அடித்து துவம்சம் செய்யப்பட்டதால் ஒட்டு மொத்த ஜெர்மன் படைகளுக்கும் மிகப்பெரும் கிலியை இத்தோல்வியானது ஏற்ப்படுத்தியது. கிட்லரின் முதுகெலும்பையே உடைத்து போட்ட இத்தோல்வியானது அவரின் பாசிச கூட்டணிகளையும் அடங்க வைத்தது. இங்கே கிட்லர் வாங்கிய அடியானது அவரின் சாவு மணியானதுடன், அவருடமும் அவரின் பாசிச படைகளிடமும் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களும், ஜெர்மனும் மீட்க்கப்படும் வரை தொடர்ந்தது.
ஆறு மாதங்களாக நடைபெற்ற ஸ்டாலின் கிராட் நகருக்கான யுத்தமானது இன்று வரை உலகிலே நிகழ்த்த மிகப்பெரும் மரபு வழி யுத்தமாக உலகத்தால் பிரமிப்புடன் பார்க்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமிப்புக்கும், பாசிசத்துக்கும் எதிராக மனித குலம் பெற்றுக்கொண்ட இந்த வெற்றி என்றும் உலகத்தால் நினைவு கொள்ளப்படும்.

-முற்றும்.

ஸ்டாலின் கிராட். (stalingrad).. (தோல்வியின் ஆரம்பம்)

எதிரி தன்னை தயார்படுத்துவதற்க்கோ, யுத்தத்தின் இடைநடுவில் ஓய்வு எடுப்பதற்க்கோ சற்றே கால அவகாசம் வழங்காது, தான் வரையறுத்த இலக்கை நோக்கி உக்கிர தாக்குதல்களை நடத்தியவாறே மிக வேகமாக முன்னேறி சொல்லுவது தான் கிட்லரின் மின்னல் வேக தாக்குதல் தந்திரமாகும். இம்முறையிலான படையெடுப்பானது இரண்டாம் உலக யுத்தத்திலே கிட்லருக்கு மிக பெரிய வெற்றிகளை பெற்று கொடுத்தது; ஆனால் இந்த தாக்குதல் தந்திரம் சோவியத் யூனியனில் பலிக்கவில்லை. இது தான் சோவியத் யூனியனில், கிட்லரின் யூகத்துக்கு மாறாக கிடைத்த முதலாவது அதிர்ச்சி.

மின்னல் வேக தாக்குதல் மூலம் சோவியத் யூனியனை இரண்டு, மூன்று மாதங்களில் வெற்றி கொண்டுவிடலாம் என்று கிட்லர் போட்ட திட்டத்தில் (பார்பரோஸ்ஸா) மண்விழுந்தது.

இரண்டாம் உலக ஆக்கிரமிப்பு போரிலே முதன்முதலாக சோவியத் யூனியன் படைகளிடம் இருந்து கடும் எதிர்புக்கு முகம் கொடுக்கும் நிலைக்கு ஜேர்மனிய படைகள் தள்ளப்பட்டன. சோவியத் யூனியன் படைகளின் மனோபலத்துக்கு முன்னால் கிட்லரின் இராட்சத படைபலமும், ஆயுத பலமும் சமநிலையில் தான் நின்றது. ஆனாலும் கிட்லர் இதை அலட்சியம் செய்தார். சோவியத் யூனியனை அழிக்க எந்தப் பெரிய விலையும் கொடுக்கத் துணிந்தார்.

ஜூன் மாதம் இருபத்தியிரண்டாம் திகதி தொடங்கிய ஆக்கிரமிப்பு போர் வெறும் ஒன்றை மாதங்களை கடந்த நிலையில் ஜெர்மன் தனது 3 90 000 படைகளை சோவியத் யூனியன் மண்ணில் பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. அந்தளவுக்கு சோவியத் யூனியன் படைகளின் மூர்க்கமான பதில் தாக்குதல் அமைந்தது. ஒவ்வொரு அடி மண்ணை கைப்பற்றவும் ஜெர்மன் படைகள் தம் உதிரத்தையும் உயிரையும் பெறுமதி பாராது பறி கொடுத்தார்கள்.

சோவியத் யூனியன் ஒரு கம்யூனிச நாடு, இங்கே படை வீரர்கள்- மக்கள் என்ற பாகுபாடு இல்லை. உழைக்கும் வர்க்கம் முழுவதுக்கும் எதிரியிடம் இருந்து தம் தாய் நாட்டை காக்க வேண்டிய பாரிய கடமை கண் முன்னே நின்றது. இதை உணர்ந்தவர்களாக அம்மக்களும் ஆயுதம் தரித்து களமுனைக்கு சென்றார்கள். ஒட்டுமொத்தத்தில் சோவியத் யூனியனின் ஒவ்வொரு குடிமகனும் யுத்தத்துக்கு நேரடியாகவோ இல்லை எதோ ஒரு விதத்தில் முகம் கொடுத்தான்/பங்களிப்பை வழங்கினான்.

"செத்தாலும் சாவோமே தவிர இங்கிருந்து நகரமாட்டோம். நான் இருக்கிறேன் சரணடையவில்லை. தாய் நாடே விடை கொடு"- இவை யுத்தத்தின் ஆரம்ப நாட்களிலே சோவியத் யூனியன் படை வீரர்களால் தமது கோட்டை சுவர்களில் எழுதப்பட்ட வசனங்கள்.
ஒரு போர்வீரனுக்கான மிக சிறந்த அங்கீகாரம் அவன் எதிரியிடம் இருந்து கிடைப்பது தான்; அந்தவகையில் ஒரு ஜெர்மன் இராணுவ ஜெனரல் சோவியத் படை வீரர்களின் மன உறுதியை பின்வருமாறு சொல்கிறார் "ஒரு சோவியத் படைவீரனை இரண்டு தடவைகள் துப்பாக்கியால் சுட்ட பின் ஓங்கி நெஞ்சிலே கால்களால் எட்டி உதைத்தால் தான் அவன் நிலத்திலே சாய்கிறான்."-

இவ்வாறு ஒவ்வொரு தெருவாய், ஒவ்வொரு பிரதேசங்களாய், ஒவ்வொரு நகரங்களாய் மிக பெரும் எதிர்ப்புக்களையும், கடும் இழப்புக்களையும் சந்தித்த வண்ணம் கிட்லர் படை இறுதியாக சோவியத் யூனியனின் எண்ணெய் வளம் மிக்க பிரதேசமான காக்கசஸின் என்னும் இடத்தை சென்றடைந்தார்கள். எனினும் அவர்களால் அப்பிரதேசத்தை முற்று முழுதாக கைப்பற்ற முடியவில்லை. சோவியத் படையின் மூர்க்கத்தனமான எதிர்ப்பினால் தற்காப்பு யுத்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இப்பிரதேசத்தில் தான் கிட்லர் படையால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் ஆயிரக்கணக்கில் விசவாயு மூலம் கொல்லப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாய் யுத்தம் தொடக்கி ஆமை வேகத்தில் ஆக்கிரமித்து, ஆழ கால்பதித்து நின்ற கிட்லர் படையை பொறுத்தவரை சோவியத் யூனியனில் எஞ்சி இருக்கும் பெரு நகரங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று ஸ்டாலின் கிராட் மற்றையது மாஸ்கோ. இந்த இரு நகரங்களும் அரசியல் ரீதியாகவும் சரி இராணுவ தந்திர ரீதியாகவும் சரி மிக முக்கியமானவை. இதில் ஒன்றை கிட்லர் படை கைப்பற்றினாலும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி உறுதியாகிவிடும்; என்பது மட்டுமல்லாது உலகின் பிடியே சர்வாதிகாரிகளின் காலடியில் மண்டியிடக்கூடியதொரு ஆபத்தான சூழலும் உருவாகியது.

இந்நிலையில் 1941ம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் மாஸ்கோவை அழிப்பதற்காக கிட்லரால் தொடங்கப்பட்ட யுத்தம் ஜெர்மன் படைகளுக்கு படு தோல்வியையும், பெரும் இழப்புக்களையும் தான் பெற்று கொடுத்தது. இந்த தோல்விக்கு யுத்த காலப்பகுதியில் சோவியத் யூனியனில் நிலவிய பனி காலநிலையும் முக்கிய பங்காற்றியது..

எனினும் கிட்லர் விடுவதாக இல்லை. எப்படியாவது சோவியத் யூனியனை மண்டியிட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த/இழுத்துவந்து விடப்பட்ட களமுனை தான் ஸ்டாலின் கிராட்...

அடுத்த பகுதியில்..