புலம்பெயர்ந்த தமிழரும்,பச்சோந்திகளும்..!

பச்சோந்தி! இந்த  உயிரினத்தை பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.  தான் வாழும் சூழலுக்கேற்ப  தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு வித உயிரினத்தை இவ்வாறு அழைப்பார்கள்.   உயிர்வாழும் சூழலில் தன் பாதுகாப்பு கவசமாகவும்   "நிறம் மாறுவது" அதற்கு உதவுகிறது.


அதே போல, இந்த பெயர் கொண்டு சில மனிதர்களையும் விளிப்பார்கள். காரணம் சூழ்நிலைக்கும், தாம் சார்ந்த நபர்களுக்கும் ஏற்ப  தன் பேச்சு, செயல்களை மாற்றிக்கொள்ளும் மனிதர்களை பச்சோந்தி என்பார்கள். "நீ ஒரு பச்சோந்தி" என்று ஒருவனை ஏசும் போது அவனுக்கு கோபம் வரும். பச்சோந்தி என்று ஒருவனை விழிப்பது  சமூகத்தில் தாழ்வான வார்த்தையாகவே இருந்து வருகிறது.

ஆனாலும்,  சில தருணங்களில் எம் சூழ்நிலை நாம் பச்சோந்தி போல இருந்தாலே வாழ முடியுமாக உள்ளது.  உதாரணம் புலம்பெயர்ந்ததேசம்.

நாம் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு மேலைத்தேய/பிற  நாடு ஒன்றுக்கு குடி பெயரும் போது, அங்கேயுள்ள சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வது கட்டாயமாகிறது. அதாவது பச்சோந்தி போல.

உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை பல பழக்கவழக்கங்களை மாற்றினாலே நம்மால் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஆரம்பத்தில் இது  மிகவும் கடினமாக தான் இருக்கும் , ஆனால் போக போக அதுவே பழக்கத்துக்கு வந்துவிடும். அதன் பின் பழையன கழிதலும் புதியன புகுதலும் போல  நாம் மாறிவிடுகிறோம்  என்று சொல்வதை விட,  சூழல் நம்மை மாற்றிவிடுகிறது  என்பதுவே உண்மை.

உதாரணமாக  நாட்டில் கிராமபுரங்களில் வசிக்கும் போது சாதாரணமாக  செருப்பு போட்டே அறியோம், ஆனால் இங்கு வந்தும்    அதே பழக்கத்தை பின்பற்றினால் இங்குள்ளவர்கள் நம்மை ஒரு வித்தியாசமான "ஜந்தாக" பார்ப்பது ஒருபுறம் இருக்க, இங்குள்ள காலநிலையால் குளிர் பிடித்தே இறந்துவிடுவோம். இவ்வாறு தான் உடுத்தும் உடை,  உணவு என்று பல பழக்கங்களை மாற்றிக்க வேண்டிய சூழ்நிலை.

புலம்பெயர்ந்து சென்றவர்கள்  மீண்டும் நாட்டுக்கு வரும் போது பல பழக்கவழக்கங்களில் மாறியிருப்பார்கள்.   அது  அவர்களின் இயைவாக்கம். ஆனால் சிலர் இதை நாகரிக மோகம் என்று விளிப்பார்கள். தவிர்க்க முடியாதது தான்!


அதாவது சூழ்நிலைக்கு ஏற்றவாறு எம்மை உடனடியாக மாற்றிக்கொள்வதென்பது  மிக கடினமானது தான்.  ஆரம்பத்தில் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்த பின் மேற்க்கத்தேய  சூழ்நிலைக்கு ஏற்ப எம்மை மாற்றிக்கொள்ள எவ்வாறு கஸ்ரப்பட்டிருப்போமோ, அதே நிலை தான் மீண்டும் பல வருடங்கள் கழித்து  தன் சொந்த நாட்டுக்கு வரும் போதும். 

ஆனால் இந்த இயைவாக்கம் உணவு, உடை தவிர்ந்து கலை,  பண்பாடுகள் பக்கம் சாய்ந்து   செல்லும் போது நமது  சுயத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

எனக்கு தெரிந்து  இங்குள்ள  ஒரு குடும்பம்-  கணவன் மனைவி புலம்பெயர்ந்து வந்தவர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.  பிள்ளைகள் இங்கே  பிறந்து இப்பொழுது  பாடசாலையில் படிக்கிறார்கள். ஆனால் அவர்களின் பாடசாலையிலே மாணவர்களுக்கான முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படும்  போது இவர்கள்  புறக்கணிக்கப்பட்டார்கள். காரணம் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு முக்கிய பொறுப்புக்கள்  வழங்கபடுவதில்லையாம். இவர்கள்  இந்துக்களாக  இருந்ததால் தொடர்ந்து  புறக்கணிக்கப்பட்டார்கள். இதனால்  தற்சமயம் அந்த  இருவரும் பெற்றோரின்   சம்மதத்துடன் கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்டார்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால்,  வீட்டிலே தாயும் தகப்பனும் இந்துக்கள் பிள்ளைகள் கிறிஸ்தவர்கள். அதோடு அந்த இரு பிள்ளைகளுக்கும் தமிழ் என்பது வேப்பெண்ணை....


இவ்வாறு தான் புலம்பெயர் தமிழ் சமூகத்தின்  இயைவாக்கம் இவ்வாறு ஆரம்பித்து மொழி பண்பாடு, கலை .............. எதிர்காலத்தில் தம் அடையாளத்தை,  சுயத்தை அழித்திவிடுமோ...???

சில புலம்பெயர் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தம் காலாச்சாரத்திலே வளர்க்க முனைவார்கள். ஆனால் இது ஒரு போதும் முடியாதது. ஒரு பந்தை நீருக்குள் அடியில் வைத்திருக்கும் நோக்கோடு எவ்வளவு நேரம் தான் கையால் அமிழ்த்தி வைத்திருப்பது. கையை விலக்கவும் பீறிட்டு மேலெழும்பி நீரின் சமநிலையில் தான் வந்து நிற்கும்.  அதே போல தான் புலம்பெயர் தேசத்தில் பிறக்கும் தமிழ் சந்ததியும், தாம் வாழும் சூழலுக்கு ஏற்பவே தம் வாழ்க்கையை பழக்கி கொள்வார்கள், அது தான் அவர்களின் எதிர்காலத்துக்கும் உகந்ததாகவும் இருக்கும். அதை விடுத்து  நம் காலாச்சாரத்தில் அவர்களை கட்டாயப்படுட்டுவது முட்டாள் தனமானது. மாறாக  நம் சில கலை, பண்பாடுகளை பின்பற்ற செய்வதில் தப்பேதும் இல்லை.
புலம்பெயர் தேசங்களிலே தமிழ் மொழி என்பது அநேகமாக முதலாவது தலைமுறையுடன் காணாமல் போகும் நிலையில் தான் உள்ளது. உதாரணத்துக்கு இங்கே பிறந்து, இங்குள்ள பாடசாலையில் கல்வி கற்ப்பவர்களில் எத்தனை பேருக்கு தமிழ் மொழி  எழுத, வாசிக்க தெரியும் என்பது கேள்விக்குறியே?  எனினும், இங்கே பிறந்து இங்குள்ள சூழ்நிலையில் வாழ்பவர்களுக்கு தமிழ் என்பது  என்றுமே இரண்டாம் மொழி தான். தமிழ் மொழி அவர்கள் பெற்றோரின் தாய் மொழி. பெற்றோருடன் தொடர்பாடலை மேற்கொள்வதை தவிர வேறு எந்த விதத்தில் அவர்கள் வாழ்க்கைக்கு  தமிழ் மொழி தேவைப்படப்போவதில்லை. காரணம் அவர்களின் எதிர்காலம் அவர்கள் பிறந்த அந்தந்த  நாட்டு  மொழிகளிலே தான் கடக்கப்போகிறது.

ஆக, என்ன தான்  இருந்தாலும்  புலம்பெயர்ந்த  தமிழ் சமூகம்  இன்னமும் நான்கு அல்லது  ஐந்து  தலைமுறையின் பின் தமது அடையாளங்களை முற்றாக இழந்துவிடுவார்கள்  என்பது  மட்டும் கசப்பான உண்மை.

33 comments:

  1. பிறக்கும் தமிழ் சந்ததியும், தாம் வாழும் சூழலுக்கு ஏற்பவே தம் வாழ்க்கையை பழக்கி கொள்வார்கள்,///

    உண்மை நண்பா... இடங்களுக்கு ஏற்ப மாறுவது அங்கிருப்பவர்களுடன் இயல்பாக பழக வேண்டிய சூழல் இருக்கே...

    ReplyDelete
  2. ஆக, என்ன தான் இருந்தாலும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னமும் நான்கு அல்லது ஐந்து தலைமுறையின் பின் தமது அடையாளங்களை முற்றாக இழந்துவிடுவார்கள் என்பது மட்டும் கசப்பான உண்மை.


    கசப்பான உண்மை.

    ReplyDelete
  3. நன்றி நண்பரே. ஆழமான சிந்தனை பகிவிற்க்கு..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  4. கசப்பான உண்மை ஆனாலும்,முயற்சித்தால் மீழ வழியிருக்கிறது.சாகாது தமிழ்!!!!!!!!!!

    ReplyDelete
  5. இயைபாக்கம் அடைந்துதான் ஆக வேண்டும்.ஆனால் பண்பாட்டு விழுமியங்களை தமிழர்கள் கூடுமிடங்களிலாவது பேணி வரலாம்.

    //ஆக, என்ன தான் இருந்தாலும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னமும் நான்கு அல்லது ஐந்து தலைமுறையின் பின் தமது அடையாளங்களை முற்றாக இழந்துவிடுவார்கள் என்பது மட்டும் கசப்பான உண்மை.//
    இது வருந்தக்கது.

    ReplyDelete
  6. வணக்கம் மாப்பிள..

    ஆக, என்ன தான் இருந்தாலும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னமும் நான்கு அல்லது ஐந்து தலைமுறையின் பின் தமது அடையாளங்களை முற்றாக இழந்துவிடுவார்கள் என்பது மட்டும் கசப்பான உண்மை.

    இப்பவே முதல் தலைமுறை போகும் போற்கிக்கு நீங்க சொல்வதுதான் சரின்னு படுகின்றது... ஆனா இங்கு இருக்கும் இரண்டம் தலை முறை சிறுவர்கள் தமிழையும் படிக்கிறார்கள் இந்த நாட்டுக்காரர்களின் நல்ல பழக்கவழக்கங்களையும் எடுத்துக்கொள்கிறார்கள் என்னால் மூன்றாம் நான்காம் தலை முறையைப்பற்றி அறுதிட்டு கூறமுடியாது மொரிசியஸ் தீவுதமிழர்போல் தமிழ் தெரியாது இருக்கமாட்டார்கள்ன்னு நம்புகிறேன்..!!!???

    ReplyDelete
  7. ஆனால் மூடபழக்க வழக்கங்களை மட்டும் தலை முறை கடந்தும் விடாமல் வைத்திருப்பார்கள்...!!!!!!

    ReplyDelete
  8. //இதில் என்ன வேடிக்கை என்றால், வீட்டிலே தாயும் தகப்பனும் இந்துக்கள் பிள்ளைகள் கிறிஸ்தவர்கள். அதோடு அந்த இரு பிள்ளைகளுக்கும் தமிழ் என்பது வேப்பெண்ணை///

    சாட்டையடிகள்.... திருந்துவார்களா?

    ReplyDelete
  9. ((ஐந்து தலைமுறையின் பின் தமது அடையாளங்களை......)))உண்மைதான்

    ReplyDelete
  10. மிகச்சிறந்த ஒரு பதிவு கந்து நான் படித்த உங்கள் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று

    ReplyDelete
  11. முற்றான உண்மை.

    ReplyDelete
  12. இந்த தலைமுறையிலே ஆரம்பித்துவிட்ட என்பதுதான் கசப்பான உண்மை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.!

    ReplyDelete
  13. தலைப்பைப் பார்த்து கொஞ்சம் பயந்துதான் வந்தேன்! ஆனால், நீங்கள் சூப்பரா விபரிச்சு எழுதியிருக்கீங்க! வெளிநாடுகளில் எமது கலாச்சாரம் பேணுவது கஷ்டம் தான்!

    கடைசி வரிகள் சூப்பர்!

    ReplyDelete
  14. ஆழமான எதிர்காலத்தை பற்றி சிந்தனையை செதுக்கி இருக்கீங்க..!!!

    ReplyDelete
  15. உங்கள் ஆதங்கம் புரிகிறது...சில இடங்களில் நானும் கண்கூடாக கண்டது தான்..

    தமிழன் புலம்பெயர்வது இன்று நேற்றல்லவே...இன்னும் தமிழ் மற்றும் கலாச்சாரம் எத்தனையோ மேற்கத்திய நாடுகளில் கோலோச்சிதான் உள்ளது...

    இன்னும் சொல்லப்போனால் தமிழ் பிறந்த தமிழ்நாட்டில் வளரும் பிள்ளைகளை விட வெளி நாடுகளில் தம் மக்களுக்கு தமிழ் அமுதூட்டி வளர்க்கும் பெற்றோர் சதவீதம் தான் அதிகம்.

    எப்போதுமே ஒன்றை விட்டு விலகி வந்தால் தான் அதை பற்றிக்கொள்ளும் ஆவல், வெறி, அவசியம் அதிகரிக்கும் என்பதே என் எண்ணம்.அறிவியல்பூர்வமான உண்மையும் கூட...

    இதைப்பற்றி சிந்தித்ததுக்கு..சிந்தனையை தூண்டியதுக்கு என் பாராட்டுக்களை பிடியுங்கள் முதலில்...நீங்கள் நினைப்பது நடக்காமல் இருக்க நம்மால் முடிந்ததை நம்மிலிருந்து...நம் இல்லத்திலிருந்தே தொடங்குவோம்..

    மறுபடியும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. காலம் காலமாக திரைகடலோடியும் திரவியம் தேடுகிறான் தமிழன்..... கவலைப்படாதீர்கள்....!

    ReplyDelete
  17. அவரவர்கள் முயற்சி எடுத்தால் இந்த நிலையை மாற்றலாம்...

    // விழிப்பது //

    விளிப்பது என்று வரவேண்டும்...

    ReplyDelete
  18. வணக்கம் பாஸ்,
    நலமா இருக்கிறீங்களா?

    ReplyDelete
  19. பச்சோந்தி! இந்த உயிரினத்தை பற்றி அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். தான் வாழும் சூழலுக்கேற்ப தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு வித உயிரினத்தை இவ்வாறு அழைப்பார்கள். உயிர்வாழும் சூழலில் தன் பாதுகாப்பு கவசமாகவும் "நிறம் மாறுவது" அதற்கு உதவுகிறது.
    /./

    அண்ணாச்சிக்கு இன்னைக்கு யாரோ வசமாச் செம்பை நெளிக்கப் போறாங்க...

    ஹி...ஹி...

    புலம் பெயர் தமிழர்களை பச்சோந்தியுடன் ஒப்பிட்ட எங்கள் கந்துக் குட்டி வாழ்க.

    ReplyDelete
  20. நாம் பிறந்து வளர்ந்த நாட்டை விட்டு மேலைத்தேய/பிற நாடு ஒன்றுக்கு குடி பெயரும் போது, அங்கேயுள்ள சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வது கட்டாயமாகிறது. அதாவது பச்சோந்தி போல.
    //


    தலைவர் கரெக்டாத் தான் பேசுறார்...

    பழையன கழிதலும், புதியன புகுதலும் இயல்பு எனும் நிலைக்கமைவாக எம்மை நாமே மாற்றிக் கொள்ளல், நாம் வாழும் சூழலுக்கேற்ற மாறிக் கொள்வது தவறில்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  21. புலம் பெயர்தல், புலம் பெயர்ந்தோர் ஊர் திரும்புதல் இவை இரண்டிலும் வித்தியாசமான அணுகு முறைகள் இருக்கின்றன,

    ஒருவன் புலம் பெயர்ந்ததும் அவன் அந் நாட்டுக்கு ஏற்றாற் போலத் தன் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என எம் சமூகம் கருதுகின்றது.

    அதே போல புலம் பெயர்ந்தன் விடு முறையில் ஊர் வரும் போது அவன் வெளி நாட்டில் வாழ்ந்ததற்கு அடையாளமாக மைனர் ரேஞ்சில நகை போட்டு வரனும் என்று சொல்லாமற் சொல்கிறது எம் சமூகம்.

    இவை இரண்டுக்கும் நடுவில் அல்லாடும் சாதாரண மனிதன் தான் புலம் பெயர்ந்து வாழ்பபன்///

    சே//பாவம்

    ReplyDelete
  22. நாம் வாழும் சூழலுக்கு ஏற்ப எம் கலாச்சாரங்கள் மாறிக் கொள்வது இயல்பே. ஆனால் பெற்றோர் தான் எம் முதுசங்களைத் தம் பிள்ளைகளுக்கு அயாராது போதிக்க வேண்டும் பாஸ்.

    ReplyDelete
  23. நல்லதோர் பதிவு பாஸ்...

    பிள்ளைகளும், புலம் பெயர்ந்துள்ள இரண்டாந் தலை முறையினரும் அதிகமாகப் பழகுவது மேலைத் தேய மக்களோடு என்பதால் இன்னும் சில காலங்களின் அவர்களின் கலை கலாச்சாரங்கள் முற்று முழுதாக மாற் விடும் என்பதில் ஐயமில்லை/

    ReplyDelete
  24. சகோ!
    உள்ளங்கை நெல்லிக்கனி போல
    உள்ள உண்மை நிலையை உரைத்துள்ளீர்
    இந்நிலைக் கண்டு உள்ளம் வருந்தினாலும் நடைமுறையில் காண்பது இதுதானே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. ஊரோடு ஒத்து வாழ் என்பதும் முதுமொழி தானே..பொதுவெளியில் தனித்த கலாச்சாரம் பேணுதல் கஷ்டம் தான். ஆனால் இல்லத்தில், உறவுகளின்/நட்புகளின் மத்தியில் நம் பண்பாட்டைப் பேணுதல் அவசியம்.

    தன் மொழியினை, கலாச்சாரத்தினை இழந்து, அடிமையான ஆஃப்ரிக்க-அமெரிக்கர் போன்ற நிலை நமக்கு வராமல் இருக்க அதுவே உதவும்.

    ReplyDelete
  26. பச்சோந்தி என்பது கொஞ்சம் அதிகப்படியான வார்த்தையாகவே தெரிகின்றது கந்து.

    ReplyDelete
  27. ///மிகச்சிறந்த ஒரு பதிவு கந்து நான் படித்த உங்கள் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று///

    இதை நானும் ஆமோதிக்கிறேன்..

    ReplyDelete
  28. தமிழர் என்ற உணர்வைத்தவிர தமிழின் தேவை வெளிநாடுகளில் இல்லை

    அவுஸ்திரேலியாவில் தமிழ் ஒரு பாடமாக உள்ளதாம் பள்ளிகளில்

    ReplyDelete
  29. இந்த தலைப்பில் இன்னும் நிறையவே எதிர்பார்த்தேன் சாமி. பச்சோந்தி புலம்பெயர் தமிழர்கள் பற்றி காரசாரமாக விவாதிப்பதற்கு இன்னும் நிறைய இருக்கின்றது. நாங்களும் புலம்பெயர் தமிழர்கள் தான். அதனால் இந்த தலைப்பில் கீழ் எல்லா புலம்பெயர்ந்த தமிழர்களும் அடங்க மாட்டார்கள். திமிர் பிடித்தவர்கள் மட்டும் தான்.

    ReplyDelete
  30. //புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இன்னமும் நான்கு அல்லது ஐந்து தலைமுறையின் பின் தமது அடையாளங்களை முற்றாக இழந்துவிடுவார்கள் என்பது மட்டும் கசப்பான உண்மை.//

    நானும் அப்படித்தான் கருதுகிறேன்.

    ReplyDelete
  31. தமிழ்/தமிழர் என்று நினைக்கும்போது மனம் வெதும்பும் விஷயங்களில் இதுவும் ஒன்று !

    ReplyDelete
  32. முற்றிலும் உண்மை .அனுபவித்து எழுதியதுபோல் எழுதி உள்ளீர்கள் .
    வாழ்த்துக்கள் சகோ .ஒரு சில இடங்களில் எமது தாய் மொழியையும்
    கலை கலாச்சாரத்தையும் எம் மக்கள் மிக அழகாக வழிநடத்தி
    வருகின்றார்கள் .இதில் சுவிஸ் ,இலண்டன் போன்ற நாடுகள்
    அடங்கும் .அதுவும் காலப்போக்கில் நீங்கள் சொல்வதுபோல்
    மாறுபட நிறையவே வாய்ப்பு உண்டு .மிக்க நன்றி சகோ உங்கள்
    பகிர்வுக்கு .என் தளத்தில் இன்றைய ஆக்கம் இதை முடிந்தால்
    அவசியம் பாருங்கள் .

    ReplyDelete