இலாப நோக்கம் என்ற ஒன்று இருந்தாலும் ஊடகம் ஒன்றுக்கு ஊடக தர்மம், சமூக பொறுப்பு, அதன் மீதான அக்கறை, நேர்மை, நடுநிலைமை என்பவை கட்டாயம் இருக்கும்/இருக்கத் தான் வேண்டும். இதற்க்கு மேற்கத்தேய ஊடகங்கள் பல உதாரணம்! ஆனால், தமிழ் இனைய ஊடகங்களை பொறுத்தவரை இவை அனைத்தும் விதிவிலக்கு! ஐரோப்பா, ஆங்கில, அரபு ஊடகங்கள் தம் நாட்டின் வளர்ச்சியிலும், நன்மை தீமைகளிலும் எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது. இவர்களுடன் நான் எம் நாட்டு இணைய ஊடகங்களை ஒப்பிட்டு பார்ப்பதுண்டு..என்னத்தை சொல்வது?
இன்று தமிழ் தேசியத்துக்கான ஊடகம் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு சில இனைய ஊடகங்கள் 'சிங்கள இராணுவம் நிர்வாணமாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்ப்படுத்தப்பட்ட பின் கொலை' என்று பெண் போராளிகளின் நிர்வாணமாக்கப்பட்ட உடல்களை தங்கள் தளத்திலே தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்கள்.. நாலு மிருகங்கள் காம வெறிகொண்டு இறந்த பிணங்களை துகிலுரிந்து புகைப்படங்களாக வெளியிட , அதை தங்கள் பொதுத்தளங்களிலே பிரசுரித்து ஆயிரக்கணக்கானோருக்கு காட்டுகிறார்கள். அந்த வெறிகொண்ட மிருகங்களின் நோக்கம் அந்த பெண் போராளிகளை அவமானப்படுத்துவது தான் என்றால், அதுக்கு தங்கள் ஊடகங்கள் மூலம் தாங்களே வழி சமைத்து கொடுக்கிறார்கள் என்பது இன்னும் இவர்களுக்கு புரியவில்லை!
இசைப்பிரியா என்ற போராளி விடயத்திலும் இதை தான் செய்தார்கள். ஆங்கிலேயரின் ஊடகமான சனல் 4 கூட அந்த வீடியோக்களை ஒரு கட்டத்துக்கு மேல் வெளியிட முடியாமல் உள்ளது என்று சொல்லி கட்டுப்படுத்தினார்கள். ஆனால் இவர்கள் ...........ஒரு படி மேல் சென்று யூடுபியிலும் அந்த பெண்ணின் மானத்தை ஏற்றி அனுதாபம் தேடிக்கொண்டார்கள் ..!!
எதற்காக இவ்வாறான புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள்? அனுதாபம் தேடவா? பெண்களின் நிர்வாண உடல்களை காட்டி அனுதாபம் தேடுற அளவில் நிற்கிறீர்களே! உண்மையிலே இது உங்களுக்கு அவமானமாக இல்லையா, இதுவே இறந்த பெண் போராளிகள் உங்கள் தாய், சகோதரி என்றால் இவ்வாறு செய்வீர்களா?
வைக்கோ என்ற பெரிய மனுஷன் இசைப்பிரியா என்ற பெண் போராளியின் நிர்வாண உடலுக்கு இறங்கற்பா எழுதி வீடியோவாக இணையத்தில் ஏற்றியிருந்தார். இதுவே தன் சொந்த மகளாக இருந்தால் வைக்கோ இந்த காரியத்தை செய்திருப்பாரா? அந்த பெண் போராளிகள் என்ன உணர்வுகள் அற்ற ஜடங்களாகவா அத்தனை காலமும் இருந்தார்கள். ஒரு வேளை காடுகளுக்குள் இருந்ததால் விலங்குகள் என்று எண்ணுகிறீர்களா? இல்லை இறந்த பிணங்கள் தானே என்று கருதி இவ்வாறாக செய்கிறீர்களா?
உங்களுக்கு இவ்வாறான ஆதாரங்கள் கிடைத்தால் இது தொடர்பாக போர்க்குற்றவிசாரணை செய்யும் சம்மந்தப்பட்ட தரப்புக்கு அனுப்பி வைக்கலாம், அதைவிடுத்து எதற்காக அவர்களை அனுதாபம் தேடுகிறோம் என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அசிங்கப்படுத்துகிறீர்கள்.
யார் இந்த பெண் போராளிகள் "உயிருக்கு பயந்து நீங்கள் நாட்டை விட்டு ஓடிய போது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் சாக தயார் என்று கையில் ஆயுதம் தூக்கி சென்றவர்கள்." இன்று உங்கள் செயலை கண்டு அவர்கள் ஆத்மாவும் காறி உமிழும், இந்த இனத்துக்காகவா போராட போனேன் என்று!
இந்த காணொளிகளையும் புகைப்படங்களும் காணும் ஒவ்வொரு நொடியும் அந்த போராளிகளின் பெற்றவர்கள் படும் வேதனையை எண்ணிப்பாருங்கள். தமிழர்கள் மானத்தோடு சுதந்திரமாக வாழவேண்டும் என்று தான் அன்று ஆயுதம் தூக்கி போராடினார்கள். ஆனால் இன்றோ, அதே சுதந்திரம் வேண்டி தமிழர்களின் மானத்தை அடகு வைத்துக்கொண்டிருக்கிறார்கள் தம்மை தமிழ் தேசியத்தின் ஊடகமாக காட்டிக்கொள்ளும் சில தமிழ் இணைய ஊடக வியாபாரிகள்.
°°°°°°°°°
அதிர்வு என்ற ஒரு இனைய ஊடகம் ஒரு செய்தி பிரசுரித்திருந்தது "யாழ்ப்பாணத்தில் ஐம்பத்தி நான்கு விபச்சார விடுதிகள்" என்று.. அதாவது இரண்டு ஊருக்கு ஒரு விபச்சார விடுதிகள்! எதற்கு இந்த கேவலமான பிழைப்பு இவர்களுக்கு? இவர்கள் சென்று எண்ணி பார்த்தார்களா ஐம்பத்தி நான்கு விபச்சார விடுதிகளையும்? எவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்ட மண் அது. உங்கள் ஊடக வியாபாரத்துக்காக அந்த மண்ணை நாறடிப்பதா? இன்று இப்படியான சில ஊடகங்களில் வரும் செய்தியின் படி யாழிலே பாலியல் சீர்ககேடுகளும் வன்முறைகளும் மட்டும் தான் நடந்து கொண்டுள்ளது என்ற பிம்பத்தை ஏற்ப்படுத்திக்கொண்டுள்ளார்கள். முக்கியமாக இந்த அதிர்வு இணையத்தை பற்றி-அதன் கொள்கைகள் பற்றி சுருக்கமாக கூறவேண்டுமெனில் "இலங்கை பொருட்களை புறக்கணிப்போம்" என்று பிரச்சார செய்தி வெளியிட்டுவிட்டு, சற்றே நாட்களில் இலங்கை அரசின் சிறீலங்கா டெலிக்கொம்_முக்கு தங்கள் மேற்ப்பக்கத்தில் விளம்பரம் வெளியிட்டு வருமானம் தேடிக்கொண்டவர்கள் - இது தான் இவர்களின் கொள்கை!
°°°°°°°
சிறிது காலத்துக்கு முன்னர் "நவீன யாழ்ப்பாணம்" என்ற போர்வையில் இயங்கும் 'வயது வந்தோருக்கு மட்டுமான செய்திகளை அதிகம் பிரசுரிக்கும் ஊடகம்' ஒன்று "கலாசார சீர்கேட்டால் யாழ்ப்பாணத்தின் கல்வித்தரம் வீழ்ச்சி' என்று சொல்லி முதலைக்கண்ணீர் வடித்தார்கள். (அதாவது வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல..) இன்று ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரீட்சையில் மாணவர்களின் சித்தி வீதம் இதே ஊடகத்தின் முகத்தில் காறி உமிழ்வதாக அமைந்துள்ளது...
முன்னைய காலத்தில் எல்லாம் இந்த தேசியத்துக்கான ஊடகங்கள் என்ற முகமூடி அணிந்து வலம் வந்தவர்களுக்கு யுத்தம் தீனி போட்டது. ஆனா இப்போ அது இல்லை. அது தான் கலாசாரத்தின் மீதும், கல்வி மீதும் கைவைக்கிறார்கள். மக்களின் அசமந்தபோக்குகளையும் கவனயீனங்களையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் மூலம் தம்மை வளர்த்துக்கொள்ள பார்க்கிறார்களே ஒழிய, மக்கள் மீது எந்த மண்ணாங்கட்டி அக்கறையும் இவர்களுக்கு இல்லை.
முடிந்தால் நியாயமான வழியில் தமிழ் மக்களின் விடிவுக்காக பாடுபடுங்கள்.. இல்லை இப்படியான காரியங்களை தான் தொடர்ந்து செய்வோம் என்றால் "யாழ்" "தமிழ்" போன்ற சொற் பிரயோகங்களில் உள்ள உங்கள் இனைய தளத்தின் பெயரை நீக்கிவிட்டு, உங்கள் சொந்த பெயரிலோ இல்லை உங்களை பெத்தவர்களின் பெயரிலோ ஊடகத்தை நடத்துங்கள். அப்படி நடாத்தினால் அது உங்கள் தனிப்பட்ட கருத்து என்று விட்டு போய்விடுவோம். ஆனால் ஊரின் பெயரிலோ இல்லை மாவட்டத்தின் பெயரிலே ஊடகம் என்ற பெயரில் நீங்கள் செய்யும் அசிங்கங்களால் ஒட்டு மொத்த மக்களுக்கும் தான் தலைக்குனிவு.