உலகக்கிண்ணம் V - தேறுமா இங்கிலாந்து?


கடந்த உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளிலே இந்திய அணி வெளியேற காரணமாக இருந்த பங்களாதேஷ் இம்முறை இங்கிலாந்தை வெளியேற்றுமா ?
எதிர்வரும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியிலே பங்களாதேஷ் வெற்றி பெற்று , அதே நேரம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலே இங்கிலாந்து மிகப்பெரிய வெற்றி அடைந்து, அதே சமயம் இந்தியா எதிர்வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலே தோல்வி அடையுமாயின் இந்திய அணி வெளியேற வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால் மேற்சொன்ன மூன்று சம்பவத்தில் ஒன்று நிகழாவிட்டாலும் இந்திய அணி காலிறுதிக்கு சென்றுவிடும். ஆக எதிர்வரும் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கப்போகிறது. இனி இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் சிறு தொகுப்பு.



இம்மாதம் பதினோராம் திகதி மேற்கிந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு  இடையிலே இடம்பெற்ற போட்டி ஒன்றிலே மேற்கிந்திய அணி வெற்றிபெற்றது. இப்போட்டியிலே முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியா சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவான் சிமித் சிறப்பாக ஒரு சதம் அடித்தார். அத்தோடு கிரான் போலர்ட் 55 பந்துகளிலே ஐந்து சிக்ஸ்சர்கள் அடங்கலாக அதிரடியா 94 ஓட்டங்களை பெற்று சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பதிலுக்கு என்ற 275 என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 231 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது. இப்போட்டியுடன் அயர்லாந்து தனது காலிறுதிக்கான வாய்ப்பை முற்றாக இழந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.



அயர்லாந்துடனான தோல்விக்கு பின்னர் மீண்டும் ஒரு அதிர்ச்சி தோல்வியை பெற்றுக்கொண்டது இங்கிலாந்து. இதன் மூலம் காலிறுதிக்கான வாய்ப்பு ஊசலாடுகிறது. பங்களாதேசய் பொறுத்தவரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மோசமான தோல்வியில் இருந்து சிறு இடைவெளியிலே மீண்டெழுந்துவிட்டார்கள் என்றே கூறலாம். முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியை தமது பிடிக்குள்ளே இறுதிவரை வைத்திருந்தது பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அவ்வணியை 225 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திக்கொண்டார்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷுக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான, அதேசமயம் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்கள். இறுதிவரை போராடி, ஷகிபுல் இஸ்லாமின் அசத்தலான ஆட்டத்துடன் பங்களாதேஷ் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக கட்டாய வெற்றி பெறும் நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்பட்டுள்ளது. தோல்வி அடைய நேரிட்டால் அவ்வணி அடுத்த சுற்றில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்து தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான  போட்டியிலே இந்தியா தனது முட்டாள் தனமான செயற்பாட்டால் எதிர்பாராத தோல்வியை பெற்றுக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆட்டத்தை 40  ஓவர்கள் வரை பார்த்தவர்கள் அவ்வணி 350 ஓட்டங்களை கடக்கும் என்றே எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் மிடில் ஓடர் துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 296 க்குள் சுருண்டுகொண்டது இந்திய அணி. சிறப்பான ரன் ரேட்டில் சென்றுகொண்டிருந்த போது எதற்காக டோனி பவர் பிளே ஓவரை 38 வது ஓவரிலே எடுத்தார் என்பது புரியவில்லை,பேராசை பெரு நட்டத்தில் போய் முடிந்துவிட்டது. அத்தோடு நான்காம் நிலையில் களமிறங்கி தொடர்ந்து சொதப்பும் பதானையே மீண்டும் களமிறக்கினார் டோனி. அதே போல சச்சின் காம்பீர், பதான் என்று தொடர்ச்சியாக விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டு இருக்கும் போது சுதாகரித்துக்கொள்ளாமல் தானும் அதிரடியாக ஆட முற்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார் யுவராஜ் சிங். அதே போலவே அடுத்து வந்தவர்களும். பந்துவீச்சிலே சகீர்கானை தவிர அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். இறுதி மூன்று ஓவர்களிலே தென்னாபிரிக்கா 29 ஓட்டங்கள் எடுக்க வேண்டி இருந்தது. இதிலே சகீர்கான் 48 வது ஓவரிலே பந்து வீசி வெறும் 4 ஓட்டங்களையே கொடுத்தார். ஆனால் முனாப்பட்டேல் மற்றும் ஆஷிஸ் நேக்ராவும் சேர்ந்து இரண்டு ஓவர்களிலே(48,49)  25 ஓட்டங்களை வாரி வழங்கி தென்னாபிரிக்காவுக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்கள். அதுவும் இறுதி ஓவரிலே அதிக போட்டிகளிலே விளையாடிய அனுபவம் வாய்ந்த நெக்ரா முதல் மூன்று பந்துகளிலே தென்னாபிரிக்காவின் வெற்றியை உறுதிப்படுத்தியது மிக மோசம். இந்த போட்டியை பொறுத்தவரை சச்சினின் செயற்பாடு மிகவும் அருமையாக இருந்தது 101  பந்துகளிலே தனது சதத்தை பூர்த்தி செய்தவர், முதலாவது இனிங்சில் 40  ஓவர்களும் இரண்டாவது இனிங்சிலே 50  ஓவர்களுமாக போட்டியிலே 90  ஓவர்கள் வரை  மைதானத்திலே நின்று அணிக்காக கடுமையாக பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 37 வயசிலும் இவர் செய்ய களத்தடுப்பு இளம் வீரர்களுக்கே சவால் விடும் வண்ணம் இருந்தது. 48 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்த சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலே சதத்திலே சதம் அடிக்க தேவைப்படுவது இன்னும் ஒரு சதமே, இது இந்த உலககிண்ண தொடரிலே இனி வரும் போட்டிகளில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கலாம்.



அடுத்து நியூசிலாந்து கனடா அணிகளுக்கு இடையிலான போட்டியிலே நியூசிலாந்து 97 ஓட்டங்களால் இலகுவான ஒரு வெற்றியை பெற்றுக்கொண்டது. மக்கலம் சதமடிக்க, ரோஸ் ரெயிலர் 44 பந்துகளில்  அதிரடியாக 74 ஓட்டங்களை பெற நியூசிலாந்து மொத்த ஓட்டங்களாக 358 ஐ எட்டி பிடித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா ஓரளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடி 261 ஓட்டங்களையே பெற முடிந்தது.



13 திகதி இடம்பெற்ற அவுஸ்ரேலியா கென்யா அணிகளுக்கு இடையிலான போட்டியிலே அவுஸ்ரேலியா 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா 143/4  என்று தடுமாறிக்கொண்டிருந்த வேளையிலே மைக்கல் கிளார்க்கும், மைக் ஹசியும் இணைந்து அணியை மீட்டேடுத்தார்கள். காயத்தில் இருந்து குணமாகி பங்குபற்றிய முதல் போட்டியிலே ஹசி சிறப்பாக செயற்ப்பட்டமை சிறப்பம்சமாகும். 324 என்ற ஓட்டங்களை துரத்திய கென்யா 50 ஓவர்களிலே 6 விக்கெட்டுக்களை இழந்து 264 ஓட்டங்கள் வரையே பெற முடிந்தது. அவுஸ்ரேலியாவின் பந்துவீச்சை பொறுத்தவரை எவருமே எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயற்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



நெதர்லாந்துக்கு எதிராக இடம்பெற்ற போட்டியிலே பங்களாதேஷ் 6 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது. காலிறுதியை தக்க வைப்பதற்கு இப்போட்டி பங்களாதேஷுக்கு முக்கியமான போட்டியாக அமைந்திருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அப்துர் ரசாக்கின் சிறப்பான பந்துவீச்சு உதவியுடன் 160 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க பங்களாதேஷ் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலகுவாக வெற்றி இலக்கை அடைந்து கொண்டது. 



ஜிம்பாவேயுடன் மோதிய பாகிஸ்தான் மழை குறுக்கிட்டதால் டக்லத் லூவிஸ் முறைப்படி 7 விக்கெட்டுக்களால் வெற்றியை பெற்றுக்கொண்டது. அதே போல தென்னாபிரிக்க அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியிலும் தென்னாபிரிக்கா 131 ஓட்டங்களால் வெற்றியை பெற்றுக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா ஆரம்பத்தில் தடுமாறினாலும் டுமினியின் சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் 272 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஒரு ஓட்டத்தால் பரிதாபமாக தன் சதத்தை தவறவிட்டார் டுமினி. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்தால் 142 ஓட்டங்களே பெற முடிந்து.



அவுஸ்ரேலியாவுடன் மோதிய கனடா 7 விக்கெட்டுக்களால் தோல்வியை பெற்றுக்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அவுஸ்ரேலிய வேகங்களை சமாளித்து 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா ஆரம்ப துடுப்பாட்டகாரர்களின் நிலையான துடுப்பாட்டம் மூலம் எவ்வித நெருக்கடிகளும் இன்றி வெற்றியை பெற்றுக்கொண்டது. 


A பிரிவை பொறுத்தவரை இலங்கை அவுஸ்ரேலியா பாகிஸ்தான் நியூசிலாந்து போன்ற அணிகள காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. ஆனால் B பிரிவிலே தென்னாபிரிக்காவை தவிர ஏனைய அணிகளான இந்தியா, மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து ,பங்களாதேஷ் ஆகியவற்றில் எந்த மூன்று காலிறுதிக்கு தகுதி பெறும் என்பதை நாளை இடம்பெறும் மேற்கிந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி முடிவு தீர்மானிப்பதாக அமையும். எனினும் தென்னாபிரிக்காவை பங்களாதேஷ் வெற்றி கொள்ளுமாக இருந்தால் நிலைமைகள் வேறு விதமாக மாறும் நிலை ஏற்படலாம்.

4 comments:

  1. சகோதரம் திவிர கிரிக்கேட் ரசிகனான நான் இம்முறை வாயே திறக்கல... பிறிதொரு பதிவில் சந்திக்கிறேன்...

    ReplyDelete
  2. உங்களை பின் தொடர்ந்து செல்வதால் நானும் இனி உங்க் நிரந்தர வாசகனாகிறேன்... முடிந்தால் என் ஓடையின் வாசகராகவும் மாறங்கள்...

    ReplyDelete
  3. நான் தான் உங்கள் நிரந்தர வாசகனாச்சே.. என்றோ ஓடையில் ஒருவனாக இணைந்துவிட்டேன்

    ReplyDelete